Sunday, December 27, 2009

எனது பின்லாந்து செலவு - தொடர்ச்சி

சுயோமென்லின்னா (Suomenlinna)

ஃபின்லாந்து நாடு வேனிற் காலத்தில் பச்சைப் பசேலென்றிருக்கும் ஒரு நாடு. இங்கு சுற்றிப் பார்க்க வேண்டுமென்றால் இயற்கையை ரசிக்கக் கூடியவராய் இருக்க வேண்டும். செயற்கையாய்ப் பார்த்துப் பழகிப் போன நம்மவர்களுக்கு இது கொஞ்சம் கூடப் பிடிக்காது. வெறும் காலில் கடற்கரை மணலில் நடந்து செல்லும் போது மணல் காலின் உட்குழிகளை தொட்டுச் சென்று கடற்கரைக் காற்று மேனியில் பட்டு ஏற்படும் சில்லிடும் உணர்வு, காலைப் பனித்துளிகள் இன்னமும் மீதமிருக்கும் புல்வெளிதனில் நடந்து கடக்கும் ஒரு ஆனந்தக் களிப்பு, இருமருங்கிலும் சில்லென்ற காற்றுடன் வயல்வெளி இருக்க இடையே இருக்கும் வரப்பில் நடந்து செல்லும் போது திடீரென்று குறுக்கிடும் தவளையினால் ஏற்படும் உற்சாகம், இதையெல்லாம் ரசிக்கத் தெரிந்தவர்களுக்கு ஃபின்லாந்து நாட்டின் வேனிற் பருவத்தை வரவேற்கும் ஆர்வம் இருப்பதில் தவறேதும் இல்லை. ஆண்டின் பெரும் பகுதி பனியால் சூழப் பட்ட ஒரு நாட்டில் வேனிற் காலம் தலைகீழாக பசுமையாக மாறுவது ஒரு வியப்புதான். ஆனால் இது மேலை நாட்டிற்கே உரிய காலநிலையாதலால் இது ஃபின்லாந்துக்கு மட்டுமே பொருந்தும் என்று கூறிவிட முடியாது. இங்குள்ள சுயொமென்லின்னா இயற்கையும் செயற்கையும் கலந்த பூங்காத்தீவு என்றே சொல்லலாம். Suomenlinna வை Suomen + Linna என்று பிரித்துப் படிக்கலாம். Suomen என்றால் ஃபின்னிஷ் என்று பொருள். Linna என்றால் கோட்டை என்று பொருள். அப்படியே மொழி பெயர்த்தால் ஃபின்னிஷ் கோட்டை என்று கூறலாம். பரபரப்பான ஹெல்சின்கியிலிருந்து 20 நிமிட படகுப் பயணம் செய்தால் இந்த அமைதியான தீவை அடைந்து விடலாம். ஹெல்சின்கியின் மார்கெட் ஸ்கொயரிலிருந்து 10 நிமிடத்திற்கு ஒரு படகு சுயோமென்லின்னா சென்று திரும்பும். இதில் பயணிப்பதற்கு முன்னர் இந்த தீவின் வரலாற்றைப் பார்க்கலாம்.

