Sunday, November 29, 2009

எனது ஃபின்லாந்து செலவு - தொடர்ச்சி

வாடிக்கையாளருடன் இரவு உணவு (Customer's team dinner)

ஏப்ரல் 16, 2009 எங்கள் வாடிக்கையாளர்கள் எங்களுடன் இரவு உணவு உண்ண தீர்மானித்தனர். அதுவும் இந்தியன் உணவு விடுதிக்கு செல்லவும் முடிவு செய்தனர். எங்கள் குழுவில் பாரதி, சித்தார்த் மற்றும் தாரிணி தவிர எல்லாரும் இருந்தனர். ஹெல்சின்கியில் உள்ள மகாராஜா ஹோட்டலில் நாங்கள் குழுமினோம். எங்கள் வாடிக்கையாளர்கள் சிலர் வந்திருந்தனர். அவர்கள் அனைவரும் கிட்டத்தட்ட 15 முதல் 20 வருடங்கள் வேலை அனுபவம் வாய்ந்தவர்கள். இதை நானே ஏதேச்சையாக அவர்களில் ஒருவரிடம் கேட்டுத் தொலைக்க அவர் புன்னகையுடன் எனக்கு 20 வருடங்கள் இதே அலுவலகத்தில் அனுபவம் உள்ளது என்று கூறியவுடன் எனக்கு தூக்கிவாரிப்போட்டது. 20 வருடங்களாக செய்த வேலையை 5 வருடங்கள் அனுபவம் உள்ள நான் செய்யப் போகிறேன் என்று உள்ளுக்குள் சிரித்தேன். அதன் பிறகு அடக்கி வாசித்தேன். பின்னர் உணவு அட்டவணையைக் கொடுத்தவுடன் அவர்கள் எங்களிடம் உதவி கோரி அவர்களுக்கான உணவையும் கட்டளை பிறப்பித்தோம். உணவு தயாராகும் வரையில் எங்கள் பேச்சு ஃபின்லாந்து பற்றியும், அதன் மொழி, கலாச்சாரம் பற்றியும் இருந்தது. நிறைய பேர் இருந்ததால், அங்கே ஒரே மேஜையில் அமர்ந்திருந்தும் இரண்டு குழுவாகப் பிரிந்து பேசிக்கொண்டிருந்தோம். எங்கள் குழுவில் கோபால் பேசிக்கொண்டே இருந்தார். சில நேரம் அவர்களின் பொறுமையையும், எங்களின் பொறுமையையும் சோதித்தார் என்றே சொல்ல வேண்டும். அவர் நிறுத்திய நேரங்களில் மட்டுமே நாங்கள் பேச அவகாசம் கிடைத்தது. சில நேரம் எங்களுக்குள்ளே பேசிக் கொண்டிருந்தோம். நான் அவர்களில் சிறிது வயதானவரிடம் ஏதேதோ பேசிக்கொண்டிருந்தேன். அவரும் அலுக்காமல் பதிலளித்துக்கொண்டிருந்தார். அவருக்கு அருகில் கோபால் வளவளவென்று பேசிக்கொண்டிருந்ததால் கோபாலிடம் பேசாமல் எங்களிடம் பேச முயன்று கொண்டிருந்தார். நான் அவரிடம் பேசாமல் இருந்த நேரங்களில் என்னை உற்று உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். உடனே மைதிலி,

“ஏங்க, அவர் உங்களையே பாத்துட்டு இருக்காருங்க, ஏதாச்சும் பேசுங்க”, என்றாள்.

”என்ன பேச?”, என்றேன்.

“ஏதாச்சும், ஆங் ! அன்னிக்கு ஒரு லேடி சர்ச் அண்டர் தி ராக் பத்தி சொன்னாங்கல்ல, அத பத்தி கேளுங்க”, என்றாள்.

நான் அதைப் பற்றிக் கேட்டதுதான் தாமதம், உடனே கூகிள் மேப்பில் அதைத் தேடிப் பிடித்து, அருகில் இருந்த இன்னொருவரிடமும் அதைப் பற்றிக் கேட்டு எங்களிடம் கூறினார். அங்கு எப்படி போவது பற்றியும், ஹெல்சின்கியில் உள்ள மற்ற இடங்களுக்கு எப்படி போவது என்றும் எங்களுக்கு விளக்கமாகக் கூறினார். அதன் பின்னர் மைதிலி என்னிடம்,

“ஸோ க்யூட் இல்ல இவங்க?”, என்று என் காதில் மட்டும் விழுமாறு கூறிச் சிரித்தாள். அதையும் அம்மனிதர் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்.

அம்மேஜையில் இருந்த இன்னொரு குழு என்ன பேசுகிறது என்று ஊகிக்க முடியவில்லை. அவர்களும் இதைப் போன்ற ஒரு மொக்கையைத்தான் பேசிக்கொண்டிருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டேன். பின்னர் உணவு வந்ததும் அதில் தான் என் முழுக்கவனமும். ஒரு பிடிபிடித்தேன். பின்னர் இனிப்பு சாப்பிடும் வேளை வந்தது. அதற்கும் எங்களின் உதவியை நாடினர். கோபால் அவர்களிடம் க்ளோப் ஜாமூன் நன்றாயிருக்கும் என்று கூறவே எல்லாரும் அதையே கேட்டனர். ஆனால் அது தீர்ந்து போனது என்றவுடன் ஆஹா ஆஹா என்று ஒரே குரலில் அவர்கள் அனைவரும் கூறிச் சிரித்தனர். இரவு உணவு ஒருவழியாக முடிவுற்றது.

வீ - கீ (Whee-Ghee) அருங்காட்சியகம்

ஃபின்லாந்து நாட்டின் கலை, கலாச்சாரம் முதலிய அனைத்தும் ஒரே இடத்தில் இருந்தன வீ - கீ அருங்காட்சியகத்தில். ஏப்ரல் 18,2009 அன்று காலை எங்கு செல்வது சென்று நானும் பாரதியும், அவரின் குடியிருப்பில் இணைய வலையில் தேடிப் பின்னர் இந்த அருங்காட்சியகத்திற்கு செல்வதெனத் தீர்மானித்தோம். வழக்கம்போல் எல்லாருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. முதலில் யாரும் வரச் சம்மதிக்கவில்லை. பின்னர் கோபாலும், பாலாவும் எங்களுடன் வருவதாகக் கூறினர். அப்பொழுதெல்லாம் பாலா அவ்வளவாக எனக்கு நெருங்கிய நண்பராக இருக்கவில்லை. ஆனால் இதுதான் பாலா முதன் முறையாக எங்களுடன் வெளியில் வந்த பயணம். இந்த அருங்காட்சியகத்தில் பல சிறிய அருங்காட்சியகங்கள் ஒருங்கே இருந்தன. அவற்றில் முக்கியமானது ஒரு ஃபின்னிஷ் பெண்மணி உலகெல்லாம் சுற்றித் திரிந்து கண்டெடுத்த அல்லது வாங்கிய பொருட்களை இந்த அருங்காட்சியகத்தில் சேகரித்து வைத்ததுதான்.

முதலில் ஒரு சிலை மற்றும் சித்திரக் கண்காட்சி உள்ள அருங்காட்சியகத்திற்கு சென்றோம். நிறைய எனக்குப் புரியவேயில்லை. ஆனால் ஃபின்லாந்து பற்றி முழுதும் தெரிந்துகொள்ள நினைக்கிறவர்கள் அதைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். அதன் பிறகு நான் ஏற்கனவே கூறிய அந்த ஃபின்னிஷ் பெண்மணியின் அருங்காட்சியகத்திற்கு சென்றோம். அந்தப் பெண்மணி உலகில் எந்தக் கண்டத்தையும் விட்டு வைக்கவில்லை. கிட்டத்தட்ட எல்லாப் பழைமையான நாடுகளையும் சுற்றித் திரிந்து அந்நாட்டின் மிகப் பாரம்பரியமான பொருட்களையெல்லாம் சேகரித்துள்ளார். ஒவ்வொரு கண்டங்களாகப் பார்த்து முடிக்கும்போது, ஆசியக் கண்டமும் அதில் இந்தியாவும் இருக்குமா என்று மனம் ஆவலாய் விரும்பியது. என் ஆவலைப் பூர்த்தி செய்தாள் அப்பெண்மணி. மற்ற எல்லா நாடுகளின் மக்கள் உபயோகித்தப் பொருட்களைத் திரட்டியிருந்த அப்பெண்மணி இந்தியாவில் மட்டும் நம் இந்துக் கடவுள்களின் சிலைகளை சேகரித்துள்ளார். விநாயகப் பெருமானின் சிலையும், சிதம்பரம் நடராஜர் சிலையும், வட இந்தியாவின் பிரசித்திபெற்ற துர்கையின் சிலையும் ஒருங்கே இருக்கக் கண்டேன். அவரது பயணக் குறிப்பில் இந்தியா முழுதும் பயணம் செய்தது பற்றியும், தெற்கே உள்ள மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை தரிசித்ததாகவும் எழுதியுள்ளார். அதை வியந்தும் கூறியுள்ளார். மனதிற்குள் தான் இன்னும் மதுரை மீனாட்சி அம்மனை தரிசிக்கவில்லையே என்று நினைத்துக்கொண்டேன்.

ஃபின்லாந்து வந்ததிலிருந்து ஒரு கோவிலுக்கும் செல்ல முடியவில்லையே என்ற என் ஏக்கத்தை இந்த அருங்காட்சியகம் தீர்த்து வைத்தது. நான் ஏதோ பக்திப் பரவசத்துடன் எழுதுகிறேன் என்று எண்ண வேண்டாம். பக்திக்கும் ஆன்மீகத் தேடலுக்கும் உள்ள வித்தியாசம் மடுவிற்கும் மலைக்கும் உள்ளதைப் போன்றது. ஆனால் மடுவிற்கு சென்றால் தானே மலையேற முடியும். அதனால் இந்தச் சிலைகளைப் பார்த்தவுடன் சிறிது பக்தி வந்தது. என்னைப் பொருத்தவரை கோயில் ஒரு சக்தி பீடம். இதை ஒரு ஆன்மீகவாதித் தாத்தா எனக்கு ஆசி வழங்கிக் கூறினார். இதையே சத்குரு ஜக்கி வாசுதேவும் ஒரு இடத்தில் குறிப்பிட்டுள்ளார். இதனால்தான் திருப்பதி போன்ற ஒரு சில கோவில்களுக்குச் சென்றால் புதுச் சக்தி வருவதை (பக்தி வருகிறதோ இல்லையோ) உணர்கிறேன். சரி திருப்பதியிலிருந்து ஃபின்லாந்துக்கு வருவோம்.

அந்த ஃபின்னிஷ் பெண்மணி எழுதிய பயணக் கட்டுரையில், துர்கை, நடராஜரின் மனைவி என்று எழுதியிருந்தது. இதைக் கண்டதும் கோபால், அதைத் தவறு என்றும், பார்வதிதான் நடராஜரின் மனைவி என்றும் அதைச் சுட்டிக்காட்ட அங்கிருந்த ரிஸப்ஷனுக்கு சென்றார் (ரொம்ப முக்கியம்). நாங்களும் அவருடன் சென்றோம். அங்கிருந்த ஃபின்னிஷ் பெண்மணி எங்களை அன்புடன் வரவேற்று எங்களை நலம் விசாரித்து எங்களைப் பற்றிக் கேட்டறிந்தார். அவருக்கு வயது 25 லிருந்து 30 இருக்கும். அதன் பின் அவரை எங்களுக்கு சுய அறிமுகம் செய்தார். அவர் தாம் வடக்கு ஃபின்லாந்தில் ருஷ்யாவை ஒட்டிய பிரதேசத்திலிருந்து வருவதாகக் கூறினார். அவரின் கனிவான பேச்சு இன்னமும் அவர் முகம் என் மனதில் நிழலாட வைக்கிறது. எங்களைப் பார்தவுடன் நீங்கள் இந்தியர்கள் தானே என்று கேட்டார் (எப்டிதான் தெரியுதோ?). அதன் பின் எங்களுக்கும் அந்தப் பெண்மணிக்கும் நடந்த நீண்ட உரையாடலை இங்கே சுருக்கமாக கூறுகிறேன்.

“எல்லா நாட்டைப் பற்றியும் அப்பெண்மணி சேகரித்து வைத்ததைப் பார்த்தீர்களா?”, என்றாள் அப்பெண்மணி.

“எல்லாம் நன்றாக இருந்தது, ஆனால் ஒரு குறை”, என்றார் கோபால்.

“என்ன?”, வினவினாள்

“இந்தப் பயணக் குறிப்பில் துர்கை, நடராஜரின் மனைவி என்று குறிப்பிட்டிருக்கிறது, ஆனால்”, இழுத்தார் கோபால்

“ஓ, அப்படியானால் பார்வதி தான் நடராஜரின் மனைவி, சரிதானா?”, அசர வைத்தாள்.

“எங்கள் ஊரில் நவராத்திரி என்ற ஒரு விழா கொண்டாடுவோம், அதில் துர்கையை ஒரு நாள் கொண்டாடுவோம்”, என்றேன்

“ஓ அப்படியா? என்ன விழா அது?”, என்று கூறி தன் குறிப்பேட்டில் குறித்து வைத்துக் கொண்டாள்.

“ஒன்பது இரவுகளும் ஒன்பது விதமான பெண் கடவுள்களை வைத்து, கொலு பொம்மைகள் வைத்துக் கொண்டாடுவோம்”, என்றார் கோபால்.

