Wednesday, October 1, 2014


வண்டலூர் உயிரியல் பூங்கா

தவறான திட்டமிடல்

கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக வண்டலூர் உயிரியல் பூங்கா செல்ல வேண்டும் என்று நினைத்துக்கொண்டே இருந்து சென்ற மாதம் தான், நான், என் மனைவி மற்றும் மச்சானுடன் கிளம்பினோம்.

சென்ற மாதம் வண்டலூர் செல்ல உகந்த நேரம் இல்லை என்று தெரிந்தும் கிளம்பினோம். அதற்கான தண்டனையும் கதிரவன் எங்களுக்கு காட்டிவிட்டான்.

வண்டலூருக்கு செல்வது இதுவே எங்கள் மூவருக்கும் முதல் தடவை. உள்ளே சென்றவுடன் நுழைவுச்சீட்டு வழங்குமிடம். அங்கு பல கவுண்டர்கள் இருந்தும் ஒரே ஒரு கவுண்டரில் மட்டுமே ஆள் போடப்பட்டிருந்தது. வெயில் வேறு பின்னி எடுத்துக்கொண்டிருந்தது. கூட்டமும் ஓரளவிற்கு இருந்தது. நுழைவுச்சீட்டு வழங்குமிடத்தில் ஒரு வட இந்திய இளைஞன் இங்கு பேக்கேஜ் டூர் இருக்குமா என்று ஆங்கிலத்தில் விசாரித்தான். நுழைவுச்சீட்டு கொடுப்பவர் தனக்கு தெரிந்த உடைந்த ஆங்கிலத்தில், அது உள்ளே கிடைக்கும் என்று கூறினார். உள்ளே நடந்து சென்று சுற்றிவருவது கடினமான ஒன்று என்று அப்போதே எங்களுக்கு உறைத்திருக்க வேண்டும்.

அலட்சியம்

உள்ளே நுழைம்போதே, பையில் ஏதாவது தின்பண்டம் எடுத்து செல்கின்றோமா என்று சோதனை போடுகிறார்கள். அது சோதனையே அல்ல. வெறுமனே பையை தட்டிப்பார்த்து நம்மிடமே ”உள்ளே ஏதாவது இருக்கிறதா” என்று கேட்கிறார்கள். எங்களிடம் குடிநீர் தவிர வேறொன்றுமில்லை. குறைந்தபட்சம் பிஸ்கட் பேக்கட்டையாவது எடுத்துச் சென்றிருக்கலாமென்று பின்னர் தோன்றியது.  

உள்ளே சென்றவுடன், பேட்டரியில் இயங்கும் கார், சைக்கிள் போன்றவை வாடகைக்கு இருந்ததும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் நடந்தே செல்லலாம் என்று முடிவெடுத்தது மிகப்பெரிய தவறு என்று பின்னர் தான் தெரிந்தது. இந்த வலைப்பூவை எழுதுவதற்கு காரணமே, இனி யாரும் நாங்கள் செய்த தவறைச் செய்யாமல் அவர்களது பயணமேனும் இனியதாக அமையவேண்டும் என்ற எண்ணத்தில் தான்.

நடைப் பயணம்
உள் நுழைந்தது, எங்கும் பசுமை மாறாமல் மரங்களடர்ந்து கிடந்தது. அம்புக்குறி போட்ட பாதையில் நடைப் பயணம் ஆரம்பமானது. முதலில் பார்த்தது குரங்குவகைகளை. விதவிதமான குரங்குவகைகளைப் பார்த்துக்கொண்டே பறவைகள் பகுதிக்கு வந்தோம். அதற்குள் உச்சி வெயில் அடித்துக்கொண்டிருந்தது. மரங்கள் அடர்ந்திருந்தும், காற்றோட்டம் இல்லாததால் வெக்கையாக இருந்தது. அப்படியே பேசிக்கொண்டே ஏரி இருக்கும் வழியாக நடந்து சென்றோம். அது ஒரு வறண்ட ஏரி. பெயருகேனும் துளி தண்ணீர் கூட இல்லை. ஏரியின் அருகில் மரங்கள் குறைவு. உச்சி வெயில் வேறு. எங்கள் சக்தியெல்லாம் இங்கேயே விரயமானது. 