சுயோமென்லின்னா வரலாறு

ஃபின்லாந்து ஸ்வீடன் வசம் இருந்த போது அப்போதைய மன்னர் ஃபிரடெரிக் I, கி.பி. 1748 ல் இந்தக் கோட்டையைக் கட்ட அனுமதி அளித்தார். முதலில் இது ஸ்வாபோர்க் என்று ஸ்வீடிஷ் மொழியில் அழைக்கப்பட்டது. 18ம் நூற்றாண்டில் ருஷ்யாவிற்கும், ஸ்வீடனுக்கும் உள்ள எல்லை 100 கிலோமீட்டர் தூரத்திற்கு சுருங்கியபோது, இங்கே ஒரு கோட்டை இருப்பது அவசியமாகக் கருதப்பட்டதால் இங்கு கோட்டை கட்டும் பணி தொடங்கியது. ஹெல்சின்கியின் கடல் வழியை பாதுகாக்கவும், ஸ்வீடனிலிருந்து வரும் துருப்புகளுக்கு ஒரு ஒதுங்கும் இடமாகவும் சுயோமென்லின்னா இருந்தது. இந்தக் கோட்டையைக் கட்டும் ஃபின்னிஷ் ஆசாமிகளுக்கு ஸ்வாபோர்க் என்ற ஸ்வீடிஷ் வார்தை கடினமாக இருந்தபடியால் இதை அவர்கள் வையபோரி (Viapori) என்று அழைத்தனர். கி.பி. 1750ல் வையபோரி ஸ்வீடனின் மிகப் பெரிய கட்டுமான வேலைகளில் ஒன்றாக இருந்தது. கட்டுமான வேலைகள் தூரிதமாக நடந்தது. பின்னர் இது துர்க்கு விற்கு அடுத்து ஃபின்லாந்தின் இரண்டாவது பெரிய நகரமாக மாறியது. ஸ்வீடன் மற்றும் ருஷ்ய ஆளுகையில் இங்கு வசித்த அதிகாரிகள் இதமான சூழலில் பரபரப்பான சமூக வாழ்கையை அனுபவித்தனர். வையப்போரி ருஷ்யாவின் அச்சுறுத்துதலுக்கே கட்டப் பட்டது என்றாலும், இது இரண்டே ராணுவ நடவடிகைகளை கண்டது. கி.பி. 1808 ம் ஆண்டு வையப்போரி ருஷ்யாவிடம் சரணாகதி அடைந்த போது ஒரு முறையும், கி.பி. 1853 ம் ஆண்டு க்ரைமீன் போர் (Crimean War) நடந்த போது ஃபிரெஞ்ச் மற்றும் பிரிட்டீஷ் படைகள் இங்கு 46 மணி நேரம் குண்டு மழை பொழிந்த போது இன்னொரு முறையும் ராணுவ நடவடிக்கைகளை சந்தித்தது. ஸ்வாபோர்க் (ஸ்வீடிஷ் கோட்டை) சுயோமென்லின்னா (ஃபின்னிஷ் கோட்டை) வாக 1917ல் ஃபின்லாந்து முழு சுதந்திரம் அடைந்தபோது பெயர் மாற்றம் பெற்றது. அதன் பிறகு 1948 வரையில் இது ஒரு ராணுவத்தளமாகவே இருந்தது.

சரி வரலாறு பார்தாயிற்று, இனி பயணிப்போம்.

சுயோமென்லின்னா பயணம்

மே 10, 2009 சுயோமென்லின்னா செல்ல நான், பாரதி, ரோஹன், மைதிலி மற்றும் தாரிணி திட்டமிட்டு சென்றோம். வழக்கம் போல மார்கெட் ஸ்கொயரிலிருந்து ஃபெர்ரி யில் ஏறி சுயோமென்லின்னா சென்றடைந்தோம். இங்கும் ரோஹன் கமாண்டோ வாக இருந்தார். அவர் எங்கு செல்கிறாரோ அங்கே நாங்கள் சென்றோம். தீவில் நுழைந்தவுடன் ஒரு நுழைவாயில் போன்ற ஒரு இடத்தைக் கடந்து சென்றோம். கடந்த முறை கருப்பு வெள்ளையாகக் காட்சியளித்த வீடுகள், புல்வெளிகள், சாலை அனைத்தும் இப்போது புதுப் பொலிவுடன் பல வண்ணங்களாய் காட்சி அளித்தன. கையில் உள்ள கேமிராவில் சரமாரியாகப் புகைப்படம் எடுக்க ஆரம்பித்தோம். முதலில் தென்பட்டது ஒரு சர்ச். அதைக் கடந்து சென்றதும் சுற்றுலா வழிகாட்டி மையம் இருந்தது. அங்கே சுயோமென்லின்னா வரைபடத்தை ரோஹன் எடுத்துக் கொண்டார். பாரதியும், ரோஹனும் எப்படிச் செல்லலாம் என்று விவாதித்து பின்னர் ஒரு முடிவுக்கு வந்தனர். ஓரளவிற்கு கூட்டம் இருந்தது. வெளியில் வந்தவுடன் ஒரு ஓடை போன்று ஒரு நீர் நிலையக் கடக்க பாலத்தில் சென்றோம். அந்த நீரோடை தான் சுயோமென்லின்னாவை இரண்டாகப் பிரித்தது. ஆனால் அந்த ஓடைக்கு அப்பால் தான் கோட்டையே இருந்தது. ஓடைக்கு இப்புறம் குடியிருப்புகளும் அலுவலகங்களும் இருந்தன.

அங்கிருந்து கோட்டை நுழைவு வாயில் போன்ற ஒரு குகையின் வழியாக உள்ளே சென்றோம். உள்ளே சென்றதும் ஒரு சிலை வரவேற்றது. அது ஒரு வீரனின் தலைக் கவசமும், உடைவாளும் தான். அதைப் பற்றி ஆராய மனம் செல்லவில்லை. அங்கே சில புகைப் படங்கள் எடுத்துக் கொண்டோம். அதைக் கடந்த்து சென்றால் சில பழைய பீரங்கிகளைப் பார்க்க முடிந்தது. நாங்கள் சென்றிருந்த பருவம் இளவேனிற் பருவம். எனவே பனி முற்றிலுமாக மறைந்து, புல் படர ஆரம்பித்து இருந்தது. மரங்கள் இன்னமும் துளிர் விட்டுக் கொண்டிருந்தன. நாம் பூங்காவைப் பார்த்திருக்கிறோம். அதில் செயற்கைப் புல்வெளிகளும் மரங்களும், அமர வசதியாக சில கல் இருக்கைகளும் வைத்திருப்பார்கள். இங்கு ஒரு பூங்காவே கோட்டைக்குள்ளே இருப்பதை நினைத்தால் இன்னமும் மனது அந்தக் காட்சியை கண்டு லயித்துக் கொண்டிருக்கிறது. அதுவும் பாறைகள் நிறைந்த அலைகளற்ற ஒரு கடற்கரையும் பூங்காவைச் சுற்றி இருந்தால் சொல்லவா வேண்டும்.

