காலநிலை அவசரமும் நில மாசும்
முந்தைய பதிவு எழுதி 5 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆயினும், மக்களின் சூழலியல் குறித்த அறிவு இன்னமும் அப்படியே உள்ளது அல்லது இன்னும் மோசமாகி விட்டது.
காலநிலை மாற்றம் என்ற சொல்லாடல் இப்பொழுது வழக்கொழிந்துவிட்டது. இப்பொழுது நாம் இருப்பது காலநிலை அவசரம் (Climate Emergency).
ஐம்பூதங்களில் நிலம், நீர், காற்று மாசுபடுதல் தான் காலநிலை அவசரத்திற்கு மிக முக்கிய காரணிகளாக இருக்கின்றன.
காற்று சரி. அதெப்படி நில மாசு, காலநிலை அவசரத்திற்கு ஒரு காரணியாக இருக்கும்? என்று கேட்கலாம். மண் மாசடைவதால் கார்பனை உறிஞ்சும் திறன் குறைந்து அதன் மூலம் உலக வெப்பமயமாதலுக்கு ஒரு மறைமுக காரணியாக உள்ளது.
நிலத்தில், குறிப்பாக விவசாய நிலத்தில் தெளிக்கப்படும் களைக்கொல்லிகள் எந்தவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை மௌன வசந்தம் என்னும் நூலில் Rachael எழுதியுள்ளார். 1950 களில் அமெரிக்காவில் வான்வழி நச்சு தெளிப்பு மூலம் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களில் களைக்கொல்லி தெளித்ததன் விளைவாக ஏற்பட்ட பல்வேறு சூழலியல் இடர்களை விளக்குகிறது. மேலும் DDT என்ற நச்சிலிருந்து இன்று எல்லா கொசு மருந்து liquidator களில் பயன்படுத்தப்படும் trans fluthrine வரை அலசி ஆராய்ந்துள்ளார் அவர்.
அப்பாடா, நம் நாட்டில் அது போல் வான்வழி தெளிப்பு இல்லை என்று நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில், இப்போது புதிதாக சீமைக் கருவேல மரங்களை அழிப்பதற்கு மின்-ஈ (drone ) மூலம் நச்சு தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . சீமைக் கருவேல மரங்களை அழிக்க வேண்டுமா? அதனால் என்ன நன்மை? என்ன தீமை? என்பது பற்றி விகடனில் ஒரு பதிவு வந்திருக்கிறது. தட்டாமல் வாசியுங்கள்.
இப்படி மின்-ஈ மூலம் தெளிக்கப்படும் நச்சு, ஒழுங்காக தெளிக்கப் படாவிட்டால், நிலத்தையும் காற்றையும் அருகில் இருக்கும் நீர் நிலைகளையும் வெகுவாக பாதிக்கும்.
இது மட்டும் தான் நில மாசுக்கு காரணமா? நாம் அன்றாடம் குப்பை என்று ஒதுக்கி, கார்ப்பரேஷன் வண்டியில் ஏற்றி அனுப்புகிறோமே? அதெல்லாம் landfill என்று ஏதோ ஒரு குப்பைக் கிடங்கில் கொட்டுகிறார்கள். அதில் தரம் பிரிக்காமல் கொட்டப்படும் பல வகை வேதியியல் குப்பைகள் மண்ணில் ஊடுருவி மண்ணை மாசுபடுத்தி, நிலத்தடி நீரையும் மாசுபடுத்துகிறது.
மண் மாசு, மண்ணை மலடாக்கி, விளை நிலங்களை, விலை நிலங்களாக ஆக்குகின்றன.
இதெல்லாவற்றையும் விட, மண் மாசு படுத்துவதில் பெரும்பங்கு இருப்பது நெகிழி எனப்படும் பிளாஸ்டிக். அதைப் பற்றி எழுதுவதாக இருந்தால், ஒரு கதையே எழுதலாம்.
பிளாஸ்டிக்கும் ஒரு கெட்ட கனவும்
பார்க்கும் இடமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருள் என்று ஒரு சொல்லாடல் இறைவனைப் பற்றி சொல்வார்கள் மெய்யியலார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை பிளாஸ்டிக் தான் அப்படி இருக்கிறது. இந்த பதிவை தட்டச்சு செய்யும் keybard முதல், நீங்கள் பார்க்கும் செல்போன்/லேப்டாப் monitor வரை எத்தனையோ பொருட்கள் பிளாஸ்டிக்கால் நிறைந்து இருக்கிறது.
யாரோ ஒருவன் தூங்கி எழுந்து வீட்டு வாசல் முன் வந்து பார்த்தால் ஒவ்வொரு வீட்டின் முன்பும் முதல் மாடி அளவுக்கு மலை போல் பிளாஸ்டிக் குப்பைகள் சேர்ந்து கிடந்தது. அதை ஒதுக்கித் தள்ளிக்கொண்டே ஒவ்வொருவரும் அவர்களது அன்றாட வேலையைச் செய்கின்றனர். தூக்கி வாரிப் போட்டு எழுந்து பார்த்தால் கனவு. கண்டிப்பாக அந்த யாரோ ஒருவன் நம் பேரன் பேத்தி யாக மட்டும் இருந்துவிடக் கூடாது என்று மனம் இறைவனை வேண்டிக் கொண்டது.
