ரோம் நடைப் பயணம்
என் வாழ்வின் முக்கிய நிகழ்வுகளுக்கு நேரம் ஒதுக்கவேண்டியிருந்ததால் சென்ற வாரம் இடுகை எழுதமுடியவில்லை. எதிர்பார்ப்புகளுக்கு நன்றி.
மே 1, 2009 நாங்கள் ரோமில் நடைப் பயணம் செய்ய ஆரம்பித்தோம். காலையில் பிரிஸில்லா உணவகத்தில் உணவருந்திவிட்டுத் தொடங்கிய எங்கள் பயணம் மறுநாள் இரவு வரைத் தொடர்ந்து கொண்டே இருந்தது. கால்கள் வலித்தாலும் கண்களுக்கு வலிக்காததால் கால் வலி அவ்வளவாகத் தெரியவில்லை. இந்தப் பயணத்திற்கு தலைமை தாங்கி எங்களை வழி நடத்தியவர் ரோஹன். கையில் ரோமின் வரைபடத்தை வைத்துக் கொண்டு (அந்த வரைபடம் இன்னமும் என்னிடம் இருக்கிறது) எங்கெங்கு செல்லலாம் என்று எங்களுக்குச் சொல்லி அதன்படியே அனைவரும் அவரின் பின்னால் சென்றோம். அவருடன் உதவி செய்ய அவ்வப்போது நான் அவருக்கு துணையாகச் செல்வேன். மற்றவர்கள் அனைவரும் ரோஹன் எங்கு செல்வாரோ அங்கே செல்வதெனத் தீர்மானித்திருந்ததாகத் தெரிந்தது. ரோமைப் பற்றி அவ்வளவாகத் தகவல் சேகரிக்காததால் சிறிய அறிமுகத்துடன் ரோமில் பயணத்தைத் தொடர்வோம்.
ரோம், பழமை வாய்ந்த, கட்டிடக் கலையில் தேர்ச்சி பெற்றிருந்த பொறியாளர்களால் நேர்த்தியாகக் கட்டப்பட்டிருந்த கட்டிடங்கள் நிறைந்த, கண்களுக்கு அடங்காத காட்சிகளை உள்ளடக்கிய அழகிய நகரம். நாங்கள் சென்றிருந்த காலம் வேனிற்காலத் தொடக்கமாதலால், காலநிலை அதிகக் குளிர் இல்லாமல் இருந்தது. அங்கு போக்குவரத்து விதிகளை மக்கள் மீறுவதைப் பார்க்கும்போது சென்னை நினைவிற்கு வந்தது. ஏனெனில் ஃபின்லாந்தில் இது மாதிரி போக்குவரத்து விதிகளை மக்கள் மீறுவதே இல்லை. மேலும் அது ஒரு நீண்ட வாரயிறுதியாதலால் ரோமில் மக்கள் கூட்டம் அலை மோதியது. அவ்வளவு மக்களை நான் கடைசியாகச் சென்னையில் பார்த்ததாக நினைவு. எங்கு சென்றாலும் கூட்டம்.
பிரிஸில்லா விடுதியிலிருந்து கால் நடைப் பயணமாக ரோஹனைப் பின் தொடர ஆரம்பித்தோம். தாரிணி எங்களுடன் வரவில்லை. அவள் தன் தோழியுடன் வெனிஸ் நகரத்திற்கு சென்றுவிட்டாள். முதலில் நாங்கள் செல்ல நினைத்தது ”ஸ்பேனிஷ் ஸ்டெப்ஸ்”. அங்கு கவரும் அம்சம் எதுவும் எனக்குத் தெரிந்து இல்லை. சில படிகள், பூஞ்செடிகள் மற்றும் சில செயற்கை நீர் ஊற்றுகளைத் தவிர எதையும் என்னைக் கவரவில்லை. ஆனால் அங்கு குழுமியிருந்த மக்கள் கூட்டமோ அங்கு ஏதோ இருக்கும் என்று பீடிகையை உருவாக்கியிருந்தது. ஒரே ஒரு கவரக்கூடிய விஷயம், ஆட்களை எதிரே அமரவைத்து, அரை மணி நேரத்தில் பென்சிலால் படம் வரைந்து கொடுப்பது. எனக்கு ஆசையாக இருந்தது அது போல் என்னை படம் வரைந்துகொள்ள. அது மறுநாளே நிறைவேறிவிட்டது. பின்னர் அருகில் இருந்த ஒரு சர்ச் க்கு சென்றோம். அதில் அழகாக ஓவியங்கள் தீட்டப் பட்டிருந்தன. அங்கிருந்து கிளம்பி நாங்கள் செல்லவிருந்த இடம் ”ட்ரிவியா ஃபவுண்டெயின்”. எனக்கு பெயர் அவ்வளவாக ஞாபகம் இல்லை. அதனால் தவறிழைத்தால் மன்னிக்கவும். ரோஹனின் உதவியுடன் அவ்விடத்தை நோக்கிப் பயணம் செய்தோம்.
