Thursday, December 23, 2010

சில கேள்விகள்

சிறு வயது முதல் என் மனதை அரித்துக் கொண்டிருந்த சில கேள்விகளை, ஒரு பதிவாக எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். வெகு நாளுக்குப் பிறகு இப்போது தான் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் கிடைத்தது.

பாலகனாக இருக்கும் போது நம்மில் பலருக்குக் கேள்விகள் முளைத்துக் கொண்டே இருக்கும். நான் கூட என் அம்மாவிடம் கேள்விகள் கேட்டுக் கொண்டே இருப்பேன் என்று சொல்வார்கள். அப்படி கேட்கப் படும் கேள்விகளுக்கு, சில விடைகள் உடனடியாகக் கிடைக்கும். சிலவற்றிற்கு கிடைத்த விடைகள் தவறென்று பின்னாளில் தான் தெரியவரும். சில விடையே இல்லாத கேள்விகளும் உண்டு.

என்னுள் எழுந்த, இன்னும் பதில் கிடைக்காத கேள்விகளுள் முதலாவதாக இருப்பது, கடவுளைப் பற்றியது.

சிறு வயதில், எனக்கும் எங்கள் பங்காளிகளின் வாரிசுகளுக்கும், எங்கள் குலதெய்வம் கோவில் (வேப்பமரம் தான் கோவில்) முன்பாக, காதணி திருவிழா நடை பெற்றது. எல்லாம் தயாராக இருந்தும் காது குத்துதலும், மொட்டை அடித்தலும் ஆரம்பிக்கவில்லை. ஒரு பெரிய மனிதர், திடீரென்று விகாரமான குரலில், கண்களை மூடிக்கொண்டு, கத்திக் கூச்சலிட்டுக் கொண்டிருந்தார்.

“டேய், நான் தான் உங்க குலதெய்வம் வீரவர் வந்திருக்கேன்”, அப்பெரியவர்.

“சொல்லுங்க சாமி, பசங்களுக்கு காது குத்தனும், உத்தரவு குடுங்க”, இன்னொரு பெரியவர்.

அவரும், மூடிய கண்களை திறக்காமல், “யேன் டா இன்னும் எனக்கு கோவில் கட்டல”.

“உங்களுக்கு செய்ய வேண்டியதெல்லாம் செய்ரோம், இப்போ உத்தரவு குடுங்க”

”சரி புள்ள குட்டிங்களோட நல்ல இருங்க. . . .” என்று சாமி ஏறிய அப்பெரியவர் ஏதேதோ கூறிக்கொண்டே இருந்தார்.

அதுவரையில், கடவுள் பற்றிய எண்ணம் எதுவும் இல்லாமல், கோவிலுக்கு போவது, சாமி கும்பிடுவது என்று இருந்தேன். அதன் பின் தான் தோன்றியது கடவுள் பற்றிய சிந்தனை. அப்போதிலிருந்து இன்றுவரை கடவுள் பற்றிய பின் வரும் கேள்விகள் தோன்றிக் கொண்டே இருக்கின்றன.

“கடவுள் என்பவர் யார்?”
“கடவுளுக்கும் நமக்கும் என்ன தொடர்பு?”
“கடவுள் ஒருவரா? அவரை யாரேனும் கண்டதுண்டா?”
“கடவுள் ஒரு பெயர் சொல்லா? வினைச்சொல்லா?”
”கடவுளை அடைய வேண்டும் என்று சொல்வதன் அர்த்தம் என்ன? பக்திக்கும் முக்திக்கும் தொடர்பு உண்டா?”
. . .
. . .
. . .

கடைசியாக எந்திரன் படத்தில் கூட கடவுள் பற்றி சொல்லும்போது என்னுடைய கேள்விகள் அதிகமாகிக் கொண்டே இருக்கின்றன.

அதில் ஒர் உரையாடல்

“கடவுள் இருக்கிராரா?”, நிருபர்.

“கடவுள் என்பவர் யார்?”, எந்திரன்.

“நம்மைப் படைத்தவர்”, நிருபர்.

“என்னைப் படைத்தது இவர்தான். கடவுள் இருக்கிரார்”, எந்திரன்.

