Monday, June 25, 2012

அஜைல் (AGILE)



முன்குறிப்பு:- இது ஆங்கில சொற்கள் அதிகம் புழங்கக்கூடிய ஒரு தலைப்பு. ஆங்கிலச் சொற்களை அடைப்புக்குறிக்குள் (Within bracket) அடைத்து வைத்து, அதற்கு நிகரான தமிழ் சொற்களை இப்பதிவில் உளாவவிட்டுள்ளேன்.

இப்பொழுது பதிவிற்கு வருவோம்.

பதிவெழுதி வெகுநாட்களான மாதிரி தோன்றியது. சோம்பேறித்தனம், சரியான ஒரு தலைப்பு கிடைக்காமை, எப்பொழுதும் பொதுவான ஒரு தலைப்பில் எழுதுவது, பயணக்கட்டுரைகள் மற்றும் இன்ன பிற காரணங்கள் சிறிது அசுவாரசியத்தை (bore) ஏற்படுத்தியது. அதானால் தான் இந்த தொழில்நுட்ப(Technical) தொடர்புடைய பதிவு. டெக்னிக்கலாகப் பார்த்தால் அஜைல் என்பது ஒரு டெக்னிக்கல் தலைப்பே அல்ல. இது ஒருவகையான செயல் திட்ட மேலான்மையைத் (Project Management) தொடர்புடையது. மேலும் அஜைல் பயிற்சி வித்தியாசமான, மனதில் ஒட்டிக்கொள்ளும் முறையில் அமைத பயிற்சியும் ஒரு காரணம்.

அஜைலைப் பற்றி

இதற்கு முன் பரவலாக இருந்த செயல் திட்ட மேலான்மை, அருவி (Waterfall Model) வகையைச் சேர்ந்தது.  அருவி வகையில் ஒவ்வொரு நிலையும் முடிந்த பின்னரே அடுத்த நிலைக்கு நாம் செல்ல முடியும். உதாரணமாக, மொத்த மென்பொருள் வடிவமைப்பு (Software design) முடிந்த பின்னரே அதை நடைமுறைப்படுத்தும் (Software Implementation) நிலைக்கும், மென்பொருளை பரிசோதிக்கும் (Software Testing) நிலைக்கும், கொண்டு செல்ல முடியும். அதன் பின்னர் தான், அம்மென்பொருளை தயாரிப்புக்கு (Production) அனுப்பி விற்பனை செய்ய முடியும்.

ஆனால் அஜைல் வகையில், இந்த மொத்த மென்பொருளும் சிற்சில துண்டுகளாக மாற்றி, ஒவ்வொரு துண்டிற்கும் மேற்குறிப்பிட்ட நிலைகளை முடித்து விடலாம். அஜைல் என்பதன் பொருள், வேகமாக, சிறிது சிறிதாக முனேறிச் செல்வது (Proceeding faster with lesser content) என்பது.

எதற்காக?

எங்கள் வாடிக்கையாளர் (Customer) அருவி வடிவிலிருந்து அஜைல் வடிவிற்கு தமது செயல் திட்ட மேலான்மையை மாற்றியதால், எங்கள் செயல் திட்ட மேலான்மையையும் அதற்கேற்ப மாற்ற வேண்டிய சூழ்நிலை. அதனால் எங்களுக்கு சிறிதும் பரிச்சயம் இல்லாத ஒரு புதிய திட்ட மேலான்மையைப் பற்றி எங்கள் அலுவலகத்தில் (Banglore) ஏற்கனவே பயிற்சி அனுபவம்வாய்ந்தவர்கள் மூலமாக பயிற்சி கொடுக்க எங்கள் மேலான்மைக்குழு(Management Team) திட்டமிட்டது.

