கல்கியும் மாமல்லபுரம் பயணமும்
2009ஆம் ஆண்டு கிருத்துமஸ் நாளன்று அலுவலக விடுமுறையாதலால் மாமல்லபுரம் செல்ல எங்கள் அலுவலகத்திலுள்ள நண்பர்கள் முடிவு செய்தோம். இதற்கு துவக்கப் பணியினை அதாவது அனைவரையும் அழைக்கும் பணியினை செவ்வனே செய்த்து அடியேன்.
2009ஆம் ஆண்டு என் பிறந்த நாள் பரிசாக என் உடன் பிறவா தங்கையிடமிருந்து பெற்ற கல்கி என்கிற கிருஷ்ணமூர்த்தியின் “பொன்னியின் செல்வன்” என்னும் நாவலை படிக்க ஆரம்பித்ததும் அவரின் கோடானு கோடி வாசகர்களில் நானும் ஒருவனாகிப் போனேன். அதன் பிறகு அவர் எழுதிய இன்னபிற நாவல்களையும் படித்து முடித்து விட வேண்டும் என்று எண்ணினேன்.
பொன்னியின் செல்வனின் சோழர்களைப் பற்றியும் தஞ்சை அக்காலத்தில் பெற்று இருந்த வனப்பைப் பற்றியும் விளக்கி எழுதிய கல்கி , “சிவகாமியின் சபதம்”, “பார்த்திபன் கனவு” என்ற நாவல்களில் பல்லவர்களைப் பற்றியும் காஞ்சி, மாமல்லபுரம் பற்றியும் வெகு அழகாக விவரித்துள்ளார். அதுவும் சிற்பக்கலை பல்லவர்கள் காலத்தில் எவ்வளவு செழிப்படைந்தது என்பதை விவரித்துள்ளார்.
ஆயனச் சிற்பியும், சிவகாமி தேவியும் அவர் மனக்கண் முன்னால் தோன்றிய அதே மாமல்லபுரக கடற்கரைக்கு தானும் சென்று பார்க்கவேண்டுமென்ற ஆர்வம் என் மனதில் குடி கொண்டது.. அதற்கு முன் ஒரு முறை சென்ற போது அது வெரும் கல்லாகத் தான் தோன்றியது. அதே கற்கள் கல்கிக்கு கதை சொல்லும் கற்களாக இருந்ததை எண்ணியவுடன் அதே கற்சிலைகளைக் காணும் ஆர்வம் குடி கொண்டது.
அதற்கு ஒரு நன்னாளாகவாய்த்தது அன்று. நான் சிவாவிடம் சென்று
“நாளைக்கு என்ன ப்ளான்” என்றேன்.
“தெரியலை.. இன்னும் டிஸைட் பண்ணல”
“நாளைக்கு மகாபலிபுரம் போகலாமா?”
“ஓ.கேங்க போகலாம்..”
“சரி... நான் போயி சந்துரு வர்றானான்னு கேட்டுக்கிறேன்”
“சந்துரு... நாளைக்கு மகாபலிபுரம் போலாம்னு ப்ளான்”
“யார் யார் வர்றாங்க?”
“சிவாவும் நானும் ... நீங்க வந்தா... சேக், பாலாவைக் கூப்படலாம்.”
சிறிது யோசனைக்குப் பின்சந்துருவிடமிருந்து சரி என்று பதில் வந்தது. சேக்கிற்கு அப்போது காய்ச்சல் இருந்து கொண்டு இருந்தது. எங்கே அவர் மறுத்து விடுவாரோ என்று எண்ணிக் கொண்டு இருந்தேன்.
“புல்லட் வந்தா ... நானும் வர்றேன்” சிரிப்புடன் சேக்.
பாலாவும் வருவதற்கு சம்மதிக்க “நாளைக்கு எல்லாரும் என்னுடைய ரூம்ல அசெம்பிள் ஆய்டுங்க.. காலையில சீக்கிரமா வந்துடுங்க” என்றார் சேக்.
எல்லாரும் காலை 9க்குள் வர சம்மதம் தெரிவித்தனர். சாலிகிராமத்தில் இருந்து திருவான்மீயுர் செல்வதற்கு பிரதான சாலைகளையே நாடி இருந்தேன். கிருத்துமஸ் தினக் காலையும் கூட மற்ற நாள் போன்றே கடுகுகளைக் கொட்டி விட்டது போல சாலைகள் முழுவதிலும் வாகனங்கள் ஆக்ரமித்து இருந்தன.சிவா வழக்கம் போல உடல்நிலை சரியில்லை என்று சாக்கு காட்டி வரமறுத்து விட்டான்.