பிளாஸ்டிக்கின் தன் வரலாறு
நான் பூமிக்கு அடியில் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக crude oil ஆக இருந்தேன். திடீர் என்று ஒரு குழாய் மூலம் என்னை வெளியே எடுத்தார்கள். என்னை என்னவெல்லாமோ பாடாய் படுத்தி கடைசியில் எளிதில் நெகிழும் தன்மை உள்ள ஒரு பொருளாக மாற்றினார்கள். எனக்கு பிளாஸ்டிக் பை என்று பெயர் சூட்டினார்கள்.
என்னை உருவாக்கிய தொழிற்சாலையிலிருந்து எங்கெங்கோ அலைந்து ஒரு பூ விற்கும் பாட்டி இடம் போய் சேர்ந்தேன்.
எவனோ ஒருவன் : அரை முழம் பூ குடுங்க பாட்டி.
பாட்டி அளந்து கொடுத்தாள் .
எ.ஒரு : என்ன பாட்டி பிளாஸ்டிக் கவர் இருக்கா?
பாட்டி: இருக்குப்பா.
பாட்டி என்னில் அந்த பூ வை மடித்து வைத்தாள்.
பாட்டி இன்னொரு வியாபாரியிடம் : இவனுங்க செல்போன் கொண்டு வர்றாங்க. அத விட வெயிட் கம்மியா இருக்குற பை கொண்டு வர மாட்ராங்க.
இந்த பை க்கு தனியா செலவு செய்ய வேண்டியிருக்கு.
நான் : ஆஹா என்னை அருமையான மணம் இந்த மல்லிப் பூ.
அதுதான் நான் முகர்ந்த நல்ல மணம்.
அந்த எவனோ ஒருவன், வீட்டிற்கு சென்றதும், என்னில் இருந்த பூவை எடுத்து மனைவி கொண்டையில் மாட்டி விட்டு என்னை வீசி எறிந்தான்.
இரண்டு நாள் அவர்கள் வீட்டுக் குப்பையில் மிகுந்த நாற்றங்களுக்கு இடையில் இருந்தேன்.
அங்கிருந்து கார்பொரேஷன் குப்பை லாரிக்கு மாற்றலானேன். இந்த நாத்தத்துக்கு அவங்க வீட்டு குப்பை தொட்டியே பரவாயில்லை. அங்கிருந்து ஒரு பெரிய ஏரியின் நடுவில் இருந்த குப்பைக் கிடங்கில் என்னைக் கொண்டுபோய் சேர்த்தார்கள். அதற்கு அந்த குப்பை லாரியே பரவாயில்ல.
ஆண்டுகள் பல உருண்டோடின. பூ விற்ற பாட்டியும், அதை எடுத்துக் கொண்டு போனவனும், அந்த பூவைச் சூடியவளும் இறந்து போனார்கள். நான் மட்டும் இளமையாய் இன்னும் அந்த குப்பைக் கிடங்கில். ஆனால் என் மேல் ஐந்து அல்லது ஆறு அடிக்கு என்னைப் போன்ற பிளாஸ்டிக் பைகள் கலந்து கிடந்தோம்.
திடீர் என்று ஒரு பெரிய வெள்ளம் வந்தது. அந்த ஏரி முழுவதும் நிரம்பி அங்கிருந்து ஒரு ஆறு மூலம் கடலுக்கு சென்றேன். கடல் என்னை சேர்த்துக் கொள்ளாமல் மீண்டும் கரைக்கே துப்பிவிட்டது. அங்கிருந்த கடற்கரையில் என்னைப் போல் ஏராளமான பிளாஸ்டிக் பைகள் இருந்தன இன்னும் இளமையாய்.
அந்த எவனோ ஒருவனின் பேரன் கடற்கரையை சுத்தம் செய்கிறோம் என்று ஒரு அமைப்பு மூலம் என்னை அங்கிருந்து மறுபடியும் அந்த குப்பைக் கிடங்குக்கு கொண்டு சென்றான். மறுபடியும் பழைய இடம், அதே நாற்றம்.
ஆண்டுகள் உருண்டோடின. மறுபடியும் வெள்ளம், மறுபடியும் கடல், மறுபடியும் கடற்கரை. இம்முறை என்னில் ஒரு பாதி கடல் உண்டது. மறுபாதி சாலையில் அலைந்து கொண்டிருந்தேன். பல ஆண்டுகள் ஆனதால் என்னை பற்பல துகள்களாக மாற்றின அந்த நிலம். இப்பொழுது என்னை micro பிளாஸ்டிக் என்று அழைக்க ஆரம்பித்தனர். இப்போது நான் அனைவரின் நுரையீரல்களில் தங்கி உள்ளேன். என்னில் இன்னொரு பாதி கடலில் உள்ள ஆமை மீன்கள் பங்கு போட்டுக் கொண்டன. அதை விழுங்கிய மனிதர்கள் குடலில் உள்ளேன். இனி என்ன ஆகும் என்று எனக்கே தெரியாது.
தொடரும் …
குறிப்பு: இதில் பாதியை தட்டச்சு ஏற்கனவே செய்துவிட்டேன். இப்போது IPCC ரிப்போர்ட் வந்திருப்பதால் இதை முடிக்க வேண்டும் என்று மீண்டும் எழுதத் தொடங்கினேன்.
No comments:
Post a Comment