நீண்ட நேரம் நடந்த இந்த உரையாடலில் பாலாவும் சேர்ந்து கொண்டார். ஆனால் பாரதி மட்டும் வாயைத் திறக்கவேயில்லை. அங்கிருந்து வெளிவந்த பின்னர் பாரதி எங்களிடம்,

“யோவ் அந்த பொண்ணுக்கு தெரிஞ்சது கூட எனக்கு தெரியல, அந்தப் பொண்ணு என்னப் பாத்து ஏதாச்சும் கேட்டுருமோன்ற பயத்தில இருந்தேன்”, என்றார் கண்களை விரித்தும் சுருக்கியும் அவருக்கே உரிய பாணியில்.

அந்த உரையாடலினூடே, கோபால் ஃபின்லாந்து பெண்கள் பற்றியும் அவர்கள் குடிப்பதைப் பற்றியும் ஒரு வித ஏளனத்துடன் கேட்டார். அதற்கு அப்பெண், இருக்கலாம் ஆனால் நான் அது மாதிரி பெண் இல்லை என்று தெளிவாக அதே புன்னகையுடன் கூறியது கோபாலுக்கு எப்படியோ? ஆனால் எனக்குத் தேள் கொட்டினார்போல் நறுக்கென்றது.

அங்கிருந்து கடிகார அருங்காட்சியகம் சென்றோம். பலவகை கடிகாரங்களைப் பார்த்தோம். எனக்கு பிடித்தது ஒரு மோதிரத்தில் இருந்த கடிகாரம்.

அந்நேரம் ஃபின்லாந்து நாட்டில், பின் பனி முடிந்து இளவேனில் காலம் ஆரம்பித்தது. சாலையோர மரங்கள் பச்சை ஆடையத் தைத்துக் கொண்டிருந்தன முதுவேனிற் காலத்தில் உடுத்திக் கொள்ளப் பயன்படுமே என்று . சாலையோரமாக இருந்த பனிக் கட்டிகள் உருகி ஆறாக சாலையெங்கும் ஓடிக் கொண்டிருந்தது. அந்த நீரானது அந்த மலைப் பாங்கான இடங்களில் தேங்குவதற்கு வாய்ப்பே இல்லாமல் அழகாக பாதாளச் சாக்கடையினுள் சல சல வென்று சென்று மறைந்தது. அதற்கு ஏதுவாக அந்த பாதாளச் சாக்கடையின் மூடிகள் சிற்சில ஓட்டைகளுடன் இருந்தன. பனி பெய்வது நின்றிருந்தாலும் பனிக் காற்று அடித்து வாட்டியது. அந்தப் பனிக்காற்றில் சிறிது நேரம் நடந்து சென்ற பின்னர் நம் முகத்தில் கையைத் தொட்டுப் பார்தால் நம் முகம் இருக்கும் உணர்ச்சியே இல்லாமலிருக்கும். அவ்வப்பொழுது பெய்யும் மழை மேகங்களினால் சூரியனையும் பார்ப்பது அரிது. அந்த காலநிலையில் நாங்கள் பெரும்பாடுபட்டு வீடுவந்து சேர்ந்தோம்.

கெம்பி வணிகவளாகம்

ஹெல்சின்கியில் உள்ள மிகப் பெரிய வணிகவளாகம் இந்த கெம்பி வணிகவளாகம். அதைத் தாண்டி ஒரு மின்னனு கருவிகள் விற்பனை செய்யும் ஒரு வளாகமும் இருந்தது. அதன் பெயர் நினைவினில் இல்லை. ஏப்ரல் 26, 2009 ல் சனிக்கிழமையன்று காலை மைதிலியின் அழைப்பு என்னை எழுப்பியது. அந்த மின்னனு கருவிகள் விற்பனை செய்யும் இடத்திற்கு செல்ல பாரதி, ரோஹன் மற்றும் மைதிலியுடன் நானும் சேர்ந்துக்கொண்டேன் . ஹெல்சின்கி ரயில் நிலையத்திலிருந்து மெட்ரோ ரயில் நிலையத்தை அடைந்தோம். இங்கு மெட்ரோ ரயில் நிலையமெல்லாம் இருக்கிறதா என்று நினைத்துக் கொண்டேன். அதள பாதளத்திலிருக்கும் மெட்ரோ ரயில் நிலையத்தைப் பார்த்ததுமே எனக்கு நியூயார்க் சப்வே ரயில் நிலையம் ஞாபகத்திற்கு வந்தது. இரண்டிற்கும் ஒரே வித்யாசம், மக்களின் எண்ணிக்கையே. அங்கு மக்கள் கூட்டம் அலைமோதும். இங்கு அப்படி எதுவும் இல்லாமல் அதிகம் அலட்டிக் கொள்ளாத மக்களினால் சலனமற்று இருந்தது. அங்கிருந்து மின்னனு சாதனம் விற்கும் இடத்திற்கு சென்று சுற்றிப் பார்த்தோம். சுற்றித் தான் பார்க்க முடியும் அவ்வளவு விலை ஒவ்வொரு பொருளும். ஒவ்வொரு பொருளின் விலையையும் யூரோவில் பார்த்தவுடன் அதை அப்படியே ரூபாயில் கணக்கிடும்போது இடி விழுவது போலிருந்தது. பாரதி மட்டும் ஏதோ வாங்கியதாய் நினைவு. அங்கிருந்து கெம்பி வணிகவளாகம் வந்தடைந்தோம். அது மிகப் பிரமாண்டமாய் இருந்தது. சற்று பார்க்கக் கவரக்கூடியதாய் இருந்த கடைகளில் நாங்கள் உள் நுழைந்தும் வெளியே வருவதுமாய் இருந்தோம். கால் வலிக்கச் சுற்றித் திரிந்து வீடு வந்து சேர்ந்தோம்.

விமான அருங்காட்சியகம்

மறுநாள் காலை என்னை ஃபையர் அலார்ம் எழுப்பியது. சிறிது நேரத்திற்கெல்லாம் அந்த ஒலி அடங்கியது. யாரோ புதிதாய் வந்த இந்தியன் புகையவிட்டிருக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். மறுபடியும் தூங்கப்போனவனை அழைத்தார் பாரதி. இன்று விமான அருங்காட்சியகம் செல்லலாம் என்று சொன்னார். எனக்கு ஸ்டேயட்டில் இல்லாமல் வேறு எங்கு சென்றாலும் சரி என்று சொல்வதாய் இருந்தேன். தாரிணிக்கும் அன்னாவிற்கும் வேலை இருந்ததால் எங்களுடன் நேற்று வர இயலவில்லை. இன்று தாரிணி மட்டும் எங்களுடன் சேர்ந்துக் கொண்டாள். பாரதி, ரோஹன், மைதிலி மற்றும் தாரிணி யுடன் நான் சேர்ந்துக் கொண்டு விமான அருங்காட்சியகத்திற்கு சென்றேன். அது ’வாந்தா’ என்ற பிராந்தியதிலிருந்தது. கிட்டத்தட்ட விமான நிலையதிற்கு அருகில் இருந்தது. ஹெல்சின்கியிலிருந்து பேருந்தில் ஏறிச் சென்று அந்த இயற்கை எழில் கொஞ்சும் இடத்திற்கு அடைந்தோம். அந்தப் பேருந்தை ஓட்டிச் சென்றவள் ஒரு பெண்மணி. என்ன ஒரு வேகம் ! சிறிது பயந்தே போனேன் அப்படிச் சென்றதும். ஒரு வழியாக அந்த இடத்தை அடைந்தோம். வேனிற் காலம் ஆரம்பித்துவிட்டதை உணர்த்தியது அங்கிருந்த பசுமையான காட்சிகள். எங்கு பார்தாலும் பச்சைப் பசேலென இருந்தது. ஆள் அரவமற்ற இடத்தை அடைந்தோம்.

அந்த அருங்காட்சியகத்தை அடைந்ததும் உள்ளே சில மக்களைப் பார்தேன். இங்கும் மக்கள் இருக்கிறார்கள் என்றெண்ணினேன். உள்ளே பல வகையான விமானங்களைப் பார்த்தோம். பொம்மை விமானங்களிலிருந்து உண்மை விமானங்கள் வரை அனைத்துமே இருந்தது. ஃபின்லாந்து நாட்டின் விமானப் படை விமானங்களும், இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப் பட்ட விமானங்களின் உதிரி பாகங்களும் அங்கே காட்சிக்கு வைக்கப் பட்டிருந்தன. ஒரு புகைப்படத்தைப் பார்த்ததும் வியப்பு. அதில் ஒரு விமானி மேல் கூரையில்லாத ஒரு விமானத்தை ஓட்டிச் செல்வது போலிருந்தது. அந்தக் கடுங்குளிரில் அவர் ஓட்டிச் செல்வது மிகுந்த வியப்பளித்தது. இரண்டாம் உலகப் போரிலும் ஃபின்லாந்து பங்கேற்றது. அப்போது உபயோகப் படுத்திய குண்டுகளும் (500கிலோ, 1000 கிலோ) காட்சிக்கு வைக்கப் பட்டிருந்தன. சில ஆயுதம் தாங்கிய விமானங்களைப் பார்த்ததும் போரின் கொடூரம் என் கண் முன்னே தோன்றி மறைந்தது. அவை அனைத்தையும் கொண்டு வந்திருந்த கேமிராவில் பதிவு செய்தோம். ஒரு உண்மையான விமானமும் அங்கிருந்தது. அதில் உள்ளே சென்று பார்த்து மகிழ்ந்தோம். ஃப்ளைட் ஸிமுலேட்டர் என்னும் கருவி ஆயத்தமாகாததால் அதில் சென்று பயிற்சி செய்ய அனுமதிக்கவில்லை. அங்கிருந்து பயணம் செய்து வீடு வந்து சேர்ந்தோம்.

அன்று ஸ்டேயட் வந்து சேர்ந்ததும், துணி துவைக்க எண்ணி, துணி துவைக்கும் எந்திரத்தில் அழுக்குத் துணிகளைப் போடச் சென்றேன். அப்பொழுது ஒரு இந்தியப் பெண் வரவேற்பரையில் கையில் ஹேண்ஸ்ஃப்ரீ யுடன் அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தாள். பார்க்க தமிழ்ப் பெண் போலிருந்தாள். அவள் அலைபேசியில் பேசியதிலிருந்து தமிழ்ப் பெண் என்பதை நிரூபணம் செய்தேன். திரு திரு வென்று விழித்துக் கொண்டிருந்தாள். நான் துணி துவைக்கப் போட்டுவிட்டு வந்ததும் அவள் என்னை வழிமறித்துப் பேசிய உரையாடல்,

“ஹாய், ஐயம் லஷ்மி, ஆர் யூ ஃப்ரம் இண்டியா?”, என்றாள்.

“யெஸ்”, என்றேன். மேலும் ஆங்கிலத்தில் பேசப் போனவளை நிறுத்தி “சொல்லுங்க”, என்றேன். அவள் சிறிது மகிழ்ச்சி அடைந்தவளாய், என்னிடம்,

“ஓ தமிழா, நான் டிசிஎஸ் ல வேலை பாக்கறேன், நேத்து தான் இண்டியால இருந்து வந்தேன், இங்க ரொம்ப காசு கேக்ராங்க, நான் லாங் டெர்ம் ல வந்ததால எனக்கு கட்டுப்படி ஆகாது”, என்று பேசிக் கொண்டே போனாள். சரி என்றவனாய்த் தலையாட்டிக் கொண்டிருந்தேன்.

“ஒரு அப்பார்ட்மெண்ட் கிடைக்ர வரைக்கும் இங்க தங்கனும். நான் வேற இந்த ஊருக்கு புதுசு, என்ன எங்க கிடைக்கும்னு கூடத் தெரியல, இஃப் யூ டோண்ட் மைண்ட், கேன் யூ ஹெல்ப் மீ”, என்றாள்.

இது என்னடா புது வம்பு என்று தோன்றியது. உடனே மைதிலி, தாரிணி மற்றும் அன்னா தங்கியிருக்கும் அறை ஞாபகத்திற்கு வந்தது. இவளை அவர்களுடன் கோர்த்து விடலாம் என்றெண்ணி அவளிடம்,

“ஓ, சரிங்க, எங்க கூட மூனு பொண்ணுங்க வந்திருக்காங்க, அவங்க கிட்ட உங்கள இண்ட்ரடியூஸ் பன்னி வைக்கறேன், சரியா? அவங்க கண்டிப்பா ஹெல்ப் பண்ணுவாங்க”, என்றேன்.

முகத்தில் மகிழ்ச்சியுடன் “ஓ அப்படியா, சரிங்க”, என்றாள்.

அவர்களின் அறைக்குச் சென்று தாரிணியிடமும், அன்னாவிடமும் இவளை அறிமுகம் செய்துவைத்தேன். அப்போது உள்ளேயிருந்து வந்த மைதிலி இவளைப் பார்த்ததும்,

“ஹேய் நீயா?”, என்றாள் மைதிலி.

பதிலுக்கு லஷ்மி, ”அக்கா நீங்களா?”, என்று கூறிக் கொண்டே, நான்கு கரமும் சேர்த்துக் கொண்டு, நன்றாய்ப் பழகிய தோழிகள் போல் பேச ஆரம்பித்தனர். நான் அவர்களை மாறி மாறிப் பார்த்தேன் இல்லை முழித்தேன். பின்னர் அவர்கள் இருவருக்கும் ஏற்கனவே ஒருவரையொருவர் தெரியும் என்றும், லக்ஷ்மி மைதிலியின் தங்கையின் தோழி என்றும் கூறியவுடன் என் உள்பட மற்றவருக்கும் விளங்கிற்று. உடனே தாரிணி,

“மைதிலி ரஜினிகாந்த் மாதிரி, எங்க போனாலும் அவளுக்கு தெரிஞ்சவங்க இருக்காங்க”, என்றாள் புன்னகையுடன்.

சரி வேலை சுலபமாகிவிட்டதை எண்ணி அங்கிருந்து விடைபெற்றுக்கொண்டேன்.

அடுத்த வாரம் ரோமில் பயணம் செய்வோம்...