நானே காலதாமதமாக வந்து சேர்ந்தேன். பாலாவோ தனது புல்லட்டில் பொறுமையாக வந்து சேர்ந்தார். எனக்கு புதிய எழுத்தாளன் உருவாகிக் கொண்டு இருக்கும் அறையைப் பார்க்கும் ஆவல் மிகுந்து இருந்தது. இந்த இடத்திலிருந்துதான் திங்கள் கிழமை தோறும் எங்களை சிரிக்க வைக்கும் படைப்புகள் எழுதப்பட்டனவோ என்று எண்ணிக் கொண்டிருந்தேன்.
அங்கிருந்து சேக் தனது 19ம் பெஞ்ச் காட்ட எங்களை கடற்கரை வரை அழைத்துச் சென்றார். அது ஒரு அழகிய இடம் என்பதை விட ஒரு அமைதியான இடம் என்றே எண்ணத் தோன்றும். இதற்குள் மணி 10 ஆகியிருந்தது. சந்துருவின் குறும்புப் பேச்சு தொடங்கியிருந்த நேரம் அது.
‘ஹாட்சிப்ஸில்’ எங்கள் காலை (?) உணவு முடித்துக் கொண்டு புறப்பட்டோம். கடல் மல்லைக்கு இரு வாகனங்களில்.. ஒன்று பாலாவின் புல்லட், இன்னொன்று என்னுடைய மயில் வாகனம்... புல்லட்டில் பாலா சேக்.. மயில் வாகனத்தில் சந்துரு நான்... எவ்வளவோ விரட்டிப் பார்த்தும் என்னுடைய மயில் 70-80 ஐத் தொட்டதும் கத்த ஆரம்பித்து விடுகிறது. புல்லட் திருப்பத்தில் எங்கோ ஒரு திருப்பத்தில் வாகனங்களோடு மறைந்தது.
முட்டுக்காடுக்கு அருகில், பாலாவும் சேக்கும் தங்களுடைய புகைப்படத் திறமையை வெளிப்படுத்திக் கொண்டு இருந்தனர். நானும் சந்துருவும் சிறிது நேரத்தில் அங்கு வந்து சேர்ந்தோம். திருவான்மீயுர் ஏ.டி.எம். மையத்தில் ஆரம்பித்த இந்த புகைப்படக் கலை இங்கு வலுப்பெற்றது.
கல்கி சொன்ன, சிலை சொல்லும் கதைகளை நாம் இன்று கேட்டறிய முடியாது என்று உணர்ந்து கொண்டேன். நானும் அவர்களுடன் சேர்ந்து கொண்டேன்.அங்கிருந்து புறப்பட்டு ஒரு சாலையோர பூங்காவில் நிறுத்தி அங்கேயும் சில புகைப்படங்கள். புகைப்படக் கருவியில் இருக்கும் ‘ஆட்டோமேடிக் பேஸ் டிடெக்டர்’ கூட சேக்கின் முகத்தை கண்டுபிடித்திருக்காது. அந்த அளவிற்கு சவரம் செய்யாமலிருந்த அவரது முகத்தை மறைத்துக் கொண்டு இருந்தது தாடி.. போதாக்குறைக்கு ‘டே நைட்’ கிளாஸ் வேறு அவரது கண்களையும் மறைத்துக் கொண்டு இருந்தது.
ஒரு குழுவில் புகைப்படம் எடுக்கும் ஆர்வலர் ஒருவர் இருந்தால், அக்குழுவிலுள்ள மற்றவருக்குக் கொண்டாட்டம் தானே... பாலா தான் எங்கள குழுவில் புகைப்படம் எடுக்கும் ஆர்வலர்.. என்னையும் கூட அழகாக புகைப்படம் எடுத்துள்ளார்.. அங்கிருந்த குட்டையான மரத்தின் கிளையில் முதலில் ஒரு வானரம் போல் உட்கார்ந்து அபிநயம் கொடுத்தார் சந்துரு. பிறகு வாரணம் போல் சேக், பாலா போஸ் கொடுத்தனர். அம்மரத்திற்கு மட்டும் வாய் இருந்திருந்தால் அய்யோ அம்மா என்று கத்தியிருக்கும. முடிந்தால் தமிழில் உள்ள கெட்ட வார்த்தைகளைக் கூட பிரயோகப் படுத்தியிருக்கும்.