இன்னொரு பயிற்சியா? அதுவும் மூன்று நாட்களுக்கா? என்று தோன்றியது. ஆனால் எங்களுக்கு முன்னால் இதில் பங்கேற்ற குழு, இது மிகவும் நன்றாக இருந்ததாக கூறியதால் ஒரு எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த எதிர்பார்ப்பை பூர்தி செய்தனரா என்று பார்ப்போம்.
பயிற்சி ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே பயிற்சியாளர்கள் எங்கள் மனதை கொள்ளை கொண்டார்கள். பயிற்சி எடுத்தவர்களில் மிகவும் அனுபவம் வாய்ந்த பிரசீதா என்பவர் வந்ததும் வராததுமாக

“ஏன் இங்கு வந்துள்ளீர்கள்?”

என்று ஒவ்வொருவராக கேட்டுக் கொண்டிருந்தார். அனைவருக்கும் ஒரே காரணம் மேற்குறிப்பிட்டதுதான். ஆனாலும் ஒவ்வொருவரும் விதவிதமான காரணங்களை அள்ளி விட்டனர். கடைசியாக கார்த்திகா பயிற்சியாளர்களிடமே,

 “நீங்கள் ஏன் இங்கு வந்துள்ளீர்கள்?”

என்று கேட்டதுமே அரங்கம் அதிர்ந்தது.

இன்னொரு பயிற்சியாளர் பெயர் கார்த்திக் (KK). அவரை எங்கேயோ பார்த்ததாய் ஞாபகம் வந்தது. ஒரு முறை அரிசெண்ட் விழாவில் அவர் நடனமாடியது ஞாபத்திற்கு வந்தது. அவரும் மிக அருமையாக இந்த பயிற்சியை சொல்லிக் கொடுப்பதற்கான ஆயத்தங்களை செய்தார்.

முதல் நாள்

இந்த மூன்று நாட்கள் பயிற்சியில் மனம் கவர்ந்த நிகழ்சியே, இந்த பயிற்சிக்கான அடிப்படை விதிகளை (Ground rules) நிறுவியதுதான். குறித்த நேரத்தில் அனைவரும் பயிற்சி அறைக்கு வருவது, தேநீர் இடைவேளை, உணவு இடைவேளை, அமைதி கரங்கள் (Silent Hands),  மதிப்பளித்தல் இவையனைத்துமே அடிப்படை விதிகளில் அடங்கும்.
இவற்றில் எனக்கு பிடித்தது அமைதிக் கரங்களும் குறித்த நேரத்தில் வராதவர்களுக்கு கைகொட்டி வரவேற்பதுமே!
பயிற்சி அறைக்கு காலங்கடந்து வந்தால் அனைவரும் கைதட்ட வேண்டும். இது தண்டனை என்பதைவிட ஒருவித எள்ளி நகையாடலே என்று தோன்றுகிறது. கைகொட்டி சிரித்தல் வகையைச் சேர்ந்தது. அதற்கு பயந்தே அனைவரும் குறித்த நேரத்திற்குள் வந்து சேர்ந்தனர்.
விவாதத்தின்போது இருவருக்கும் மேற்பட்டோர் பேசினால் ஒரு வித சலசலப்பு ஏற்படுவது இயற்கையே. அதை அமைதிக் கரங்கள் மூலமாக தீர்க்கலாம் என்று கார்த்திக் கூறியதன் பொருள் அதை அமுல் படுத்தும்போதுதான் தெரிந்தது. அந்த சலசலப்பின்போது அனைவரும் தத்தமது கரங்களை அமைதியாக தூக்கவேண்டும். அதைப் பார்த்ததும் சலசலப்பில் ஈடுபட்டுள்ளவர்களும் அதில் பங்குகொள்வர். சலசலப்பு அடங்கும். பள்ளிப் பருவத்தில் வாத்தியார் மேஜையைத் தட்டி மாணவர்களின் சலசலப்பை அடக்குவது ஞாபத்திற்கு வந்தது.
பிரசீதா மிகவும் கனிவான குரலில் அடிப்படை அஜைலைப் பற்றி விளக்கிக் கூறினார். எங்களிடம் சிறிது சுவாரசியமின்மை தெரிந்த உடனே கார்த்திக் ஏதாவது ஒரு விளையாட்டை ஏற்படுத்தி எங்களின் சோர்வைக் குறைக்க முயற்சி செய்வார். இது மிகவும் சிறந்த யுக்தி. சாதாரணமாக ஒரு பயிற்சியில் ஒரு பவர்பாய்ண்ட் பிரசண்டேஷனை காண்பித்து மொக்கையாக பேசுவதினால் வரும் ஒருவித சோர்வைப் போக்க இது மாதிரி செய்வது சுறுசுறுப்பை உண்டாக்கும். அதன் பின்னர் அதே பிரசண்டேஷனை காண்பிக்கும்போது ஆர்வம் ஏற்படும்.