அங்கிருந்து மறுபடியும் பறவைகள் பகுதிக்கு சென்று தார்ச் சாலையில் நடக்க ஆரம்பித்தோம். அவ்வழியே கூண்டில் இருக்கும் பறவைகள், காட்டெருமைகள், மான்கள், சிறுத்தை முதலிய பல விலங்குகளைப் பார்த்துக்கொண்டே நடந்தோம். மனிதர்கள் முகத்தில் இருக்கும் ஆச்சர்யமும், வியப்பும் பெயருக்கேனும் ஒரு மிருகத்திடமும் இல்லை. எத்தன பேர பாத்திருப்போம்னு நினைச்சிட்டு இருந்திருக்கலாம்.

சிறிது நேரத்திற்கெல்லாம் ஆவின் பாலகத்தின் ஐஸ் கிரீம் பார்லர் தென்பட்டது. நடந்து செல்வோர் மட்டுமல்ல, சைக்கிளில் வந்தவர்களுக்கும் அது ஒரு பாலைவனச்சோலையாக இருந்தது. நாங்கள் ஆளுக்கொரு ஐஸ் கிரீம் வாங்கிச் சுவைத்தோம். அது தந்த உடனடி ஆற்றல் எங்கள் சிரம பரிகாரத்திற்கு உதவியது. சிறிது நேரத்திற்கெல்லாம், மதியம் 1 மணியானது. எனக்கு பசி வயிற்றைக் கிள்ள ஆரம்பித்தது. வழியெங்கும் இருந்த விலங்குகள், பறவைகளைப் பார்க்க மனம் செல்லவில்லை. ஏதாவது உணவகம் இருக்குமா என்று தேடத் தோன்றியது.

வெள்ளைப் புலி
அப்பொழுதுதான் வெள்ளைப் புலிகள் இருக்கும் இடம் வந்தடைந்தோம். வண்டலூர் உயிரியல் பூங்காவிலே இருக்கும் ஒரே ஈர்ப்பு இந்த வெள்ளைப் புலிகள் தான் என்பது, அதைப் பார்க்கும்போது தெரிந்தது. மூன்று வாலிபப் புலிகள். ஒன்று சிவனே என்று அமர்ந்து கொண்டிருந்தது. மற்றுமிரண்டு புலிகள் அங்குமிங்கும் உலாவிக்கொண்டு இருந்தது. அதைப் படம் பிடிக்க அத்தனை பேர்கள் இருந்தும், அப்புலிகள் மனிதர்களை சட்டை செய்த மாதிரியே தெரியவில்லை. நாங்கள் வண்டலூர் சென்ற சமயம், டெல்லியில் நடந்த புலி தாக்கிய (?) சம்பவம் நடை பெறவில்லை. அதனால் அப்புலிகளை பார்க்கும் போது உள்ளூர பயம் இல்லை. இப்பொழுது இந்தப் பதிவை எழுதும்போது விருட்டென்று ஒருவித பயம் வந்து செல்கிறது.

வெளியே…
அங்கிருந்து சிறிது நடந்து சென்றதும் ஒரு கடையில் மைதாவில் செய்த பஃப் மற்றும் டீ விற்றுக் கொண்டிருந்தார்கள். விற்றுக் கொண்டிருந்தார்கள் என்று சொல்வதை விட, அங்கிருந்த மக்கள் அதை பிடுங்கிக் கொண்டிருந்தார்கள். அவ்வளவு பசி அனைவருக்கும்!! மணி 3.30 ஆயிற்றே!! ஆங்காங்கே உயிரியல் பூங்காவிற்கென்றே சில வழிகள், மருத்துவமனைகள், விலங்குகளின் இனப்பெருக்க மையங்கள் போன்றவை இருந்தன.