கடற்கரைக்கு அருகே ஒரு உயரமான இடத்தில் நடந்து கொண்டிருக்கும்போது சில்லென்று வீசும் குளிர் காற்று முகத்தை உறைய வைக்கிறது. கடற்கரைக்கு அருகில் பாறைகளின் மீது அமர்ந்து சிறிது நேரம் கடலையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். இப்படி நடந்து செல்லும் பாதை எங்கும் ஒரு பீரங்கி நின்று மிரட்டும். கடற்கரைப் பாறையிலிருந்து மீண்டும் அந்த உயரமான இடத்திற்கு சென்று சுற்றிலும் ஒரு பார்வை விட்டால் ஆங்காங்கே மக்கள் சென்ற வழித்தடங்களும், சில குன்றுகள் போன்ற அறைகளும் இருக்கும். ஒரு ஆர்வமிகுதியால் உள்ளே என்ன இருக்கும் என்று சென்று பார்த்தால் வெறுமையாக இருக்கும்.

“இந்த ரூம் மாதிரி இருக்கே இது என்னங்க?”, என்றாள் மைதிலி பாரதியைப் பார்த்து.

“இது என்னமோ வெப்பன்ஸ் வைப்பாங்களே அது மாதிரி இருக்கு, அது பேரு கூட...”, என்று இழுத்தார் பாரதி.

“ஆயுதக்கிடங்கு” , என்றேன் புன்னகைத்தவாறே.

“யெஸ், கணேசன் சொல்றது தான் அது”, என்றார் பாரதி.

நீலக் கடலும், பசும் புல்வெளியும், நடு நடுவே வெளிர் பழுப்பு நிற பாதைகளும் செயற்கையாக போடப் பட்டிருந்த பாதைகளும் காண்பதற்கு இனிய காட்சிகள். அதற்குள் எங்களுக்கு பசிக்க ஆரம்பித்தது. இந்த தீவில் என்ன இருக்கப் போகிறது என்று எண்ணி இருந்தேன். நல்லவேளையாக அங்கே ஒரு பிஸ்ஸா உணவகம் இருந்தது. அங்கு எங்களது வழக்கமான அரட்டைகளுடன் மதிய உணவு முடிந்தது. அங்கிருந்து தீவின் இன்னொரு பக்கத்தை அடைந்தோம், அதாவது தீவை வலம் வந்து கொண்டிருந்தோம். அதன் பிறகு வழி நெடுக உள்ள பூங்காவை ரசித்துக் கொண்டும் புகைப் படங்கள் எடுத்துக் கொண்டும் தீவின் இன்னொரு பகுதியை அடைந்தோம். அவ்வளவு தான் தீவை சுற்றி வந்தாயிற்று.

இந்தப் பயணத்தின் போது நான் அவ்வளவாக உரையாடலில் இறங்கவில்லை. ஒவ்வொரு காட்சியையும் பார்த்து ஏதேதோ நினைவுவலைகள் தோன்றி மனம் அங்கே நின்று விடுகிறது. கூட்டமாக இருந்தும் தனிமையை உணர்ந்தேன். அவ்வப்போது என்னை அழைக்கும் போது மட்டும் சுய நினைவிற்கு வருவேன். பிறகு தீவைச் சுற்ற்க் கொண்டு வந்த வழியே திரும்பினோம். மறுபடி படகில் ஏறும்போது நினைத்துக் கொண்டேன் மீண்டும் இந்த இடத்திற்கு வரவேண்டும் என்று. அதற்கான வாய்ப்பும் கிட்டியது.