அங்கிருந்த மாமல்லபுர கடற்கரையை அடைய 12;30 ஆகி இருந்தது. கடற்கரை கோயிலுக்குச் செல்லும் வழியில் உள்ள பூங்காவில் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம். உடனே சந்துரு கேமராவை எடுத்துக் கொண்டு ஒரு வண்ணத்துப் பூச்சியினருகில் சென்றார்.
“போதும் சந்துரு .. பட்டாம் பூச்சி எவ்வளவு நேரம் தான் போஸ் கொடுக்கும்” என்றேன்.
“நல்லா இருக்குங்க... பாருங்க..” என்று சொன்ன சந்துரு... பட்டாம் பூச்சி வேறு இடம் பெயரவே அதைப் பின் தொடர்ந்து சென்று புகைப்படம் எடுத்தார். அதன் வாழ்க்கையும் முடிந்திருந்தது. “அந்த பட்டாம் பூச்சி செத்துப் போயிருச்சுங்க” என்றார சந்துரு சோகமாக...
“உனக்கு போஸ் கொடுக்கறதுக்கு செத்து போயிரலாம்னு நினைச்சிருக்கும்” என்றேன்..
“அடப்பாவிங்களா...”
அங்கிருந்த ஒரு கல்வெட்டில் ‘திராவிடர்கள்’ என்ற வார்த்தையைப் பார்த்ததும் சேக் என்னிடம் காண்பித்து .. இதை யார் எழுதியிருப்பார்கள் என்று கூறிப் புன்னகைத்தார். கற்றளியை நோக்கிச் செல்லும் போதே சந்துரு வண்ண வண்ண மலர்களை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்..
“ஏங்க இப்படி இருக்கான்.. இந்த சந்துரு பய..” சேக் சிரிப்புடன்...
“என்னாச்சு?” நான்
“யாரோ .. என்னவோ பேசிட்டு போறாங்க... அதுக்கும் கமென்ஃ அடிச்சிட்டு இருக்கான்”
“ஒரு என்ஜாய்மென்ட்டுக்குத்தான்...” சந்துரு.
கற்றளியின் வனப்பைப் பார்த்துக் கொண்டே சென்றோம்.
“கணேசன், இது எவ்ளோ வருஷம் பழசு” பாலா.
“1500 வருஷம் இருக்கும்” என்றேன்.
“ஓ, தஞ்சாவூர் கோவில் 1000 வருஷம் தான்னு உடையார்ல போட்டிருக்கு” என்றார் வியப்புடன்.
அங்கிருந்த பல்வேறு சிற்பங்களை பார்த்துக் கொண்டே எங்கள் குழுவிலிருந்து பிரிந்து விட்டேன். பின்னர் மற்றவர்களைக் கண்டதும், சந்துரு” என்னங்க விட்டுட்டு விட்டுட்டு போயிடுறீங்க.. பாத்துங்க கல்யாணம் ஆச்சுன்னா.. வொய்ஃபையும் இப்படி விட்டுட்டு போயிடாதிங்க..” என்றவுடன் எங்கள் குழுவில் ஒரே நகைப்பு.இது தான் சந்துருவின் குறும்பு பேச்சில் இங்கே கூறக் கூடியதாக இருக்கிறது... எனக்கு அட டா.. சிவா வரலையே .. வந்திருந்தால் சந்துருவுக்கும் சிவாவுக்கும் நன்றாய் இருந்திருக்கும் என்று தோன்றியது.
ஒரு உணவகத்தைத் தேடிப் பிடித்து மதிய உணவிற்காக அமர்ந்தோம்.” சாப்பாடே சரியில்லைங்க” சந்துரு. சேக்கிறகு வெறும் ரசம் சாதம்.. கடைசியில் சந்துருவின் இலை தான் மழித்துக் காணப்பட்டது. சேக்கிற்கு சிறிது சோர்வாய் இருந்த படியால் வேறெங்கும் செல்வதில்லை என்று முடிவு செய்தோம். “நான் ஷாட்ஸ்லாம் கொண்டு வந்திருக்கேன்... கடல்ல குளிச்சே தீரணும்” சந்துரு. “சரிடா.. கடல்ல குளி.. இப்ப வெயிலா இருக்கு.. எங்கன்னா உக்காந்து பேசிட்டு அப்புறமா பீச்சுக்குப் போவோம்” சேக். அங்கிருந்த குளக்கரையில் நேரம் போவதே தெரியாமல் அரட்டை அடித்துக் கொண்டிருந்தோம். இங்குதான் ஒவ்வொருவருக்கும் சுபா, சுசி, சுகு, சுசா , சுபுஎன்ற பெயர்கள் வைக்கப்பட்டன.பெயர் காரணங்களை ஆராயதீர்கள்.. காரணப் பெயரல்லாமல், இடுகுறிப் பெயர்கள் என்றே நினைத்துக் கொள்ளுங்களேன்
அங்கிருந்து இடம் பெயர்ந்து கடற்கரை நோக்கிச் சென்றோம். செல்லும் வழியெங்கும் மீன் வாடை.. பல அங்காடிகளில் பொருட்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தன. மணற் பரப்பிற்கு வந்தோம். அங்கே வளையத்தை பொருட்களின் மீது வீசுவது.. துப்பாக்கியில் பலூன்களைசுடுவது போன்ற வீர விளையாட்டுகளை ஆடிவிட்டு கடற்கரையை அடைந்தோம்.