Monday, November 23, 2009

எனது ஃபின்லாந்து செலவு - தொடர்ச்சி

பௌலிங்

செல்லோ வில் எனக்குத்தெரிந்த உருப்படியான பொழுதுபோக்கும் இடம் பௌலிங் விளையாடும் இடம். நான் அந்த விளையாட்டை இதுவரையில் திரையில் தான் பார்த்திருக்கிறேன். முதன்முதலாக அங்கு விளையாட கோபால், முருகைய்யன் தூண்டுதலால் வார நாளில் விளையாடச்சென்றோம். எங்களுடன் கிருஷ்ணா, ஸ்ரீனிவாஸ் ராவ், சுப்பு, தாரிணி, அன்னா, மைதிலி ஆகியோரும் சேர்ந்து கொண்டனர். என்னைப் போல் ஒரு சிலரும் அதற்கு புதிது என்பதால், பௌலின் தரையை உடைக்கும் அளவிற்கு அந்த கனமான பந்துகளை உருட்டி விட்டோம். குழுவாகச் சென்றால் இது ஒரு நல்ல பொழுதுபோக்கு. இது இரண்டு மூன்று நாட்களுக்கு நடந்தது. பாரதியையும், சித்தார்தையும் இதில் சேர்க்க முயற்சி செய்தேன். அது முடியாமல் போனது. வாரயிறுதி நாளில் நாங்கள் ஏற்கனவே திட்டமிட்டிருந்த ஈஸ்தோனியா செல்ல ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை அலுவலகத்திலிருந்து புறப்பட ஆயத்தமானோம்.

கப்பல் பயணமும் டாலினும்

நான், சுப்பு, ஸ்ரீனிவாஸ் ராவ், அன்னா, மைதிலி, தாரிணி ஆகியோர் பயண முன்பதிவு செய்த அதே “வைகின் லைன் ஃபெர்ரி” என்னும் துறைமுகத்திற்கு வந்து சேர்ந்தோம். முதன்முதலில் கப்பலில் பயணம் செய்யப் போகிறோம் என்ற எண்ணம் இனம் புரியாத ஆர்வத்தையும், குதூகலத்தையும் உண்டுபன்னியது. ஹெல்சின்கியிலிருந்து டாலினுக்கு நிறைய பேர் வந்து குழுமியிருந்தார்கள். கப்பல் நிரம்பி வழிந்தது என்றே கூறலாம். கப்பலில் 9 அடுக்கு மாடிகள் இருந்தது. கீழ் உள்ள மூன்று அடுக்குகள் கப்பல் சம்மந்தப் பட்டதாகவும், கார் போன்ற வாகனங்களை சுமந்து செல்வதற்காகவும் இருந்தது. ஒரு மாடியில் உணவு விடுதியும், கூத்தடிக்கும்(அதாங்க பார்) இடமும் இருந்தது. மற்ற மாடிகளில் பயணிகள் தங்குவதற்க்கு என்று இருந்தது. பயணிகள் தங்குவதற்க்கு தனி அறைகள் இருந்தன. நாங்கள் அறையில் உடனே தங்காமல் கப்பலில் மேல் தளத்திற்கு வந்து சேர்ந்தோம். அப்பப்பா, என்ன ஒரு குளிர். சும்மா நின்று கொண்டிருந்தாலே குளிராக இருக்கும். அதுவும் கப்பல் நகர்ந்து கொண்டிருக்கிறது. கேட்கவா வேண்டும். அந்த கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் ஃபோட்டோப் பிரியர்களான நானும் மைதிலியும் சில க்ளிக் செய்தோம். கப்பல் ஒன்றும் அவ்வளவு வேகமாக செல்லவில்லை. இருந்தும் காற்றைக் கிழித்து சென்று கொண்டிருப்பதால் குளிரின் கடுமை சற்று அதிகமாகவே இருந்தது. இரண்டரை மணி நேரத்தில் கப்பல் டாலினைச் சென்றடைந்தது. அதாவது இரவு 12 மணிக்கு. ஆனாலும் அதிலே தூங்கிப் போனோம். காலை மறுபடியும் கப்பல் ஹெல்சின்கி செல்வதற்க்கு ஆயத்தப் படுத்தவேண்டியிருப்பதால் கப்பல் தொழிலாளிகள் எங்களை எழுப்பிவிட்டனர். இதுவும் ஷெங்கன் எல்லைகுள் இருந்ததால் எங்களை பாஸ்போர்ட் விசாரிப்பு என்று எதுவும் செய்யவில்லை.

ஈஸ்தோனியா, ஃபின்லாந்திற்கு தெற்கே இருந்தபடியால் அங்கே குளிரின் கடுமை சற்றே குறைந்து காணப்பட்டது அந்நேரத்தில். லேசாக மழையுடனும், மேகமூட்டத்துடனும் (மப்பும் மந்தாரமுமாக) இருந்ததால் மனது அதில் லயிக்கத் துவங்கியது. துறைமுகத்தில் இருந்த சுற்றுலா செய்தி மையம் மூடியிருந்தபடியால், அந்த நபரின் வருகைக்காக காத்திருந்தோம். பின்னர் அவரிடம் சில விவரங்களைக் கேட்டறிந்து, அந்நகரத்தின் வரைபடத்தையும் வாங்கிக் கொண்டு, பெய்யும் சிறு தூறலில் நடக்கலானோம். ஃபின்லாந்திற்கு மிக அருகில் இருந்தாலும் இங்கு பேசும் மொழியோ வித்யாசமானது. மக்களின் குணாதிசயங்கள் ஃபின்லாந்து நாட்டினரையே ஒத்திருந்தது. இவர்களும் ஆங்கிலத்தில் வீக். அங்கிருந்து நடந்து சென்று ஒரு ட்ராமில் ஏறினோம். அதில் “கார்டியாக் கிங் பேலஸ்” என்று எழுதியிருந்தது. அனைவரும் ஏறிச் சென்றோம். கடைசியில் ஒரு ஆள் அரவமற்ற இடத்தில் நிறுத்தியது. அங்கிருந்து கண்ணுக்கெட்டிய தூரத்தில் ஒரு பெரிய பூங்காவும் அதையொட்டி சிறிதளவில் ஒரு வீடும் தெரிந்தது.

அப்பொழுதுதான் பின்பனிக்காலம் முடிந்து இளவேனில் ஆரம்பித்த காலம். எனவே பூங்காவிலுள்ள் புற்பூண்டுகள் பழுப்பு நிறத்திலிருந்து பச்சை வண்ணம் பூசிக்கொண்டிருந்தன. சில இடங்களில் இன்னும் பனிக் கட்டிகள் உருகாமல் வெளேரென்று இருந்தன. சில பாதி உருகி, பாதி அங்குள்ள மண்ணில் கலந்து, வெண்ணிறப் பனிக் கட்டி திருஷ்டி பட்டது போல் கருமையாக இருந்தன. சில இடங்களில் பனி உருகித் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தன. சில மரங்கள் பட்ட மரங்களாகவும், சில துளிர் விட்டும் இருந்தன. அந்த ஆள் அரவமற்ற ரம்யமான இடத்தில் இங்குமங்குமாகச் சென்று சில புகைப்படங்கள் எடுத்தோம். சுப்புவும், ஸ்ரீனியும், தனியாகச் சென்று புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர். ஏனோ தெரியவில்லை. என்ன என்று கேட்டதற்க்கும் சரியாகப் பேசவில்லை. அதன் அர்த்தம் பின்னர் தான் எனக்குப் புலப்பட்டது. அந்தப் பூங்காவின் இறுதியில் ஒரு வீடு இருந்தது என்று சொன்னேனல்லவா? அது தான் அரண்மனையாம். எனக்கு சிரிப்பு தாங்கமுடியவில்லை. உள்ளே சென்று சில ஓவியங்கள், சிற்பங்கள் மற்றும் சில அழகிய வேலைப்பாடமைந்த உபகரணங்கள் இருந்தன. ஓவியங்கள் அழகாகத்தான் இருந்தன. ஆனால் அர்த்தம்தான் புரியவில்லை. இதெல்லாம் ஒரு அரண்மனை, இதைப் பார்க்க வந்தோமே என்றெண்ணினேன். உடனே அந்த அழகான பூங்காவைப் பார்த்த ஞாபகம் வந்ததால் அந்த அலுப்பு நீங்கியது.

அங்கிருந்து கண்ணுக்கு எட்டிய தொலைவில் கடற்கரை தெரிந்தது. சிறிது தூரம் நடந்த பிறகு அங்கே அடைந்தோம். ஹெல்சின்கியில் உறைந்து காணப்பட்ட அதே பால்டிக் கடல் தான். அலையே இல்லாத பால்டிக் கடல். நம்மூர் ஏரியைப் போல் சிற்சில அலைகள் அவ்வளவுதான். தனிமையில் வங்காள விரிகுடா முன், எழுந்து விழும் அலைகளின் நாட்டியத்தையும், அலையோசையையும் ஒருங்கே கண்ட அரங்கேற்றத்தை இக்கடலில் கண்டு கேட்கக் கிடைக்காததால் எரிச்சல் தான் வருகிறது. இருந்தாலும் டாலின் துறைமுகத்திற்கு வந்து செல்லும் கப்பல்களின் அழகைக் கண்டுகளிக்கலாம். பின்னர் நண்பகல் நேரம் வந்தது. அனைவருக்கும் பசி. உடனே கண்கள் இந்திய உணவு விடுதியைத் தேட ஆரம்பித்தது. காலையில் அந்த சுற்றுலா செய்தி மைய அம்மணியிடம் கேட்டிருந்த சில குறிப்புகளால் மஹாராஜா ஹோட்டலை சென்றடையும் வழியை நெருங்கிவிட்டோம். அங்கிருந்து ஒரு வழியாக உணவு விடுதியை அடைந்து உணவுகளைக் கோரினோம். அவர்கள் எங்கள் பொருமையைச் சோதித்தார்கள். உண்டவுடன் ஏற்படும் புதுத்தெம்பினால் டாலின் பழைய நகரத்தைச் சுற்ற தீர்மானித்தோம். நாங்கள் பார்க்கிறோமோ இல்லையோ, எங்கள் கேமிராவில் தான் முதலில் கை சென்று க்ளிக் செய்தன. இந்த நகரம் எனக்கு மிகவும் பிடித்துப்போனது. 1600 ம் ஆண்டுகளில் கட்டியிருந்த பழைய கட்டிடங்கள் பிரம்மாண்டமாக நெடிதுயர்ந்து காட்சியளித்தன. கும்பல் கும்பலாக சென்ற மக்களினூடே எங்கள் நண்பர்கள் திடீர் திடீரென்று மறைந்து பின்னர் அவர்களைக் காணும் போது அப்பாடா என்று தோன்றும். அங்கு சில கடைகளுக்குள் சென்று தாரிணியும், மைதிலியும் ஷாப்பிங் செய்தனர்.

சிலதூரம் நடந்த பிறகு, திரும்பிச் சென்று, வேறு ஏதாவது இடத்தைப் பார்க்கலாம் என்று தீர்மானித்தோம். திரும்பி வரும் வழியில், மைதிலி ஒரு டாலின் கிழவரிடம் தன் கேமிராவைக் கொடுத்து சில புகைப்படம் எடுக்குமாறு கேட்டுக் கொண்டார். பின்பு அதே குறும்புக்கார கிழவரிடத்தில் சென்று எங்களுடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ளவேண்டுமென்று கேட்டுக் கொண்டாள். (போயும் போயும் அந்த தாத்தா தானா கிடைத்தார் ?). அவர் ஒரு குறும்புக்கார தாத்தா தான். அவர் ஒரு பெரிய குழுவினருடன் வந்திருந்தார். அந்த குழுவே இவரால் கல கல வென்றிருந்தது. நான் தான் அந்த புகைப்படம் எடுக்கலானேன். அந்தக் குழுவை புகைப்படத்தில் அடக்க சற்று தள்ளி நின்று புகைப்படம் எடுத்தேன். புகைப்படம் எடுத்தவுடன் அங்கு சற்று கல கல வென்றிருந்தது. மைதிலியிடம் அந்தக் கிழவர் ஏதோ கேட்டுக் கொண்டிருந்தார். உடனே களீர் என்ற சிரிப்புச் சத்தம் கேட்டது. உடனே சுப்பு, நோ நோ என்று படுவேகமாக சென்று அந்தக் கிழவரிடம் ஏதோ கூற, அவரும் சிரித்துக்கொண்டே கிளம்பினார். ஒன்றும் புரியாத மைதிலி என்னிடம் வந்து,

“என்னங்க, என்ன ஆச்சு? எனக்கு ஒன்னும் புரியலயே”, என்றாள் ஒன்றும் புரியாதவளாய்.

“எனக்கு எப்டிங்க தெரியும், நான் அங்கல்ல இருந்தேன்”, என்றேன். உடனே சுப்புவிடம் விஷயம் கேட்டறிந்தேன்.

அதை நாசுக்காக மைதிலியிடம் சொன்னவுடன் அவளின் கண்கள் அகல விரிந்தது.

“அய்யோ, என்ன பெரிய தப்பு நடந்திருக்கும்”, என்றவள், சுப்புவிடம் நன்றி தெரிவித்துக்கொண்டாள்.

நல்லவேளையாக சுப்பு (சூப்பர் சுப்பு - ஹீரோ கணக்கா) அன்று காப்பாற்றினார். இல்லையென்றால் அவள் அன்று முழுதும் அழுதுகொண்டிருந்திருப்பாள்.

அந்தக் குறும்புக்கார கிழவர் மைதிலியிடம் அப்படி என்ன கொடுக்க வந்தார்? தாரிணி பின்னாளில் அந்தக் கிழவரை ”டாலின் கமல்” என்று சரியான பெயர் வைத்து நான் எடுத்த அந்தக் கிழவர் இருந்த புகைப்படத்திற்கு பெயரிட்டிருந்தாள். இப்பொழுது புரிந்திருக்குமே?