ஸ்டேயட்டிலிருந்து ஓட்டம்

ஸ்டேயட்டின் கொள்ளை அடிக்கும் செய்கையால் மற்றவர்கள் ஸ்டேயட்டிலிருந்து கிளம்பி வெளியே செல்ல திட்டமிருந்தனர். அவர்களில் மைதிலி, தாரிணி மற்றும் அன்னா தான் முந்திக்கொண்டவர்கள். செல்லோவிற்கு அருகில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்தனர். பாரதியின் உதவியுடன் அவர்கள் புதிய வீட்டைப் பிடித்தனர். அதைப் போல ஸ்ரீனிவாஸ், சுப்பு வும் வேறொரு வீட்டைப் பார்த்துக் கிளம்பினர். நான் கிருஷ்ணாவிடம் கேட்டபோது,

“எனக்கு இன்னும் டூ வீக்ஸ் தான் இருக்குப்பா அப்ரம் இந்தியாக்கு போய்டுவேன், சோ என்னால வரமுடியாது, நீ வேனும்னா புது வீடு பாத்துக்கோ. பட் இங்க இருக்கர்து தான் சேஃப்டி”, என்றார்.

எனக்கு அவரை அம்போ என்று விட்டு விட்டு போக விருப்பமில்லாததால் புது வீடு தேடும் எண்ணத்தைக் கைவிட்டேன். நடப்பது நடக்கட்டும் என்று இருந்துவிட்டேன். கடைசியில் நான் தான் அம்போ என்று ஆக்கப்பட்டேன். அது வேறு விஷயம். எனக்கு தனியாக இருந்து பழக்கமில்லை. கிருஷ்ணா சென்ற பிறகு, இது தான் தருணம் என்று எண்ணி ஸ்டேயட்டிலேயே மீதமிருந்த நாளையும் கழித்தேன்.
எனவே நான் தனிமைப் படுத்தப்பட்டதில் எனக்கு சிறிதும் வருத்தமில்லை. தனிமை எனக்கு மிகவும் பிடித்தும் இருந்தது.

ஏறக்குறைய எல்லாரும் ஸ்டேயட்டிலிருந்து ஓட்டம் பிடித்தார்கள் என்றே சொல்லலாம். அது சரி, ஏதாவது துரத்தினால் தானே ஓட்டம் பிடிக்கமுடியும்!

சைக்கிள் உலா

ஃபின்லாந்து நாட்டில் முது வேனிற் காலத்தில் சாலைகளின் இருமருங்கிலும் மக்கள் சைக்கிளை ஓட்டிக் கொண்டிருப்பார்கள். அதற்கென்றே ”பைக் பாத்” (Bike Path) என்று சைக்கிளில் செல்வதற்கென்றே அமைத்திருப்பார்கள். இது எல்லா ஐரோப்பிய அமெரிக்க நாடுகளிலும் இருக்கும். இங்கும் விதி விலக்கல்ல. சிலர் அலுவலகத்திற்கும் சைக்கிளிலேயே வந்தார்கள். அங்கு உள்ள மக்கள் உடல் நலத்திற்கு மிகவும் சிரத்தை எடுத்துக் கொள்வார்கள் என்பதற்கு இதுவே ஒரு சான்று. அதைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கும் சைக்கிள் ஓட்டவேண்டும் என்ற ஆவல் மிகும். சில நேரங்களில் வாய் விட்டு மற்றவர்களிடம் கேட்டும் இருக்கிறேன். என்னுடைய ஆவல் நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ பூர்தியானது மே 16, 2009 அன்று. சைக்கிள் ஓட்டலாம் என்று பாரதியும், ரோஹனும் முந்தைய நாள் திட்டமிருந்தனர். ஆனால் எனக்கு அன்று சற்றே உடல் நிலை சரியில்லை. எனவே இந்தப் பயணத்தைத் தவிர்க்கலாமா என்று யோசித்துக்கொண்டிருந்தேன். அன்று காலை கிருஷ்ணாவிடம் நடந்த உரையாடல்,

“கிருஷ்ணா, லாஸ்ட் வீக் ஆபீஸ்ல வொர்க் டைட் ஷெட்யூலா இருக்கு, சோ இன்னிகு ஃபுல்லா ரெஸ்ட் டே, இந்த சனிக் கிழமையாவது வீட்ல இருக்கேன்” என்று சிரித்தேன்.

“நல்லதுங்க, ரெஸ்ட் எடுத்துக்கோங்க, முடிஞ்சா சவுனா எடுத்துக்கோங்க, நல்லா தூக்கம் வரும்”, என்றார்.

அப்போது செல்போன் சினுங்கியது.

“கணேஷ், இன்னிக்கு சைக்ளிங் போகலாம்னு ப்ளான். சோ நீங்களும் வந்துருங்க, நைன் ஒ க்ளாக் செல்லோ வந்துருங்க”, என்றாள் மைதிலி.

”...”

“ஹலோ என்ன?”, என்றாள் மைதிலி.

“என்ன சைக்ளிங்கா? யார் யார் வராங்க?”, என்றேன்.

“பாலா வரலயாம், அன்னா, தாரிணி, பாரதி, ரோஹன் வராங்க”, என்றாள்.

