Thursday, August 26, 2021

 

காலநிலை அவசரமும் நில மாசும்  


முந்தைய பதிவு எழுதி 5 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆயினும், மக்களின் சூழலியல்  குறித்த அறிவு இன்னமும் அப்படியே உள்ளது அல்லது இன்னும் மோசமாகி விட்டது.


காலநிலை மாற்றம் என்ற சொல்லாடல் இப்பொழுது வழக்கொழிந்துவிட்டது. இப்பொழுது நாம் இருப்பது காலநிலை அவசரம் (Climate Emergency).


ஐம்பூதங்களில் நிலம், நீர், காற்று மாசுபடுதல் தான் காலநிலை அவசரத்திற்கு மிக முக்கிய காரணிகளாக இருக்கின்றன. 


காற்று சரி. அதெப்படி நில மாசு, காலநிலை அவசரத்திற்கு ஒரு காரணியாக இருக்கும்? என்று கேட்கலாம். மண் மாசடைவதால் கார்பனை உறிஞ்சும் திறன் குறைந்து அதன் மூலம் உலக வெப்பமயமாதலுக்கு ஒரு மறைமுக காரணியாக உள்ளது.


நிலத்தில், குறிப்பாக விவசாய நிலத்தில் தெளிக்கப்படும் களைக்கொல்லிகள் எந்தவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை மௌன வசந்தம் என்னும் நூலில் Rachael எழுதியுள்ளார். 1950 களில் அமெரிக்காவில் வான்வழி நச்சு தெளிப்பு மூலம் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களில் களைக்கொல்லி தெளித்ததன் விளைவாக ஏற்பட்ட பல்வேறு சூழலியல் இடர்களை விளக்குகிறது. மேலும் DDT என்ற நச்சிலிருந்து இன்று எல்லா கொசு மருந்து liquidator களில் பயன்படுத்தப்படும் trans fluthrine வரை அலசி ஆராய்ந்துள்ளார் அவர். 


அப்பாடா, நம் நாட்டில் அது போல் வான்வழி தெளிப்பு இல்லை என்று நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில், இப்போது புதிதாக சீமைக் கருவேல மரங்களை அழிப்பதற்கு மின்-ஈ (drone ) மூலம் நச்சு தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .  சீமைக் கருவேல மரங்களை அழிக்க வேண்டுமா? அதனால் என்ன நன்மை? என்ன தீமை? என்பது பற்றி விகடனில் ஒரு பதிவு வந்திருக்கிறது. தட்டாமல் வாசியுங்கள்.


இப்படி மின்-ஈ மூலம் தெளிக்கப்படும் நச்சு, ஒழுங்காக தெளிக்கப்  படாவிட்டால், நிலத்தையும் காற்றையும் அருகில் இருக்கும் நீர் நிலைகளையும் வெகுவாக பாதிக்கும்.


இது மட்டும் தான் நில மாசுக்கு காரணமா? நாம் அன்றாடம் குப்பை என்று ஒதுக்கி, கார்ப்பரேஷன் வண்டியில் ஏற்றி அனுப்புகிறோமே? அதெல்லாம் landfill என்று ஏதோ ஒரு குப்பைக் கிடங்கில் கொட்டுகிறார்கள். அதில் தரம் பிரிக்காமல் கொட்டப்படும் பல வகை வேதியியல் குப்பைகள் மண்ணில் ஊடுருவி மண்ணை மாசுபடுத்தி, நிலத்தடி நீரையும் மாசுபடுத்துகிறது. 


மண் மாசு, மண்ணை மலடாக்கி, விளை நிலங்களை, விலை நிலங்களாக ஆக்குகின்றன. 


இதெல்லாவற்றையும் விட, மண் மாசு படுத்துவதில் பெரும்பங்கு இருப்பது நெகிழி எனப்படும் பிளாஸ்டிக். அதைப் பற்றி எழுதுவதாக  இருந்தால், ஒரு கதையே எழுதலாம்.


பிளாஸ்டிக்கும் ஒரு கெட்ட கனவும் 

பார்க்கும் இடமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருள் என்று ஒரு சொல்லாடல் இறைவனைப் பற்றி சொல்வார்கள் மெய்யியலார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை பிளாஸ்டிக் தான் அப்படி இருக்கிறது. இந்த பதிவை தட்டச்சு செய்யும் keybard முதல், நீங்கள் பார்க்கும் செல்போன்/லேப்டாப் monitor வரை எத்தனையோ பொருட்கள் பிளாஸ்டிக்கால் நிறைந்து இருக்கிறது.


யாரோ ஒருவன் தூங்கி எழுந்து வீட்டு வாசல் முன் வந்து பார்த்தால் ஒவ்வொரு வீட்டின் முன்பும் முதல் மாடி அளவுக்கு மலை போல் பிளாஸ்டிக் குப்பைகள் சேர்ந்து கிடந்தது. அதை ஒதுக்கித் தள்ளிக்கொண்டே ஒவ்வொருவரும் அவர்களது அன்றாட வேலையைச் செய்கின்றனர். தூக்கி வாரிப் போட்டு எழுந்து பார்த்தால் கனவு. கண்டிப்பாக அந்த யாரோ ஒருவன் நம் பேரன் பேத்தி யாக மட்டும் இருந்துவிடக் கூடாது என்று மனம் இறைவனை வேண்டிக் கொண்டது.




பிளாஸ்டிக்கின் தன் வரலாறு 

நான் பூமிக்கு அடியில் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக crude oil ஆக இருந்தேன். திடீர் என்று ஒரு குழாய் மூலம் என்னை வெளியே எடுத்தார்கள். என்னை என்னவெல்லாமோ பாடாய் படுத்தி கடைசியில் எளிதில் நெகிழும் தன்மை உள்ள ஒரு பொருளாக மாற்றினார்கள். எனக்கு பிளாஸ்டிக் பை என்று பெயர் சூட்டினார்கள்.


என்னை உருவாக்கிய தொழிற்சாலையிலிருந்து எங்கெங்கோ அலைந்து ஒரு பூ விற்கும்  பாட்டி இடம் போய் சேர்ந்தேன். 


எவனோ ஒருவன் : அரை முழம் பூ குடுங்க பாட்டி.

பாட்டி அளந்து கொடுத்தாள் .

எ.ஒரு : என்ன பாட்டி பிளாஸ்டிக் கவர் இருக்கா?

பாட்டி: இருக்குப்பா. 

பாட்டி என்னில் அந்த பூ வை மடித்து வைத்தாள்.

பாட்டி இன்னொரு வியாபாரியிடம் : இவனுங்க செல்போன் கொண்டு வர்றாங்க. அத விட வெயிட் கம்மியா இருக்குற பை கொண்டு வர மாட்ராங்க.

இந்த பை க்கு தனியா செலவு செய்ய வேண்டியிருக்கு.

நான் : ஆஹா என்னை அருமையான மணம் இந்த மல்லிப் பூ.

அதுதான் நான் முகர்ந்த நல்ல மணம்.


அந்த எவனோ ஒருவன், வீட்டிற்கு சென்றதும், என்னில் இருந்த பூவை எடுத்து மனைவி கொண்டையில் மாட்டி விட்டு என்னை வீசி எறிந்தான்.


இரண்டு நாள் அவர்கள் வீட்டுக் குப்பையில் மிகுந்த நாற்றங்களுக்கு இடையில்  இருந்தேன்.

அங்கிருந்து கார்பொரேஷன் குப்பை லாரிக்கு மாற்றலானேன். இந்த நாத்தத்துக்கு அவங்க வீட்டு குப்பை தொட்டியே பரவாயில்லை. அங்கிருந்து ஒரு பெரிய ஏரியின் நடுவில் இருந்த குப்பைக் கிடங்கில் என்னைக் கொண்டுபோய் சேர்த்தார்கள். அதற்கு அந்த குப்பை லாரியே பரவாயில்ல.




ஆண்டுகள் பல உருண்டோடின. பூ விற்ற பாட்டியும், அதை எடுத்துக் கொண்டு போனவனும், அந்த பூவைச் சூடியவளும் இறந்து போனார்கள். நான் மட்டும் இளமையாய் இன்னும் அந்த குப்பைக் கிடங்கில். ஆனால் என் மேல் ஐந்து அல்லது ஆறு அடிக்கு என்னைப் போன்ற பிளாஸ்டிக் பைகள் கலந்து கிடந்தோம்.


திடீர் என்று ஒரு பெரிய வெள்ளம் வந்தது. அந்த ஏரி முழுவதும் நிரம்பி அங்கிருந்து ஒரு ஆறு மூலம் கடலுக்கு சென்றேன். கடல் என்னை சேர்த்துக் கொள்ளாமல் மீண்டும் கரைக்கே துப்பிவிட்டது. அங்கிருந்த கடற்கரையில் என்னைப் போல் ஏராளமான பிளாஸ்டிக் பைகள் இருந்தன இன்னும் இளமையாய். 







அந்த எவனோ ஒருவனின் பேரன் கடற்கரையை சுத்தம் செய்கிறோம் என்று ஒரு அமைப்பு மூலம் என்னை அங்கிருந்து மறுபடியும் அந்த குப்பைக் கிடங்குக்கு கொண்டு சென்றான். மறுபடியும் பழைய இடம், அதே நாற்றம்.