ஆனால் ஒன்று மட்டும் புரியவில்லை. அந்த விஷயம் நடந்த நேரத்தில் தாரிணி ஒரு பத்து அடி தள்ளி நின்றுகொண்டிருந்தாள். புகைப்படம் எடுத்தவுடன் ஒரே ஓட்டமாக ஓடுவதைப் பார்த்தேன்.

அங்கிருந்து ஓபன் ஏர் மியுசியம் ( திறந்தவெளி அருங்காட்சியகம்) பார்க்க சென்றோம். அதுவும் ஒரு ஆள் அரவமற்ற ஒரு இடம். அது ஒரு பழைய கிராமம். அதை அப்படியே வைத்திருக்கிறார்கள். அதன் பாதையும் சரி, அதிலுள்ள குடிசைகளும் சரி, ஆங்காங்கே இருக்கும் சேறும் அப்படியே ஒரு இந்திய கிராமத்தைப் பார்ப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. அதனுள் நுழைந்தவுடன் ஒரு வழிகாட்டி ஹெட்ஃபோனையும், ஒரு வரைபடத்தையும் குடுத்தார்கள். சில நேரமே அதில் கவனம் செலுத்தினேன். பின்னர் அதைக் கழட்டி விட்டு தனியாக சில தூரம் நடந்து சென்றேன். அதன் பாதை நீண்டுகொண்டே சென்றது. உள்ளே போக போக காடு வளர்ந்துகொண்டிருந்தது. உடனே பின்னால் வருபவர்களுக்காக காத்திருந்தேன். புகைப்படங்கள் எடுத்து பின்னர் வந்த வழியே திரும்ப தீர்மானித்தோம். அந்த இடமும் இப்பொழுது பார்க்கக் கூடிய இடமன்று. வேனிற் காலத்தில் பச்சைப் பசேலென்றிருக்கும்போது காண வேண்டியது என எண்ணினேன். அதற்குள் நேரமாகிவிட்டது. உடனே துறைமுகத்திற்கு செல்ல முடிவெடுத்தோம். மறுபடியும் எந்தப் பக்கம் பேருந்திற்கு நிற்பது என்பது பற்றிய குழப்பம். மறுபடியும் சரியாக வழியைப் பார்க்கவில்லை என்று என்னைத் திட்டத் தொடங்கிவிட்டார் சுப்பு. அதுவரைக்கும் எதிலும் கலந்துகொள்ளாமல் ”அவர் வேறு நாங்கள் வேறாக” வந்துக் கொண்டிருந்தவர் திடீரென்று என்னை ஏன் திட்ட வேண்டும் என்று எண்ணிக்கொண்டேன் மனதில் ஆத்திரத்துடன்.

அங்கிருந்து துறைமுகத்திற்கு செல்ல ஒரு பேருந்து வந்தது. பிறகு பேருந்து நிறுத்தத்திலிருந்து ஒரு ஈஸ்தோனிய ஆசாமி எங்களுக்கு உதவினார் துறைமுகத்தை அடைய. அவரை அணுகுவது மற்றும் விசாரிப்பது போன்ற, எல்லாவற்றிற்கும் ஒரு சிறு உதவி கூட புரியாமல் சுப்பு வந்தது என் மனதை உறுத்தியது. பிறகு அப்படி எதிர்பார்ப்பது தவறு என்றென்னினேன். அங்கிருந்து ஃபெர்ரி யைச் சென்றடைந்தோம். சில நிமிடங்களில் கப்பல் நகர ஆரம்பித்தது. இது பகல் வேளையாததால் அறை எதுவும் ஒதுக்கவில்லை. சில நாற்காலிகளைப் போட்டு அதில் அமர்ந்து வரவேண்டுமாம். எனக்கு அங்கு உட்கார மனமில்லை. உடனே தாரிணி என்னிடம்,

“ஏங்க, நாங்க மேல் மாடிக்கு போறோம், எங்க பேக் லாம் பார்த்துகரிங்களா?”, என்றாள்

“ஹலோ நானும் வரேன், இங்க இருந்து நான் என்ன பன்னபோறேன்”, என்றேன்.

“சுப்பு, நீங்க வர்ரீங்களா?”, என்று கேட்டேன்

“ ”,

பதில் ஏதுமில்லை அவரிடமிருந்து.

“சரி வரலனா எங்க பேக் பாத்துக்கரிங்களா?”, என்றேன்

“”,

பதிலேதுமில்லை மறுபடியும் அவரிடமிருந்து. அனேகமாக அவரது எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றிக்கொண்டிருந்தேன். கோபத்தில் அவரது கண்கள் தீப்பொறி பறந்தது.

நாங்கள் எங்கள் பைகளுடன் மேலே சென்று கப்பல் செல்லும் அழகைப் பார்க்கலானோம். புகைப்படங்களாய் எடுத்துத் தள்ளினோம். சுற்றி சுற்றி வந்து, அவ்வப்போது கப்பலின் உள்ளே வந்து குளிரிலிருந்து தப்பிப்பதற்காக அசுவாசப்படுத்திக்கொண்டு மீண்டும் வெளியே சென்றோம். சிறிது நேரம் கழித்து சுப்புவும் அவரது கேமிராவைக் கொண்டு சில புகைப்படங்களை எடுத்தார், ஆனால் அவர் எங்கள் பக்கம் வரவேயில்லை. பின்னர் உணவகத்திற்கு செல்ல தீர்மானித்தோம். அங்கே ஒரே கூத்தும் கும்மாளமுமாக இருந்தது. அருகில் சென்று பார்த்தால், ஒரு பெண்மணி பாட்டு பாடியும், உற்சாகமாக பேசிக்கொண்டும் அங்கிருந்த குழந்தைகளை உற்சாகமூட்டிக்கொண்டிருந்தாள். சிறியவர்கள் மட்டுமின்றி, பெரியவர்களும் அந்தக் கூத்தில் சேர்ந்துக்கொண்டனர். அங்கிருந்தவர்களில் எல்லரின் கையிலும் குறைந்தது ஒரு பீர் கோப்பையாவது இருக்கும். அந்தப் பெண்மணி என்ன பேசுகிறாள் என்று தெரிந்து கொள்ளமுடியவிலை. ஃபின்னிஷ் மொழியில் பேசிக்கொண்டிருக்கவேண்டும். அங்கு இன்னொரு கவனத்தைக் கவரும் விஷயம், ”டேக்ஸ் ஃப்ரீ ஷாப்பிங்” ல் மூட்டை மூட்டையாக ஆல்கஹாலை வாங்கிக் குவித்துக் கொண்டிருந்தார்கள் ஃபின்னிஷ் ஆசாமிகள். ஆல்கஹால் பிரியர்கள் உலகமெங்கும் ஒரே மாதிரி தான் இருப்பார்கள் போலும். நாங்கள் ஹெல்சின்கி வந்தவுடன் அங்கிருந்து சில பேரால் நடக்கக்கூட முடியாத அளவிற்க்கு குடித்துவிட்டிருந்தனர். அவர்களைத் தாங்கி கொண்டே அவர்கள் கூட வந்திருந்த பெண்ணோ அல்லது ஆணோ துறைமுகத்தை அடைந்தனர்.

அங்கிருந்து ஹெல்சின்கி ரயில் நிலையத்திற்கு செல்ல ஒரு ட்ராமில் ஏறினோம். அது நிரம்பி வழிந்தது. அப்போது மெத்தக் குடித்திருந்த ஒரு ஃபின்னிஷ் பெண்மணி மைதிலியைப் பார்த்தவுடன், பின்வருமாறு ஆங்கிலத்தில் உரையாடியதை தமிழில்,

“நீங்கள், இந்தியப் பெண்மணியா?”, என்றாள்

“ஆமாம்”, என்றாள் மைதிலி.

“நீங்கள் ஹெல்சின்கியைச் சுற்றிப் பார்த்து விட்டீர்களா?”, என்றாள் அப்பெண்மணி.

ஆம் என்பது போல் தலையசைத்தாள்.

“ஹெல்சின்கியில் ஒரு அதிசயமான சர்ச் உள்ளது, அதன் பெயர் சர்ச் அண்டர் தி ராக், முடிந்தால் அதையும் பார்த்து விடுங்கள்”, என்றாள்.

பின் ஏதேதோ பேசினாள் அப்பெண்மணி. உடனே அப்பெண்மணியைப் பற்றி சிறிது நேரம் பேசிச் சிரித்து அங்கிருந்து லெப்பவாரா வை (அதாங்க செல்லோ இருக்கும் இடம்) அடைந்தோம். அங்கிருந்து ஸ்டேயட் நடந்து சென்றோம். அன்றிலிருந்து அந்த “சர்ச் அண்டர் தி ராக்” ஐப் பார்க்க எவ்வளவோ திட்டமிட்டும் அதைப் போய் பார்க்க முடியவில்லை.

ஸ்டாக்ஹோம் போய் வந்திருந்த கிருஷ்ணாவும் நானும் மறுநாள் சமைத்து உண்டோம். பின்னர் சுப்பு எங்கள் அறைக்கு வந்து கிருஷ்ணா விடம் என் முன்னிலையில் பேசிக் கொண்டிருந்தார்.

“எப்டி போச்சுங்க சுப்பு”, கிருஷ்ணா ஆரம்பித்தார்.

“ஒரே காமெடியா இருந்துச்சு போங்க”, என்ற சுப்பு தொடர்ந்தார்.

“அவங்களா டிசைட் பன்றாங்க, அவங்களா போராங்க“ என்று என்னைக் குற்றம் செய்தவராகப் பார்த்தார்.

“என்னங்க எல்லாம் நல்லாத்தானே முடிஞ்சுது, பின்ன ஏன் இப்டி பேசரிங்க”, என்றேன்.

”அவங்க அவங்க ஒரு எடத்துக்கு போறாங்க, என் பேச்சை யாருமே கேக்கல, இவனும் அந்த பொண்ணுங்க கூடவே போறான்”, என்று கத்திக் கூறி, இன்னும் ஏதேதோ கூறி, தான் காப்பாற்றிய விஷயத்தையும் கூறிமுடித்தார்.

மேற்கூறியவற்றில் கடைசி வார்த்தை என்னை ஈட்டியில் குத்தியது போல் இருந்தது.

“ஏங்க நாம எல்லரும் ஒன்னாதானே போனோம், இப்ப அந்த பொண்ணுங்க கூட போறேன்னு பிரிச்சு பேசரிங்களே”, என்றேன் எரிச்சலாய்.

“” , பதிலேதுமில்லை சுப்புவிடம். சிறிது மௌனத்திற்கு பிறகு,

“சுப்பு, அவங்க சின்ன பசங்க, அப்டி தான் போவாங்க, நீங்க தான் கண்ட்ரோல் ல வச்சிருக்கனும்”, என்றார் கிருஷ்ணா.

“சரிங்க உங்கள மதிக்கலனு பேசரிங்களே, அங்க நீங்க ஏதோ மூனாவது மனுஷன் மாதிரி பிஹேவ் பன்னினீங்களே”, என்றேன் கோபத்தை அடக்கியவாறு.

“எனக்கு கோபம், அதான் அப்டி செஞ்சேன்”, என்றார் அசட்டையாக.

“சரி விடுங்க எல்லாம் நல்லதா தானே முடிஞ்சது, நீங்க ரெண்டுபேரும் ஏன் கோபப்படரீங்க”, என்று சமாதானம் செய்ய முயற்சி செய்தார்.

அதற்கு மேல் எனக்கு அங்கு இருக்கப் பிடிக்கவில்லை. அவ்வளவு தான், சுப்பு இனிமேல் எங்களுடன் எந்த ஒரு பயணத்திற்கும் வரவில்லை. அவரை மதிக்கவேயில்லை என்ற அவரது குற்றச்சாட்டு நியாமானதே. அதைப் பின்னர் யோசித்து உறுதி செய்தேன். பின்னாளில் இது போல் நடந்ததை நான் மறந்தே போனேன். அவரிடம் சகஜமாகப் பேச ஆரம்பித்துவிட்டேன். இப்பொழுது நாட்குறிப்பில் பார்க்கும்போதுதான் அந்த நிகழ்வு ஞாபகத்திற்கு வருகிறது. இதைப் போன்ற நிகழ்வு எல்லார் வாழ்விலும் நடக்கக் கூடியதே. அதனால் இதை மறைத்தெழுத மனம் இல்லை.

முருகைய்யனின் பிரிவு

மறுநாள் ஏப்ரல் 13, 2009, ஈஸ்டர் மண்டே. விடுமுறை தினம். அன்று நானும் கிருஷ்ணாவும் முருகைய்யனுக்காக சாப்பாடு செய்தோம். விதவிதமாக ஏதோ எங்களால் முடிந்த வரை செய்து பின்னர் முருகைய்யனின் பாராட்டைப் பெற்றோம். அதற்குள் நான் சமைக்க ஓரளவு கற்று வைத்திருந்தேன். அதன் பின்னர் செல்லோவில் பௌலிங் விளையாட முடிவுசெய்தோம். கோபால் தான் ஒருங்கிணைப்பாளர். முருகைய்யன், நான், மைதிலி, அன்னா, தாரிணி வந்தனர். பாலா, பாரதியும், சித்தார்தையும் கூப்பிட முயற்சி செய்தோம். பலனில்லை. அவர்கள் ஈஸ்த்தோனியா சென்றிருந்தனர். மற்றவர் யாரும் வரவில்லை. முருகைய்யனுக்கு இன்னும் ஒரு வாரமே இருந்தது இந்தியா செல்ல. அவர் அந்த குதூகலத்தில் இருந்தார். பௌலிங் விளையாடிக் கொண்டிருக்கும்போதே கோபால் திடீரென்று கிளம்பிவிட்டார். நாங்கள் விளையாடி முடித்த பின்னர் அங்கிருந்த ஒரு பிஸ்ஸா ஷாப்பில் சாப்பிட எத்தனித்தோம். அங்கு நடந்த உரையாடல்,

“என்ன எல்லாரும் அமைதியா சாப்ட்ரீங்க, ஏதாச்சும் பேசுங்க”, என்று ஆரம்பித்தார். பின்னர் தொடர்ந்தார்.

