இது விமர்சனங்களின் விமர்சனம் அல்ல. இப்பொழுது இணையத்தில் பெரும்பாலும் தமிழ் வலைப் பூக்கள், ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் ஆகியவற்றில் உள்ள பதிவுகள் அனைத்துமே சினிமா விமர்சனமாகவோ, கிரிக்கெட் பற்றியோ அல்லது சமூகப் பிரச்சனை பற்றியோ இருக்கும். இதில் சினிமாவும் கிரிக்கெட்டும் நம்மில் இரண்டறக் கலந்தவை. அதனால் அதைப் பற்றிய பதிவுகள் உண்டாவது இயற்கையானதே. ஆனால் இப்பொழுதெல்லாம் சமூகப் பிரச்சனை பற்றிய பதிவுகள் புற்றீசல் போல வர ஆரம்பித்துவிட்டன. பாடல்களுக்கும், புத்தகங்களுக்கும் விமர்சனம் வந்துகொண்டிருப்பதைக் காண முடிகிறது. வரவேற்க்கத்தக்கது.
விமர்சனம் என்பது தனிப்பட்ட ஒருவர் பொதுவாக சமூக தளத்தில் நின்று ஒரு படைப்பின் நிறை குறைகளை ஆணித்தரமாக எழுத அல்லது சொல்ல வேண்டும். அந்த தனிப்பட்ட ஒருவருக்கு அதற்கான தனி பயிற்சியோ அல்லது அந்த துறை சார்ந்த அறிவோ இருத்தல் அவசியம்.
சினிமா விமர்சனம், சினிமா தோன்றிய காலத்திலிருந்தே இருந்து வருகிறது. அப்பொழுதெல்லாம் அதில் ஊறித் திளைத்தவர்களே அதை விமர்சனம் செய்தனர். அதனால் அதன் நிறை குறைகளை எளிதாகக் கூறினர். படைப்பாளிகளும் அதை நேரடியாக எடுத்துக் கொண்டனர். அதில் ஒரு சமூக நோக்கு இருந்தது. இப்பொழுது ஆளாளுக்கு ஒரு வலைப்பூவை திறந்துகொண்டு அதில் தான் பார்த்த கடைசி படத்தின் விமர்சனத்தை, தன் சொந்த கருத்தை ஒட்டுமொத்த சமூகக் கருத்தாக நினைத்து எழுதுகின்றனர். இவர்கள் ஒருபோதும் சினிமா துறையைச் சார்ந்தவர்களாக இருந்திருக்க மாட்டார்கள். இவர்களின் எழுத்து நடையில் இருக்கும் மாயையில் அதைப் படிப்பவர்களும் அதுதான் சரி என்று ஒரு முடிவுக்கு வருகின்றனர். அதன் பின்னூட்டங்களும் “சக்கை", "___டச்", "அட்டகாசம்", “_______ எனக்கு பிடித வரிகள்" என்று போடுவதைப் பார்க்கும் போது அவர்கள் விமர்சனத்தைப் படித்ததை விட அதன் வார்த்தை ஜாலங்களை மெச்சிப் படிப்பதையே காட்டுகிறது. இப்படி ஒரு பெரும் கூட்டமே இணையத்தில் உலாவிக் கொண்டிருக்கிறது.
எந்தவொரு படைப்பும் சோடை போவதற்காக உருவாக்கப்படுவதில்லை. அதில் இருக்கும் நிறை குறைகளின் விகிதாச்சாரமே அந்த படைப்பின் வெற்றி தோல்வியை நிர்ணயம் செய்கிறது. விமர்சகர்களின் நோக்கம் அந்த நிறை குறைகளை மட்டுமே சுட்டிக்காட்டுவதாக இருக்க வேண்டும். மாறாக படைப்பே வீண் என்று எழுதுவதும் படைப்பை கேலிக்குரியதாக்குவதும் முட்டாள்தனமானது.
இன்னொரு வகையான விமர்சனம் திரையிசைப் பாடல்கள் பற்றியது. இசை ஞானம் சிறிதும் இல்லாத சில விமர்சகர்களின் விமர்சனத்தைப் பார்க்கும் போது அது அவர்களின் சொந்தக் கருத்தே என்பதை தெள்ளத்தெளிவாக உணர முடிகிறது.