“சரி போலாம்”, என்றேன்.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த கிருஷ்ணா (டேய் இப்பதானடா ரெஸ்ட் எடுக்கனும்னு சொன்ன என்ற தொனியில்) என்னைப் பார்த்து, ”சரி சரி போயிட்டு வாங்க, என்ஜாய் பண்ணுங்க”, என்றார் புன்னகையுடனே.

அப்பொழுது தான் எழுந்திருந்த நான், கிளம்ப ஆயத்தமானேன். அதற்குள் இரண்டு அழைப்புகள் என்னைத் தேடி, நான் இன்னும் கிளம்பவில்லையே என்று கடிந்து கூறுவது போல் இருந்தது. எனக்கோ மற்றவர்கள் எனக்காகக் காத்திருக்கிறார்களே என்ற குற்ற உணர்வு. இரண்டாவதாக வந்த அழைப்பில் தாரிணி அவளின் அதட்டல் தொனியில் (அது தான் அவளது இயல்பு என்று அதன் பின்னர் தான் தெரிந்து கொண்டேன்),

“ஹலொ என்ன? எப்போ வர்ரீங்க? உங்களுக்காக எல்லாரும் வெய்ட் பண்றாங்க”, என்றாள்.

அவ்வளவுதான் எனக்குள்ளிருந்த குற்ற உணர்வு கோபமாக மாறியது. இந்த கோபத்திற்கு முந்தைய நாள் என் நண்பன் என்னைப் புரிந்து கொள்ளாமல் செய்த ஒரு தவறும் காரணம். இதெல்லாம் அசுவாசமாக, கோபத்திற்கான காரணங்களை ஆரய்ந்தபோது வந்த காரணங்கள். ஆனால் கோபம் மட்டும் ஒரு நொடியின் கூறுகளில் வந்துவிடுகிறது. ஹெல்சின்கி வரையில் அடக்கி வைத்திருந்த கோபம் மறுபடியும் தாரிணியிடம் பேசும் போது வெளிப்பட்டது.

“ஆமா, என்ன நினைச்சுகிட்டு இருகிங்க எல்லாரும்? கிளம்பி வரத்துக்குள்ள என்ன அவசரம். ஷூ போடறதுக்குள்ள ரெண்டு போன் கால்.”, என்றேன் சற்றே கடுகடுத்த முகத்துடன் தாரிணியைப் பார்த்து.

“எல்லாரும் வெயிட் பண்றாங்கன்னு போன் பண்ணினேன். உங்க கிட்ட சொல்லி எவ்ளோ நேரம் ஆச்சு. நான் என்ன பண்ணேன். நீங்க ஏன் என் மேல் கோப படரீங்க”, என்றாள் அவளும் கோபத்துடன்.

”எனக்கு ஒன்னும் கோபம்லாம் இல்லை”, என்றேன்.

“சரிங்க, இன்னிக்கு என் கூட பேசாதீங்க, எதுவா இருந்தாலும் நாளைக்கு பேசுங்க”, என்றாள் அதே கோபம் குறையாத குரலில்.

அதைக் கேட்டதும் சாந்தமானேன். நான் ஏன் கோபப் பட்டேன் என்று என்னையே கடிந்துகொண்டேன். எனக்கு அவர்களுடன் செல்லவே விருப்பமில்லாமல் போனது. திரும்பி ஸ்டேயட் போய் விடலாம் என்று எண்ணினேன். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மைதிலி, என்னையும் தாரிணியையும் சமாதானம் செய்ய முயன்றாள். முயற்சியில் வெற்றியும் கண்டாள். பின்னர் தாரிணியே என்னிடம் வந்து,

”நீங்க அப்டி சொன்னதுல, என்னமோ நான் தான் தப்பு பண்ணிட்டேன்னு கோபம் வந்துருச்சு”, என்றாள் சாந்தமாக.

”யார் மேலயோ இருந்த கோபத்தை உன் கிட்ட காட்டிட்டேன்”, தங்கையிடம் மறைமுகமாக மன்னிப்பும் கேட்டுக்கொண்டேன்.

“சரி இந்த பேச்ச இப்டியே நிறுத்திக்குவோம். இனி இத பத்தி பேச வேணாம்”, என்றாள். எனக்கும் சரி என்று பட்டது.

அதன் பிறகு அது மாதிரி ஒரு சம்பவம் நிகழ்ந்ததற்கான அறிகுறியே இல்லாமல் இருவரும் மறந்தே போனோம்.