ஃபோட்டோ எடுப்பதில் பிரியரான பாலா, ஏதாவது காட்சியைப் பார்த்தால் அதை பல கோணங்களில் க்ளிக் செய்ய அங்கேயே நின்று விடுவார். அவ்வப்போது அன்னா தான், எல்லாரையும் கணக்கெடுத்துக் கொண்டே ”பாலா மிஸ்ஸிங்” என்று அவரை எங்களுடன் சேர்த்து வைப்பாள். இது நடக்கவில்லையென்றால், நாங்கள் ரோமைச் சுற்றுவதை விட்டு ஆட்களைத் தேடுவதிலேயே நேரத்தைச் செலவிட்டிருப்போம். பெரும்பாண்மையான நேரங்களில் நாங்கள் குழுவாக இருப்போம். ஆனால் ரோஹன் மட்டும் தனியே ஏதாவது சந்து பொந்தில் போய் அவரைத் தேடும்படி விட்டு விடுவார்.
நான் எதிர்பார்த்தபடியே அங்கு மக்கள் கூட்டம் இருந்தது. ட்ரிவியா ஃபவுண்ட்யினை நிறைய திரைப் படங்களில் பார்த்திருக்கலாம். எனக்கு மிகவும் பிடித்த இடம் இது என்றே சொல்லலாம். இதுவும் செயற்கை நீரூற்று தான். ஆனால் அங்கிருந்த சிலைகளும், சிலையினூடே வந்த தண்ணீரும் பார்க்கப் பரவசமாக இருந்தது. ஆனால் எல்லா சிலைகளுக்கும் மஞ்சள் நிறத்தில் வண்ணம் பூசியிருந்தது ஏனோ புரியவில்லை. சிலைகள் மட்டுமல்ல, அங்கிருந்த பெரும்பாலான கட்டிடங்களுக்கும் அதே நிறத்தில் தான் வண்ணம் பூசியிருந்தார்கள். அங்கிருந்த ஒரு சிலையில் ஒரு மன்னன் இருப்பது போலவும், அவரது ஏவலர்கள் அருகில் இருப்பது போலவும் இருந்தது. குதிரைகள் பூட்டப் பட்ட ரதம் போல் இன்னொரு சிலையும் இருந்தது. அச்சிலைகளைப் பார்க்கும்போது ஏதேதோ கற்பனைகள் இறக்கை கட்டிக் கொண்டு பறக்கும். இது தான் சிலை சொல்லும் கதைகளோ என்று எண்ணத் தோன்றுகிறது.
அதன் பிறகு எங்களுக்குப் பசிக்கத் தொடங்கியது. மெக் டொனால்ட்ஸ் என்னும் உலகப் புகழ் பெற்ற உணவகத்தைத் தேட ஆரம்பித்தோம். அதில் தான் எங்களுக்குப் பழக்கப்பட்ட உணவு கிடைக்கும் என்று நினைத்ததால் அப்படித் தேடினோம். அது கண்களுக்கு அகப்படாமல் போனது, ஆனால் ஒரு பிரம்மாண்டமான கட்டிடம் எங்கள் கண்களுக்குத் தெரிந்தது. அது என்ன என்று எனக்குத் தெரியவில்லை. அது அரண்மணையாகத் தான் இருக்க வேண்டும் என்று ஊகித்தேன். வெகு தொலைவிலிருந்தே அது இரு கண்களுக்கும் அடங்காமல் மிகப் பிரமாண்டமாகக் காட்சி அளித்தது. அருகே நெருங்க நெருங்க நாங்கள் சிறு புள்ளிகளாக மாறிப்போனொம். ரோமில் எந்தக் கட்டிடத்தைப் பார்த்தாலும் பிரமிப்படைந்து போய்விடுவேன். அதன் வரலாறு என்ன, அதன் தோற்றம் எப்படிப் பட்டது என்பது போன்ற எனது வழக்கமான கேள்விகளைப் பற்றி நினைக்கவே தோன்றவில்லை.