எனக்கு உயிரியல் பூங்கா செல்ல வெகு நாளாக ஆசை இருந்தது. ஆனால், அங்கு விலங்குகளுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் சுதந்திரம் (???), இயல்புத்தன்மை இல்லாமை, செயற்கையான இயற்கை போன்றவற்றினால், ”ஏண்டா இங்க வந்தோம்னு” ஆகிவிட்டது. விலங்குகள் அனைத்தும் சுயத்தை இழந்து இருந்தன. வேளா வேளைக்கு உணவு, இனப்பெருக்கம் செய்வதற்கு போட்டி இல்லாமை போன்றவற்றினால், அவை அனைத்துமே அதன் சுயத்தை இழந்திருந்தன. உதாரணத்திற்கு ஒரு நாரை, அதன் அழகிய இறக்கையை விரித்துக் காட்டி பறக்க முயன்றது. ஆனால் அதனால் இரண்டடி மட்டுமே பறக்க முடிந்தது. ஏனெனில், இடப் பற்றாக் குறை. அந்த நாரையைப் பற்றி அருகில் ஒரு பலகையில் விளக்கம் கொடுக்கப் பட்டுள்ளது. அது கடல் தாண்டி, கண்டம் விட்டு கண்டம் பறந்து செல்லும் பறவை. அதன் விதியைப் பாருங்கள்.

அங்கிருந்து சிறிது தூரத்திற்கிலெல்லாம் ஓட்டல் தமிழ்நாடு வந்தது. அகோர பசி பறந்து போய் ஒரு மணி நேரம் ஆன பிறகு எதுவுமே சாப்பிடப் பிடிக்கவில்லை. அப்படியே சாப்பிட நினைத்தாலும், அந்த நேரத்தில் அங்கு சாப்பிட சூப் மற்றும் அதே பஃப் தான் இருந்தது. வேறு வழியில்லாமல் அதையே தின்று நடையைக் கட்டினோம். கடைசியாக வெளியே செல்லும் வழி வந்தது. அப்பொழுது அந்த பேட்டரி கார், சைக்கிள்கள் வேறு கடுப்பைக் கிளப்புமாறு அணிவகுத்து நின்றன. அதீத களைப்பு காரணமாக சிறிது இளைப்பாறினேன். வெளியே செல்லும் வழியில் மறுபடியும் ஒரு பெரிய ஓட்டல் வந்தது. அங்கு சூடான போண்டா, தோசையைப் பார்க்கையில் நாக்கு ஊறி அங்கு மறுபடியும் தின்றுத் தொலைத்தோம். என்ன செய்ய? களைப்பும், பசியும் தொடர்ந்து கொண்டே இருந்தது.

நான் பூங்காவை ரசித்ததைவிட பசியால் அலைந்தது அதிகம். அதனால் தான் என்னவோ, அதைப் பற்றியே அதிகம் எழுதுகிறேன்.

இன்னொரு முக்கியமான தகவல். இங்கு சிங்கம், கரடி மற்றும் மான்கள் தனியாக உலவும்படி செய்து, கூண்டுக்குள் இருக்கும் வண்டியில் மனிதர்கள் செல்லும்படியான Lion Safari, Deer Safari, Bear Safari போன்றவை இருக்கிறது. ஆனால், அதைத் திட்டமிடாததால், அதைப் பார்க்கும் பாக்கியம் கிடைக்கவில்லை.

சரியாகத் திட்டமிட்டால், வண்டலூர் பூங்காவும் பார்க்கத் தவறக்கூடாத இடங்களில் ஒன்றே!!! மிஸ் பண்னிடாதீங்க !!!!

All the best. Have a nice journey to Vandalur ZOO !!!

No comments:

Post a Comment