ஆண்டுகள் உருண்டோடின. மறுபடியும் வெள்ளம், மறுபடியும் கடல், மறுபடியும் கடற்கரை. இம்முறை என்னில் ஒரு பாதி கடல் உண்டது. மறுபாதி சாலையில் அலைந்து கொண்டிருந்தேன். பல ஆண்டுகள் ஆனதால் என்னை பற்பல துகள்களாக மாற்றின அந்த நிலம். இப்பொழுது என்னை micro பிளாஸ்டிக் என்று அழைக்க ஆரம்பித்தனர். இப்போது நான் அனைவரின்  நுரையீரல்களில் தங்கி உள்ளேன். என்னில் இன்னொரு பாதி கடலில் உள்ள ஆமை மீன்கள் பங்கு போட்டுக் கொண்டன. அதை விழுங்கிய மனிதர்கள் குடலில் உள்ளேன். இனி என்ன ஆகும் என்று எனக்கே தெரியாது.


தொடரும் …


குறிப்பு: இதில் பாதியை தட்டச்சு ஏற்கனவே செய்துவிட்டேன். இப்போது IPCC ரிப்போர்ட் வந்திருப்பதால் இதை முடிக்க வேண்டும் என்று மீண்டும் எழுதத் தொடங்கினேன்.


Sunday, September 25, 2016

நம்மைச்சுற்றி


அறிமுகம்
     சுற்றுச்சூழல் குறித்து அறிந்து கொள்ள வேண்டிய தருணம் இது. நம்மைச்சுற்றி என்னவெல்லாம் இருக்கிறது, எத்தனை உயிரினங்கள் ஓசைபடாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றன என்பதைச் சிறிதேனும் நாம் தெரிந்து கொள்ளவேண்டும். இவ்வுலகம் தோன்றிய காலத்திலிருந்து மாறாத சுற்றுச்சூழல், மனிதன் தோன்றிய காலத்திலிருந்தும் மாறாத சுற்றுச்சூழல், கடந்த 100 ஆண்டுகளில் எவ்வளவு  மாசுகளைச் சந்தித்துள்ளது? சுற்றுச்சூழல் மாசுபட்டால் என்ன என்று கேட்கிறீர்களா? மனித குலமே அழியும் அவலம் ஏற்படும். இதுதான் பெரும்பாலான சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் ஏக்கமும். மனிதன் இன்னமும் உணவுச்சங்கிலியில் ஓர் அங்கம் தான் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும்.

இயற்கையின் நியதி
     அதெப்படி நடக்கும்? பறவைகள் இனம் இல்லை என்று வைத்துக்கொள்வோம். பறவைகள் இல்லை என்றால் அது உண்ணு பூச்சிகள் பெருகி விடும். நமக்கு நேரடியாக உணவைக் கொடுக்கும் செடி கொடிகள் அழிந்து விடும் மற்றும் அதை உண்ணும் ஊண் உண்ணிகள் அழிந்து, அதையும் தின்னும் வாய்ப்பும் இல்லாமல் போகும். சரி பூச்சிகளை நாம் பூச்சிக் கொல்லிகளை வைத்து அழித்து விட்டால் நாம் தப்பித்துக் கொள்ள முடியுமா? முடியாது, ஏனெனில் பறவைகள் இல்லை என்றால் காடுகள் இருக்காது. காடுகள் உருவாகத் தேவையான மரங்களை விதைக்கும் முக்கிய வேளாண்மைத் தொழிலை பறவைகள் மறைமுகமாக தனது எச்சங்கள் மூலமாக செய்து கொண்டிருக்கின்றன. அதெப்படி காடு இல்லை என்றால் நாம் வாழ முடியாதா? என்று கேட்பது என் காதில் விழாமல் இல்லை. காடில்லாமல் மேகங்களை மழையாய் பொழியவைக்கும் ஆற்றல் இல்லாமல் போகும். எனவே ஆறுகளில் நீர் ஓடாது. ஆறுகளில் நீர் இல்லை என்றால் ஏரி, குளங்களில் நீரேது. இப்படி நீர் நிலைகளில் நீர் இல்லாது போனால், நிலத்தடி நீர் மட்டம் இருக்காது. மனிதன் வாழ நீர் இல்லாமல் இரண்டு அல்லது மூன்றே ஆண்டுகளில் மனித குலம் அழியும். மனிதனின் அபார மூளையினால் ஒர் ஆண்டில் கூட அழியும், ஏனெனில் நீருக்கான சண்டை நடந்தால் வெகு விரைவில் அழியும். என்னடா இது? எடுத்த எடுப்பிலேயே அழிவைப் பற்றி பேசுகிறேன் என்று எண்ண
வேண்டாம்.  பறவை இனம் அழிந்தால் என்ன நேரும் என்பதை எனக்குத் தெரிந்த வழியில் விளக்கியுள்ளேன்.
பறவையை விடுங்கள், சாதரண தேனீக்கள் இல்லை என்றாலும் இதே நிலமைதான்.

ஆர்வம்?
     என்ன திடீரென்று இவனுக்குச் சுற்றுச்சூழல் மீது ஆர்வம்  என்று கேட்கிறீர்களா? மனிதன் தோன்றிய காலம் முதல் இயற்கையோடு வாழ்ந்தான். பின்பு இயற்கையோடு இயைந்து வாழ்ந்தான். இப்போதும் நாம் காடுகள் நிறைந்த மலை வாழிடங்களுக்குச் சென்றால் நமக்கு ஒரு புத்துணர்ச்சி ஏற்படுகிறதன்றோ? அதற்கு நமது மரபணுவில் இருக்கும் அந்த இயற்கையொடு இயைந்த வாழ்வுதான் காரணம். எனவே எனக்கு இந்த சுற்றுச்சூழல் மீதான ஆர்வம் ஏற்படுவது இயல்பே!
இயற்கையோடு வாழ்வது என்பது காட்டில் வாழ்வது. உணவுக்காக நகர்ந்து கொண்டே இருப்பது. மிருகங்கள் இன்னமும் இயற்கையோடுதான் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.  நாகரிகம் தோன்றிய பின்பு இயற்கையோடு வாழாமல் இயற்கையோடு இயைந்து வாழக் கற்றுக்கொண்டான். ஆனால் இன்று, பொருள் சேர்ப்பதற்காக, இயற்கையை அழிக்கும் வேலையினை தெரிந்தோ தெரியாமலோ செய்து கொண்டிருக்கிறான்.
இத் தொடர் பதிவுகளில், மனிதன் செய்து கொண்டிருக்கும் சிறிய மற்றும் பெரிய இயற்கைச் சீர்குலைப்பு பற்றிப் பார்க்கலாம்.

இயற்கை என்பது என்ன?
     பின் வரும் புறனானூற்றுப் பாடலைப் பார்ப்போம்,

மண் திணிந்த நிலனும்,
நிலன் ஏந்திய விசும்பும்,
விசும்பு தைவரு வளியும்,
வளித் தலைஇய தீயும்,
தீ முரணிய நீரும், என்றாங்கு
ஐம் பெரும் பூதத்து இயற்கை போல

மேலே கூறிய இந்த ஐம்பெரும்பூதங்கள் தான் இயற்கை. தீயையும் விசும்பையும்(SPACE) மனிதனால் ஒன்றும் செய்ய முடியாது. மீதமுள்ள நில நீர் வளியை மனிதன் செய்யாத அலங்கோலமில்லை. அதைப் பற்றி பின் வரும் தொடர் பதிவுகளில் பார்ப்போம். 

(தொடரும்) 

Sunday, July 12, 2015

வால்பாறை பயணக்குறிப்பு - தொடர்ச்சி


வால்பாறை பயணம்

திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் காலை உணவை அங்கேயே முடித்தோம். வராதவர்கள், பொள்ளாச்சியில் ஒரு ஹோட்டலில் சாப்பிடுவதாக சொல்லியிருந்தனர். திருமண நிகழ்ச்சி முடிந்து திரும்பி வரும் வரையில் யாரும் கிளம்பியதாய் தெரியவில்லை. பிறகு அவர்கள் சாப்பிடும் வரையில் காத்திருந்து வீட்டு சாவியை ஒப்படைத்து நாங்களும் கிளம்பினோம். இங்கே இருக்கிறோம், அங்கே இருக்கிறோம் என்று பொள்ளாச்சியில் இருந்த நான்கு தெருக்களையும் மறுபடியும் சுற்றி விட்டு கடைசியில் ஒரு பெட்ரோல் பன்க் அருகில் காத்திருந்தார்கள்.

 

“ஏங்க, உங்களுக்கு பெட்ரோல் இருக்கா மலை ஏற?”, கார்த்திக்.

 

“நிறையவே இருக்கு. I20 நல்லா மைலேஜ் தருது”, சிவபாலன்.

 

“சரி, நான் பெட்ரோல் போட்டுக்கறேன்.”, கார்த்திக்.

 

அங்கிருந்து வால்பாறை நோக்கி புறப்பட்டோம். நகர சந்தடிகளில் இருந்து வால்பாறை செல்லும் பாதை மிகவும் அமைதியாக ரம்யமாக இருந்தது. அப்போது வானம் மேகமூட்டத்துடன், அங்கொன்றும் இங்கொன்றுமாக தூறல் போட்டுக்கொண்டிருந்தது. சாலையின் இருமருங்கிலும், பல பெரிய தோட்டங்களும் அதன் நடு நடுவே ஒரு வீடும் பார்க்கையில் மனம் குஷியானது.  கரிய தார்சாலையின் இரு பக்கமும் பச்சை வண்ணம் போர்தியிருந்தது. ஆங்காங்கே சிவப்பு நிற மலர்களைக் கொண்ட மரங்களைப் பார்க்கையில் மனம் கிறங்கடித்தது. முன்பெல்லாம் இதைப் பார்த்து ரசிப்போம். இப்போது, கை உடனே கேமராவிற்கு தான் செல்கிறது. அதுவும் ஒரு விதத்தில் நல்லது தான். எப்போதாவது அதைப் பார்க்கும் போது அந்த பயணமும் பயணம் செய்தவர்களும் நினைவிற்கு வருவார்கள்.