அந்தக் கட்டிடத்தை ஒரு பெரும் மக்கள் கூட்டம் ஆக்ரமித்திருந்தது. அதனுள் செல்வதற்கே ஒரு பெரிய வரிசையில் காத்திருக்க வேண்டியிருந்தது. அந்தப் பெருங் கூட்டத்தில் எங்கள் சிறு குழுவும் சிதறிப் பின்னர் சேர்ந்துகொள்வோம். அந்த அரண்மனைக்குள்ளே ஒரு பெரிய அருங்காட்சியகம் அமைத்திருந்தார்கள். அதனுள் வைக்கப்பட்டிருந்த ஒரு பெரிய உடை வாள் என் கவனத்தைக் கவர்ந்தது. ஒரு சிறிய பீரங்கியும் இருந்தது. அந்த அருங்காட்சியகதினுள் நாங்கள் நுழைந்தவுடன் அன்னா வைக் காணவில்லை. அந்த அரண்மனையின் மேல் மாடியில் நாங்கள் சுற்றிப் பார்த்தும் கிடைக்கவில்லை. பின்னர் திடீரென்று அவள் என் கண்ணில் பட்டாள்.
“பாரதி, அதோ கீழ கைல ஒரு கோக் பாட்டில் வச்சிக்கிட்டு நின்னுகிட்டு இருக்கா பாருங்க”, என்றேன்.
உடனே மைதிலி அவளை கூப்பிட்டுப் பார்த்தாள். அவள் காதில் விழவேயில்லை. உடனே பாரதி,
“ஹே, அவ டிஃப்ரண்ட்டா இருக்கா பாருங்க, எதுக்கும் பயப்படாம, தொலைஞ்சி போய்டுவோம்னு கூட நினைக்காம ஒரு ஜாலியான வாக், குட்”, என்றார்.
அதன் பின்னர் அவளைக் கீழே கண்ட பின்னர் அவள் கூறியது,
”Hey, I saw you guys were going inside that Museum. I thought of having some roam around here in downstairs"
எல்லாருக்கும் சற்றே கோபமாக இருந்தது அவள் அப்படிச் செய்தது. பின்னர் பசி எங்களை வாட்டியது. உடனே மறுபடியும் ஏதாவது ஸேண்ட்விச் கிடைக்குமா என்று தேடிக் கொண்டே சென்றோம். வழியில் ஸேண்ட்விச் கடை ஒன்று இருந்தது. அந்த கடைக்காரர் பார்ப்பதற்கு இந்தியன் போலவே இருந்தார். ஆர்வம் மிகுதியால் ”நீங்கள் இந்தியரா” என்றேன். ”நான் பங்ளாதேஷி” என்றார். அங்கே உட்கார இடம் கிடைத்ததால் அனைவரும் ஸேண்ட்விச் சாப்பிட்டு விட்டு அருகே இருந்த ஒரு சர்ச் க்கு சென்றோம். அங்கேயும் ஏகக் கூட்டம். அந்த சர்ச் ஒரு உருளையைப் போல் இருந்தது. அதன் மேல் பாகம் திறந்து இருந்தது. அதன் வழியாக சூரிய வெளிச்சம் வந்து ஆலயத்தினுள் பரவிக் கிடந்தது. பெருங்கூட்டத்தினால், உள்ளே அந்த ஆலயத்தைச் சுற்றி வருவதற்கே பெரும் பாடு ஆகிவிட்டது. ஆங்காங்கே ஒரு குழு குழுமி, அந்த குழுவிற்கு ஒரு ஆள் ஏதோ உரைத்துக் கொண்டிருப்பதைக் கண்டேன்.