அப்படத்தில் இன்னுமோர் காட்சியில் எந்திரனுக்கு விஞ்ஞானி உயிரைப் பற்றி விளக்கம் சொல்லும் போது, ஒரு பேக்டீரியாவுக்கு உயிர் இருக்கு, ஆனால் சோடியத்திற்கு உயிர் இல்லை என்று கூறுவார். அதாவது D.N.A. என்னும் கரிம வேதிப் பொருளால் ஆன ஒரு பேக்டீரியாவுக்கு உயிர் உண்டு. அக் கரிம வேதிப் பொருள் தனித்து உயிராக இருக்க முடியாது. அப்படி இருக்க உயிர் எங்கிருந்து வந்தது?. இது போன்ற கேள்விகள் தான் கடவுள் என்ற ஒன்று இருக்குமோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

இப்படி கேள்விகள் மூலமாக அடையும் யோக நிலையைத்தான் விவேகானந்தர் “ஞான யோகம்” என்று எடுத்துக் கூறியுள்ளார்.

அடுத்த கேள்வி நாம் உண்ணும் உணவுப் பொருள் பற்றியது.

உண்ணும் உணவை சைவம் என்றும் அசைவம் என்றும் பிரித்து உண்கிறார்கள். சைவம், அசைவம் இவற்றின் விளக்கம் என்ன?
தாவரங்கள் அனைத்தும் சைவ உணவு, தாவரமல்லாத பிராணிகளின் (அதாவது மாமிசம் கொண்ட உயிர்கள்) உணவு அசைவம் என்று ஒரு வரையறை இருக்கிறது. சைவ உணவை உண்பவர்களிடம், அதை மட்டும் உண்ணுவதேன் என்று விவாதம் செய்து கிடைக்கும் கடைசி பதில் “உயிர் வதை கூடாது”. அப்படியென்றால், தாவரங்களை எந்த வகையில் சேர்ப்பது? உயிரியல் பாடத்தில் ஒரு பகுதி தாவரவியல் என்று படித்தோமே? இன்னும் சில பேர் சொல்வது “வாயில்லாத ஜீவனை வதைக்கக் கூடாது” என்பது. உண்மையில் தாவரங்களுக்குத் தான் வாய் கிடையாது. விலங்குகளுக்கு ஓசையை எழுப்பக் கூடிய திறன் உண்டு.

என்னங்க ரெண்டு கேள்விக்கே இப்டி மொறைக்கரீங்க. இன்னும் கேள்விகள் இருக்கு.

கேள்விகள் தொடரும் . . .

4 comments:

  1. கடவுள் இருக்கிறாரா? இல்லையா?
    -இருந்தா நல்லா இருக்கும்…?

    உணவு சைவமா? அசைவமா?
    -இருக்கப் பட்டவனுக்குத் தான் இந்த பேதம்… இல்லாதவனுக்கு எலிக்கறியும் உணவு தான்…

    -ஒரு சில தாவரங்களைத் தவிர நாம் அவற்றை உணவிற்காக முழுவதுமாக அழிப்பதில்லை…. நாம் அனுபவிப்பது எல்லாம் அவை தரும் பயன்கள் மட்டுமே… உதாரணத்திற்கு… பழங்கள்… விலங்கினங்கள் தரும் பயன்பாட்டில் பாலை உதாரணமாக கொள்ளலாம்!

    இன்னும் நிறைய கேள்விகளை நிறைய கோணங்களில் இருந்து எதிர்பார்க்கிறேன்….

    ஆனால்... எனக்கு ஒரே ஒரு கேள்வி தான்…
    அந்த பொண்ணு என்னைய பாக்குதா? இல்லையா? ;)

    ReplyDelete
  2. Thanks for your comments Sheik.

    Inum niriya questions irukku...

    blog la podra alavuku time illa...

    Apram, ungala ellarum than pakaranga.... entha ponna soldringa? :-)

    ReplyDelete
  3. வாயில்லாத பிராணிகளை வதைக்க கூடாது என்று கூறினீரே எங்கேயோ சென்றுவிட்டீர் ..!! எந்திரன் எடுத்துக்காட்டு அமோகம்..!! இது அனைத்தையும் விட தூய தமிழில் உங்கள் பதிவு சூப்பராக உள்ளது .. :-p உங்கள் வலைப்பதிவிற்கு ரசிகன் ஆகிவிட்டேன்..!!

    ReplyDelete