பயணம் ஒரு அலாதியானது. நண்பர்களுடன் ஒரு மகிழ்ச்சியான, ரம்யமான மற்றும் குதூகலம்
நிறைந்த பயணம் செய்வது என்பது எல்லாருக்கும் பிடித்தமான ஒன்று. அது அனைவருக்கும்
எளிதில் கிட்டாது. அது போன்ற அரிய பயணத்தை விட எவருக்கும் மனது வராது. அம்மாதிரியான
ஒரு பயண அனுபவத்தை இதில் பகிர்கிறேன்.
தீப்தி தனது திருமண பத்திரிக்கைய கொடுத்தவுடன் முடிவானது எங்கள் பயணம்.
கார்த்திக், சிவபாலன் மற்றும் சிலர் உடனே இதைப்பற்றிய திட்டமிடலில் இறங்கினர்.
நானும் சேர்ந்துகொண்டேன். தீப்தி பொள்ளாச்சியில் திருமணத்தை வைத்ததால், நாங்கள்
வால்பாறையை எங்கள் பயணத்தில் சேர்த்துக் கொண்டோம். யாரெல்லாம் வருகிறார்கள் என்று
கணக்கெடுக்கும் முன்னே 9 பேர் வர ஒப்புக்கொண்டார்கள். சிவபாலன் தனது நண்பரையும்
(தங்கதுரை) அழைத்துக் கொள்ளலாம் என்று கூறினார். இதற்குள் நான் வருகிறேன், நீ
வருகிறேன் என்று ஒருவழியாக 10 பேர் என்று முடிவானது. இந்த திட்டமிடல் சுமார்
ஒன்றரை, இரண்டு மாதத்திற்கு முன்பே ஆரம்பமானது.
இதுதான் எங்கள் பயணத் திட்டம்.
ஜூன் 3 – அலுவலத்திலிருந்து இரண்டு கார்களுடன் பொள்ளாசிக்கு சென்று இரவு
தங்குவது.
ஜூன் 4 – காலை திருமண நிகழ்ச்சியில் கலந்து, பின்னர் வால்பாறை புறப்பட்டு,
இரவு அங்கே தங்குவது.
ஜூன் 5 – அதிரப்பள்ளி அருவிக்கு சென்று, மறுபடியும் வால்பாறை அடைந்து, இரவு
தங்குவது
ஜூன் 6 – வால்பாறையிலிருந்து கிளம்பி, சென்னை வந்தடைவது
இரண்டு கார்களில் ஒன்று என்னுடைய i20, இன்னொன்று கார்த்திக்கின் Jazz.
இரண்டு கார்களுமே ஒரே மாதிரியான பெட்ரோல் எஞ்சின் மற்றும் ஒரே வகை செயல் திறன்
கொண்டவை. இட வசதியும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருக்கும். Jazz ல் பின்
இருக்கையில் சிறிது அகலம் என்று நினைக்கிறேன். வண்டி வாங்கியது முதல் நானே ஓட்டிக்
கொண்டிருந்தபடியால், இந்த பயணம் முழுதும் ஒரு ஓட்டுனராக இல்லாமல் பின் இருக்கையில்
பயணம் செய்ய முடிவு செய்தேன். போதாக்குறைக்கு சிவபாலன், தானே ஓட்டுவதாக
சொல்லியிருந்தார். கண்ணன் மற்றும் தங்கதுரையும் அனுபவமிக்க ஓட்டுனர்களே.
பயணம் சரி, தங்குவதற்கான ஏற்பாடுகளை யார் செய்வது? அனைவருமே வேலையில்
மூழ்கிக் கிடந்தபடியால், நானும் சிவபாலனும் தங்கும் ஹோட்டலை தேட ஆரம்பித்தோம்.
எங்களுக்கு www.team-bhp.com தளம் மிகவும்
உறுதுணையாக இருந்தது. அதில் ஏற்கனவே வால்பாறைக்கு சென்றவர்கள் சொல்லியிருந்த
ஹோட்டல்களில் முதல் இடம் இந்திரப்பிரஸ்தா, பின்னர் சின்ன தேவர் போன்ற மாளிகைகள்.
ஆனால் இதில் தங்க குறைந்தது ஒரு நாளைக்கு ரூ. 6000 முதல் ரூ. 10000 வரை செலவாகும்.