இன்னுமொரு காரியத்தையும் பயிற்சியாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். வந்த உடனே ஆறு பேர்கள் கொண்ட குழுக்களாக வந்தவர்களைப் பிரித்தனர். அந்த குழுக்கள்தான் கடைசிவரை இருக்கவேண்டும் என்றும் கூறினர்.
ஒவ்வொரு மேஜை மேலும் வண்ண வண்ண நூல்கள் சுற்றப்பட்ட எளிதில் வளையும் கம்பிகளை வைத்திருந்தனர். பயிற்சியின்போது அனைவரும் ஒருமுகத்தோடு கவனம் செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.  ஒரு குழுவில் இருக்கும் யாராவது ஒருவருக்கு சிறிது சுவாரசியமின்மை உண்டானால் என்ன செய்வது? அதற்குத்தான் அந்த எளிதில் வளையும் கம்பிகள் என்பது என் எண்ணம்.  அந்த கம்பிகளைக் கொண்டு ஒவ்வொரு மேஜையின் மீதும் வெவ்வேறு சிற்பங்கள் தோன்றியிருப்பதை, ஒவ்வொரு இடைவேளையின்போதும் கவனிக்க முடிந்தது. அது எதற்கு என்று கேட்கவெண்டுமென்றிருந்தேன். ஆனால் கடைசிவரை அது தோன்றவேயில்லை. பயிற்சிக்கு வந்திருப்பவர்கள் எந்த அளவுக்கு கவனம் செலுத்துகிறார்கள் என்று எடை போடலாம் அல்லது மேற்குறிப்பிட்டதைப் போன்று பயிற்சியின் இடையே ஏற்படும் சுவாரசியமின்மையைப் போக்க அவர்களே இதை வைத்திருக்கலாம்.
எவ்வளவு தான் விளையாட்டை கார்த்திக் ஏற்பாடு செய்திருந்தாலும் முதல் நாளில் எனக்கு தலைவலியே மிஞ்சியது. செயல் பயிற்சியைவிட (Practical session) வாத பயிற்சியே (theoretical session) அதிகமாக இருந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம்.

இரண்டாம் நாள்

இரண்டாம் நாளும் அடிப்படைவிதிகள் கடைபிடிக்கப்பட்டன. ஆனால் அதிக தவணையில் காலதாமதமாக வருபவர்களுக்கு கைதட்டுதலுடன், காலதாமதமாக வருபவர்கள் நடனம் ஆடவேண்டும் என்று அனைவரும் சிபாரிசு செய்தனர். அது ஏனோ சரியாக நடைமுறைபடுத்தப்படவில்லை. இரண்டாம் நாளன்று கிரண் என்பவரும் பயிற்சி அளிக்க சேர்ந்துகொண்டார். அவரும் அஜைலில் ஊறித்திளைத்தவர் போல காணப்பட்டார்.
முதல் நாளில் ஏற்பட்ட சந்தேகங்கள் மற்றும் இவ்வளவு நாட்கள் அஜைலில் பங்கேற்றதன் மூலம் அதில் செய்த தவறுகளை அறிந்து கொள்ள கிரணிடம் அனைவரும் கேள்வி மேல் கேள்வி கேட்டுக்கொண்டே இருந்தனர். உணவு இடைவேளை வரை இது தொடர்ந்தது. அது சில பேருக்கு சலிப்பை ஊட்டியிருக்க வேண்டும் என்னையும் சேர்த்து.