“கணேசன் இன்னிக்கு நல்லா விளையாடினான். எனக்கு தெரியும் அவனை சின்னதா மோடிவேட் பன்னினா நல்ல பன்னுவான்,
ஹே யு நோ வி வொர்க்ட் இன் எ டீம் இன் ப்ரீவியஸ் கம்பனி”, என்றார்.

”அண்ட் ஹி வாஸ் மை மேனேஜர் தேர்”, என்று கூறி நகைத்தேன்.

“ஒவ்வொருத்தருக்கும் ஒரு டேலண்ட் இருக்கு. மைதிலி இஸ் எ கிளாசிக்கல் டேன்ஸர். ஹவ் அபவுட் யு அன்னா?”, என்று கேட்டார்.

“ஐ யூஸ்டு டு பி எ மாரத்தான் பிளேயர்”, என்றாள். எனக்கு ஃபிராங்க்ஃபர்ட் விமான நிலைய சம்பவம் நினைவுக்கு வந்தது.

“தாரிணி சிங்ஸ் வெல், டு யு நோ தட்?”, என்று முருகைய்யனைப் பார்த்துக் கேட்டேன்.

”ஓ அப்டியா, குட்”, என்றார்.

”ஐ வில் டெல் அபவுட் கணேசன், ஹி வாஸ் எ ஸ்கூல் டாப்பர்”, என்று கூறி என்னைப் பார்த்து புன்னகை புரிந்தார்.

பின்னர் முருகைய்யனைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். அவர் தான் இன்னும் ஒரு வாரத்தில் இந்தியா செல்வதையே பெரிதாகக் கூறிக்கொண்டிருந்தார். பின்னர் தாரிணியை ஸ்டேயட் வரும் வரை பாடச் சொல்லி கேட்டுக் கொண்டார். நாங்களும் மெய் மறந்து கேட்டுக் கொண்டே வந்தோம். அவளின் குரல் தான் எத்துனை அழகு. முதன் முதலாக அவள் பாடக் கேட்டேன். குரலில் தான் எத்தனை இனிமை. கேட்டுக் கொண்டே இருக்கவேண்டும் போலிருந்தது. வழக்கமாக கடினமாக இருக்கும் லெப்பவாரா விலிருந்து ஸ்டேயட் நடைப்பயணம் அவளின் பாடலினால் எளிதானது. அதற்குள் ஸ்டேயட் வந்துவிட்டது.

மலரும் மனம் தொடரும் ...

Sunday, November 22, 2009

எனது ஃபின்லாந்து செலவு

இதைப் படிப்பவர்கள் ஏதோ இதை எழுதியவன் ஃபின்லாந்து நாட்டிற்குச் சென்று அங்கு அவன் செய்த பொருட்செலவைப் பற்றி எழுதப்போகிறான் என்று நினைக்க வேண்டாம். இதுவும் ஒரு பயணக் கட்டுரையே! "செலவு" என்ற வார்த்தைக்குப் பொருட்செலவு என்றே நினைக்கும் நம்மவர்களிடம் இதைத் தெளிவு படுத்த விழைகிறேன். இந்த வார்தையை நான் பள்ளியில் பயின்ற காலத்தில் ஏதோ ஒரு வகுப்பில் தமிழ்ப் பாடத்தில் யாரோ எழுதிய "எனது இலங்கைச் செலவு" என்னும் தலைப்பில் படித்ததாக ஞாபகம்.

"நம் வாழ்நாளில் ஓவ்வொரு மணித்துளியும், பொருட்செல்வத்தை விடவும் மேலனது, எனவே செலவு என்பதை, என் பயணக்காலம் என்றே குறிப்பிடுகிறேன்" என்று அவர் குறிப்பிட்டதை இங்கே நினைவு கூற்கிறேன்.

யார் எழுதியது என்று ஞாபகம் இல்லை. ஆனால், இலங்கை பற்றி அவர் கூறிய வர்ணணைகள் இன்னமும் என் சிந்தையில் இருக்கின்றது. ஃபின்லாந்து நாட்டில் நான் தங்கி இருந்த காலத்தினை "எனது ஃபின்லாந்து செலவு" என்னும் இக்கட்டுரையில் பதிவு செய்ய முயற்சி செய்துள்ளேன். இது என் கன்னிக் கட்டுரையாதலால் மனதில் சிறிது அச்சம் இருக்கிறது. இதைப் படிப்பவர்கள் எப்படி எடுத்துக்கொள்வார்களோ? இக்கட்டுரையில் வருபவர்கள் இதைப் படிக்கும் பொழுது அவர்கள் மனம் புண் படக்கூடுவதற்கு வாய்ப்பு இருக்குமோ? அவர்களை தர்மசங்கடமான நிலைக்கு ஆளாக்குவேனோ? என்றெல்லாம் நினைத்து, கார்காலத்தில் கருமேகங்கள் நிலத்தை ஆட்கொள்ளும் மாதிரியான ஒரு உணர்வு என்னை ஆட்கொள்கிறது.

இது ஒரு அலுவலகப் பயணம், சொந்தச் செலவில் சென்ற பயணமன்று. ஐ.பி.ஆர் ல் நான் உடன்படிக்கை செய்துள்ளபடியால் அலுவலகப்பணியைப் பற்றி இங்கே நான் கூறலாகாது, கூறினாலும் அவ்வளவாக சுவாரசஸ்யமாக இராது என்பது அறிந்ததே. அலுவலகப் பணிக்காக 2வது குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் 7 நபர்கள். அதில் நான், பாலா, தாரிணி, மைதிலி, அன்னா ஜார்ஜ், சுப்பு, ஸ்ரீனிவாஸ் ராவ் இருந்தோம். ஃபின்லாந்து பயணத்திற்கு முன்னர் எனக்கு, இவர்கள் யாரிடமும் அவ்வளவாக பரிச்சயம் கிடையது. இந்த பயணம் ஒரு சூனியமாகப் போகிறது என்றென்னியெ நான் பயணத்தை தொடங்கினேன். என்னை மடையனாக்கி என் நினைப்பைத் தவறென்று நிரூபித்தது பின்னாளில் எனக்கு ஏற்ப்பட்ட அனுபவங்கள். தூர தேசதிற்கு திரவியம் தேடச்சென்ற தந்தை வீடு திரும்பும் போது, குழந்தையின் முகத்தில் ஏற்படும் மகிழ்ச்சியைப் போன்று, ஃபின்லாந்தில் எனக்கு வாய்த்த புதிய நண்பர்களினால் தினமும் எனக்குள் ஏதோ ஒரு குதூகலத்தை உண்டாக்கி விட்டிருந்தது. அங்கே முந்தய குழுவில் சென்றிருந்த முருகைய்யன், கிருஷ்ணா, ரோஹன், பாரதி மற்றும் சித்தார்த் ஆகியோர் இருந்தனர்.

ஃபின்லாந்தில் நாம் பயணிப்பதற்கு முன்னால், அந்நாட்டினைப் பற்றியும், வரலாற்றைப் பற்றியும் அங்குள்ள தட்பவெப்பம், மக்களைப் பற்றியும் எனக்கு தெரிந்ததை இங்கே கூற விரும்புகிறேன்.

ஃபின்லாந்து ஒரு அறிமுகம்...

ஃபின்லாந்து, வட ஆர்க்டிக் பகுதியை ஒட்டியுள்ள, ஸ்கேண்டினேவியன் தீபகற்பதில் அடங்கிய நாடு. இது சரித்திர பூகோளம் படித்த அனைவருக்கும் தெரிந்ததே. வடக்கே நார்வே, கிழக்கே ருஷ்யா, மேற்கே ஸ்வீடன், தெற்கே பால்டிக் கடலை ஒட்டிய ஈஸ்டோனியா ஆகிய நாடுகளை எல்லைகளாகக் கொண்டிருக்கின்றது. இது ஒரு கடுங்குளிர் பிரதேசம். இதன் வட பகுதி ஆர்க்டிக் பகுதிக்கு அருகில் இருப்பதால் அங்கு குறைவான மக்களே வசிக்கின்றனர். நாட்டின் தென் பகுதியில் தான் பெரும்பாண்மையான மக்கள் வசிக்கின்றனர். அதுவும் அந்நாட்டின் தலைநகரான ஹெல்சின்கி மற்றும் அதைச் சுற்றியுள்ள எஸ்பூ, வாந்தா மற்றும் டுற்கு பகுதியில் அனேகம் பேர் வசிக்கின்றனர். இது ஒரு கடுங்குளிர் பிரதேசமாக இருந்தாலும், வேனில் காலத்தில் இது ஒரு இயற்கை எழில் கொஞ்சும் நாடாகக் காட்சி அளிக்கிறது.

இணைய வலையில் ஃபின்லாந்து நாட்டின் வரலாற்றைத் தேடும் போது சில சுவரஸ்யமான சம்பவஙகள் கிடைத்தன. ஆனால் இந்திய விடுதலையைப் போராட்டத்தைப் போன்று அவ்வளவு பிரமாதமாக இல்லை. ஃபின்லாந்து முதலில் ஸ்வீடன் பேரரசின் ஒரு பகுதியாக பல வருடங்களாக இருந்து வந்தது. பின்னர் கி.பி. 1800 ம் ஆண்டு வாக்கில் ருஷ்யா இப்பகுதியை கைப்பற்றியது. அதன் பிறகு ருஷ்யப் பேரரசின் ஆட்சியின் கீழ் இருந்து வந்தது. பின்னர் 1900 ஆண்டில் ஏற்பட்ட உள் நாட்டு போரினால் விடுதலை பெற்றது. ஸ்வீடன் பேரரசு ருஷ்யாவின் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த, ஹெல்சின்கி க்கு அருகில் உள்ள தீவில் ஒரு கோட்டையக் கட்டியது. இது ஸ்வாபோர்க் என்று ஸ்வீடிஷ் மொழியில் வழங்கப்பட்டது. பின்னர் அதுவே ஃபின்னிஷ் மொழியில் சுயோமென்லின்னா என்று அழைக்கப்பட்டது. இதன் அழகைப் பற்றி பின்னர் விரிவாக பார்ப்போம். ஃபின்னிஷ் என்பது ஆங்கிலச்சொல். சுயோமி என்பதே அந்நாட்டின் மொழியில் அழைக்கப்படுகிறது. ஆங்கிலாதிக்கம் இங்கும் விடவில்லை போலும்.

ஆண்டில் பெரும் பகுதி பனியால் படரப்பட்டு இருக்கும். பனி இல்லவிட்டாலும், குளிர் இருந்து கொண்டு மக்களை வாட்டும். வேனில் காலம் என்று அழைக்கப்படும் நாட்களில் மட்டும் குளிர் குறைந்து இருக்கும். ஆனாலும் சுட்டெறிக்கும் வெயிலை இங்கு காண்பதரிது. இதன் காலநிலை அதே படியில் உள்ள கனடா நாட்டைப் போன்று கடுங்குளிர் இல்லாமல் இருக்குமென்றும், இதற்கு அந்நாட்டின் பூகோள அமைப்பே காரணம் என்றும் கூறப்படுகிறது.

இந்நாட்டின் மக்கள் மிக அமைதியாக உள்ளவர்கள். நேரடியாக சொல்லப்போனால் மந்த மானவர்கள், பழகுவதற்கு மட்டுமே! எந்த வம்பு தும்புக்கும் போக மாட்டார்கள். தங்கம் போன்றவர்கள். தங்கம் ஒரு மந்தமான உலோகம். அவ்வள்ளவு சீக்கிரம் மற்ற உலோகங்களைப் போன்று வினை புரியாது. இனி யாரேனும் உங்களைத் தங்கம் என்று கூறினால் அவர் மேல் கோபங்கொள்ளுங்கள். பொருளாதாரதில் முன்னனியில் உள்ள நாடுகளில் இதுவும் ஒன்று. இங்கு எல்லமே இறக்குமதி செய்யப்படுவதால், அத்தியாவசியப் பொருட்களின் விலை கூட மற்ற நாடுகாளை விட மிக மிக அதிகம். இங்குள்ள இளம் தலைமுறையினருக்கு ஆங்கிலம் தெரிந்திருக்கிறது. ஒரு முறை ராணுவ அதிகாரிகளால் நாங்கள் விசாரிக்கப்பட்ட போது கூட மிகப் பொறுமையாக அவர் உச்சரித்த ஆங்கிலம், மற்றும் மென்மையாக எங்களைக் கையாண்ட விதமுமே அவர்களின் மனநிலையை உணர்த்தியது. உலகமயமாக்கலே ஆங்கிலம் கற்ப்பிகப் படுவதற்க்கு காரணம் என்று ஒரு ஃபின்னிஷ் ஆசாமி கூறினார். மற்றபடி எங்கு பார்தாலும் ஃபின்னிஷ் மொழி தான் கண்ணுக்குப் புலப்படும். இங்கு பொதுப் போக்குவரத்து மற்ற ஐரோப்பிய நாடுகளைப் போன்று அருமையாக உள்ளது. பேருந்து, தொடர்வண்டி, ட்ராம் என்று எல்லாவற்றிற்கும் ஒரே கட்டணம். அங்கே போக்குவரத்து பிராந்தியமாக(எஸ்பூ, ஹெல்சின்கி என்று) பிரிக்கப்பட்டுள்ளது. இது பொது மக்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் மிக்க வசதியை உண்டாக்கி இருக்கிறது. அத்தியாவசிய உட்கட்டமைப்பு தேறியிருக்கிறது. இதையெல்லாம் பார்க்கும் போது, நம் தாய் நாட்டில் எப்பொழுது இது மாதிரி ஆகும் என்ற எண்ணம் தோன்றி மறைகிறது.