மொத்தம் 10 பேர் ஆதலால், விசாரித்ததில் எங்குமே அறைகள் காலி இல்லை. கடைசியில் சோலையார்
அணைக்கு அருகில் தீபிகா கார்டன் ரிசார்டில் அறைகள் காலியாக இருந்ததால் அங்கு புக்
செய்தோம். அதுவும் 10 பேருக்கு ஒரு நாளைக்கு ரூ. 4000. இது ஒரு நல்ல டீல். அதன்
பிறகு பயணத்திற்காக ஒவ்வொரு நாளாக காத்திருந்தோம். இருந்தாலும் மனதில் ஏதோ ஒரு
ஓரத்தில், இந்த பயணம் எங்கு சொதப்பி விடுமோ என்று தோன்றிக் கொண்டே இருந்தது. இப்பயணத்திற்காகவே
ஒரு வாட்ஸ்ஆப் குரூப் ஒன்று உருவாக்கினோம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
பயணம் ஆரம்பம்
ஜூன் 2, மாலை 6, கார்த்திக் எல்லாரிடமும்
“எல்லாரும் அவங்களோட வேலைய இன்னிக்கே முடிச்சிடுங்க, நாளைக்கு அது செய்யனும்
இது செய்யனும்னு உக்கார்துடாதீங்க. Sharp ஆ ஒன்றைக்கு நாளைக்கு கிளம்பரோம்”
“எப்டியோ எல்லா வேலையும் முடிச்சிடலாம்” மற்ற அனைவரும்.
ஜூன் 3, மதியம் 1. நான் கார்த்திக்கிடம் “வாங்க சாப்டு கிளம்பலாம்”,
கார்த்திக் “இல்லைங்க, கொஞ்சம் வேலை இருக்கு. இத முடிச்சிட்டு
கிளம்பிடலாம்”. அடடா இது என்னடா சொதப்பிடுமே என்று தோன்றியது. எல்லாருமே
மானிட்டரையே வெறிக்க பார்த்து வேலை செய்து கொண்டிருந்தார்கள்.
“இது வேலைக்கு ஆகாது. சிவபாலன், நாம முதல்ல என் வண்டில கிளம்பலாம். போறப்ப
தங்கதுரை, சுரேஷ் அ பிக்கப் பண்ணிக்கலாம்”, நான்.
“கரக்ட், இன்னொருதர சேர்த்துக்குவோம். நாம மூனு பேரு, பிக்கப் பன்றவங்க
ரெண்டு. சரியா இருக்கும். மீதி இருக்கரவங்க, கார்த்திக் கார்ல வந்துருவாங்க”,
சிவபாலன்.
“நான் வரேன் உங்க கூட”, கண்ணன்.
கார்த்திகிடம் சொல்லிவிட்டு நாங்கள் கிளம்பி, ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு,
இருவரையும் அழைத்துக் கொண்டு, பெட்ரோலை நிரப்பி சென்றோம். அதற்குள் மணி 3.00
ஆகியிருந்தது.
என் வண்டியில், முதல் கியரில் பிக்கப் குறைவாக இருக்கும். வண்டியிலோ 5 பேர்
வேறு. சிவபாலன் என் வண்டிக்கு பழகுவதற்கு சிறிது நேரம் ஆனது.
“கணேசன், உங்க வண்டி சொன்ன பேச்ச கேக்குது. நில்லுனா நிக்குது, ஓடுனா
ஓடுது. ஓட்ரதுக்கு நல்ல கம்ஃபர்டிபிளா இருக்கு”, சிவபாலன்.
“ஓ, சூப்பர்”, நான்.
சுரேஷ் வீட்டிலிருந்து வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையை அடைந்து அங்கிருந்து
ஜி.எஸ்.டி ரோட்டை அடையலாம் என்று கண்ணன் சொன்னபடி வண்டியை ஓட்டினார் சிவபாலன். பிறகு
திண்டிவனம் அருகில் வஸந்த பவனில் சிற்றுண்டி சாப்பிட்டு, இரண்டாம் வண்டிக்காக
காத்திருந்தோம். மாலை 6.00 மணிக்கு அவர்கள் வந்தார்கள். ஏன் இவ்வளவு நேர தாமதம், எப்பொழுது
அலுவலகதிலிருந்து கிளம்பினார்கள் என்று கேட்டால் யாரும் சரியாக சொல்லவேயில்லை. கடைசியாக
லீலா மனோகரிடம் கேட்கலாம் என்று சென்றேன்.
“When did you guys start? Don’t tell lie man”, கண்ணடித்தவாறே கேட்டேன்.
“Actually we started by 3.30 from office and started by 4.00 after our
lunch”, சிறிது தயக்கத்துடன் கூறினான். இப்பொழுது உண்மை புரிந்தது. அவர்கள்,
திருப்போரூர் – செங்கல்பட்டு வழியாக இங்கே வந்தார்கள்.
கழுத்தில் ருத்ராச்சக் கொட்டை, கீழே காவி வேட்டியில் கார்த்திக்கைப்
பார்த்தவுடன் ஏனோ எனக்கு ஒரு சித்தர் போல தெரிந்தார். தான் அடிக்கடி சதுரகிரி
செல்வதாக சொல்லியிருக்கிறார். எனக்கு என்னமோ சந்தேகம். சரி அத விடுங்க.