இரண்டாம் நாளில் எனக்கு பிடித்த ஒரு பயிற்சியின் தலைப்பு வீச்சு (Stroke). பிரசீதா அதை கவனமாக எடுத்துக் கூறியவுடன் குண்டூசி விழுமொலி கேட்கும் (Pin drop silence) அமைதி நிலவியது. வீச்சு என்பது ஒருவர் இன்னொருவருக்கு கொடுக்கும் உடல் அல்லது மன அளவிளான பாதிப்பு. அது நேர்மறையான வீச்சாக இருக்கலாம் அல்லது எதிர்மறையான வீச்சாக இருக்கலாம்.

மூன்றாம் நாள்

மூன்றாம் நாள் பயிற்சி முழுக்க முழுக்க செயல் முறைப் பயிற்சியாக இருந்தது. அஜைலின் முக்கியமான பகுதியான ஸ்க்ரம் மற்றும் ஸ்பிரிண்ட் பற்றி செயல் வடிவில் எங்களையே செய்து காட்டச் சொல்லி எங்களுக்கு பயிற்சி அளித்தார்கள். இப்பதிவின் மூலம் அதை ஓரளவிற்கு உங்களிடம் எடுத்துச் செல்ல முயற்சி செய்கிறேன்.

முதல் நாளிலேயே எங்களை குழு குழுவாக பிரித்ததன் காரணம் இப்போது விளங்கிற்று. ஒவ்வொரு குழுவும் ஒரு ஸ்க்ரம் குழு. எல்லா ஸ்க்ரம் குழுவுக்கும் ஒரு பொதுவான பொருள் முதலாளி (Product Owner) இருப்பார். இங்கு கிரண் அப்பணியைச் செய்தார். ஒவ்வொரு ஸ்க்ரம்க்கும் ஒரு ஸ்க்ரம் தலைவரை (Scrum Master) எங்களையே தேர்ந்தெடுக்கச் சொன்னார்கள். பொருள் முதலாளி எங்களிடம் பொருளுக்கான தேவைகளை (Requirements) எங்களிடம் ஒரு காகிதத்தில் கொடுத்தார். அதிலிருந்து பொருள் தேவைகளை சிற்சில பயனாளர் கதைகளாக (User Stories) ஒவ்வொரு குழுவையும் மாற்றும்படி கேட்டுக்கொண்டார். ஒவ்வொரு தேவைக்கும் எவ்வளவு அளவு நிர்ணயம் (Story Poinnt Estimation) செய்யவேண்டும் என்று எங்களை கேட்டுக்கொண்டனர்.
இது ஒரு ஒப்பீட்டு அளவே அன்றி எவ்வளவு காலம் பிடிக்கும் என்பதை கூறுவதாக இருக்காது. இவை அனைத்தையும் குழுவே நிர்ணயிக்கும். பயனாளர் கதைகளில் ஏதேனும் மாற்றம் வேண்டியிருந்தால் ஸ்ப்ரிண்ட் சீர்படுத்துதலில் (Sprint Grooming) அதை பொருள் முதலாளியின் உதவியுடன் சரிசெய்துகொள்ளலாம். ஆனால் ஒவ்வொரு பயனாளர் கதைகளின் முக்கியத்துவங்களை (Priorities) பொருள் முதலாளியே முடிவு செய்வார். அதன் பிறகு ஸ்பிரிண்ட் நடக்கும். ஒவ்வொரு பயனாளர் கதையையும் சிறு சிறு வேலையாக (Tasks) மாற்றி அதை குறைந்தது 2 வாரங்கள், அதிகபட்சம் 4 வாரங்கள் எனும் ஸ்பிரிண்ட் முறையில் தொடர்ச்சியாக (Iterative) பல ஸ்பிரிண்ட்கள் நடந்து, முடிவில் முழு பொருளையும் (end product) செய்து முடிப்போம். இந்த ஸ்பிரிண்ட் முறையில் பல்வேறு குழு சந்தித்தல் (Sprint Meetings) நடைபெறும். இதன் மூலம் குழு ஒருங்கிணைப்புத்திறன் (Team coordination)மேலோங்கும்.  எந்த ஒரு குழுவில் ஒருங்கிணைப்புதிறன் அதிகமாக உள்ளதோ, அது வெற்றிக்கு வழிவகுக்கும்.