சரித்திர, பூகோள, காலநிலைப் பற்றியும், மக்களைப் பற்றியும் பார்தாயிற்று. இதைப் பற்றி இன்னும் மேலே சொல்லி வெறுப்பேற்ற விரும்பவில்லை. இனி நம் பயணத்தைத் தொடர்வோம்.

சென்னை விமான நிலையத்தில் ...

ஃபின்லாந்திற்கு பயணம் செய்ய ஆயத்தமாக அனைவரும் ஒன்றன் பின் ஒன்றாக ஒரு வழியாக சென்னை விமானநிலையம் வந்து சேர்ந்தோம். நான் விமான நிலையம் வந்து சேர்ந்த பொழுது பாலாவும் அன்னா ஜார்ஜும் வந்து சேர்ந்திருந்தார்கள். பாலா தனியாக வந்தார். அன்னா அவளுடைய நண்பர்களுடன் வந்திருந்தாள். நான் என் பெற்றோருடன் வந்திருந்தேன். ஸ்ரீனிவாஸ் ராவ் ஒரு பெரிய குடும்பத்தோடு வந்து சேர்ந்தார். தாரிணியும் மைதிலியும் தத்தம் குடும்பங்களுடன் வந்திருந்தனர். சில புகைப்படங்கள் எடுத்தோம். ஏற்கனவே வெளிநாட்டுப் பயணம் செய்திருந்த சுப்புவோ சீக்கிரம் வரவேண்டும் என்றரிந்தும், வெகு நேரம் கழித்தே வந்து சேர்ந்தார். எல்லரையும் உற்று உற்று பார்த்துக்கொண்டிருந்த என் அம்மா வை நான் பார்த்துக்கொண்டிருந்தேன். ஃபின்லாந்துக்குப் போய் என்ன பார்த்துக் கொண்டிருந்தாய் என்று கேட்க நினைத்துக் கொண்டேன்.

பாலா, அன்னா வைப்போல் இல்லாமல், நான் மற்றவர்கள் அனைவரும் வந்து சேரக் காத்திருந்தபடியால், அதற்குள் செக்கின் செய்யுமிடம் ஏகக் கூட்டம். பெற்றோருடன் விடைபெற்றுக்கொண்டு செக்கின் செய்யுமிடம் வந்து சேர்ந்தோம். செக்கின் செய்யுமிடம் அந்தப் பெண்மணி எங்கள் பைகளை உள்ளே செல்ல அனுமதிக்க வில்லை, காரணம் அதிக எடையாம். சீக்கிரம் வந்திருந்தால் இந்த தொல்லை இருந்திருக்காது என்று நினைத்தேன். பின்னர் எடையைக் குறைப்பதற்காக பொருட்களை பெட்டியில் மாற்றி மாற்றி வைத்து சமாளித்தோம். அப்பொழுது நான் அடைந்த பரபரப்பைப் பார்து தாரிணி,

"ஏன் பரபரப்பா இருக்கிறீங்க, பொறுமையா எடுத்து வைங்க, என்னோட லேப்டாப் பேக் ல எடம் இருக்கு", என்றாள்.

சிறிது அமைதியடைந்தேன்.

"கேபின் பேக் வெயிட் செக் பண்ண மாட்டாங்கனு நினைச்சேன். என்னோட புக்ஸ் கொஞ்சம் இருக்கு, அதான் வெயிட் ஆகிடுச்சு. அத வச்சுக்கோங்க", என்றேன்.

"குடுங்க" என்று வாங்கிக்கொண்டாள். என் ஜீன்ஸ் பேண்ட் இன்னொருவரின் பைக்குள் சென்றது.

அதற்குள் மைதிலியைக் காண வில்லை. பெற்றோருடன் இன்னமும் விடைபெறவில்லை என நினைத்தேன். அவள் பெற்றோரிடம் விடை பெரும் விதத்தை பின்னர் ஃபின்லாந்தில் இருக்கும்போது என் அம்மா தொலைபேசியில் கூறியபோது சிரிப்புதான் வந்தது. அழுது ஆர்ப்பாட்டம் செய்த பின்னரே அவள் எங்களுடன் வந்து சேர்ந்தாள். பின்னர் அவள் எங்களுடன் இமைகிரேஷன் செக் இடத்திற்கு வந்து சேர்வதற்குள் இன்னொரு முறை அவளின் பை ரேண்டம் செக் ல், அதிக எடை என்று மீண்டும் தொல்லை தந்தார்கள். பின்னர் என்ன நேர்ந்ததோ, அவர்களே அந்தப் பையை செக்கின் செய்கிறோம் என்று சொன்னவுடன் மறுபடியும் உயிர் வந்தது எங்களுக்கு, ஏனெனில் நேரம் மிகக் குறைவு. அதற்குள் தாரிணி, அன்னா மற்றும் பாலா முன்னே சென்றனர்.

இமைகிரேஷன் செக் வரிசையில் நின்று கொண்டிருக்கும் போது மைதிலியின் பாஸ்போர்டை ஏதேச்சயாகப் பார்க்க நேர்ந்தது. அதில் முக்கியமான இரண்டு பக்கங்கள் பலவந்தமாகக் கிழிக்கப்பட்டிருந்ததைக் கண்டவுடன் எனக்கு தூக்கி வாரிப்போட்டது.

"என்ன மைதிலி? இமைகிரேஷன் செக் பேஜ் எங்க?" என்றேன்.

"அப்படியா? எங்க உங்க பாஸ்போர்டைக் காட்டுங்க?" என்ற மைதிலி அதில்
அந்த பகுதி இருந்த்தைக் கண்டவுடன் ஆச்சர்யம் அடைந்தவளாய் என்னைப் பார்த்து,

"அட ஆமாங்க. காணனோமே?. அப்படி ஒரு பேஜ் இருக்கும்னு இப்பதாங்க தெரியும்" என்றாள் சின்ன குழந்தை முகத்தையொத்தவளாய்.

"அத இப்படிக் குடுங்க" என்ற சுப்பு தொடர்ந்தார்,

"இந்த பேஜ் எப்படி இல்லாம போகும்? ஒகே. ஒகே, இது இல்லாட்டியும் இப்ப பிரச்சனை எதுவும் வராது, ஃபின்லாந்து போய்ட்டு அப்பரம் பாத்துகலாம், திரும்பி வர்ரச்ச ப்ராப்ளம் குடுக்கலாம்" என்றார் ஆறுதலாய்.

"எனக்கு என்னமோ பயமா இருக்குங்க, அங்க போய் ஏதாச்சும் பிரச்சனை வராதுல்ல?" என்றாள் மைதிலி.

"அதெலாம் கவலைப்படாதீங்க, அங்க போய் பாத்துக்கலாம்" என்றேன் நான்.

அப்பொழுது அந்தப் பக்கங்கள் பலவந்தமாகக் கிழிக்கப் பட்டதைப் பற்றி அவ்வளவாக யாரும் பேசவில்லை. நானும் அதைப் பற்றிப் பேச்சு எடுக்கவில்லை. இதைப் பற்றி சிரிதும் கவலைப் படாதவராய் இருந்தார் ஸ்ரீனிவாஸ் ராவ். அவருக்கும் முதல் பயணமாததால் அவரும் சிறிது பரபரப்புடனே காணப்பட்டார்.

பாஸ்போர்ட் பக்கங்களையும் கிழிக்கும் அளவுக்கு நீசக் காரியம் செய்பவர்களும் இருப்பார்களோ? என்று ஒரு கணம் நினைத்தேன். நல்ல வேளையாக அங்கே அவளைப் பயணம் செய்ய விட்டுவிட்டார்கள். ஆம், அந்தப் பக்கங்கள் பலவந்தமாகத்தான் கிழிக்கப்பட்டிருந்தது என்பது, அது சரியாகக் கிழிக்கப்படாமல் இருந்ததிலுருந்தே தெரிந்தது. வேறு வழியில் அதைக் கிழிக்கப்பட்டிருக்க வாய்ப்பே இல்லை. மைதிலி சிறிது பயம் கொண்டவளாகக் காணப்பட்டாள். நான் ஆறுதல் கூற முயன்றேன். ஆயினும் அவளின் பயங்கலந்த ஆத்திரம் இன்னமும் என் கண்ணில் நிழலாடுகிறது.
அன்று மார்ச் 22, ஞாயிறு காலை 1.30. நெருங்கிய நண்பர்களின் தவறிய அழைப்புகள், குறுஞ்சேதிகள் ஆகியவற்றில் வாழ்துக்களும், விடைபெறுதலும் ததும்பி இருந்தது. சரியாக 1.50 க்கு லுஃப்தான்ஸா விமானம் பறக்க ஆரம்பித்தது. சிறிது நேரத்தில் விமானப் பணிப்பெண்கள், ஆல்கஹால் நிரைந்த ஒரு தள்ளுவண்டியைக் கொண்டு வந்து நிறுத்தி, தூக்கக் கலக்கத்தில் இருந்த என்னிடம்,

"What do you want sir?"

".."

"Execuse me, What kind of drink do you want? We have beer, wine..."

"Give me a cup of Apple Juice"

"Sorry sir, Apple Juice is over"

"OK, then give me a cup of water, thats enough"

"OK sir"

அந்தப் பெண்மணி குறுநகையுடன் என் இடத்தைக் கடந்தாள்.

ஒன்பதரை மணிநேரப் பயணத்திற்குப் பிறகு ஜெர்மனியின் ஃபிராங்க்ஃபர்ட் வந்து சேர்ந்தோம். அங்கிருந்து ஹெல்சின்கி போவதற்கு இன்னொரு விமானதைப் பிடிக்க ஒன்றரை மணிநேரமே இருந்தது. ஆனால் இமைகிரேஷன் செக் கிற்கான வரிசை அனுமன் வால் போல் மிக நீண்டிருந்தது. நானும் அன்னாவும் ஒரு வரிசையில் நின்றிருந்தோம். மற்றவர்கள் மாலை நேரத்து வானத்து நட்சத்திராங்களாக இங்குமங்குமாக இருந்தார்கள். திடீரென்று மற்றவர்களைக் காணவில்லை. ஆனால் நாங்கள் நின்றிருந்த வரிசை, தவளையை உண்ட பாம்பைப் போல் மிக மெதுவாக நகர்ந்தது. இமைகிரேஷன் செக் முடிந்த பிறகு மணியைப் பார்த்தால் இன்னும் பதினைந்து நிமிடங்களே இருந்தது அந்த விமானத்தைப் பிடிக்க. நானும் அன்னாவும் ஓட்டம் பிடித்தோம். அந்த விமானம் வேறொரு டெர்மினலில் இருந்ததால், அவ்விரு டெர்மினலையும் இணைக்கும் டணலில் ஒடிக்கொண்டே இருந்தோம். ஓடும் போது, எனக்கு மூச்சிறைத்தது. அன்னா எதுவும் கவலைப்படாதவளாய் ஓடிக் கொண்டிருந்தாள். எனக்கு ஒரே ஆச்சர்யம். ஒரு பெண்ணிடம் பின்தங்குகிறோமே என்ற வெட்கம் வேறு. பின்னாலில், அவள் ஒரு மாரத்தான் ஓட்டக்காரி என்று தெரிந்த பிறகு தான் எனக்கு ஆச்சர்யம் நீங்கியது. இடையே செக்யூரட்டி செக் வேறு. இன்னும் ஐந்து நிமிடங்களே இருந்த சமயத்தில் விமானம் இருக்கும் கேட் வந்து சேர்ந்தோம். அங்கே மற்றவர்கள் அனைவரையும் பார்த்த பிறகு தான் உயிர் வந்தது. அவர்கள் வேறொரு இமைகிரேஷன் செக் ஏற்பாட்டினால் சீக்கிரமே வந்து சேர்ந்து விட்டதாகவும், அது வரையில் புகைப்படங்கள் எடுத்ததாகவும் கூறியபோது என் பொல்லாத நேரம் என்றே நினைத்துக் கொண்டேன். அதன் பிறகு எங்களை மாதிரியே இன்னும் நிறைய நபர்கள் வந்து சேரவேண்டியிருந்ததால் விமானம் காலதாமதமாக புறப்பட்டது.

ஃபின்லாந்தில் முதல் வாரம்...

இரண்டரை மணி நேரத்திற்குப் பிறகு, ஆயிரம் ஏரிகளை உடைய நாடும், "LINUX" என்னும் கணிணி இயக்கியை உலகிற்கு தந்த லினஸ் டொர்வால்ட்ஸ் பிறந்த ஃபின்லாந்து நாட்டிற்கு வந்து சேர்ந்தோம். அந்த விமான நிலையம் ஹெல்சின்கியில் உள்ளது என்று கூறுகிறார்கள். உண்மையில் அது வாந்தாவில் தான் உள்ளது என்று பின்னர் அறிந்து கொண்டேன். விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தவுடன் உடலில் ஓடும் இரத்தத்தை சிறிது நிற்க வைத்து உறையவைக்கும் கடுங்குளிர் நிலவியது. இது எனக்கு புதிய அனுபவமன்று. ஏற்கனவே அமெரிக்கா சென்றிருந்தபடியால் இது எதிர்பார்த்ததே.

