Wednesday, July 20, 2011

சில கேள்விகள் - தொடர்ச்சி

சில கேள்விகள்

குமாருக்கு காலையிலிருந்தே வயிறு சரியில்லை. முந்நாள் இரவு இரண்டாம் தரமான கையேந்தி பவனில் சிக்கன் சாப்பிட்டதால் வந்த வினை என்று மறுநாள் காலை தெரிந்து கொண்டான். அலுவலகக் கழிவறையை சுத்தம் செய்து கொண்டிருந்தான். காலையிலிருந்தே வயிற்றுப்போக்கு அதிகமாக இருந்ததினால் உடல் தளர்ந்து இருந்தது. அதற்கு மேலும் தன்னால் வேலை செய்ய முடியாது என்று முடிவு செய்து, மேலாளரிடம் சொல்லிவிட்டு, தான் நண்பனுடன் தங்கி இருக்கும் பேச்சுலர் வீட்டிற்குச் சென்றான். இப்போது வயிற்றுப்போக்குடன், வாயில் குமட்டிக் கொண்டும் வந்து கொண்டிருந்தது. அவனது குடலே வெளியேருவது போலிருந்தது அவனுக்கு. உடல் மிகவும் தளர்ந்து தள்ளாட்டம் மிகுந்தது. செல்ஃபோனைத் தட்டி தன் அறை நண்பனை அழைத்தான்.

“டேய் ஆண்டனி எங்கடா இருக்க?”, குமார்

“கஸ்டமர் சைட் ல இருக்கேன் டா, இங்க ஒரு ப்ராப்ளம், அதுக்கு என்ன கூப்டாங்க”, ஆண்டனி.

“டேய், காலைலயே எனக்கு நிறைய போய்ட்டு இருந்ததுனு தெரியும் ல, இப்ப இன்னும் அதிகமா போய்ட்டே இருக்குடா, என்னால ஒன்னும் செய்ய முடியல, ரூம்க்கு வந்துட்டேன். நீ வர முடியுமா?”, சிறிது பதற்றத்துடன் குமார்.

“என்னடா சொல்ற?,எதுக்கும் லெமன் ஜூஸ் போட்டுக் குடிடா. கொஞ்சம் தெம்பா இருக்கும். எப்டியாவது கேட்டுட்டு வந்துடரேன்”, ஆண்டனி.

நண்பனின் இந்த வார்த்தையைக் கேட்டதும், குமாருக்கு இதமாக இருந்தது. நண்பன் சொல்படி, மிகவும் சிரமப்பட்டு எலுமிச்சை ஜூஸ் போட்டுக் குடித்தான். எது குடித்தாலும் சிறிது நேரத்திற்கெல்லாம் வெளியே வந்து விடுகிறது. ஏதாவது ஜூஸ் அல்லது நீர் ஆகாரம் சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று புரிந்து கொண்டான். பின்னர் நண்பன் வந்ததும் மருத்துவரை சந்திக்கலாம் என்று தீர்மானித்தான்.

ஆண்டனியின் மோட்டார் சைக்கிள் சத்தத்தைக் கேட்டதும் குமாருக்கு உயிர் வந்தது போலிருந்தது. உடனே அருகிலிருக்கும் ஒரு கிளினிக்கிற்கு அழைத்துச் சென்றான். 10 முடிந்து 11ஆவது டோக்கனில் மருத்துவரைச் சந்திக்க நேர்ந்தது. விவரங்களைக் கேட்டறிந்து, சாதாரண வயிற்றுப்போக்கிற்கு மருந்துகளை எழுதித் தந்தார்.

மருத்துவரைச் சந்தித்தபிறகும் குமாருக்கு குணமாகவில்லை. படுத்த படுக்கையாகிப் போனான். ஆண்டனிக்கு பயம் ஏற்பட்டது. உடனே குமாரின் பெற்றோருக்குத் தெரியப் படுத்தினான்.

”அய்யோ என்னாச்சுங்க புள்ளைக்கு?” குமாரின் தாய்.

“பையனுக்கு வாந்தி பேதியாம், டாக்டர் கிட்ட காட்டியும் குணமாகலயாம், ஆண்டனி சொன்னான்” குமாரின் தந்தை.

“உடனே போய் பாத்துடலாம், இப்ப கிளம்பினா ராவுக்கெல்லாம் போய் சேந்துடலாம்”, குமாரின் அம்மா பதைபதைப்புடன்.

தன் ஒரே பையனைக் காண, குமாரின் தாய், தந்தை உடனே புறப்பட்டனர்.

இரவு அவர்கள் வந்ததும், உடனே அதே மருத்துவரிடம் காண்பித்தனர். அவர் இதைப் பார்த்து, இது காலராவாக இருக்கக் கூடும், உடனே மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்று கூறி, தனக்கு பங்கு இருக்கும் ஒரு மருத்துவமனைக்கு சிபாரிசு செய்தார்.