 

ஆழியாறு அணை

 

சிறிது நேரத்திற்கெல்லாம் ஆழியாறு அணை வந்தது. சில பேர், திரும்பி வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று கூறினர். திரும்பி வரும்போது இதற்கெல்லாம் நேரமிருக்காது என்று முடிவு செய்து, ஆழியாறு பூங்காவிற்கு சென்றோம். நாங்கள் 8 பேரும் உள்ளே செல்வதற்காக காத்திருந்தோம். சிவபாலனும் கார்த்திக்கும் என் காரிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்ததாக தெரிந்தது. பொறுமை இழந்த சிலர், அங்கு சென்று அழைத்து வந்தோம்.

 

“ஏங்க, இவ்ளோ நேரம்? கார் கிட்ட என்ன பண்ணிட்டு இருந்தீங்க?”, நான் சிவபாலனிடம்.

 

“உங்க கார் டிக்கி லாக்கிங் மெக்கானிசம் எங்களுக்கு புரியல. அதான் ஆராய்ச்சி செஞ்சிட்டு இருந்தோம். கார் லாக் ஆகி இருந்தும், டிக்கி திறக்க முடிஞ்சது. அப்ரம் தான் தெரிஞ்சுது, கார் கீ பக்கத்துல இருந்தா அத திறக்க முடியும்னு”, சிவபாலன்.

 

“இத என்கிட்ட கேட்டா நான் சொல்லி இருப்பேன்ல. எல்லாரும் கடுப்புல இருக்காங்க. வாங்க சீக்கிரம் போய்ட்டு கிளம்பலாம்”, நான்.

 

அதற்குள் மழை சிறிது வலுத்திருந்தது. ஆனால் மழையில் நனைய அவ்வளவு பிடித்திருந்தது. ஆழியாறு பூங்காவில் தனி நபர் மற்றும் குழு புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு, அணை இருக்கும் படிக்கட்டில் ஏறி சென்றோம். ஆங்கிலத்தில் “breath taking view” என்று சொல்வார்களே, அது போல இருந்தது ஆழியாறு அணை. கிட்டத்தட்ட நிரம்பி இருந்த அணையின் நீர்பிடிப்பு பகுதியில் அடர்ந்த வனம் மற்றும் மலை இருந்தது. அடை மழை வேறு பெய்து கொண்டிருந்தது. அங்கிருக்கும் மழைக்காடுகளிலிருந்து வரும் நீர் மலைகளினூடே வந்து இந்த அணையில் நிரம்பி இருந்தது. அந்த அடர்ந்த வனப்பகுதியின் ஓரத்தில் சிறிய சமவெளிப் பகுதியில் ஒரு யானைக் கூட்டம் முகாமிட்டிருந்தது.

 

“கார்த்திக், உங்க DSLR எடுங்க, யானைக் கூட்டத்தை போட்டோ பிடிக்கலாம்”, நான்.

 

“மழையில் நனைஞ்சிருமேனு மேல கொண்டுவரல”, கார்த்திக்.

 

எங்களிடம் இருந்த பாய்ண்ட் அண்ட் ஷூட் கேமிராவில் லேசாகத் தான் அதை பதிவு செய்ய முடிந்தது. இருந்தாலும் நம் கண்களின் லென்ஸ் போல வருமா? இப்போதே பசி எடுக்க ஆரம்பித்து விட்டது.

 

“சரி சரி வாங்க கிளம்பலாம். சீக்கிரம் போய் சாப்பிடனும்”, அபினேஷ்.

 

“யாரோ சொன்னாங்க, சாப்பாடு முக்கியமானு”, கார்த்திக்.

 

“சரி விடுங்க, பசிக்குது. மீன் குழம்பு வேற சொல்லி இருக்காங்க”, அபினேஷ்

 

“ஆமா பா, மீன் குழம்புனு சொன்ன உடனே எனக்கும் பசிக்குது. சீக்கிரம் கிளம்புவோம்”, கார்த்திக். அவர்கள் சொல்லி விட்டார்கள் நான் சொல்லவில்லை அவ்வளவு தான்.

 

 

மலை ஏறுதல்

அங்கொன்றும் இங்கொன்றுமாக பெய்துகொண்டிருந்த மழை சிறிது வலுத்திருந்தது. இரண்டு கார்களும் ஐந்தைந்து பேர்கள் மற்றும் மூட்டை முடிச்சுகளுடன் நிரம்பி வழிந்து கொண்டு மலை ஏறத்துவங்கியது. இதுவரை கார்கள் நன்றாகவே ஈடுகொடுத்தது. மலை ஏறத்துவங்கியவுடன் அதன் வேலையை காட்டத்துவங்கியது. அதன் வேலை என்று சொல்வதைவிட அதன் முழு இயல்பைக் (???) காட்டத்துவங்கியது என்று சொல்லலாம். சிறிது நேரத்திற்கெல்லாம் பேய் மழை பெய்யத்துவங்கியது. வைப்பர்கள் முழு வேகத்தில் சுழன்று கொண்டிருந்தது. அழகான இயற்கைக் காட்ச்சிகளைப் பார்த்துக்கொண்டே செல்லலாம் என்று நினைத்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பள்ளத்தாக்கு முழுதும் வெண்பனி மட்டுமே தெரிந்தது. ஓட்டுனருக்கு சவாலான பணி. ஐந்து அடிக்கு முன்னால் இருக்கும் வாகனங்கள் கூட தெரியவில்லை. ஒரு கட்டத்தில் அடர்ந்த வனத்தில் வாகனங்கள் செல்ல எதிரே ஓர் வாகனம் நின்று விட்டது. அதனால் சிவபாலனும் வண்டியை நிறுத்த வேண்டியதாயிற்று. பின்னால் மூஞ்சூரு வால் பிடித்தது போல வந்து கொண்டிருந்த கார்த்திக்கும் நிறுத்திவிட்டார். அது ஒரு கொண்டை ஊசி வளைவு. வண்டி எஞ்சின் நின்றுவிட்டது.

 

“என்ன ஆச்சுங்க?”, நான்

 

“வண்டி ஏற மாட்டேங்குதுங்க.”, சிவபாலன்.

 

எல்லாருக்கும் மரணபயம். வண்டி எஞ்சின் நின்றுவிட்டால் பிரேக் பிடிக்காது. பின்னால் பெரிய பள்ளம் வேறு. ஆங்காங்கே, ”இது யானை நடமாடும் பகுதி, அதற்கும் வழி விடுங்கள்”, “சாலையை விட்டு வனத்திற்கு செல்லாதீர்கள்”, “வண்டியை நிறுத்தாதீர்கள்” என்று எச்சரிக்கைப் பலகைகளை வைத்து வேறு பீதியை கிளப்பி விட்டிருந்தார்கள்.

 

பக்கத்தில் கார்த்திக், “என்னாங்க வண்டி ஏறலயா?”, என்றார் கிண்டலாக. பின்னர் சிவபாலன், முதல் கியரிலேயே வண்டிக்குத் தேவையான சக்தி கிடைக்கும் வரை கொண்டை ஊசி வளைவைக் கடந்தார். பின்னால் திரும்பி பார்த்தால் கார்த்திக் வண்டியும் சிறிது பின்னால் நகர்ந்து கொண்டிருந்தது. அவர் வண்டியும் ஆஃப் ஆகியிருக்கும் போல.

 

“இனிமே, எப்டி இந்த வண்டிய மலைல ஓட்டனும் கத்துக்கிட்டேன்”, சிவபாலன்.

 

கார்த்திக்கும் இந்நேரம் கத்துகொண்டிருப்பார் என்று நினைத்துக் கொண்டோம். பின்னால் Jazz கார் வந்து கொண்டிருந்தது.

 

“தேவையான பவர் இருந்தா வண்டி ஏறிடுது, ஸ்டேண்டிஸ்டில இருந்து வண்டி எடுக்கர்து தான் கொஞ்சம் திணருது” சிவபாலன்.

 

ஒரு டாடா இண்டிகா வண்டி எங்களை அனாயசமாக கடந்து சென்றது. அந்த ஓட்டுனர் எங்களை ஏளனமாக பார்த்ததாக ஞாபகம். வெகு நேரமாக இந்த கடினமான பயணம் இருந்தது. ஆங்காங்கே தனியார் பங்ளா மற்றும் எஸ்டேட் செல்லும் பாதைகளை கவனித்தோம். ஏதோ ஒர் அரசு எஸ்டேட் அருகில் வாகனத்தை நிறுத்தி, நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டோம். நாங்கள் வால்பாறை வரை செல்லவேண்டாம் என்றும் ரொட்டிக் கடையில் வலது புறம் திரும்பி 20 கி.மீ வரவேண்டும் என்றும் ஹோட்டலில் வேலை செய்தவர் கூறினார். அப்போதும் பேய் மழை பெய்து கொண்டிருந்தது.

 

ரொட்டிக் கடை என்றால் ஏதோ ஒரு பாய் ஓரமாக ரொட்டிக் கடை வைத்திருப்பார், வழி கேட்கலாம் என்று நினைத்தால், அது ஒரு சிற்றூர். அதற்குள் மழை நின்றிருந்தது. மழை பெய்து விட்டதால் சாலை முழுதும் கழுவி விட்டது போன்று பளபளத்தது. ஓர் ஓரத்தில் வண்டிகளை நிறுத்தி இளைப்பாறினோம் (ஃபோட்டோ பிடித்தோம்). அழகான டீ எஸ்டேட்கள் மலையைப் போர்த்தி இருந்தது. அப்பொழுதுதான் விட்டிருந்த மழை, சில்லென்ற காற்று என்று பார்க்கவே ரம்யமாக இருந்தது. அங்கிருந்து இயற்கை அழகை ரசித்தவாறே (ஃபோட்டோ பிடித்துக் கொண்டே), நாங்கள் தங்கி இருந்த தீபிகா கார்டன் ரிசார்ட் வந்தடைந்தோம்.