இந்த பயிற்சி நடந்து முடிந்தவுடன் ஸ்பிரிண்ட் நடக்கும் முறை பற்றி எங்களிடம் இன்னுமொரு செயல் முறை பயிற்சியில் தெள்ளத்தெளிவாக உரைத்தனர். அது இதுவரை நாங்கள் பயின்ற அஜைலைப் பற்றி ஒரு நிரல் படத்தில் (Chart) அழகாகப் பதிக்கும்படி கூறினர். ஆனால் ஸ்பிரிண்ட் முறையைப் பயன்படுத்தி அதை உருவாக்க வேண்டுமென்றும் கூறினர். அதற்காக மேற்குறிப்பிட்ட அனைத்து செயல்களையும் செய்து ஒருவாரு நிரல் படத்தை செய்து முடித்தோம்.

எங்கள் குழுவிற்கு 7.5/10 மதிப்பெண் கிடைத்தது. எங்களின் ஒருங்கிணைப்பு நன்றாக இருந்தும், திட்டமிடலில் கோட்டைவிட்டதனால் சரியாக செயல்படமுடியவில்லை. இன்னொரு குழு முதல் இடத்தைப் பிடித்தது. அதில் திட்டமிடல், மூல முன்மாதிரி (prototype) மற்றும் குழு ஒருங்கிணைப்பு நன்றாக இருந்ததால் அவர்கள் வெற்றி பெற்றனர். இன்னுமொரு குழு மேற்குறிப்பிட்ட எதுவுமே இல்லாமல் போனதால் அவர்கள் உருவாக்கிய படைப்பைப் பற்றி குறிப்பு கொடுக்கவே கிரண் பயந்தார்.

இந்த மூன்று நாட்களும் எங்களின் அருவி வடிவ மனநிலையிலிருந்து அஜைல் மனநிலைக்கு கலகலப்பான முறையில் மாற்றிய அம் மும்மூர்த்திகளுக்கு இப்பதிவின் மூலம் நன்றி சொல்லிக்கொள்கிறேன். எங்களின் ஏகோபித்த எதிர்பார்பையும் பூர்த்திசெய்தனர்.

கடைசியாக இன்னொன்றும் தெரியவந்தது. இந்த அஜைலில் பாஸ்களுக்கு அவ்வளவு வேலையில்லை என்று. இது நன்மையா? தீமையா?

எல்லாம் நன்மைக்கே !

பின் குறிப்பு:- அடிப்படை விதிகளில் முதல் விதியான நேரத்திற்கு வருவதற்கான தண்டனை, இரண்டாம் நாளிலிருந்து வலுப்படுத்தப் பட்டு, இரண்டு முறைக்கு மேல் தாமதமாக வருபவர்கள் நடனமாடவேண்டும் என்பதை முன்பே கூறியுள்ளேன். ஆனால் பல முறை தாமதமாக வந்த ஒருவரின் நடனத்தை பார்க்காமல் போனது எங்கள் அதிர்ஷ்டம் தானோ?

No comments:

Post a Comment