Sunday, September 25, 2016

நம்மைச்சுற்றி


அறிமுகம்
     சுற்றுச்சூழல் குறித்து அறிந்து கொள்ள வேண்டிய தருணம் இது. நம்மைச்சுற்றி என்னவெல்லாம் இருக்கிறது, எத்தனை உயிரினங்கள் ஓசைபடாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றன என்பதைச் சிறிதேனும் நாம் தெரிந்து கொள்ளவேண்டும். இவ்வுலகம் தோன்றிய காலத்திலிருந்து மாறாத சுற்றுச்சூழல், மனிதன் தோன்றிய காலத்திலிருந்தும் மாறாத சுற்றுச்சூழல், கடந்த 100 ஆண்டுகளில் எவ்வளவு  மாசுகளைச் சந்தித்துள்ளது? சுற்றுச்சூழல் மாசுபட்டால் என்ன என்று கேட்கிறீர்களா? மனித குலமே அழியும் அவலம் ஏற்படும். இதுதான் பெரும்பாலான சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் ஏக்கமும். மனிதன் இன்னமும் உணவுச்சங்கிலியில் ஓர் அங்கம் தான் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும்.

இயற்கையின் நியதி
     அதெப்படி நடக்கும்? பறவைகள் இனம் இல்லை என்று வைத்துக்கொள்வோம். பறவைகள் இல்லை என்றால் அது உண்ணு பூச்சிகள் பெருகி விடும். நமக்கு நேரடியாக உணவைக் கொடுக்கும் செடி கொடிகள் அழிந்து விடும் மற்றும் அதை உண்ணும் ஊண் உண்ணிகள் அழிந்து, அதையும் தின்னும் வாய்ப்பும் இல்லாமல் போகும். சரி பூச்சிகளை நாம் பூச்சிக் கொல்லிகளை வைத்து அழித்து விட்டால் நாம் தப்பித்துக் கொள்ள முடியுமா? முடியாது, ஏனெனில் பறவைகள் இல்லை என்றால் காடுகள் இருக்காது. காடுகள் உருவாகத் தேவையான மரங்களை விதைக்கும் முக்கிய வேளாண்மைத் தொழிலை பறவைகள் மறைமுகமாக தனது எச்சங்கள் மூலமாக செய்து கொண்டிருக்கின்றன. அதெப்படி காடு இல்லை என்றால் நாம் வாழ முடியாதா? என்று கேட்பது என் காதில் விழாமல் இல்லை. காடில்லாமல் மேகங்களை மழையாய் பொழியவைக்கும் ஆற்றல் இல்லாமல் போகும். எனவே ஆறுகளில் நீர் ஓடாது. ஆறுகளில் நீர் இல்லை என்றால் ஏரி, குளங்களில் நீரேது. இப்படி நீர் நிலைகளில் நீர் இல்லாது போனால், நிலத்தடி நீர் மட்டம் இருக்காது. மனிதன் வாழ நீர் இல்லாமல் இரண்டு அல்லது மூன்றே ஆண்டுகளில் மனித குலம் அழியும். மனிதனின் அபார மூளையினால் ஒர் ஆண்டில் கூட அழியும், ஏனெனில் நீருக்கான சண்டை நடந்தால் வெகு விரைவில் அழியும். என்னடா இது? எடுத்த எடுப்பிலேயே அழிவைப் பற்றி பேசுகிறேன் என்று எண்ண
வேண்டாம்.  பறவை இனம் அழிந்தால் என்ன நேரும் என்பதை எனக்குத் தெரிந்த வழியில் விளக்கியுள்ளேன்.
பறவையை விடுங்கள், சாதரண தேனீக்கள் இல்லை என்றாலும் இதே நிலமைதான்.

ஆர்வம்?
     என்ன திடீரென்று இவனுக்குச் சுற்றுச்சூழல் மீது ஆர்வம்  என்று கேட்கிறீர்களா? மனிதன் தோன்றிய காலம் முதல் இயற்கையோடு வாழ்ந்தான். பின்பு இயற்கையோடு இயைந்து வாழ்ந்தான். இப்போதும் நாம் காடுகள் நிறைந்த மலை வாழிடங்களுக்குச் சென்றால் நமக்கு ஒரு புத்துணர்ச்சி ஏற்படுகிறதன்றோ? அதற்கு நமது மரபணுவில் இருக்கும் அந்த இயற்கையொடு இயைந்த வாழ்வுதான் காரணம். எனவே எனக்கு இந்த சுற்றுச்சூழல் மீதான ஆர்வம் ஏற்படுவது இயல்பே!
இயற்கையோடு வாழ்வது என்பது காட்டில் வாழ்வது. உணவுக்காக நகர்ந்து கொண்டே இருப்பது. மிருகங்கள் இன்னமும் இயற்கையோடுதான் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.  நாகரிகம் தோன்றிய பின்பு இயற்கையோடு வாழாமல் இயற்கையோடு இயைந்து வாழக் கற்றுக்கொண்டான். ஆனால் இன்று, பொருள் சேர்ப்பதற்காக, இயற்கையை அழிக்கும் வேலையினை தெரிந்தோ தெரியாமலோ செய்து கொண்டிருக்கிறான்.
இத் தொடர் பதிவுகளில், மனிதன் செய்து கொண்டிருக்கும் சிறிய மற்றும் பெரிய இயற்கைச் சீர்குலைப்பு பற்றிப் பார்க்கலாம்.

இயற்கை என்பது என்ன?
     பின் வரும் புறனானூற்றுப் பாடலைப் பார்ப்போம்,

மண் திணிந்த நிலனும்,
நிலன் ஏந்திய விசும்பும்,
விசும்பு தைவரு வளியும்,
வளித் தலைஇய தீயும்,
தீ முரணிய நீரும், என்றாங்கு
ஐம் பெரும் பூதத்து இயற்கை போல

மேலே கூறிய இந்த ஐம்பெரும்பூதங்கள் தான் இயற்கை. தீயையும் விசும்பையும்(SPACE) மனிதனால் ஒன்றும் செய்ய முடியாது. மீதமுள்ள நில நீர் வளியை மனிதன் செய்யாத அலங்கோலமில்லை. அதைப் பற்றி பின் வரும் தொடர் பதிவுகளில் பார்ப்போம். 

(தொடரும்) 

1 comment:

  1. படித்தேன், உண்மைதான்...
    அனைவரும் அறிய வேண்டிய தகவல் இது !!
    நல்ல பதிவு !

    ReplyDelete