கொலோஸியம்
அங்கிருந்து எங்கள் நடைப் பயணம், ரோமப் பேரரசின் வீர விளையாட்டுத் தளமான கொலோஸியம் நோக்கி இருந்தது. செல்லும் வழியில் மறுபடியும் அந்த அரண்மனையைத் தாண்டிச் சென்றோம். தூரத்திலிருந்தே கொலோஸியத்தின் அழகு நம்மைக் கவர்ந்தது. நெருங்க நெருங்க அதன் பிரம்மாண்டம் தெரிய ஆரம்பித்தது. அது கேமிராவினுள் அடங்கும் தூரத்தில் நாங்கள் அதை பேக்ரவுண்டாக வைத்து எங்களின் புகைப்படங்களை எடுத்துத் தள்ளினோம். அங்கேயும் எதிர்பார்தபடியே ஒரு பெருங் கூட்டம் எங்களை வரவேற்றது. உள்ளே செல்வதற்கென ஒரு நீண்ட வரிசை இருந்தது. உள்ளே சென்றதும் கூட்டம் அவ்வளவாகத் தெரியவில்லை. கொலோஸியத்தின் பிரமாண்டத்திற்கு அருகே அந்தக் கூட்டம் என்ன செய்யும். கொலோஸியத்தினுள்ளே சிதிலமடைந்த படிக்கட்டுகளும், அதன் நடுவே சிதிலமடைந்த சுவர்களும் இருந்தன. வெளியே இருந்து காணும் அழகு உள்ளே இல்லை. அங்கேயே எங்களின் மாலைப் பொழுது கழிந்தது.
பிரிஸில்லா நோக்கிப் பயணம்
அங்கிருந்து நாங்கள் விடுதியை நோக்கிப் பயணம் செய்ய ஆயத்தமானோம். அருகே ஒரு பூங்கா இருந்தது. அங்கேயும் கூட்டம். அதன் வழியே நடந்து சென்று பின்னர் இரவு உணவை எங்காவது வழியில் சாப்பிட்டு விடுதியை நோக்கிச் செல்வோம் என்று தீர்மானித்தோம். நாள் முழுதும் நடந்து கொண்டிருந்ததால், கால்கள் வலிக்கவே செய்தன. அதை நான் பெரிதாகக் காட்டிக் கொள்ளவில்லை. ஆனால் பாரதி,
“அய்யோ, யாரச்சும் என்னை உருட்டி விடுங்க, என்னால நடக்க முடியல”, என்றார்.
இது தான் சமயம் என்று மைதிலி பாரதியை விடைக்க (கிண்டல் என்ற வார்தைக்கு மைதிலியின் அகராதிச் சொல்) ஆரம்பித்தாள்.
“கணேஷ், ரோம் ட்ரிப் கிளம்புரப்போ, ஒரே கண்டிஷன் போட்டாங்க, நாங்க பசங்க எவ்ளோ தூரம்னாலும் நடப்போம். அப்ரம் கை வலிக்குது, கால் வலிக்குதுனு லாம் சொல்லக் கூடாதுனு என்னவா பில்டப் பண்ணினாங்க தெரியுமா?, இப்ப என்னடானா உருட்டி விட சொல்றார்”, என்று கலகல வென சிரித்துக் கொண்டே சொன்னாள்.
பாரதி வழக்கமான புன்னகையுடன் வந்தார்.
எந்த உணவகத்தில் சாப்பிடுவது என்று பெரிய கேள்வியாய் எழுந்தது. பிஸ்ஸா சாப்பிடுவதா, ஏதாவது இந்தியன் உணவத்தைத் தேடுவதா என்று வழி நெடுக பேசிக்கொண்டே வந்தோம். கடைசியாக ஒரு உணவகத்தை அடைந்தோம். அது இந்தியன் உணவகம் மாதிரியும் தெரியவில்லை, ஐரோப்பிய உணவகமாகவும் தெரியவில்லை. அன்னா மட்டும் தனியே வேக வேகமாக நடந்து சென்று கொண்டிருந்ததால் அவளைக் கூப்பிட்டு நிறுத்த இரண்டு பேர் செல்ல வேண்டி இருந்தது. சாப்பிட்டுக் கிளம்பும் போது இருட்டி இருந்தது. ரோம் இரவில் அழகாய் இருந்தது. அந்த அழகை ரசித்துக் கொண்டே ஒரு செயற்கை நீரூற்று இருக்குமிடம் அடைந்தோம். அங்கே இளைபாறினோம். அங்கேயும் நானும் மைதிலியும் சும்மா இல்லாமல் புகைப் படங்களை எடுத்துக் கொண்டிருந்தோம். பின்னர் ரோஹனின் பின்னாலேயே அனைவரும் சென்றோம். பிரிஸில்லா விடுதி கண்ணுக்குத் தெரிந்தது.