வாடகைக்கு சைக்கிள் விடும் கடைக்குச் சென்றோம். சைக்கிள் ஒன்றிற்கு 15 யூரோ என்று அந்த கடை முதலாளி கூறினார். ஒவ்வொறுவருக்கும் ஒரு சைக்கிள் கொடுத்தார். கையில் ஹெல்சின்கியின் ”பைக் பாத்” கான ஒரு வரைபடத்தைக் கொடுத்தார். ரோஹன் ஆர்வமுடன் அதை வாங்கிக் கொண்டார். இந்த பயணத்திற்கும் ரோஹனே கமேண்டோவாக தலைமை வகித்தார். அவர் முன் செல்ல அவர் பின் நாங்கள் சென்றோம்.

ஹெல்சின்கியில் சிறிது நேரம் பயணம். பின்னர் நகருக்கு வெளியே சென்றது அந்த ”பைக் பாத்”. மேட்டுப் பாங்கான அந்த இடத்தில் சைக்கிளை ஓட்டுவதே கடும் சிரமமாக இருந்தது. சில இடங்களில் சைக்கிளை நகர்த்தியே போக வேண்டிய நிர்பந்தம். ஏதாவது ஒரு ஏரியைப் பார்த்தால் அங்கு சிறிது இளைப்பாறிவிட்டு மீண்டும் தொடர்ந்தது எங்கள் பயணம். மதிய உணவிற்கான நேரத்தில் ரோஹனே சென்று அனைவருக்கும் உணவு வாங்கிக் கொண்டு வந்தார். அனைவரும் களைப்பாக இருந்த நேரத்தில் யார் போய் உணவு வாங்குவது என்ற சமயத்தில் திடகாத்திரமான ரோஹன் மட்டும் சற்றும் களைப்புறாமல் தான் மட்டும் தனியே சென்று உணவு வாங்கிவந்தது எனக்குப் பிடித்திருந்தது. Good Boy ரோஹன்.

அங்கே ஒரு அழகான் ஏரி இருந்தது. ஏரியில் அவ்வப்போது படகுகள் வந்தவண்ணமும் சென்ற வண்ணமும் இருந்தன. பார்ப்பதற்கே ரம்யமாக இருந்தது. அதற்கருகே ஒரு மரத்தால் ஆன படகுத்துறை போன்று ஒரு இடம் இருந்தது. அது ஏரியில் மிதந்துகொண்டே இருந்தது. சங்கிலியால் கரையில் பிணைத்து வைக்கப் பட்டிருந்ததால் ஏரியில் அலை ஓட்டத்தில் அது நகராமல் இருந்தது. அதில் இருக்கைகள் இருந்தது. எங்களுக்கு இளைப்பாற இதை தவிற ஒரு அழகான இடம் கிடைக்குமோ? ரோஹன் வரும் வரையில் அங்கு அரட்டை அடித்துக் கொண்டு இருந்தோம். ரோஹன் வந்ததும் களைகட்டியது. மதிய உணவிற்குப் பின் எங்கள் பயணம் தொடர்ந்தது. அந்த ஏரியின் அக்கரையில் உள்ள ஒரு பசுமையான இடத்திற்கு ஒரு குறுகிய பாலம் வழியாக கடந்து சென்றோம். என்ன ஒரு அருமையான இடம். உலகில் இதுபோல் இடமெல்லாம் இருக்குமா என்று வியக்கும் வண்ணம் இருந்தன அங்கிருந்த பசுமையான சூழல். அங்கிருந்து பூங்கா, தேநீர் கடை என்று எங்கள் இளைப்பாறும் இடம் நீண்டு கொண்டே போனது. கடைசியாக ஹெல்சின்கி ரயில் நிலையம் வழியே வந்து நாங்கள் திரும்பி அந்த சைக்கிள் கடைக்கே சென்றோம். இதுவும் என் வாழ் நாளில் மறக்க முடியாத பயணம் என்றே கூறலாம்.

செல்லோவில் திரைப்படம்

செல்லோவில் ஒரு நாள் நாங்கள் அனைவரும் ”ஏஞ்சல்ஸ் அண்ட் டெமன்ஸ்” படம் பார்த்தோம். முக்கிய அம்சம் என்னவென்றால் அந்தப் படம் முழுதும் ரோமில் படமாக்கப் பட்டது. நாங்கள் எங்கெங்கு ரோமில் நடந்தே சென்றோமோ அங்கெல்லாம் அந்த திரைப்படத்தின் கதாநயகன் காரில் சென்று சுற்றிக் காட்டினான். அப்பொழுதுதான் ரோஹன் எங்களை எந்த அளவிற்கு நடக்க விட்டிருக்கிறார் என்று தெரிந்தது.