சந்துரு கடலில் இறங்கினார். சேக், பாலா மணலில் அமர்ந்தனர். நான் கடல் அலைகள் முழங்காலைத் தொடும் தூரத்தில் கடற்கரையினுடே நடந்து சென்றேன். மக்கள் கூட்டம் மிகுந்து காணப்பட்டது.. கடல் அலையில் வந்தைக் கரைத்த பெரியவர்கள் குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டு இருந்தனர். இளம் பெண்கள முழுவதுமாக நனைந்திருந்த ஆடைகளுடன் அலைகளுடன் விளையாடுவதை சில இளைஞர் கூட்டம் ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டு இருந்தது.
சிறு குழந்தை, அலையை விரட்டியும் அலை வரும் போது பயந்தும் வந்து விளையாடுவதை ரசித்துக் கொண்டு இருந்தனர் பெற்றோர். கரை ஒரத்தில் காதலர்கள் அன்யோன்ய உரையாடல் நடந்து கொண்டு இருந்தது. இவைகளில் ஒரு பக்கம் கவனம் சென்றாலும் கடலின் குளிர் காற்றும் அலைகளின் பேரிரைச்சலும் மனதில் அமைதியை ஏற்படுத்துகின்றன. பின்னர் திரும்பி வந்து சேக், பாலாவுடன் இணைந்து கொண்டேன். இதே கடற்கரையில் தான் கல்கிக்கு ஆயனச் சிற்பியும், சிவகாமி தேவியும் தோன்றினார்கள் என்பதை நினைத்துக் கொண்டிருந்தேன்.
“சரிங்க.. இப்போ கிளம்புனாத்தான்.. சீக்கிரம் வீட்டுக்குப் போக முடியும்” மனம் ஏதேதோ நினைத்துக் கொண்டு இருக்கும் பொழுது சேக்கின் குரல் கேட்டது..
“ஆங்..சரிங்க” நான்.
அங்கிருந்து புறப்பட்டு என் மயில் வாகனத்தில் சந்துருவை அமர்த்திக் கொண்டு சென்னைக்குத் திரும்பிக் கொண்டு இருந்தோம். அதே முட்டுக்காடு படகுத்துறையில் பாலத்தில் சேக் பாலாவிற்காக காத்துக் கொண்டு இருந்தோம். அதன் பிறகு வாகனத்தை சந்துருவிடம் கொடுத்து விட்டு நான் பின்னால அமர்ந்து கொண்டேன். சென்னை நெருங்கும் வரையில் பயம் இல்லாமலிருந்தது. சென்னையை நெருங்கியும் அதே வேகத்தில் வாகனத்தை இயக்கியது எனக்கு மட்டும் அல்ல... சாலையில் வந்து கொண்டிருந்த அனைவரையும் மிரளச் செய்த்து. கிட்டத்தட்ட அனைத்து கார் ஓட்டுநர்களின் திட்டுக்களுக்கும் சாபங்களுக்கும் சந்துரு ஆளாகியிருப்பான். திருவான்மீயூர் வந்ததும் மறுபிறவி எடுத்தது போல் இருந்தது.
எங்களது இந்த பயணம் மிக மகிழ்ச்சியாக இருந்தது. எப்போதும் எங்கள் நினைவில் இருக்கும் படியாக அமைந்தது.
எனது கையெழுத்துப் பிரதியை மின் எழுதாக்கிய ஷேக் கிற்கு நன்றிகள் பல ....
yevloooooooo periya post???...:) but nanna irunthathu..;)
ReplyDelete