 

மதிய உணவு

வால்பாறையிலிருந்து அதிரப்பள்ளி செல்லும் சாலையில் சோலையார் அணைக்கு அருகில் இந்த தீபிகா கார்டன் ரிசார்ட் அமைந்திருக்கிறது. கூடவே வேறு சில ரிசார்ட்கள் மற்றும் வீடுகளும் அருகில் இருந்தன. பெயருக்கு ஏற்றார்போல் தங்கும் விடுதிக்கு வெளியே பூந்தோட்டம் அமைத்திருந்தார்கள். அந்த விடுதியில் ஆங்காங்கே வீடுகள் கட்டியிருந்தார்கள். அதில் ஒரு வீட்டில் நாங்கள் தங்கினோம். இரண்டு படுக்கை அறைகள், கழிவறைகள், வரவேற்பரை, சமையலறை கொண்டு ஒரு வீடு போல இருந்தது. பிற்பகல் 3.00 மணிக்கு நாங்கள் வந்ததினால் வயிற்றில் பசி இன்னமும் மீதமிருந்தது. மீன் குழம்பும், மீன் வருவலும் செய்திருந்தார்கள். அணையிலிருந்து மீன் பிடித்தாக சொன்னார்கள். எல்லாரும் சாப்பிட்டுகொண்டிருக்கும்போது அபினேஷ்க்கு திடீரென்று தொண்டையில் மீன் முள் மாட்டிக்கொண்டதாக தெரிந்தது. அவன் சாப்பிடாமலேயே எழுந்துவிட்டான். அந்த மீன் முள்ளுடன் போராடிக்கொண்டிருந்தான். இதற்குள் அனைவரும் வயிரு நிரம்ப சாப்பிட்டிருந்தனர். அபினேஷ்க்கு வெள்ளை சோற்றை விழுங்குவது, தண்ணீர் குடிப்பது, வாழைப் பழம் விழுங்குவது போன்ற பல கை வைத்தியங்கள் சொல்லப்பட்டன. கண்ணன், சிவபாலன் வெளியே சென்று வாழைப் பழம் வாங்கி வந்தனர்.

 

“என்னடா இப்ப எப்டி இருக்கு?”, நான்

 

“வாழைப்பழம் சாப்ட்துக்கப்பறம் இன்னும் வலி அதிகமாய்டுச்சு”, அபினேஷ்.

 

“சரி இங்க ஏதாச்சு ஆஸ்பிட்டல் இருக்கான்னு விசாரிச்சு அங்க போய் பாப்போம்”, நானும் மற்றவ்ர்களும்.

 

அதற்குள் மழை பெய்ய ஆரம்பித்துவிட்டது.

 

“இருங்க நானும் வரேன்”, கார்த்திக்.

 

“வாழைழம் சாழ்ட்ரக்கூழாது, வழி அழிகமாழ்ச்சி”, அபினேஷ்.

 

“என்னடா தொண்டைல முள் குத்தி நாக்கு குழறுது”, கார்த்திக். கார்த்திக்கும் நானும் கிலியுடன் பார்த்துக்கொண்டோம். சோலையார் அணைக்கு அருகில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்ஸ் இருப்பதாக ஹோட்டலில் வேலை செய்தவர் கூறினார். நானும் கார்த்திக்கும் மறுபடி பார்த்து புன்னகைத்தோம். அவரின் வண்டியில் அங்கு சென்றோம். அங்கே ஒரு நைட்டியில் 30-40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி இருந்தாள். அவள் தான் நர்ஸாம். அபினேஷ் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான்.

 

“வாயைத் திறங்க”, நர்ஸ்

 

“லொக் லொக்”, அபினேஷ்.

 

”சரி நீங்க வால்பாறையிலிருக்கும் ஜி.ஹெச். போங்க, அங்க நான் குடுக்கர லெட்டர காட்டினா சீக்கிரமா பாப்பாங்க.

அதுக்கு முன்னாடி ஒரு ப்ரைவேட் கிளினிக் டாக்டர்கிட்ட காட்டுங்க, அவர் இல்லனா ஜி.ஹெச். போங்க. அவர் ஏற்கனவே நிறைய பேருக்கு முள் எடுத்திருக்கார்”, நர்ஸ்.

 

இங்க இதே பொழப்பா இருக்குமோ என்று நாங்கள் நினைத்துக்கொண்டோம். அங்கிருந்து 25 கி.மீ தொலைவில் இருக்கும் வால்பாறைக்கு கார்த்திக் காரில் பயணம் செய்தோம். ஊரை நெருங்க, மனிதனின் ஆக்ரமிப்புகள் தெரிய ஆரம்பித்தன. முதலில் குடலைப் பிடுங்கும் நாற்றம் எங்களை வரவேற்றது. நல்ல வேளையாக அந்த டாக்டர் கிளினிக்கில் இருந்தார். அங்கிருக்கும் ஒரு நர்ஸ் நல்ல வார்த்தைகளைப் பேசி ஓரளவுக்கு நம்பிக்கை கொடுத்தார்.

 

“வாயை திறங்க”, டாக்டர்.

 

“லொக் லொக்”, அபினேஷ்.

 

“முள் இல்லையே”, டாக்டர்.

 

அபினேஷ் எங்களை கலவரத்தோடு பார்த்தான்.

 

”இல்லைங்க எனக்கு ஃபீல் ஆகுதே”, அபினேஷ்.

 

“அப்டியா, நல்லா திறங்க. ஆமா முள் இருக்கு, எடுத்திடலாம்”, டாக்டர். எங்களுக்கு அப்பாடா என்றிருந்தது.

 

அபினேஷ்க்கு ஒரு களிம்பை வாயில் வைத்திருக்கும்படி கூறி சிறிது நேரத்திற்கு பிறகு உள்ளே அழைத்தார்கள். 5 நிமிடங்களில், அபினேஷின் மகிழ்ச்சியான குரல் கேட்டது. உள்ளே சென்றதும் வாயெல்லாம் பல்லாக அபினேஷ் நின்றிருந்தான் கையில் முள்ளுடன். அப்பா எவ்ளோ பெரிய முள். அங்கிருந்து மறுபடியும் ரிசார்ட்டுக்கு சென்றோம்.

 

அதற்குள் குழுவில் மீதமிருந்தவர்கள் சோலையார் அணையை ரசிக்க சென்றிருந்தனர்.

“ஜீ, நாங்க வெளியே போய் இருந்தோம், அங்க ஒரு சின்ன அருவி மாதிரி இருந்துச்சி, அங்கேயே குளிச்சிட்டேன்”, செந்தில்.

 

’அடப்பாவிகளா, இங்க ஒருத்தன் மீன் முள் தொண்டைல மாட்டி கஷ்டப்பட்டுடு இருந்தான். அதையெல்லம் கண்டுக்காம, ஊர் சுத்தினத பேசரானே’ என்று நினைத்துக் கொண்டேன். அதுவும் ஒருவிததில் சரிதான். எதற்கு எல்லாரும் இதற்காக காத்திருக்கவேண்டும்? எப்படியும் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையில் அவர்கள் இருந்தார்கள்.

 

பயணம் பற்றி எத்தனையோ தடவை சொல்லியிருந்தும் ”எங்கே போரோம்” என்று கேட்டு, சென்னையிலிருந்து வால்பாறை வரை இருந்த பயணத்தில் தூங்கி வழிந்து (மூக்கில் பாட்டு கேட்டுக் கொண்டு) கொண்டிருந்த தினேஷ், இங்கே வந்ததும் டிவியை நோண்டிகொண்டிருந்தான். எனக்கு என்னமோ “மதராஸப்பட்டினம்” “அப்புக்குட்டி” நினைவு தான் வந்தது, தினேஷை நினைக்கும்போது.

 

அனைவரும் வரவேற்பரையில் குழுமியிருந்தோம். இரவு உணவிற்காக காத்திருந்தோம். சிறிது நேரத்திற்கெல்லாம், என் காலில் ஜில்லென்ற ஓர் உணர்வு. பார்பதற்கு கரிய வண்டு போல இருந்தது. நான் உதரியுடன் கீழே விழுந்தது.

 

“இது அட்டப்பூச்சி”, கண்ணன் மற்றும் மற்றவர்கள்.

 

கண்ணன் அதை போஸ்ட்மாட்டர்ம் செய்ய வெளியே எடுத்துச் சென்றார். திடீரென் உள்ளே வந்து,

“யாரோட ரத்ததையோ நல்லா குடிச்சிருக்கு. யாருதுனு பாருங்க”, கண்ணன். என் காலின் விரல் இடுக்கில் பார்த்தால் ஒரே ரத்தம். கடி பட்ட இடத்தில் எனக்கு எந்த வலியோ உணர்வோ இல்லை. நான் குடித்திருந்த பீர் அந்த அட்டைப்பூச்சியை மட்டையாக்கியிருக்க வேண்டும். இல்லையென்றால் இன்னும் நிறைய ரத்தம் குடிதிருக்கும்.

 

“எதாச்சும் ஆகுமா”, நான்.

 

“ஒரு அட்டைப்பூச்சி கடிச்சாலாம் ஒன்னும் ஆகாது.”, கார்த்திக்.