நாங்கள் பிரிஸில்லாவில் இரண்டு நாட்களுக்கு முன்பதிவு செய்திருந்தோம். ஆனால் தாரிணி, மைதிலி மற்றும் அன்னா தங்கியிருந்த அறை ஒரு நாள் மட்டுமே முன்பதிவு செய்ய முடிந்ததால், அருகே இன்னொரு விடுதியில் இரண்டாம் நாள் தங்க முன்பதிவு செய்திருந்தார்கள். மைதிலியும், அன்னாவும் இரவு நேரத்தில் அந்த விடுதியை தேடுவது கடினம் என்று எண்ணி ரோஹனும் பாரதியும் அவர்களுடன் துணைக்குச் சென்று வந்தனர். நாள் முழுதும் நடந்த களைப்பினால் நானும் பாலாவும் நன்றாக குறட்டை விட்டுத் தூங்கினோம் பிரிஸில்லாவில்.
வாடிகன் நகரம்
மே 2, 2009 எங்களின் ரோம் பயணம் தொடர்ந்தது. முதல் நாளில் விட்டுப்போன இடத்தையெல்லாம் அன்று காண முடிவு செய்தோம். முக்கியமாக வாடிகன் நகரம். பிரிஸில்லாவில் அனைவரும் ஒருங்கிணைந்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றோம். மறுபடியும் அதே ஸ்பேனிஷ் ஸ்டெப்ஸ் க்கு வந்து சேர்ந்தோம். முந்தைய நாள் என்னை கவர்ந்திழுத்த அதே பென்சில் ஓவியக் கலைஞர்களிடம் இன்று என்னை வரைய ஒப்புக்கொண்டேன். என்னைப் போலவே பாரதியும். ஆனால் வரைய அவர்கள் கேட்ட தொகை சற்றே அதிகம். அரை மணி நேரம் என்று சொல்லி பின்னர் ஒரு மணி நேரம் ஆகிவிட்டது. வரையும் போது ரோஹனின் கிண்டல் புன்னகைக்க வைத்தது. என்னுடைய முகம் ஓரளவிற்கு நன்றாயிருந்தது. பாரதியின் முகம் சற்றே திரிந்து இருந்தது.
“ஹேய், இது யார்து?”, என்றார் பாரதி அவருடைய ஓவியத்தைப் பார்த்து.
“இருக்கர்து தானே வரும்”, என்றனர் மற்றவர்கள். ரோஹனின் கிண்டல் உச்சமாய் இருந்தது. கடைசியில் அந்த ஓவியத்தை நாங்கள் திரும்பி வரும் விமானத்தில் தவற விட்டோம் என்பது வேறு விஷயம்.
அங்கிருந்து எங்கள் பயணம் வாடிகன் நகரத்தை நோக்கி இருந்தது. வழியில் ஒரு பெரிய முற்றம் போன்ற ஒரு இடத்திற்கு அருகே ரோஹனைத் தவற விட்டோம். எங்கள் கமேண்டோ படைத் தலைவனைக் காணவில்லையென்றால் எங்களின் நிலைமையை யோசித்துப் பாருங்கள். அருகே இருந்த ஒரு உயரமான இடத்திற்குச் சென்று அங்கிருந்து ரோஹன் கீழே உலாவுவதைப் பார்த்தோம். ரோஹனைப் பார்த்த மகிழ்ச்சியில் உடனே ஒருங்கிணைந்தோம். அங்கிருந்து வாடிகன் நகரம் அடைவதற்குள் மதிய வேளை நெருங்கியது. வாடிகன் நகர கோட்டை மதில் சுவரின் அருகே இருக்கும் ஒரு திறந்தவெளி உணவகத்தில் உலகப் புகழ் பெற்ற இத்தாலி பிஸ்ஸா சாப்பிட்டோம். ஏன் அது அவ்வளவு பிரபலம் என்று அதை சாப்பிட்டவுடன் தெரிந்துகொண்டேன்.