அதீத வயிற்றுப்போக்கால், அவனுடைய நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, ஜுரம் வர ஆரம்பித்திருந்தது.

”டேய், ஏண்டா அப்பா அம்மா கிட்டலாம் சொன்னே?” ஒரே நய் நய்னு இருக்கப்போராங்க என்று சொல்லி முடிப்பதற்குள் அவன் நினைவு தப்பியது.

”அய்யோ குழந்த பொழப்பானா? பயமா இருக்கே”, குமாரின் தாய்.

“கொஞ்சம் பொருமையா இரு, நான் பாத்துக்கரேன்”, குமாரின் தந்தை.

”ஆண்டி எனக்கு வேலை இருக்கு, குமார பாத்துக்கோங்க”, ஆண்டனி.

“சரிடா, நீ வேலைக்கு போடா, ரொம்ப தேங்க்ஸ்டா, உன்னை எவ்ளோவோ திட்டியிருக்கேன், மன்னிச்சுக்கோடா”, குமாரின் அம்மா.

“பரவால ஆண்ட்டி”, ஆண்டனி.

மருத்துவமனை செல்லும் வழியில், குமாருக்கு சுயநினைவு வந்தது.

“ஏன் மா, நாம எங்க போறோம்? எனக்கு ஒன்னும் இல்லம்மா. லேசா ஜுரம்” இப்படி சொல்லிக்கொண்டிருக்கும் போது மறுபடியும் நினைவு தப்பியது.

நகரின் மையப் பகுதியில் அமைந்திருந்தது அம்மருத்துவமனை. மருத்துவரின் சிபாரிசு கடிதத்தைக் காட்டியதும் உடனே அனுமதிக்கப்பட்டான். குமாரின் அறைக்கு, ஒரு இளவயது நர்ஸ் ஓடி வந்து சுயநினைவின்றி கிடக்கும் அவனின் ரத்தக்குழாயை நிரடி ஊசியால் குத்தி குளுக்கோஸ் ஏற்றினாள். சுயநினைவு இல்லையென்றாலும், தான் இறந்துவிடுவோமோ என்ற பயமே அவனது ஜுரத்தை அதிகப் படுத்தியது. போதாக் குறைக்கு அவனின் அம்மா அழுது புலம்பிக் கொண்டே இருந்தது அவனது பயத்தை அதிகமாக்கியது.


குமார் அனுமதிக்கப் பட்டிருந்த அறைக்கு மருத்துவர்கள் புடை சூழ வந்த வண்ணம் இருந்தார்கள். ஆறு பாட்டில் குளுக்கோஸ் ஏற்றியபின், நள்ளிரவில் குமாருக்கு சுயநினைவு திரும்பியிருந்தது.

அவனின் அம்மா, கண்ணீர் மல்க, “குமாரு, எப்டிடா இருக்கு?” என்று அழாத குறையாக கேட்டாள்.

உடனே நர்ஸ், “பேஷண்ட் கண் முழிச்சுட்டாங்க, இருங்க முதல்ல இந்த மாத்திரைய சாப்பிட சொல்லுங்க” என்று கூறி வித விதமான வண்ணங்களில் மாத்திரைகளைக் கொடுத்துவிட்டுச் சென்றாள்.

இரண்டு நாட்களில் குமார் முழுகுணம் அடைந்தான். அம்மா அழுது கொண்டிருக்கும் போது, வேளைக்கு மாத்திரை, சாப்பாடு மற்றும் தைரியத்தைக் கொடுத்து தனக்கு உதவி செய்த நர்ஸை மருத்துவமனையை விட்டுக் கிளம்பும் முன் நன்றியோடு பார்த்தான்.

“குமார், இனி ரோட் சைட் ல இருக்கர அசுத்தமான கையேந்தி பவன் லாம் சாப்பிடாத, என்ன? பாரு எல்லாருக்கும் கஷ்டமா போச்சு, உனக்கு இனி எதுவும் இல்லை. பயப்படாத, நீ வீட்டுக்கு போலாம்” என்றாள் அந்த நர்ஸ்.

அதே நேரத்தில் குமாரின் பெற்றோர்கள்,

“அந்த ஆண்டனி கிரிஸ்டீன், அவன் கூட உன் பையன சேரக் கூடாதுனு சொன்னியே, இப்ப என்ன ஆச்சு? அவன் இல்லைனா நம்ம பையன் கதி அவ்ளோ தான்” குமாரின் தந்தை.

“அவன் விதி இப்டி அவனை ஆக்கிடுச்சு” குமாரின் அம்மா.

“இதுக்கும் விதிக்கும் என்னடி சம்மந்தம்? கை நிறைய சம்பாதிச்சாலும் அசுத்தமான கையேந்தி பவன்ல சாப்டது அவனோட கொழுப்பு, அதனால காலராவ வாங்கிக்கினான்”, குமாரின் அப்பா.