 

“உங்களுக்கு மெடிக்கலி இது நல்லது தான். புதுசா ரத்தம் ஊறிடும்”, சிவபாலன். இரவு உணவிற்கு பிறகு டிவியை அணைத்து ஏதாவது பேசலாம் என்று கார்த்திக் கூற, அனைவரும் பேய் கதையைப் பற்றி பேசினர். எனக்கு மொக்கையாகத் தான் இருந்தது. பிறகு அடுத்த நாள் அதிரப்பள்ளி அருவிக்கு செல்வதற்கான திட்டம் பற்றி பேசி உறங்கச்சென்றோம்.

 

அதிரப்பள்ளி

ஜூன் 5 காலை சோலையார் அணைக்கு சென்று புகைப்படம் எடுத்துக் கொண்டோம். அணையின் மேல், முந்நாள் பெய்த மழையில் ஒரு ஈசல் கூட்டம் அழிந்து போய் இருந்தது. அதைத் தின்ன ஒரு எரும்புக்கூட்டம் வந்திருந்தது. அதுகூட தெரியாமல் ஆர்வமிகுதியில் புகைப்படம் எடுத்துகொண்டிருந்தோம். எரும்புக்கூட்டம் ஒரு பதம் பார்த்தது. இதற்கும் நம் “அப்புக்குட்டி” வரவே இல்லை. நல்ல தூக்கம் போல. காலை உணவருந்திவிட்டு அதிரப்பள்ளி அருவிக்கு செல்ல ஆயத்தமானோம். சிறிது தூரம்தான் போய் இருந்திருபோம், அதற்குள் தமிழக கேரள எல்லை வந்துவிட்டது. தமிழக எல்லை வரை சாலை நன்றாக இருந்தது. அங்கிருந்து கேரள செக்போஸ்ட் வரும் வரை சாலை குண்டும் குழியுமாக இருந்தது. செக்போஸ்ட்டில் ஏற்கனவே ஒரு ஸ்கார்பியோ நின்று கொண்டிருந்தது. பதிவேட்டில் பதிவு செய்ய ஓட்டுனர் போய் இருந்தார்.

“யார்யா இது வண்டிய நிப்பாட்டினது”, சிவபாலன்.

 

“கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க, செக்போஸ்ட் மாதிரி இருக்கு”, கண்ணன்.

 

அதை மதிக்காமல் சிவபாலன் காரை ஸ்கார்பியோ தாண்டி நிருத்தப் பார்த்தார். அதை உள்ளே இருந்து பார்த்த அதிகாரி கொஞ்சம் கடு கடு முகத்தோடு எங்களைப் பார்த்தார். உள்ளே பதிவேட்டில் பதிவு செய்ய சென்றோம்.

 

“அங்கதான் ஒரு வண்டி நிக்குதுல, அதுக்குள்ள என்ன அவசரம்”, அதிகாரி.

 

“இல்லைங்க வண்டில யாருமே இல்லை. அதனால எங்களுக்கு தெரியாது”, நாங்கள். கோரஸாக நாங்கள் கூறியது, எங்களை ஏற இறங்கப் பார்த்து,

 

“சரி வண்டில சரக்கு இருக்கா? பிளாஸ்டிக் பாட்டில்லாம் இருக்கா?”, அதிகாரி.

 

“சரக்கு இல்ல, தண்ணி பாட்டில் இருக்கு”, நாங்கள்.

 

“சரக்கு இல்லையா?, பாத்துருவோமா?”, அதிகாரி.

 

”பிளாஸ்டி ஃப்ரீ ஃபாரஸ்ட். அதனால பாட்டில எங்கயும் போடாதீங்க.”, அதிகாரி.

 

“சரி”, நாங்கள்.

 

வண்டியில் மது இல்லாததை அவ்வளவு ஆச்சர்யமாகப் பார்த்தார் அந்த அதிகாரி. வண்டியின் விவரங்களைக் குறித்துக்கொண்டு கையில் ஒரு ரசீதைக் கொடுத்தார்கள். திரும்பி வரும்போது காண்பிக்கவேண்டுமென்றும் கூறினார்.

 

அங்கிருந்து சாலை போடப்பட்டிருந்தது. ஆனால் முழுமை செய்யப்படவில்லை. சிறிது தூரம் தான். அதன் பின்னர் வழுக்கும் சாலை போடப்பட்டிருந்தது. மலையிலிருந்து இறங்கும் வளைந்து நெளிந்து செல்லும் சாலை, இருமருங்கிலும் அடர்ந்த வனம், சில்லென்ற காலநிலை, காரில் மனதிற்கு பிடித்த பாடல். என்ன ஒரு ரம்யமான சூழ்நிலை! இந்த தடவை கார்த்திக் கார் முன்னே செல்ல சிவபாலன் பின் தொடர்ந்தார். ஒவ்வொரு வாளைவிற்கும் கார்த்திக் ஒலி எழுப்பிகொண்டே சென்றார். அவரைப் பிந்தொடரும் சிவபாலனுக்கு அவ்வளவு வேலை இல்லை.


“இப்பதாங்க புரியுது கார்த்திக் ஏன் நம்ப பின்னாடி வந்திட்டு இருந்தார்னு”, சிவபாலன்.

 

கண்ணன், “என்னானு?”.

 

“முன்னாடி போர கார் வழிய ஃபிரீ பண்ணிடுது, பின்னாடி போர காருக்கு அவ்ளோ வெலை இல்லை”, சிவபாலன்.

 

வெகுநேரம் கழித்து சாலையில் ஆங்காங்கே சாணத்தின் வாடை. குவியல் குவியலாக சாணம் இருந்தது. கண்டிப்பாக அது யானையின் சாணம். ஒரு சில காய்ந்து கிடந்தது. ஒரு சில புதிதாய் போட்டது போன்று இருந்தது. அதைப் பார்த்ததும் வண்டியில் உள்ளவர்களுக்கு பீதி கிளம்பியது.

 

“நானும் பாக்கறேன், ஒரு யானையைக் கூட கண்ல காணலயே”, தங்கதுரை.

 

“ஏங்க? ஏன் இப்டி?”, நான். அதன் பிறகு தான் தெரிந்தது, மாலை 6 மணிக்கு மேல் இந்தப் பாதையில் வண்டிகள் செல்ல அனுமதி இல்லை. அந்த நேரத்தில் காட்டு விலங்குகள் வெளியே வரும் என்று. அதிரப்பள்ளியைச் சென்றடைய மதியம் 1 ஆகியிருந்தது. வண்டிகளை நிறுத்திவிட்டு உள்ளே சென்றோம். கண்ணன் அங்கு எல்லாரயும் ஐஸ்கிரீம் சாப்பிட நச்சரித்தார்.

 

“ஏங்க உங்களுக்கு வயிறு எரியுதுனா, நாங்களும் சாப்பிடனுமா”, நாங்கள்.

 

தினேஷ் மட்டும் அவர் ஐஸ்கிரீம் சாப்பிடுவதன் காரணம் புரியாமல் அவரோடு சேர்ந்து சாப்பிட்டான்.

உள்ளே நமக்கு அதிகம் பரிட்சயமான அதிரப்பள்ளி அருவி தென்பட்டது. அனேக தமிழ், தெலுங்கு சினிமாக்களின் பாடல் காட்சிகள் இங்கே பதிவு செய்யப்பட்டிருக்கும். ஆர்பரித்து ஓடும் அருவியின் மேல் பகுதியில் நாங்கள் இருந்தோம். அருவியில் குளிப்பது என்பது இயலாத காரியம். இருந்தும் அருவிக்கு வரும் காட்டாற்றில் எங்களை சில நேரம் நனைத்துக் கொண்டோம். நேரம் ஆக ஆக, ஆற்றின் நீர்மட்டம் உயர்வதைக் கண்கூடாக பார்க்க முடிந்தது. அங்கிருந்து செல்ல மனமே இல்லாமல் வெளியே வந்தோம்.

 

மதிய உணவை அங்கே முடித்து, பெட்ரோல் போட்டுக்கொண்டோம். நான் டேன்க் முழுதும் நிரப்பினேன். ஆனால் கார்த்திக் தேவையான அளவு மட்டுமே நிரப்பினார். பின்னர் தான் தெரிந்தது, பெட்ரோல் விலை கேரளாவில் அதிகம் என்று. அங்கிருந்து ரிசார்ட்டுக்கு வந்தடைந்தோம். போனதை விட வந்தது சீக்கிரம் ஆனதாகத் தோன்றியது.

 

பிளஃப் கேம்

 

கண்ணன் அங்கிருந்து அப்படியே ஊருக்கு செல்வதாகச் சொல்லி கிளம்பிவிட்டிருந்தார். ரிசார்ட்டுக்கு வந்து என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டிருக்கும்போது எல்லாரும் டீ வெளியே சாப்பிடலாம் என்று யாரோ கூறினார்கள். அனைவரும் டீ குடித்து அரட்டை அடித்துக் கொண்டு ரிசார்ட் வந்தடைந்தோம். வந்து என்ன செய்வது என்று யோசிக்கும்போது, சீட்டாட்டம் ஆடுவது என்று தீர்மானிதோம். அதில் ”bluff game” என்று சொல்லக்கூடிய ஒரு ஆட்டத்தை ஆடலாம் என்று அபினேஷ் கூறினான். அந்த ஆட்டத்தை எப்படி ஆடுவது என்று அபினேஷ் கூறும்போதே தெரிந்து விட்டது இது எங்கள் குழுவிற்கு ஏற்ற ஆட்டம் என்று. ஆட்டத்தின் சாரம்சம் இதுதான். “யார் பொய் சொல்லி ஏமாற்றி, அனைத்து கார்டுகளையும் இன்னொருவர் மீது லாவகமாக திணிப்பது என்பது”. சிரித்து சிரித்து வயிறே புண்ணாகியிருக்கும். அவ்வளவு சிறப்பாக இருந்தது. மறுநாள் கிளம்பவேண்டுமே என்று நினைக்கும் போது கடுப்பாக இருந்தது. இன்னும் ஒரு நாள் இருந்திருக்கலாம் என்று தோன்றியது.