பின்னர் வாடிகன் நகரத்திற்கு உள்ளே செல்ல ஒரு பெரும் கூட்டம் இருந்தது. இது முந்தய நாள் பார்ததைவிட இரு மடங்கு கூட்டம். அங்கே வரிசையில் காத்துக்கொண்டிருந்தோம். திடீரென்று வானம் இருட்டத் தொடங்கியது. சிறிது நேரத்திற்கெல்லாம் பெரும் மழை பெய்தது. வரிசையில் நின்றிருந்தவர்கள் எல்லாரும் தொப்பையாக நனைய வேண்டியதாயிற்று. சிறிது நேரம் கழித்து சட்டென மழை நின்றது. வானம் வெளுத்தும் விட்டது. ஏதோ அசரீரி போல மழை வந்ததும் தெரியவில்லை போனதும் தெரியவில்லை. மழை பெய்ததற்கான அடையாளமும் தெரியவில்லை. அங்கிருந்த மனிதர்கள் மட்டும் சொட்ட சொட்ட நனைந்திருந்தனர். மழை வந்ததும் அனைவரும் என்ன செய்வதென்றே தெரியாமல் இருந்தனர். அதை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட அங்கிருந்த வியாபாரிகள் குடை வியாபாரம் செய்தனர். அப்படி வாங்கியவர்களில் பாரதியும் ஒருவர். குடை வாங்கி ஒரு நிமிடத்தில் மழை நின்றதும்,
“சே, காசு குடுத்து குடை வாங்கினதுக்கு இனொரு மணி நேரம் மழை பெய்ஞ்சிருக்கலாம்”, என்று புலம்பினார் பாரதி.
வாடிகன் நகரதினுள் செல்ல சில பாதுகாப்பு சோதனைகள் செய்யப்பட்டன. உள்ளே பல வகையான அருங்காட்சியகங்கள் இருந்தன. முதலில் பார்த்தது ஓவிய அருங்காட்சியகம். எவ்வளவோ ஓவியங்கள் இருந்தாலும், ஆதாம் ஏவாள் வைத்து காட்டில் மிருக்களுடன் இருந்த ஒரு ஓவியம் என்னை மிகவும் ஈர்த்தது. ஒவ்வொரு ஓவியத்தையும் பார்த்துக்கொண்டே இருக்கலாம். எல்லாம் ஏசு கிரிஸ்து பற்றியும் அவரது போதனைகள் கூறுவது போலவும் இருந்தன. அங்கிருந்து ஒரு சிலை அருங்காட்சியகத்திற்கு சென்றோம். எல்லாவற்றையும் சுற்றிப் பார்ப்பதற்குள் நேரம் ஆகி விட்டிருந்தது. அவசர அவசரமாக சில அருங்காட்சியகங்களையும் பார்த்தும் வந்தோம். மைதிலி மட்டும் இன்னும் சிலவற்றைப் பார்த்து விட்டு வருவதாகக் கூறினாள். பின்னர் வெளியே ஒரு புல்வெளி இருக்கும் இடத்திற்கு மற்றவர்கள் வந்து சேர்ந்தோம். அதற்குள் அருங்காட்சியகம் மூடும் நேரம் வந்துவிட்டதாகக் அங்கிருந்த காவலாளர்கள் கூறினர். உடனே நாங்கள் மைதிலியை அழைக்க உள்ளே செல்ல முயன்றோம். அனுமதிக்கவில்லை. அருங்காட்சியகத்தின் இன்னொரு வாயிலின் வழியாக உங்கள் நண்பரைக் காணலாம் என்று கூறினர். மைதிலியைக் காணவில்லை என்று அனைவரும் பரபரப்பானோம். அரை மணி நேரம் கழித்து மைதிலியைப் பார்த்ததும் எல்லார் முகத்திலும் மகிழ்ச்சி.