கடைசி சுற்றுலா

ஜூன் 6, 2009 மறுபடியும் சுயோமென்லின்னா பயணம். இதற்குள் அன்னா அவளுடைய அம்மா, சகோதரியைப் பார்க்க அமெரிக்காவிலுள்ள விஸ்கான்சின் சென்று விட்டாள். தன் நீண்ட விடுமுறைக்குப் பின்னர் இந்தியாவில் பார்ப்போம் என்று விடைபெற்றுக்கொண்டாள். ரோஹன், பாரதி, கிருஷ்ணா மற்றும் சித்தார்த் விசா காலக்கெடு முடிந்தபடியால் அவர்கள் இந்தியா சென்றனர். மீதமிருந்தது நான், சுப்பு, ஸ்ரீனிவாஸ், பாலா, மைதிலி மற்றும் தாரிணி. அடுத்த குழு ஃபின்லாந்துக்கு அடுத்த வாரம் வருவதாக பேச்சு அடிபட்டது.

கடைசி சுற்றுலா இந்த சுயோமென்லின்னா பயணம். இதில் நான், பாலா, மைதிலி, தாரிணியுடன் லஷ்மியும் (நினைவிருக்கிறதா? மைதிலி சகோதரியின் தோழி) சேர்ந்துகொண்டாள். ஹெல்சின்கி ஏதோ விழாக் கோலம் பூண்டிருந்தது. போகிறவர் வருகிறவர்களுக்கெல்லாம் பலூன் கொடுத்துக் கொண்டிருந்தனர். அங்கிருந்து ஃபெர்ரியில் பயணம் செய்து சுயோமென்லின்னாவை அடைந்தோம். இந்த முறை சற்று மழை பெய்திருந்ததால் இன்னமும் அதன் அழகு கூடியிருந்தது. நுழைவு வாயிலின் வழியே செல்வதற்கு முன்னரே புகைப்படம் எடுக்க ஆரம்பித்து விட்டோம். எங்களை கவனித்துக் கொண்டிருந்த ஒரு ஃபின்னிஷ் பெண்மணி, ஒரு இந்தியப் பெயரை எழுதித் தருமாறு வேண்டிக்கொண்டார். மைதிலி தன் பெயரை எழுதித் தந்தாள். ஒரு குழுப் புகைப்படத்தை அந்த ஃபின்னிஷ் பெண்மணியுடன் எடுத்துக் கொண்டோம். அங்கிருந்து கிளம்பிச் சென்று சுற்றுலா மையத்தை அடைந்தோம். நீர்மூழ்கிக் கப்பல் பற்றிய விவரத்தைக் கேட்டறிந்தோம். ஆனால் அது நீர்மூழ்கிக் கப்பலின் ஒரு மாதிரியே என்று பார்த்து அறிந்ததும், சப்பென்று போய்விட்டது.

இம்முறை மரங்களில் அடர்த்தியாக இலைகள் வளர்ந்திருந்தது. காலநிலை சற்றே மேக மூட்டத்துடன் மங்கலான வெளிச்சம் பரவியிருந்ததால் பார்ப்பதற்கு ரம்யமாக இருந்தது. சென்ற முறை வந்திருந்தபோது சென்ற திசைக்கு எதிர்புறமாக சென்றோம். தாரிணி என்னிடம் வந்து கையை நீட்டினாள். அவள் தனக்கு என்னுடைய ஐ-பாட் (iPod) வேண்டும் என்று கேட்கிறாளாம். இது போல் ஏற்கனவே நடந்திருந்ததால், அவள் கையை நீட்டியவுடன் எடுத்துக் கொடுத்தேன். அதைக் காதில் மாட்டியவள் தான். கடைசிவரை வீடு திரும்பும் வரையில் பாட்டு கேட்டுக்கொண்டே இருந்தாள். மற்றவர்கள் அனைவரும் புகைப்படம் எடுப்பதிலும், அதற்கு போஸ் குடுப்பதிலும் மும்முரமாக இருந்தார்கள். அதே பிஸ்ஸா உணவகத்தில் மதிய உணவு சாப்பிட்டோம்.

அதன் பின்னர் கடற்கரையின் உயரமான இடத்தில் நடந்து சென்று கொண்டிருந்தோம். அங்கிருந்து கீழிறங்கி கடற்கரையின் அருகே கற்பாறைகள் இருக்குமிடம் வந்து குழுமினோம். அங்கு காற்று அதிகம் இல்லாமல் குளிர் குறைவாக இருந்தது. இந்த இடத்திற்கு தனியாக வந்து அழகை ரசிக்கலாம். தனிமை விரும்பிகளுக்கும், இயற்கை ரசிகர்களுக்கும் இது மிகப் பொருத்தமான இடம். வெகு நேரம் இங்கேயே செலவிட்டோம். அங்கிருந்து வெளியே செல்லத் தீர்மானித்தோம். அங்கே ஒரு ராணுவப் படையினர் ஏதோ ஒரு பயிற்சி செய்து முடித்துவிட்டு திரும்பி வந்திருந்ததாகத் தெரிந்தது. அதன் ஒரு மூலையில் ஒரு நவீன பீரங்கி வாகனம் இருந்தது. இத்தீவு இன்னமும் ராணுவத்தளமாக இருப்பதற்கு இது ஒன்றே சான்று.