 

வீடு திரும்புதல்

 

ரிசார்ட்டில் இருந்து தங்கியதற்கு வாடகை கொடுத்துவிட்டு வழியில் எங்கேயாவது காலை உணவைச் சாப்பிடலாம் என்று கிளம்பினோம். ரொட்டிக் கடை என்னும் ஊரில் வயிறு நிரம்ப சாப்பிட்டோம். அனைவருக்கும் சேர்த்து 400 ரூபாய் தான் ஆகிருந்தது. அங்கிருந்து கிளம்பி வந்த வழியே செல்ல ஆரம்பித்தோம். பொள்ளாச்சி இளநீரைச் சாப்பிட்டு அங்கிருந்து அவினாசி வழியாக சேலம் வந்தடைந்தோம். மறுபடி பெட்ரோல் நிரப்புவது, எங்களுக்கு பெட்ரோல் (அதாங்க வயித்துக்கு சோறு) நிரப்புவது, வழியெங்கும் டோல் பிளாசாவிற்கு அழுவது என்று சென்று கொண்டிருந்தது. மறுபடியும் சேலம் – உளுந்தூர்பேட்டை – செங்கல்பட்டு – திருப்போரூர்  வழியாக வீடு வந்து சேர்ந்தோம். திரும்பி வரும்போது சிவபாலனுக்கு ஓய்வு கொடுக்கப் பட்டு, தங்கதுரையிடம் ஓட்டுனர் பொறுப்பு கொடுக்கப்பட்டது. அவரும் வண்டியை 140 kmph வேகத்தில் அனாயசமாக ஓட்டினார். படூரில் சிவபாலன், தங்கதுரை இருக்கும் அப்பார்ட்மெண்ட் வந்ததும் கார் என்னிடம் கொடுக்கப் பட்டது. இவ்வளவு நேரம் ஒரு பயணியாக ஜாலியாக அனுபவித்து வந்தவனிடம் வண்டியை ஓட்ட சொன்னால் என்னங்க செய்வது. மறுபடியும் எப்போது இது மாதிரி பயணம் அமையப்போகிறது என்ற விரக்தியோடு வண்டியை வீட்டிற்கு செலுத்தினேன்.

திருமண நிகழ்சிக்கு செல்லும் முன்

பொள்ளாச்சியிலிருந்து வால்பாறை செல்லும் வழி

ரொட்டிக் கடை ஊரில் இளைப்பாறியது...

மாலை நேர நடை...

சோலையார் அணை

ஆழியாறு அணைக்கு செல்லும் வழியில்...

சோலையார் அணை

அதிரப்பள்ளி சென்று திரும்பும் போது...

ஆழியாறு அணையில்...

சேலம் உளுந்தூர்பேட்டை சாலை ...

Tuesday, June 30, 2015

வால்பாறை - பயணக்குறிப்பு


பயணம் ஒரு அலாதியானது. நண்பர்களுடன் ஒரு மகிழ்ச்சியான, ரம்யமான மற்றும் குதூகலம் நிறைந்த பயணம் செய்வது என்பது எல்லாருக்கும் பிடித்தமான ஒன்று. அது அனைவருக்கும் எளிதில் கிட்டாது. அது போன்ற அரிய பயணத்தை விட எவருக்கும் மனது வராது. அம்மாதிரியான ஒரு பயண அனுபவத்தை இதில் பகிர்கிறேன்.

 பயண திட்டமிடல்

தீப்தி தனது திருமண பத்திரிக்கைய கொடுத்தவுடன் முடிவானது எங்கள் பயணம். கார்த்திக், சிவபாலன் மற்றும் சிலர் உடனே இதைப்பற்றிய திட்டமிடலில் இறங்கினர். நானும் சேர்ந்துகொண்டேன். தீப்தி பொள்ளாச்சியில் திருமணத்தை வைத்ததால், நாங்கள் வால்பாறையை எங்கள் பயணத்தில் சேர்த்துக் கொண்டோம். யாரெல்லாம் வருகிறார்கள் என்று கணக்கெடுக்கும் முன்னே 9 பேர் வர ஒப்புக்கொண்டார்கள். சிவபாலன் தனது நண்பரையும் (தங்கதுரை) அழைத்துக் கொள்ளலாம் என்று கூறினார். இதற்குள் நான் வருகிறேன், நீ வருகிறேன் என்று ஒருவழியாக 10 பேர் என்று முடிவானது. இந்த திட்டமிடல் சுமார் ஒன்றரை, இரண்டு மாதத்திற்கு முன்பே ஆரம்பமானது.

இதுதான் எங்கள் பயணத் திட்டம்.

ஜூன் 3 – அலுவலத்திலிருந்து இரண்டு கார்களுடன் பொள்ளாசிக்கு சென்று இரவு தங்குவது.

ஜூன் 4 – காலை திருமண நிகழ்ச்சியில் கலந்து, பின்னர் வால்பாறை புறப்பட்டு, இரவு அங்கே தங்குவது.

ஜூன் 5 – அதிரப்பள்ளி அருவிக்கு சென்று, மறுபடியும் வால்பாறை அடைந்து, இரவு தங்குவது

ஜூன் 6 – வால்பாறையிலிருந்து கிளம்பி, சென்னை வந்தடைவது

இரண்டு கார்களில் ஒன்று என்னுடைய i20, இன்னொன்று கார்த்திக்கின் Jazz. இரண்டு கார்களுமே ஒரே மாதிரியான பெட்ரோல் எஞ்சின் மற்றும் ஒரே வகை செயல் திறன் கொண்டவை. இட வசதியும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருக்கும். Jazz ல் பின் இருக்கையில் சிறிது அகலம் என்று நினைக்கிறேன். வண்டி வாங்கியது முதல் நானே ஓட்டிக் கொண்டிருந்தபடியால், இந்த பயணம் முழுதும் ஒரு ஓட்டுனராக இல்லாமல் பின் இருக்கையில் பயணம் செய்ய முடிவு செய்தேன். போதாக்குறைக்கு சிவபாலன், தானே ஓட்டுவதாக சொல்லியிருந்தார். கண்ணன் மற்றும் தங்கதுரையும் அனுபவமிக்க ஓட்டுனர்களே.

பயணம் சரி, தங்குவதற்கான ஏற்பாடுகளை யார் செய்வது? அனைவருமே வேலையில் மூழ்கிக் கிடந்தபடியால், நானும் சிவபாலனும் தங்கும் ஹோட்டலை தேட ஆரம்பித்தோம். எங்களுக்கு www.team-bhp.com தளம் மிகவும் உறுதுணையாக இருந்தது. அதில் ஏற்கனவே வால்பாறைக்கு சென்றவர்கள் சொல்லியிருந்த ஹோட்டல்களில் முதல் இடம் இந்திரப்பிரஸ்தா, பின்னர் சின்ன தேவர் போன்ற மாளிகைகள். ஆனால் இதில் தங்க குறைந்தது ஒரு நாளைக்கு ரூ. 6000 முதல் ரூ. 10000 வரை செலவாகும். மொத்தம் 10 பேர் ஆதலால், விசாரித்ததில் எங்குமே அறைகள் காலி இல்லை. கடைசியில் சோலையார் அணைக்கு அருகில் தீபிகா கார்டன் ரிசார்டில் அறைகள் காலியாக இருந்ததால் அங்கு புக் செய்தோம். அதுவும் 10 பேருக்கு ஒரு நாளைக்கு ரூ. 4000. இது ஒரு நல்ல டீல். அதன் பிறகு பயணத்திற்காக ஒவ்வொரு நாளாக காத்திருந்தோம். இருந்தாலும் மனதில் ஏதோ ஒரு ஓரத்தில், இந்த பயணம் எங்கு சொதப்பி விடுமோ என்று தோன்றிக் கொண்டே இருந்தது. இப்பயணத்திற்காகவே ஒரு வாட்ஸ்ஆப் குரூப் ஒன்று உருவாக்கினோம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

பயணம் ஆரம்பம்

ஜூன் 2, மாலை 6, கார்த்திக் எல்லாரிடமும்

“எல்லாரும் அவங்களோட வேலைய இன்னிக்கே முடிச்சிடுங்க, நாளைக்கு அது செய்யனும் இது செய்யனும்னு உக்கார்துடாதீங்க. Sharp ஆ ஒன்றைக்கு நாளைக்கு கிளம்பரோம்”

“எப்டியோ எல்லா வேலையும் முடிச்சிடலாம்” மற்ற அனைவரும்.

ஜூன் 3, மதியம் 1. நான் கார்த்திக்கிடம் “வாங்க சாப்டு கிளம்பலாம்”,

கார்த்திக் “இல்லைங்க, கொஞ்சம் வேலை இருக்கு. இத முடிச்சிட்டு கிளம்பிடலாம்”. அடடா இது என்னடா சொதப்பிடுமே என்று தோன்றியது. எல்லாருமே மானிட்டரையே வெறிக்க பார்த்து வேலை செய்து கொண்டிருந்தார்கள்.