அங்கிருந்து கிளம்பி, வழி நெடுக சுங்கச்சாவடிகளில் அழுது விட்டு,
உளுந்தூர்பேட்டை வழியாக சேலம் சென்றோம். அதுவரை நான்கு வழிப்பாதையாக இருந்த
ஜி.எஸ்.டி சாலையிலிருந்து உளுந்தூர்பேட்டையில் வலது திரும்பி சேலம் செல்லும் பாதை,
இரு வழி மற்றும் நான்கு வழிப் பாதை என மாறி மாறி வந்தது. தங்கதுரை அடிக்கடி
இப்பாதை வழியாக வந்ததால், அவர் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தார். புதிதாக
போடப்பட்ட பைபாஸ் சாலை ஓட்டுவதற்கு சிறந்தது. இப்பாதையில் ட்ராபிக் குறைவுதான்
என்றாலும் இரவில் இந்தப் பாதையில் அனுபவமிக்க ஓட்டுனர்களே 100 லிருந்து 120 kmph
செல்லமுடியும். அதை சிவபாலனும், கார்த்திக்கும் செவ்வனே செய்தனர்.
பின்னர் சாப்பிடுகிறேன், இப்போ சாப்பிடுகிறேன் என்று சொல்லி, ஒரு வழியாக
அனைவரும் இரவு உணவை சேலத்திற்கு அருகில் இருக்கும் சரவணபவனில் முடித்தோம்.
பெட்ரோல் நிரப்பிக்கொண்டு சேலத்திலிருந்து கிளம்பினோம்.
சேலத்திலிருந்து அவினாசி செல்லும் பைபாஸ் சாலை சிறிது ட்ராபிக் இருந்தாலும்
நான்கு வழிப்பாதையாதலால், ஓட்டுவதற்கு சிரமம் இல்லாமல் இருந்தது. அவினாசியிலிருந்து
பொள்ளாச்சி செல்வதற்கு இருவழிப் பாதை. அவினாசி செல்வதற்குள் இரவு 12.00 ஆகிவிட்டது.
பொள்ளாச்சி செல்லும் சாலை மிக அருமையாக செப்பனிடப் பட்டிருந்தது. சேலம்-அவினாசி
பைபாஸ் சாலையில் இருந்த அதிர்வுகள் கூட இந்த சாலையில் இல்லை. செல்லும் வழியில்
பேருக்குக் கூட ஒரு டீ கடை கூட திறந்திருக்கவில்லை. வழியில் இரண்டு மூன்று
வேகத்தடைகள் இருந்தன. ஒரு இடத்தில் அதற்கான குறியீடே இல்லை. 100 kmph வேகத்தில்
வந்த வண்டி திடீரென்று 10 kmph வேகத்திற்கு கொண்டு வருவதற்குள் வேகத்தடையில் மோதி
வண்டி சிறிது தூரம் பறந்தது. இரவு 1.00 மணிக்கு பொள்ளாச்சியை அடைந்தோம்.
தீப்தியின் உறவினர் நாங்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்த வீட்டிற்கு அழைத்து
சென்றார். நல்ல விஸ்தாரமான வீடு. ஆனால் 10 பேர் தங்க இது போதுமானதாக இல்லை.
இருந்தும் ஒர் இரவு தங்க இதைவிட சிறந்தது இல்லை.
“கார்த்திக், தீப்தி சொந்தகாரர் கிட்ட நீங்கதான் தீப்தி மேனேஜர்னு
சொன்னீங்களா?”, சிவபாலன்.
“இல்லையே, ஏன்?”, கார்த்திக்.
“உங்களோட, காஸ்ட்யூம், அதுவும் வேட்டிய லுங்கி மாதிரி மடிச்சி கட்டிகிட்டு
அவர் கிட்ட நீங்க பேசும் போது, பாக்கர்துக்கு செம காமெடியா இருந்துச்சுங்க.
மேனேஜர்னு சொல்லி இருந்தீங்களோனு நினைச்சேன்”, சிவபாலன்.
கார்த்திக் முகத்தில் அவருடைய ட்ரேட் மார்க் புன்னகை. அனைவரின் முகத்தில்
அவ்வளவு சிரிப்பு. J
திருமண மண்டபம் செல்லும் வழி தெரியாமல் பொள்ளாச்சி முழுதும் ரோடு ரோடாக
காரில் அலைந்து திரிந்து செல்வதற்குள் தாலி கட்டி முடித்துவிட்டார்கள். சரி வந்த
வேலையைப் பார்ப்போம் என்று அனைவரும் சாப்பிட்டு விட்டு தீப்திக்கு அன்பளிப்பைக்
கொடுத்து கிளம்பினோம்.
வால்பாறை அனுபவங்கள் அடுத்த பதிவில்...
No comments:
Post a Comment