அனைவரும் மாலை ஸ்டேயட் என்னும் தங்கும் விடுதியில் வந்து குழுமினோம். விடுதியில் தங்கும் முன்னேற்பாடுகள் செய்திருந்தபடியால், அவரவர் அறைகளுக்குச் சென்றோம். என்னை வரவேற்க அறை எண் 112 ல் கிருஷ்ணா இருந்தார். பயணத்தில் சரியாக சாப்பிடாததால் அகோரப் பசி அனைவருக்கும். இதை முன்னமே அறிந்திருந்த கிருஷ்ணா எங்கள் அனைவருக்கும் ஏதோ ஒரு உணவை செய்து வைத்திருந்தார். அது என்னவென்று கூடப் பாரமல் பசி மயக்கத்தில் உண்டோம். பின்னர் சிறிது இளைப்பாறிய பிறகு, இரவு உணவு எங்கு சாப்பிடலாம் என்று தீர்மானித்து, அங்கு இருந்த ஒரு இந்தியன் உணவு விடுதியில் சாப்பிட முடிவு செய்தோம். வெளியில் கடும் பனி பெய்து கொண்டிருந்தது. எனினும் அதில் நடந்து செல்லவே அப்படித் தீர்மானித்தோம். அப்போது ஸ்டேயட் ல் தங்கி இருந்த அனைவரும் ஒன்றாக சாப்பிடப் போனது இது தான் முதலும் கடைசியுமாக இருந்தது.

ஸ்டேயட்...

ஸ்டேயட் விடுதியைப் பற்றி நான் சொல்லியேயாக வேண்டும். நாங்கள் தங்கியிருந்த அறை இருவர் தங்கக்கூடியது. விசாலமான வரவேற்பறை, அதில் ஒரு எல்.சி.டி தொலைக்காட்சி. ஆனால் அதில் ஃபின்னிஷ், ஸ்வீடிஷ், ருஷ்ய மொழிகளைத் தவர வேறு அலைவரிசைகளே கிடையது. எப்பொழுதாவது ஆங்கில நாடகங்கள், திரைப்படங்கள் இடுவார்கள். சி.என்.என். தொலைக்காட்சி எப்பொழுதும் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கும். அதுவும் அமெரிக்கர்களைப் பற்றியே கூறிக்கொண்டிருக்கும். அறையில் அமருவதற்கு ஏதுவான சோபா செட்களும் அழகான படுக்கையறைகளும் அதில் இலகுவான மெத்தைகளும் அழகான கழிவறைகளும் உள்ளே சவுனா என்னும் நீராவிக் குளியலறையும் மனதிற்கு மகிழ்சியை உண்டு பண்ணுகிறது. பொதுவான விடுதி அறைகளில் இல்லத சமையலறையும் இங்கு உண்டு. அதில் நான் என்றும் பார்த்திராத மின்னடுப்புகள், சமையல் உபகரணங்கள் மற்றும் மைக்ரோ வேவ் ஒவன் ம் உண்டு. துணி துவைப்பதும் இங்கு இலவசம். இவை எல்லா வற்றையும் பார்த்து உண்டான மகிழ்ச்சி, தினமும் 113 யூரோ கொடுக்க வேண்டியிருக்கிறதே என்று நினைத்த மாத்திரத்தில், மகிழ்ச்சியனைத்தும் சூறாவளியில் காணாமல் போன பஞ்சாய்ப் பறந்தது.

ஒலிபெருக்கி ஒலித்தது...

மார்ச் 23, திங்கள் கிழமை, காலையிலிருந்து மந்தமாகவே நகர்ந்தது எனக்கு. ஆனால், இரவு நடக்கவிருக்கும் சுவாரஸ்யமான(மற்றவர்க்கு நடந்தால் அது சுவாரஸ்யம் தானே) சம்பவம் நடக்கவிருப்பதனால் தான் இப்படி பொழுது நகருகிறது என்பதைச் சொல்லமல் சொல்லியது போலும். நானும் கிருஷ்ணாவும் அன்றிரவு உணவிற்காக சப்பாத்தி செய்ய எத்தனித்தோம். சிறிது புகை பரவ ஆரம்பித்தது. சிறிது நேரத்திற்கெல்லம் ஃபையர் அலார்ம் என்று சொல்லக்கூடிய ஒலிபெருக்கி மிகுந்த சப்தத்துடன் ஒலிக்க ஆரம்பித்தது. எனக்கு ஏற்கனவே அமெரிக்காவில் இது மாதிரி அனுபவம் ஏற்பட்டிருந்தது. அப்பொழுது ஒலிக்கும் நேரத்தில் ஈரத்துணியால் ஃபையர் அலார்மை மூடி வைத்திருந்தால் அது எழுப்பும் ஒலி நின்றுவிடும். வேறு எந்த தொடர் நிகழ்வும் நடவாமல் தடுக்கலாம். இப்படி நினைத்துக் கொண்டு, தாம் தான் அந்த ஒலிக்கு காரணம் என்று நினைத்து,

"கிருஷ்ணா ஒரு துணி இருந்தா குடுங்க" என்றேன்.

"இது தாங்க இருக்கு" என்று ஒரு துணியை கொடுத்தார் பீதியுடன்.

நானும் அந்த ஒலி நிற்கும் என்று எவ்வளவோ முயன்றேன்.

உடனே கிருஷ்ணா "நா ரிஸப்ஷன் போய் என்ன னு கேட்டுட்டு வரேன் கணேசன்" என்றார்.

சரி நடப்பது நடக்கட்டும் என்று நானும் வெளியில் வந்தேன். முதல் மாடியில் புகையாக இருந்தது. அதைக் கண்டதிலிருந்து தவறு நாமிழைக்கவில்லை என்று ஒருவாறு சாந்தமானேன்.

கிருஷ்ணா வந்து "கணேசன், அலார்ம் ஃப்ர்ஸ்ட் ஃப்ளோர் ல இருந்து வருதாம்" என்ற உடன் ஐயம் நீங்கியது.

அதற்குள், முருகைய்யன் வந்து, "என்ன டா நடக்குது?" என்று வந்து நாங்கள் நின்றிருந்த இடத்திற்கு வந்து கேட்டார்.

அந்த விடுதியில் நிறைய இந்தியர்கள் வசித்தபடியால் யாரோ புகைய விட்டு, தவறான அலார்ம் ஒலிக்க காரணமாயிருந்திருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டோம். தீயணைப்பு வீரர்கள் வந்து அந்த தவறான அலார்மை நிறுத்தினர். அப்பப்பா, அந்த ஒலி நின்ற பிறகு, அமைதி மீண்டும் குடி கொண்டது. பின்னர் அந்த தவறான அலார்ம்க்கு நம் சுப்புவும் ஸ்ரீனிவாஸ் ராவும் தான் காரணம் என்றும், அவர்கள் ரொட்டித் துண்டை வெகு நேரம் ரொட்டி மேக்கரில் வைத்திருந்ததால் அது கருகி பெரிய புகை மண்டலம் உருவானதாகவும், அதைக் கவனியாததால் அலார்ம் ஒலித்ததாகவும் மறு நாள் எங்களுக்கு தெரியவந்த போது சிரி சிரி யென்று சிரித்துத் தள்ளினோம். பின்னர் இந்த விஷயம் சென்னையில் உள்ள அலுவலகத்திற்கும் போய் விட்டது. ஆனால் இப்படி ஒரு பயங்கர சப்தம் எழுந்தும் ஒரு அறை திறக்கப்படவேயில்லை. அது தாரிணி, மைதிலி, அன்னா தங்கியிருந்த அறை தான்.

முருகைய்யன், "என்னடா? இங்க இவ்ளோ நடக்குது, அந்த ரூம்ல இருந்து யாரும் எட்டிகூட பாக்கமாட்ராங்க" என்றார்.

நானும் கிருஷ்ணாவும் புன்னகைத்து எங்கள் அறைக்கு சென்றோம்.

செல்லோ...

ஃபின்லாந்தில் நாங்கள் தங்கி இருந்த பிராந்தியத்திற்கு எஸ்பூ என்று பெயர். அங்கு இருக்கும் ஒரே பெரிய வணிகவளாகம்."செல்லோ". இது நம்மூர் ஸ்பென்சர் ப்ளாஸாவைப் போன்று பெரிய வணிகவளாகம். இதில் தான் எங்களுக்குத் தேவையான் உணவு மூலப்பொருட்கள் கிடைக்குமிடம். இது நாங்கள் தங்கியிருக்கும் ஸ்டேயட் விடுதியிலிருந்து 1 மைல் தொலைவு இருக்கும். இந்தக் கடுங்குளிர் நேரத்தில் அங்குப் போய் வருவதென்பது மிகக் கடினமான் காரியம். இருந்தாலும் நடந்தே போய் வரவேண்டியிருக்கும்.

மார்ச் 26 வியாழன் மாலை நான், தாரிணி, மைதிலி அங்கு வரவேண்டியிருந்தது. மைதிலியின் புதிய பாஸ்போர்ட் ஏற்பாட்டிற்காகப் புகைப்படம் எடுக்க வேண்டியிருந்தது. அதற்காக அந்தக் கடையைக் கண்டுபிடித்து, அங்கு வந்து புகைப்படம் எடுத்துக் கிளம்பினோம்.

தோழி உதயம்...

மறுநாள் ஹெல்சின்கியில் உள்ள இந்தியத் தூதரகத்திற்கு மைதிலி செல்ல தீர்மானித்திருந்தாள். அதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தாள். ஆனால் எல்லாருக்கும் பணி இருந்தபடியால் அவள் தனியாக இருந்ததைக் கண்டேன்.

"என்ன மைதிலி இன்னும் ஆஃபீஸ் கிளம்பலயா?", என்றேன்.

"இன்னிக்கு ஹெல்சின்கி போய், இந்தியன் எம்பஸி ல புது பாஸ்போர்ட் அப்ளை பண்ணணும், எல்லாருக்கும் வேலை இருக்குதாம்", என்றாள் மைதிலி.

"ஓ அப்ப தனியா போகப் போறிங்களா?", என்றேன் சிறிது வியப்புடன்.

"முருகைய்யன் வரேன்னு சொல்லி இருக்கார், பட் அவருக்கும் வேலை இருக்கும் போல இருக்கு", என்றாள் சிறிது ஏமாற்றமாய். அதில் தான் தனியாகப் போகிறோம் என்ற பயத்தைப் பார்த்தேன்.

"அப்டின்னா, நான் உங்க கூட வரட்டுமா? எனக்கு இன்னும் வேலை ஆரம்பிக்கலை", என்றேன்.

"அப்டியா? சரி, முருகைய்யன் கிட்ட சொல்லிட்டு போவோம்", என்றாள் மகிழ்ச்சியுடன்.

முருகைய்யன் அறைக்குச் சென்றோம்.

முருகைய்யன், "டே பாத்து போங்கடா. ஏதாச்சும் பிரச்சனைனா கால் பண்ணுடா"

"சரிங்க", நான்

முருகைய்யன், "போய் சேர்ர இடம் கரக்டா தெரியுமா, ரூட் சர்ச் பண்ணி பிரிண்ட் குடுக்கட்டா?"

"வேணாம் முருகைய்யன், நான் ஆல்ரெடி வச்சிருக்கேன்", என்றாள் மைதிலி.

ஹெல்சின்கிகு ரயில் வண்டியில் பயணம் செய்தோம்.

ஹெல்சின்கியை நோக்கி பயணம் தொடர்ந்தது. நம்மூர் போல், பயணச்சீட்டு வெளியே கிடைக்கும் என்று தேடிப் பார்தோம். அங்கு விசாரித்ததில் ஒரு ஃபின்னிஷ் ஆசாமி, தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில், சிரமப்பட்டு பயணச்சீட்டு ரயிலின் உள்ளே கிடைக்கும் என்று புரியவைத்தார். விடுதி ரிஸப்ஷனிஸ்ட் கூறிய திசையில் உள்ள நடைமேடையுல் நின்றோம். ரயில் வந்தததும் அதில் ஏறி அமர்ந்துக் கொண்டோம். எங்களைச் சுற்றிலும் ஃபின்னிஷ் ஆசாமிகள் எங்களை சிறிது நோட்டமிட்டு பின் அவரவர் வேலைகளில் ஈடுபட்டனர். பின்னர் மைதிலிக்கும் எனக்கும் நடந்த உரையாடலை அவர்களுக்கு புரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏதேதோ பேசி வருகையில், கடைசியில் எந்த ரயில் நிலையதிற்கு பிறகு இறங்கவேண்டும் என்பதை கணக்கெடுக்காமல் விட்டுவிட்டோம். பின்னர் ரயில் ஓரிடத்தில் நின்றதும், ரயில் காலியானது. அதன் பிறகே ஹெல்சின்கி தான் கடைசி ரயில் நிலையம் என்று எங்களுக்கு புரிந்து சிரித்துவிட்டோம்.

"எந்த ஸ்டாப்னு கூட தெரியாம வந்திருக்கோம், எங்க போகனும்?", சிரித்தேன்.

"சட்டமாகாட்டுனு ஒரு இடம், அங்க தான் இந்தியன் எம்பஸி இருக்கு", என்றாள் அவளின் வழக்கமான ஆர்வம் ததும்பும் முகத்துடன்.

"சரி, இப்போ டாக்ஸி ல போகலாம், திரும்பி வரச்ச, ட்ராம், பஸ் ல வந்துரலாம், என்ன?", என்றேன் சிறு புன்னகையுடன்.

"சரிங்க போகலாம்", என்றாள் என் புன்னகை புரியாதவளாய்.

சட்டமாகாட்டு என்றதும் எனக்கு "சத்தமா கத்து" என்றே தோன்றியது. ஹெல்சின்கி ஒரு பழைய நகரத்தின் களையைப் பெற்றிருந்தது. அங்கு வானளாவ உயர்ந்த கட்டிடங்கள் ஏதுமில்லை. சிகாகோ, நியூயார்க் போன்ற நகரங்களைப் பார்க்கும் பிரமிப்பு இங்கு இல்லை. ஆனால் இங்கு பழைமை வாய்ந்த கட்டிடங்கள் அதிகம். மைதிலி புகைப்படம் எடுப்பதில் அதீத ஆர்வம் உடையவள் என்பதை அன்று தெரிந்துகொண்டேன். கையில் கேமிராயுடன் வந்திருந்தாள். ஐந்து நிமிடத்தில் இந்திய தூதரகத்தை வந்தடைந்தோம்.