“இது வேலைக்கு ஆகாது. சிவபாலன், நாம முதல்ல என் வண்டில கிளம்பலாம். போறப்ப தங்கதுரை, சுரேஷ் அ பிக்கப் பண்ணிக்கலாம்”, நான்.

“கரக்ட், இன்னொருதர சேர்த்துக்குவோம். நாம மூனு பேரு, பிக்கப் பன்றவங்க ரெண்டு. சரியா இருக்கும். மீதி இருக்கரவங்க, கார்த்திக் கார்ல வந்துருவாங்க”, சிவபாலன்.

“நான் வரேன் உங்க கூட”, கண்ணன்.

கார்த்திகிடம் சொல்லிவிட்டு நாங்கள் கிளம்பி, ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு, இருவரையும் அழைத்துக் கொண்டு, பெட்ரோலை நிரப்பி சென்றோம். அதற்குள் மணி 3.00 ஆகியிருந்தது.

என் வண்டியில், முதல் கியரில் பிக்கப் குறைவாக இருக்கும். வண்டியிலோ 5 பேர் வேறு. சிவபாலன் என் வண்டிக்கு பழகுவதற்கு சிறிது நேரம் ஆனது.

“கணேசன், உங்க வண்டி சொன்ன பேச்ச கேக்குது. நில்லுனா நிக்குது, ஓடுனா ஓடுது. ஓட்ரதுக்கு நல்ல கம்ஃபர்டிபிளா இருக்கு”, சிவபாலன்.

“ஓ, சூப்பர்”, நான்.

சுரேஷ் வீட்டிலிருந்து வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையை அடைந்து அங்கிருந்து ஜி.எஸ்.டி ரோட்டை அடையலாம் என்று கண்ணன் சொன்னபடி வண்டியை ஓட்டினார் சிவபாலன். பிறகு திண்டிவனம் அருகில் வஸந்த பவனில் சிற்றுண்டி சாப்பிட்டு, இரண்டாம் வண்டிக்காக காத்திருந்தோம். மாலை 6.00 மணிக்கு அவர்கள் வந்தார்கள். ஏன் இவ்வளவு நேர தாமதம், எப்பொழுது அலுவலகதிலிருந்து கிளம்பினார்கள் என்று கேட்டால் யாரும் சரியாக சொல்லவேயில்லை. கடைசியாக லீலா மனோகரிடம் கேட்கலாம் என்று சென்றேன்.

“When did you guys start? Don’t tell lie man”, கண்ணடித்தவாறே கேட்டேன்.

“Actually we started by 3.30 from office and started by 4.00 after our lunch”, சிறிது தயக்கத்துடன் கூறினான். இப்பொழுது உண்மை புரிந்தது. அவர்கள், திருப்போரூர் – செங்கல்பட்டு வழியாக இங்கே வந்தார்கள்.

கழுத்தில் ருத்ராச்சக் கொட்டை, கீழே காவி வேட்டியில் கார்த்திக்கைப் பார்த்தவுடன் ஏனோ எனக்கு ஒரு சித்தர் போல தெரிந்தார். தான் அடிக்கடி சதுரகிரி செல்வதாக சொல்லியிருக்கிறார். எனக்கு என்னமோ சந்தேகம். சரி அத விடுங்க.

அங்கிருந்து கிளம்பி, வழி நெடுக சுங்கச்சாவடிகளில் அழுது விட்டு, உளுந்தூர்பேட்டை வழியாக சேலம் சென்றோம். அதுவரை நான்கு வழிப்பாதையாக இருந்த ஜி.எஸ்.டி சாலையிலிருந்து உளுந்தூர்பேட்டையில் வலது திரும்பி சேலம் செல்லும் பாதை, இரு வழி மற்றும் நான்கு வழிப் பாதை என மாறி மாறி வந்தது. தங்கதுரை அடிக்கடி இப்பாதை வழியாக வந்ததால், அவர் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தார். புதிதாக போடப்பட்ட பைபாஸ் சாலை ஓட்டுவதற்கு சிறந்தது. இப்பாதையில் ட்ராபிக் குறைவுதான் என்றாலும் இரவில் இந்தப் பாதையில் அனுபவமிக்க ஓட்டுனர்களே 100 லிருந்து 120 kmph செல்லமுடியும். அதை சிவபாலனும், கார்த்திக்கும் செவ்வனே செய்தனர்.

பின்னர் சாப்பிடுகிறேன், இப்போ சாப்பிடுகிறேன் என்று சொல்லி, ஒரு வழியாக அனைவரும் இரவு உணவை சேலத்திற்கு அருகில் இருக்கும் சரவணபவனில் முடித்தோம். பெட்ரோல் நிரப்பிக்கொண்டு சேலத்திலிருந்து கிளம்பினோம்.

சேலத்திலிருந்து அவினாசி செல்லும் பைபாஸ் சாலை சிறிது ட்ராபிக் இருந்தாலும் நான்கு வழிப்பாதையாதலால், ஓட்டுவதற்கு சிரமம் இல்லாமல் இருந்தது. அவினாசியிலிருந்து பொள்ளாச்சி செல்வதற்கு இருவழிப் பாதை. அவினாசி செல்வதற்குள் இரவு 12.00 ஆகிவிட்டது. பொள்ளாச்சி செல்லும் சாலை மிக அருமையாக செப்பனிடப் பட்டிருந்தது. சேலம்-அவினாசி பைபாஸ் சாலையில் இருந்த அதிர்வுகள் கூட இந்த சாலையில் இல்லை. செல்லும் வழியில் பேருக்குக் கூட ஒரு டீ கடை கூட திறந்திருக்கவில்லை. வழியில் இரண்டு மூன்று வேகத்தடைகள் இருந்தன. ஒரு இடத்தில் அதற்கான குறியீடே இல்லை. 100 kmph வேகத்தில் வந்த வண்டி திடீரென்று 10 kmph வேகத்திற்கு கொண்டு வருவதற்குள் வேகத்தடையில் மோதி வண்டி சிறிது தூரம் பறந்தது. இரவு 1.00 மணிக்கு பொள்ளாச்சியை அடைந்தோம். தீப்தியின் உறவினர் நாங்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்த வீட்டிற்கு அழைத்து சென்றார். நல்ல விஸ்தாரமான வீடு. ஆனால் 10 பேர் தங்க இது போதுமானதாக இல்லை. இருந்தும் ஒர் இரவு தங்க இதைவிட சிறந்தது இல்லை.

“கார்த்திக், தீப்தி சொந்தகாரர் கிட்ட நீங்கதான் தீப்தி மேனேஜர்னு சொன்னீங்களா?”, சிவபாலன்.

“இல்லையே, ஏன்?”, கார்த்திக்.

“உங்களோட, காஸ்ட்யூம், அதுவும் வேட்டிய லுங்கி மாதிரி மடிச்சி கட்டிகிட்டு அவர் கிட்ட நீங்க பேசும் போது, பாக்கர்துக்கு செம காமெடியா இருந்துச்சுங்க. மேனேஜர்னு சொல்லி இருந்தீங்களோனு நினைச்சேன்”, சிவபாலன்.

கார்த்திக் முகத்தில் அவருடைய ட்ரேட் மார்க் புன்னகை. அனைவரின் முகத்தில் அவ்வளவு சிரிப்பு. J

 திருமணம்

திருமண மண்டபம் செல்லும் வழி தெரியாமல் பொள்ளாச்சி முழுதும் ரோடு ரோடாக காரில் அலைந்து திரிந்து செல்வதற்குள் தாலி கட்டி முடித்துவிட்டார்கள். சரி வந்த வேலையைப் பார்ப்போம் என்று அனைவரும் சாப்பிட்டு விட்டு தீப்திக்கு அன்பளிப்பைக் கொடுத்து கிளம்பினோம்.
 
                                            ஜி.எஸ்.டி ரோட்டில் செல்லும்போது...


வால்பாறை அனுபவங்கள்  அடுத்த பதிவில்...

Wednesday, October 1, 2014


வண்டலூர் உயிரியல் பூங்கா

தவறான திட்டமிடல்

கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக வண்டலூர் உயிரியல் பூங்கா செல்ல வேண்டும் என்று நினைத்துக்கொண்டே இருந்து சென்ற மாதம் தான், நான், என் மனைவி மற்றும் மச்சானுடன் கிளம்பினோம்.

சென்ற மாதம் வண்டலூர் செல்ல உகந்த நேரம் இல்லை என்று தெரிந்தும் கிளம்பினோம். அதற்கான தண்டனையும் கதிரவன் எங்களுக்கு காட்டிவிட்டான்.

வண்டலூருக்கு செல்வது இதுவே எங்கள் மூவருக்கும் முதல் தடவை. உள்ளே சென்றவுடன் நுழைவுச்சீட்டு வழங்குமிடம். அங்கு பல கவுண்டர்கள் இருந்தும் ஒரே ஒரு கவுண்டரில் மட்டுமே ஆள் போடப்பட்டிருந்தது. வெயில் வேறு பின்னி எடுத்துக்கொண்டிருந்தது. கூட்டமும் ஓரளவிற்கு இருந்தது. நுழைவுச்சீட்டு வழங்குமிடத்தில் ஒரு வட இந்திய இளைஞன் இங்கு பேக்கேஜ் டூர் இருக்குமா என்று ஆங்கிலத்தில் விசாரித்தான். நுழைவுச்சீட்டு கொடுப்பவர் தனக்கு தெரிந்த உடைந்த ஆங்கிலத்தில், அது உள்ளே கிடைக்கும் என்று கூறினார். உள்ளே நடந்து சென்று சுற்றிவருவது கடினமான ஒன்று என்று அப்போதே எங்களுக்கு உறைத்திருக்க வேண்டும்.