அங்கிருந்து செயிண்ட் பீட்டர்ஸ் தேவாலயத்திற்கு சென்றோம். அந்த தேவாலயத்தின் முற்றத்தைத் தொலைக்காட்சிகளில் போப் முன்னிலையில் மக்கள் கூட்டம் முழுதும் நிரம்பப் பார்த்திருக்கிறேன். அதை நான் நேரில் காண்கிறேன் என்று மனதில் ஒரு பூரிப்பு ஏற்பட்டது. அங்கும் ஏகக் கூட்டம். எல்லாவற்றையும் சுற்றிப் பார்த்துப் பின்னர் அங்கிருந்து ஒரு அரண்மனைக்குச் சென்றோம். ஆனால் நாங்கள் சென்றடைவதற்குள் அதை மூடிவிட்டனர். அதைப் பார்க்காமல் போகிறோமே என்று எல்லாருக்கும் ஒரு ஏமாற்றம் மனதில் இருந்திருக்கும். அதன் பின்னர் அந்த அரணமனைக்கு வெளியே நாங்கள் அமர்ந்து அரட்டை அடிக்கத் தொடங்கினோம். இருட்டத் தொடங்கியவுடன் எங்கள் நடைப் பயணத்தைத் தொடர்ந்தோம். எங்கள் பைகளை பிரிஸில்லாவில் வைத்திருந்ததாலும் அங்கிருந்து விமானநிலையம் செல்ல வண்டியை முன்பதிவு செய்திருந்ததாலும் பிரிஸில்லாவை நோக்கி நடக்கத் தொடங்கினோம். இம்முறை மெக்டொனால்ட்ஸ் உணவகத்தைக் கண்டுபிடித்துவிட்டோம். ஆனால் அசைவ உணவே அங்கு இருக்குமாதலால் மைதிலியும் ரோஹனும் அருகில் இருந்த ஒரு சைவ உணவகத்திற்குச் சென்று சாப்பிட்டு வந்தனர்.
ஃபின்லாந்துக்கு திரும்புதல்
பிரிஸில்லாவிலிருந்து பிரியாவிடை பெற்றுக் கொண்டு சியாம்பினோ விமான நிலையம் அடைந்தோம். அப்போது தாரிணி வெனிஸ் நகரத்தைச் சுற்றிவிட்டு அதே நேரத்தில் வந்தடைந்தாள். நாங்கள் திரும்பி வரும்போது ஹெல்சின்கிக்கு நேரடியாக விமானம் பதிவு செய்யவில்லை. ஃபின்லாந்தில் தேம்ப்பரே என்னும் இன்னொரு விமான நிலையத்திற்கு பயணச் சீட்டு பதிவு செய்திருந்தோம். தேம்ப்பரே செல்லும் விமானம் மறுநாள் காலை 6 மணிக்கு தான். எனவே ரோமில் விமான நிலையத்தின் வரவேற்கும் பகுதியில் இரவு முழுவதும் காத்திருந்தோம். சிறிது நேர அரட்டைக்குப் பின்னர் தோழிகள் தூங்க ஆரம்பித்தனர். அரட்டை ஆரம்பிக்கும் முன்னரே ரோஹனும், சிறிது அரட்டைக்குப் பின்னர் பாரதியும் தூங்க ஆரம்பித்திருந்தனர். பாலா காவலாளி போல் இரவு முழுதும் தூங்கவே இல்லை. நான் கோழித் தூக்கம் தூங்கிக் கொண்டு, அவ்வப்போது விழித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். காலை விமானத்தில் ஏறியதும் எனக்கு நிம்மதி ஏற்பட்டது. எங்கள் ரோம் பயணம் வெற்றிகரமாக எவ்வித இடர்களும் இல்லாமல் நடந்தேறியது.