இந்தியா வருகை

எங்களின் கடைசி சுற்றுலாவிற்கு பிறகு இந்தியா செல்லும் மனநிலை வந்துவிட்டது. கடைசி வாரம் முழுதும் ஒரு விதமான உணர்வு ஆட்கொண்டது. அதாவது இந்தியா செல்லப் போகிறோம் என்ற குதூகலம் ஒரு பக்கம். ஆனால் இவ்வளவு மகிழ்ச்சியாக இருந்த ஃபின்லாந்தை விட்டுப் போகிறோம் என்ற எண்ணம் மறுபக்கம். இதற்குள் அடுத்த குழு வந்து விட்டிருந்தனர். ஜூன் 12, 2009 ஃபின்லாந்தில் செல்லோ வில் எங்கள் குழு குழுமியிருந்தது. கடைசியாக அங்கிருந்து கிளம்புகையில் மனதில் ஒரு வெறுமை பற்றிக்கொண்டது. அங்கிருந்து இந்தியன் உணவகத்தில் சாப்பிட்டுக் கிளம்பினோம். மறுநாள் ஜூன் 13, 2009 காலை பெரிய வண்டியில் அனைவரும் புறப்பட்டுச் செல்ல முடிவு செய்தோம். இரவு வெகு நேரம் பாலா அறையில் நானும் பாலாவும் பேசிக் கொண்டிருந்தோம். பின்னர் என்னுடைய அறைக்கு வந்து எல்லாவற்றையும் மூட்டை கட்டினேன். அன்றிரவு தூங்கவே இல்லை. ஸ்டேயட்டில் இருந்து விடை பெரும் நேரம் வந்தது. வாந்தா விமான நிலையம் வந்து சேர்ந்து அங்கிருந்து ஃபிராங்க்ஃபர்ட் வழியாக சென்னை வந்து சேர்ந்தோம். நாங்கள் வாங்கியிருந்த வரியில்லாப் பொருட்களுக்கு(Tax Free Shopping) ஃபிராங்க்ஃபர்ட் விமான நிலையத்தில் வரிப் பணம் திரும்பப் பெற்றுக் கொண்டோம். நான் வாங்கிய பொருளுக்கு மட்டும் கிட்டத்தட்ட 20 யூரோ கிடைத்தது. சென்னை விமான நிலையத்தில் பெற்றோரைப் பார்த்ததும் உண்டான மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. எல்லாம் மறந்து போயின.

விடைபெறுகிறேன்

எனது இந்த “எனது ஃபின்லாந்து செலவு” பயணக் கட்டுரையைத் தவறாமல் படித்து எனக்கு ஊக்கம் கொடுத்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். எல்லா விஷயதையும் இங்கே என்னால் கூற இயலவில்லை. எனக்குத் தெரிந்து எல்லா மறைக்கக் கூடாத விஷயங்களை இங்கே கூறியிருக்கிறேன். ஆரம்பத்தில் இது என் சுயநலத்திற்காக மட்டுமே எழுதினேன். சிறிது கால இடைவெளிக்குப் பிறகு இக் கட்டுரையை நானே படிக்க உட்கார்ந்தால், படித்து முடித்தவுடன் முகத்தில் புன்னகையுடன் எழுந்திருக்காலாம் என்ற ஒரு எண்ணத்தில் தான் இதை எழுத ஆரம்பித்தேன். என்னைப் போலவே இக்கட்டுரையில் உள்ள அனைவருக்கும் அதே உணர்வு இருக்கும் என்றே நம்புகிறேன். இப்பயணத்தில் இல்லாதவருக்கும் நான் எழுதுவது புரிந்து அவர்களையும் என்னுடன் பயணம் செய்விக்க முயற்சி செய்துள்ளேன். இதை எழுத ஆரம்பித்ததிலிருந்து வரும் விமர்சனத்திலிருந்தே அதை நான் தெரிந்து கொண்டேன். நான் மறைத்து எழுதினேனே தவிர எழுதியதை உள்ளது உள்ளபடியே எழுதியுள்ளேன். திரித்து எழுதவில்லை. இதனால் சிலருக்கு மனம் புண் பட்டிருக்கலாம். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் இதை ஒரு பயணப் பதிவாக எடுத்துக் கொள்ளலாம்.

இத்துடன் விடைபெறுகிறேன். அடுத்து ஒரு புதிய இடுகையில் சந்திப்போம்.

No comments:

Post a Comment