அலட்சியம்

உள்ளே நுழைம்போதே, பையில் ஏதாவது தின்பண்டம் எடுத்து செல்கின்றோமா என்று சோதனை போடுகிறார்கள். அது சோதனையே அல்ல. வெறுமனே பையை தட்டிப்பார்த்து நம்மிடமே ”உள்ளே ஏதாவது இருக்கிறதா” என்று கேட்கிறார்கள். எங்களிடம் குடிநீர் தவிர வேறொன்றுமில்லை. குறைந்தபட்சம் பிஸ்கட் பேக்கட்டையாவது எடுத்துச் சென்றிருக்கலாமென்று பின்னர் தோன்றியது.  

உள்ளே சென்றவுடன், பேட்டரியில் இயங்கும் கார், சைக்கிள் போன்றவை வாடகைக்கு இருந்ததும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் நடந்தே செல்லலாம் என்று முடிவெடுத்தது மிகப்பெரிய தவறு என்று பின்னர் தான் தெரிந்தது. இந்த வலைப்பூவை எழுதுவதற்கு காரணமே, இனி யாரும் நாங்கள் செய்த தவறைச் செய்யாமல் அவர்களது பயணமேனும் இனியதாக அமையவேண்டும் என்ற எண்ணத்தில் தான்.

நடைப் பயணம்
உள் நுழைந்தது, எங்கும் பசுமை மாறாமல் மரங்களடர்ந்து கிடந்தது. அம்புக்குறி போட்ட பாதையில் நடைப் பயணம் ஆரம்பமானது. முதலில் பார்த்தது குரங்குவகைகளை. விதவிதமான குரங்குவகைகளைப் பார்த்துக்கொண்டே பறவைகள் பகுதிக்கு வந்தோம். அதற்குள் உச்சி வெயில் அடித்துக்கொண்டிருந்தது. மரங்கள் அடர்ந்திருந்தும், காற்றோட்டம் இல்லாததால் வெக்கையாக இருந்தது. அப்படியே பேசிக்கொண்டே ஏரி இருக்கும் வழியாக நடந்து சென்றோம். அது ஒரு வறண்ட ஏரி. பெயருகேனும் துளி தண்ணீர் கூட இல்லை. ஏரியின் அருகில் மரங்கள் குறைவு. உச்சி வெயில் வேறு. எங்கள் சக்தியெல்லாம் இங்கேயே விரயமானது. 

அங்கிருந்து மறுபடியும் பறவைகள் பகுதிக்கு சென்று தார்ச் சாலையில் நடக்க ஆரம்பித்தோம். அவ்வழியே கூண்டில் இருக்கும் பறவைகள், காட்டெருமைகள், மான்கள், சிறுத்தை முதலிய பல விலங்குகளைப் பார்த்துக்கொண்டே நடந்தோம். மனிதர்கள் முகத்தில் இருக்கும் ஆச்சர்யமும், வியப்பும் பெயருக்கேனும் ஒரு மிருகத்திடமும் இல்லை. எத்தன பேர பாத்திருப்போம்னு நினைச்சிட்டு இருந்திருக்கலாம்.

சிறிது நேரத்திற்கெல்லாம் ஆவின் பாலகத்தின் ஐஸ் கிரீம் பார்லர் தென்பட்டது. நடந்து செல்வோர் மட்டுமல்ல, சைக்கிளில் வந்தவர்களுக்கும் அது ஒரு பாலைவனச்சோலையாக இருந்தது. நாங்கள் ஆளுக்கொரு ஐஸ் கிரீம் வாங்கிச் சுவைத்தோம். அது தந்த உடனடி ஆற்றல் எங்கள் சிரம பரிகாரத்திற்கு உதவியது. சிறிது நேரத்திற்கெல்லாம், மதியம் 1 மணியானது. எனக்கு பசி வயிற்றைக் கிள்ள ஆரம்பித்தது. வழியெங்கும் இருந்த விலங்குகள், பறவைகளைப் பார்க்க மனம் செல்லவில்லை. ஏதாவது உணவகம் இருக்குமா என்று தேடத் தோன்றியது.

வெள்ளைப் புலி
அப்பொழுதுதான் வெள்ளைப் புலிகள் இருக்கும் இடம் வந்தடைந்தோம். வண்டலூர் உயிரியல் பூங்காவிலே இருக்கும் ஒரே ஈர்ப்பு இந்த வெள்ளைப் புலிகள் தான் என்பது, அதைப் பார்க்கும்போது தெரிந்தது. மூன்று வாலிபப் புலிகள். ஒன்று சிவனே என்று அமர்ந்து கொண்டிருந்தது. மற்றுமிரண்டு புலிகள் அங்குமிங்கும் உலாவிக்கொண்டு இருந்தது. அதைப் படம் பிடிக்க அத்தனை பேர்கள் இருந்தும், அப்புலிகள் மனிதர்களை சட்டை செய்த மாதிரியே தெரியவில்லை. நாங்கள் வண்டலூர் சென்ற சமயம், டெல்லியில் நடந்த புலி தாக்கிய (?) சம்பவம் நடை பெறவில்லை. அதனால் அப்புலிகளை பார்க்கும் போது உள்ளூர பயம் இல்லை. இப்பொழுது இந்தப் பதிவை எழுதும்போது விருட்டென்று ஒருவித பயம் வந்து செல்கிறது.

வெளியே…
அங்கிருந்து சிறிது நடந்து சென்றதும் ஒரு கடையில் மைதாவில் செய்த பஃப் மற்றும் டீ விற்றுக் கொண்டிருந்தார்கள். விற்றுக் கொண்டிருந்தார்கள் என்று சொல்வதை விட, அங்கிருந்த மக்கள் அதை பிடுங்கிக் கொண்டிருந்தார்கள். அவ்வளவு பசி அனைவருக்கும்!! மணி 3.30 ஆயிற்றே!! ஆங்காங்கே உயிரியல் பூங்காவிற்கென்றே சில வழிகள், மருத்துவமனைகள், விலங்குகளின் இனப்பெருக்க மையங்கள் போன்றவை இருந்தன.

எனக்கு உயிரியல் பூங்கா செல்ல வெகு நாளாக ஆசை இருந்தது. ஆனால், அங்கு விலங்குகளுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் சுதந்திரம் (???), இயல்புத்தன்மை இல்லாமை, செயற்கையான இயற்கை போன்றவற்றினால், ”ஏண்டா இங்க வந்தோம்னு” ஆகிவிட்டது. விலங்குகள் அனைத்தும் சுயத்தை இழந்து இருந்தன. வேளா வேளைக்கு உணவு, இனப்பெருக்கம் செய்வதற்கு போட்டி இல்லாமை போன்றவற்றினால், அவை அனைத்துமே அதன் சுயத்தை இழந்திருந்தன. உதாரணத்திற்கு ஒரு நாரை, அதன் அழகிய இறக்கையை விரித்துக் காட்டி பறக்க முயன்றது. ஆனால் அதனால் இரண்டடி மட்டுமே பறக்க முடிந்தது. ஏனெனில், இடப் பற்றாக் குறை. அந்த நாரையைப் பற்றி அருகில் ஒரு பலகையில் விளக்கம் கொடுக்கப் பட்டுள்ளது. அது கடல் தாண்டி, கண்டம் விட்டு கண்டம் பறந்து செல்லும் பறவை. அதன் விதியைப் பாருங்கள்.

அங்கிருந்து சிறிது தூரத்திற்கிலெல்லாம் ஓட்டல் தமிழ்நாடு வந்தது. அகோர பசி பறந்து போய் ஒரு மணி நேரம் ஆன பிறகு எதுவுமே சாப்பிடப் பிடிக்கவில்லை. அப்படியே சாப்பிட நினைத்தாலும், அந்த நேரத்தில் அங்கு சாப்பிட சூப் மற்றும் அதே பஃப் தான் இருந்தது. வேறு வழியில்லாமல் அதையே தின்று நடையைக் கட்டினோம். கடைசியாக வெளியே செல்லும் வழி வந்தது. அப்பொழுது அந்த பேட்டரி கார், சைக்கிள்கள் வேறு கடுப்பைக் கிளப்புமாறு அணிவகுத்து நின்றன. அதீத களைப்பு காரணமாக சிறிது இளைப்பாறினேன். வெளியே செல்லும் வழியில் மறுபடியும் ஒரு பெரிய ஓட்டல் வந்தது. அங்கு சூடான போண்டா, தோசையைப் பார்க்கையில் நாக்கு ஊறி அங்கு மறுபடியும் தின்றுத் தொலைத்தோம். என்ன செய்ய? களைப்பும், பசியும் தொடர்ந்து கொண்டே இருந்தது.

நான் பூங்காவை ரசித்ததைவிட பசியால் அலைந்தது அதிகம். அதனால் தான் என்னவோ, அதைப் பற்றியே அதிகம் எழுதுகிறேன்.

இன்னொரு முக்கியமான தகவல். இங்கு சிங்கம், கரடி மற்றும் மான்கள் தனியாக உலவும்படி செய்து, கூண்டுக்குள் இருக்கும் வண்டியில் மனிதர்கள் செல்லும்படியான Lion Safari, Deer Safari, Bear Safari போன்றவை இருக்கிறது. ஆனால், அதைத் திட்டமிடாததால், அதைப் பார்க்கும் பாக்கியம் கிடைக்கவில்லை.

சரியாகத் திட்டமிட்டால், வண்டலூர் பூங்காவும் பார்க்கத் தவறக்கூடாத இடங்களில் ஒன்றே!!! மிஸ் பண்னிடாதீங்க !!!!

All the best. Have a nice journey to Vandalur ZOO !!!