கிரிக்கெட் பற்றிய விமர்சனங்களோ மிகவும் நேரிடையானது. ஏனென்றால் விளையாட்டு வீரர்கள் இதை ஒருபோதும் படிக்கப் போவதில்லை. சொந்த மண்ணில் ஒரு நாள் விளையாடினால் ஆஹா ஒஹோ என்று பாரட்டுபவர்கள் அயல் நாடுகளில் மண்ணைக் கவ்வும்போது இவர்களின் விமர்சனம் கேலி செய்யுமளவுக்கு அடிமட்டதுக்கு போவதேன்? இதுமாதிரியான தருணங்களில் அவர்களின் குறைகளை சுட்டிக் காட்டி அதை நிவர்த்தி செய்யுமாறு எழுதினால் அவர்கள் அதை திருத்திக்கொள்வார்கள். ஆனால் என்ன செய்ய? ஒரு நாள் கூட கிரிக்கெட் மட்டையைப் பிடித்து ஆடாத இவர்கள் தான் இன்றைய விமர்சகர்கள். இவர்களின் இன்றைய விமர்சனங்கள் “சுவரில் உள்ள கற்கள் பெயர்ந்து வருகிறது” என்றும் “இந்த வருடம் சதத்தில் சதம் போடுவது கடினம்” என்றும் கேலி செய்வது தான். அந்த சுவரை அவர் எழுப்ப எவ்வளவு உழைத்திருந்தார் என்பதையும், சதத்தில் சதம் போடுவதென்பது எவ்வளவு பெரிய காரியம் என்பதையும் மறந்துவிடுகிறார்கள் அல்லது மறக்கடிக்கச் செய்கிறார்கள்.
இதை எல்லாவற்றையும் விட இப்போது பிரபலமாகிக் கொண்டு வருவது, சமூக பிரச்சனைகளைத் தீர்க்கிறேன் என்று எழுதி புலம்பித் தள்ளுவது. ஓட்டுப் போடக் கூட சோம்பேறித்தனப் படுபவர்கள் அன்னா ஹசாரேவை வசை பாடுகிறார்கள். இவர்களில் சிலர் தங்கள் வாக்குரிமையைக் கூட உபயோகிக்காத வெளி நாட்டுவாழ் இந்தியர்கள். ஒரு சிறு களப்பணி கூட செய்யாதவர்கள் பக்கம் பக்கமாக விமர்சனம் எழுதுவதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஃபேஸ்புக்கில் இவர்களின் தொல்லை மிக அதிகம். ஏதோ தமிழ் பற்றிய கம்யூனிட்டியில் சேர்ந்தால் இது போன்ற சமூக ஆர்வக் கோளாருகளின் பதிவுகளால், சீ என்று புறம் தள்ள வேண்டியிருக்கிறது.
இப்படியெல்லாம் சொல்லிவிட்டு நீங்களே ஒரு விமர்சனம் எழுதியிருக்கிறீர்களே என்று கேட்பது எனக்கு புரிகிறது. என்ன செய்ய? புலம்பல்களை விமர்சனம் என்று தலைப்பில் குறிப்பிட்டால் தானே இங்கே படிக்க வருகிறார்கள்.
//இன்றைய விமர்சனங்கள் “சுவரில் உள்ள கற்கள் பெயர்ந்து வருகிறது” என்றும் “இந்த வருடம் சதத்தில் சதம் போடுவது கடினம்” என்றும் கேலி செய்வது தான். அந்த சுவரை அவர் எழுப்ப எவ்வளவு உழைத்திருந்தார் என்பதையும், சதத்தில் சதம் போடுவதென்பது எவ்வளவு பெரிய காரியம் என்பதையும் மறந்துவிடுகிறார்கள் //
ReplyDeleteஇதுவரை நான் படித்ததிலேயே விமர்சனத்தை பற்றி சிறந்த விமர்சனம்.. கலக்கிட்டீங்க கணேசன்
நன்றி சந்தோஷ்
ReplyDelete