தேம்பரே விமான நிலையத்தில் ஒரு அமெரிக்கப் போர் விமானம் இருந்ததை நான் கவனித்தேன். அங்கே ஒரு ஃபின்னிஷ் ராணுவ அதிகாரி நின்று கொண்டு எங்களை வழிமறித்தார். அவர் பார்ப்பதற்கு இளமையாகவும் உயரமாகவும் கம்பீரமாகவும் இருந்தார். கனிவாக எங்களை அணுகி எங்களை விசாரித்தார். மைதிலி இதற்குள் புதிய பாஸ்போர்ட் பெற்றிருந்தாள். அதனால் அவள் இரண்டு பாஸ்போர்ட்களைக் காண்பித்தாள். ரோஹன் ஏதோ உளர ஆரம்பித்தான். பாலா உடனே செம்மையாகப் பேசி முடித்தார். அங்கிருந்து ஒரு பேருந்து தேம்ப்பரே ரயில் நிலையத்திற்கு செல்லத் தயாராக இருந்தது. தேம்பரேவிலிருந்து ஹெல்சின்கி வரை பயணச்சீட்டு வாங்கி ரயிலில் பயணம் செய்ய ஆரம்பித்தோம். அது சாதாரணக் கட்டண வசதியுள்ள பெட்டி. அதுவே பார்ப்பதற்கு ஆடம்பரமாக இருந்தது. அதிலே ஒரு உணவகமும் இருந்தது. மதிய உணவை அங்கே சாப்பிட்டோம். ரயில் போகும் அசைவே தெரியாமல் இருந்தது. இரண்டு மணி நேரப் பயணத்திற்குப் பின்னர் ஹெல்சின்கியை வந்தடைந்தோம்.
தங்கை பிறந்தாள்
ரோம் பயணக் கூத்து சொல்வதில் எனக்கு தங்கை பிறந்ததைக் கூற மறந்தே போனேன். மறுபிறப்பு என்றே கூறலாம். ரோம் பயணம் செய்வதற்கு ஒரு வாரத்திற்கு முன்னால் ஒரு நாளில் மைதிலியையும் தாரிணியையும் ஸ்டேயட்டில் அவர்களின் அறையில் சந்திக்க நேர்ந்தது. சில விஷயங்களை நாம் நம் உள் மனதில் பதித்திருப்போம். அதை சம்பந்தப்பட்டவர்களே கேள்விகளாய், முறையீடாய்க் கேட்கும் போது அப்படியே நம் மனது பதில் பேச்சு கேளாமல் ஏற்றுக்கொள்கிறது. அப்படி என் மனதில் புதைந்திருந்த உறவு முறை பற்றி தாரிணி கேள்வியாய், முறையீடாய் கேட்டபோது கேள்வி ஏதும் கேட்காமல் ஏற்றுக்கொண்டேன் தங்கையாய். சிறிது வருத்தப்பட்டேன். இதை ஏன் அவள் இவ்வளவு தாமதமாகக் கேட்டாள் என்பதே. பிறகு என்னை நானே கடிந்து கொண்டேன். எனக்கு எங்கே போனது புத்தி என்று. அவள் பின்வருமாறு கூறினாள்,
“கணேசன், உங்களை அண்ணானு நான் கூப்டா, நீங்க தப்பா நினச்சிக்க மாட்டீங்களே”, என்றாள் சிறு குழந்தையைப் போல.
“ஸ்வேதா கிட்ட வேனா கேட்டு பாருங்க, உங்கள இந்தியால முதல்ல பாக்கரச்ச அண்ணானு கூப்பிடனும்னு தோனுச்சுனு அவகிட்ட சொல்லி இருந்தேன். ஆனா நீங்க தப்பா நினைச்சிருவீங்களோனு நினைச்சேன்”, என்றாள் உணர்ச்சி வசப்பட்டவளாய்.
“எனக்கு அண்ணாவே இல்ல தெரியுமா?”, என்று கெஞ்சலாய் பேசி உதடு பிதுக்கியதும் என் தங்கையினை அப்படியே முகபாவத்தில் கொண்டு வந்தவளை இவள் தான் என் தங்கை என்று முடிவு கட்டிவிட்டேன்.
அண்ணா என்று காது முழுக்கக் கேட்டுக் கொண்டிருந்தவனுக்கு திடீரென்று அப்படி கேட்பது நின்று போனதால், இப்போது மறுபிறவியாய் அவதரித்திருக்கும் தங்கையின் மூலமாக அதைக் கேட்க ஆசையும் திருப்தியும் உண்டாகிறது.
சரி செண்டிமெண்ட்லாம் போதும். உங்களை இது கூறி இனிமேலும் பொறுமையிழக்கச்செய்ய விரும்பவில்லை.
சுயொமென்லின்னா
சுயொமென்லின்னாவைப் பற்றி அடுத்த இடுகையில்...
தொடரும்...
No comments:
Post a Comment