“எவ்ளோவோ சொன்னேன். அவன் கேக்கவே இல்லை. இல்லைனா அவன நம்ப ஊர்லேயே ஒரு கடைய வச்சு குடுத்திருந்தா இப்டிலாம் நடந்திருக்குமா?” குமாரின் அம்மா.

”என் விதி இப்டிலாம் நான் கேக்கவேண்டியிருக்கே”, புலம்பலுடன், குமாரின் தந்தை.

----------------------------------------------------------------------------

இப்போது கேள்விக்கு வருவோம்.

விதி என்றால் என்ன?
விதியை மதியால் வெல்லலாமா?
விதி வலியதா?
விதியை நிர்ணயிப்பது யார்?

தமிழ் இலக்கியங்களிலும் விதியைப் பற்றி கூற்று இருக்கிறது. சிலப்பதிகாரத்திலும், கோவலனின் நிலைமைக்குக் காரணம் அவனுடைய ஊழ்வினையே என்று கூறுகிறார் இளங்கோவடிகள். திருக்குறளும் விதி, ஊழ் என்ற ஒன்று இருக்கிறது என்பதை நம்புகிறது. ஆனால் ஊழையும் உப்பக்கம் காணலாம் என்று கூறுகிறது.

உண்மையிலேயே ஊழ் அல்லது விதி என்ற ஒன்று இருக்கிறதா? அல்லது இதுவும் மக்களின் இயலாமையினால் தங்களுக்கு தாங்களே ஆறுதல் சொல்லுவதற்காக ஏற்படுத்திக் கொண்டதா?

இயற்கையின் படி நடக்கும் எதுவும் விதி என்று ஒருவாறு கூறலாம். ஆனால் மனிதன் இயற்கையை ஓரளவுக்கு வென்று தான் உல்லாசமாக வாழக் கற்றுக் கொண்டான். மனிதனின் மதியையும் மீறி நடக்கும் எதையும் விதி என்று பொதுமைப் படுத்தி விடுகிறோம். ஆனால் இந்த விதியானது நம் முற்பிறவியில் செய்த பாவ புண்ணியங்களினால் என்று தீர்மானிக்கப் படுகிறது என்ற ஒரு நம்பிக்கை தான் சிறிது சிந்திக்க வைக்கிறது.

மக்களின் இயலாமையினால்(மதியால் முடியாதது) தாங்களாகவே ஏற்படுத்தியதுதான் விதி என்றால், அதிலும் இரண்டு வகையினர் உள்ளனர். இயற்கையை மீறி எதுவும் செய்ய முடியாது என்று இயற்கையுடன் போராடி பின்னர் இது விதி என்று தேற்றிக்கொள்வர் ஒரு வகையினர். எந்த ஒரு முயற்சியும் இல்லாமல், நமக்கு கிடைக்கவில்லை என்று விதியின் மேல் பழியைச் சொல்லி சோம்பேறிகளாகவே இருப்பவர்கள் இன்னொரு வகையினர்.

நீங்கள் எந்த வகையினர்?

பின்குறிப்பு: சிலர் என்னிடம், நீங்கள் கேள்விகள் மட்டுமே கேட்டுக் கொண்டிருகிறீர்கள், பதிலைக் காணோமே என்று கேட்கின்றனர். அதற்காகத்தான் தலைப்பு “சில கேள்விகள்”.

மேலும் சிலர், இதெல்லாம் பதிலில்லாக் கேள்விகள் என்று கூறுகின்றனர். இந்த கேள்விகள் அனைத்தும் சுயசிந்தனைக்காக மட்டுமே. பதில்கள் அவரவர் அனுபவத்திற்கேற்றார்போல் அமைத்துக் கொள்ளலாம்.
ஒரு நண்பர், இந்த கேள்விகள் கேட்டு ஏன் சிலரின் நம்பிக்கையை குலைக்கிறாய் என்று கேட்கிறார். நம்பிக்கை வேறு, மூட நம்பிக்கை வேறு. நாமெல்லாம் சுயமாக சிந்திக்கத் தெரிந்தவர்கள்தானே?

2 comments:

  1. nalla kelvi...good post...

    summa vilayatuku...kelvi pattada solren...
    "ellathukum kelvi mattume ketu kondu irundal badil therinjuka nerame irukadu" ...:)

    vera edavadu swarisyama thangal ezhudi padika avalaga irukiren. "sila kelvigal" luku konjam break kodukalame...

    -vgr

    ReplyDelete
  2. Hi Viji, Thanks for your comment. எனக்கே bore அடிச்சிருச்சு... இனி கேக்க கேள்விகள் அவ்ளவா இல்ல...அப்டியே இருந்தாலும் மொக்கையான கேள்விகள் தான் இருக்கு. அதான் கேள்விகள் தொடரும்னு போடல.

    ReplyDelete