"என்னங்க, சீக்கிரமா வந்துட்டோம். வழி தெரிஞ்சா நடந்தே வந்திருக்கலாம் போல", என்றாள் மைதிலி.

புன்னகைத்தேன்.

இந்தியத் தூதரகக் கதவு மூடியிருந்தது. ஒரு பொத்தான் கதவருகில் இருந்தது. பொத்தானை அழுத்தியும் திறக்கவில்லை. பின்னர் ஒரு அம்மணி வெகு சுலபமாகத் திறந்து உள்ளே சென்றதும், இது ஏன் நமக்குத் தெரியவில்லை என்று புன்னகைத்தோம். அதுவும் ஒரு பழமையான கட்டிடம். அதன் மின்தூக்கி (அதங்க லிஃப்ட்) பார்க்க மிகவும் பழையதாக இருந்தது. அதில் ஏறாமல் படியில் சென்றோம். ஒரு படிவத்தை பூர்த்தி செய்யும்படி கோரினார் ஒரு ஃபின்னிஷ் பெண்மணி. பிறகு இரு வாரத்தில் புதிய பாஸ்போர்ட் கிடைக்கும் என்று கூறினாள். பின்னர் வெளியே வந்து சில புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம். அங்கிருந்து ட்ராமில் சென்றோம். ஹெல்சின்கி ரயில் நிலையத்தை அடைந்ததும் அங்கு நாங்கள் செல்ல வேண்டிய ரயில் இல்லததால் விழித்தோம். அங்கு ஒரு ஃபின்னிஷ் கிழவரிடன் விசாரித்தேன். அவர் ஒன்றும் புரியாமல் என்னைப் பார்த்து புன்னகை புரிந்து கொண்டேயிருந்தார். பின்னர் தான் விளங்கியது, நிறைய மக்களுக்கு ஆங்கிலம் தெரியாது என்று. பின்னர் எப்படியோ விசாரித்து அலுகலகம் சென்றோம். வந்து சேரும் வழியில் மைதிலி பட படவென்று பேசிக் கொண்டேயிருந்தாள். நான் புன்னகையுடன் கேட்டுக்கொண்டே வந்தேன். இந்த சந்திப்பு எங்களிடையே நட்பு உருவாக வித்தாக இருந்தது.

வெள்ளிக் கூத்து...

வெள்ளிக் கிழமை, வாரயிறுதி நாள். ஸ்டேயட்ல் உள்ள எங்கள் குழுவினர் அனைவரும்(பெண் நண்பர்களைத் தவிர) எங்கள் அறையில் ஒன்று கூடி, ஒன்றாகச் சமைத்துச் சாப்பிட்டு இன்னும் சிலவற்றையும் உட்கொண்டு உல்லாசமாக பொழுது கழிக்கலானோம். பாலா கொண்டுவந்திருந்த பிளேயரில் அப்போது பிரபலமாக இருந்த படங்களைப் பார்த்தோம். இது ஒவ்வொறு வெள்ளியன்றும் தொடர்ந்தது. பெரும்பாண்மையான நேரங்களில் யாராவது ஒருவர் சிக்குவார் கிண்டலுக்கு உள்ளாக. படம் பார்க்கிறோமோ இல்லையோ, இந்தக் கிண்டலும் கேலியும் எல்லா வெள்ளியும் தொடர்ந்தது. நாங்கள் தூங்குவதற்கு இரவு 1 அல்லது 2 ஆகும். முதலில் இது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அது ஒரு எல்லையைக் கடக்கும் போது அதுவே அறுவறுப்பாக மாறிப்போனது. எதுவுமே அளவுக்கு மீறினால் நல்லதில்லைதானே?

புதிய நண்பர்கள்...

நான் ஏற்கனவே கூறியபடி அங்கிருந்த ரோஹன், பாரதி, சித்தார்த் எனக்கு புதிய நண்பர்களாகக் கிடைத்தார்கள். வாரயிறுதி நாளான சனிக் கிழமையன்று ஹெல்சின்கி யில் உள்ள ஒரு மீன் அருங்காட்சியகத்திற்க்கு செல்வதாகத் தீர்மானித்தோம். ஸ்டேயட்டில் உள்ள அனைவரையும் அழைத்தேன். மூன்று பெண்களைத் தவிர, யாரும் வரவில்லையென்று மறுத்தனர். அன்று வழக்கத்தைவிட கடும்பனி பெய்துகொண்டிருந்தது. அதனால் யாரும் வரவில்லையென்று கூறினர். ஆனால் பனிப் பொழிவை இன்று விட்டால் என்றும் நாம் காண இயலாது என்றெண்ணி நான் கிளம்பினேன். உடலை உறையச் செய்யும் பனியில் நாங்கள் ஹெல்சின்கி நகர்வலம் வந்தோம். வித விதமான மீன் களைப் பார்த்து ரசித்தோம். பனியில் புகைப்படம் எடுக்க கையுறையிலிருந்து வெளியெ கையை எடுக்கும் போது குளிர் தாங்காமல் விரல்கள் விறைத்து விடும். பொறுத்துக் கொண்டு புகைப்படங்கள் எடுத்துக் குவித்தோம். சித்தார்த், பாரதி ஏற்கனவே அங்கு வந்திருந்ததனால் அவர்கள் வழிகாட்டியபடி சென்றோம். பின்னர் நான் முன்பு கூறிய சுயொமென்லின்னா என்ற தீவிற்கு போக முடிவு செய்தோம். அப்போது அத்தீவின் பெயர் கூட எனக்குத் தெரியாது. ஹெல்சின்கி கடற்கரைத் துறைமுகத்திற்கு சென்றோம். பெரும்பனிப் பொழிவினால், எது நிலம் எது கடல் என்று தெரியாமல் பனிப் படலம் வெளேரென்று படர்ந்திருந்தது. பேருந்து நிலையதிலிருந்து துறைமுகத்தை அடைவதற்குள் பனிக் காற்று பெரும்பாடு ஆக்கிவிட்டது.
அந்த தீவிற்கு செல்ல ஃபெர்ரி என்ற தனிப் படகு இருந்தது. அது பனிக் கட்டிகளை உடைத்துக்கொண்டு முன்னேறிச் செல்லும் அழகு தனிதான். சுற்றிலும் பால்டிக் கடல் ஒரு பெரிய உப்பளம் போன்று வெள்ளை வெளேறென்று அமைதியாகக் காட்சியளித்தது. அது கடல் என்று நம்பமுடியாமல் இருந்தேன். அந்தத் தீவைச் சுற்றிலும் வெட்ட வெளியாக இருந்த படியால் குளிரின் உக்கிரம் அதிகமாக இருந்தது. சிறிது தூரம் தான் சென்றிருப்போம். அதற்க்குள் இரத்தத்தை உறையவைக்கும் பனிக் காற்று வீசியது. உள்ளே நகரமுடியாமல் தடுத்தது. இதைப் பின்னாளில் பார்க்கலாம் என்று முடிவு செய்தோம். வீடு திரும்பினோம். அந்த அழகிய தீவு எவ்வளவு வண்ணங்களுடன் காட்சியளித்தது என்பதைப் பின்னர் வேனில் காலதில் நாங்கள் சென்றபோது பார்ப்போம். இப்போதைக்கு அது ஒரு கருப்பு வெள்ளைத் தீவாக மட்டுமே காட்சியளித்தது.

மறுநாள் ஞாயிற்றுக் கிழமையும் எங்கும் பனி பெய்துகொண்டிருந்தபடியால், எங்கும் செல்லவில்லை. மேலும் ஞாயிற்றுக் கிழமையானால் ஃபின்லாந்தில் எல்லாக் கடைகளையும் மூடி விடுவார்கள். சௌனா என்னும் நீராவிக் குளியல் செய்யலாம் என்று முடிவு செய்தேன். அது நீராவிக் குளியலன்று, வியர்வைக் குளியல் என்று குளித்தபின் தான் அறிந்தேன்.

பேருந்துப் பயணம்

எங்கள் அலுவலகம் நாங்கள் தங்கி இருந்த இடத்திலிருந்து சற்றே தொலைவில் இருந்தது. ஃபின்லாந்தில் பொதுப் போக்குவரத்து மிக நன்றாக இருந்ததால் நாங்கள் பேருந்தில் பயணம் செய்தே அலுவலகத்தை அடைவோம். அதிலும் பேருந்து எண் 22, எங்கள் ஃபின்லாந்து பயணத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. 20 நிமிடங்களுக்கு ஒரு பேருந்து ஆகையால் இதைத் தவற விட்டால் அலுவலகத்தை அடைய அரைமணி நேரம் காலதாமதமாகிவிடும். இந்தப் பேருந்து நிறுத்தமோ நாங்கள் தங்கி இருந்த விடுதிக்குச் சற்றே தொலைவில் இருந்தபடியால் பேருந்து நிலையத்தை அடைய 10 நிமிடங்களாவது ஆகும். அதிலும் பனி பொழியும் காலங்களில் அந்த மேடு பள்ளங்கள் நிறைந்த பகுதியில் நடப்பதே கடினமான காரியம். அதேபோல் அலுவலகத்திற்கு அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்திலிருந்து அலுவலகம் சென்றடைய 5 நிமிடங்களாவது ஆகும். நாங்கள் எல்லாரும் ஒரு கும்பலாக ஸ்டேயட் விடுதியிலுருந்து பேருந்து நிறுத்தத்திற்கு நடந்து செல்வோம்.

ஒரு விஷயம் கூற மறந்து போனேன். ரோஹன், சித்தார்த் மற்றும் பாரதி மட்டும் எங்களுடன் ஸ்டேயட்டில் தங்கவில்லை. ரோஹன் வேறொரு இடத்தில் தன்னந்தனியாக தங்கியிருந்தான். பாரதியும் சித்தார்த்தும் முதலில் ஸ்டேயட்டில் தான் தங்கியிருந்தார்கள். பின்னர் ஸ்டேயட்டில் வாடகை என்ற பெயரில் கொள்ளையடிக்கப் படுவதைப் பொறுக்காமல் ஒரே வாரத்தில் வேறொரு இடம் தேடி அங்கே குடியேறினர் (புத்திசாலிகள்). இதெல்லாம் நாங்கள் அங்கு வந்து சேர்வதற்குள்ளே நடந்த்துவிட்டிருந்தது.

மார்ச் 30, திங்கள் கிழமை "டே லைட் சேவிங்" (பகல் வெளிச்ச சேமிப்பு, அப்படியே மொழிபெயர்த்தால்) என்ற முறை மேற்கத்திய நாடுகளில் பின்பற்றுவது வழக்கம். அங்கே வேனில் காலங்களில் பகல் நீண்டு காணப்படும். எனவே பகல் நேரத்தை ஒரு மணிநேரம் உபயோகித்துக்கொள்ளவும் இன்ன பிற காரணங்களுக்காகவும் வேனில் கால ஆரம்பத்தில் ஒரு மணி நேரம் முன்னதாக அனைத்து கடிகாரங்களையும் மாற்றி வைத்துக் கொள்வர். வேனில் காலம் முடிந்த்ததும் பழையபடி ஒரு மணி நேரம் கூட்டிக் கொள்வர். (இன்னும் விவரமறிய இணைய வலையில் குதிக்கவும்). அதைப் பற்றி நன்கு அறிந்திருந்த நானோ என்னுடைய மறதியினால் மற்ற எல்லாரையும் எனக்காகக் காத்திருக்க வைத்துவிட்டேன். அதாங்க தூங்கி தொலைச்சுபுட்டேன். எங்கள் குழுவில் எல்லாரும் எனக்காகக் காத்திருந்ததில் எனக்கு வெட்கமும், அதே நேரத்தில் மரியாதையும் அதிகமானது. இது இப்படியே தொடர்ந்ததா? பார்க்கத்தானே போகிறோம்.

புத்தக ஆர்வம்

எனக்கு புத்தகங்களில் ஆர்வம் அப்பொழுது துளிர் விட்டிருந்தது. தாரிணியும் புத்தகப் பிரியை என்று தெரிந்ததும் அவளிடம் உள்ள புத்தகங்களில் ஒன்றை மட்டும் படிக்கக் கேட்டேன். நான் அப்பொழுது மகாத்மாவின் "சத்ய சோதனை" படித்துக் கொண்டிருந்தேன். அதில் நான் எதிர்பார்த்த சத்யாகிரகம் பற்றி ஒரு குறிப்பும் இல்லை. அது வேறொரு தனிப் புத்தகமாக வெளியிடப்பட்டுவிட்டதாம். ஒரு கட்டத்திற்குப் பிறகு அதன் மேல் வெறுப்பு வர ஆரம்பித்தது. ஆனால் காந்தியிடத்தில் இருந்த அதே மரியாதை இன்னமும் குறையவில்லை. மேலும் அவர் இந்த புத்தகதைப் படித்தேன், அந்தப் புத்தகதைப் படித்தேன் என்று கூறும்போது, எனக்கும் அது மாதிரி நிறைய படிக்கவேண்டுமென்ற ஆர்வம் மேலிட்டது. அதுவே எனக்கு புத்தகங்களில் மேல் ஆர்வம் துளிர் விடக் காரணமாயிற்று. வேறு ஏதாவது புத்தகம் கிடைக்குமா என்று மனம் தேடிக் கொண்டிருக்கும்போது தாரிணியிடமிருந்து அந்தப் புத்தகம் கிடைத்தது. அன்று அலுவலகத்தில்,

"ஏங்க ஏதாச்சும் நல்ல புக்ஸ் இருந்தா குடுங்க, வேற புக்ஸ் இல்லாம சத்ய சோதனை படிச்சிடிருக்கேன்", என்றேன் கண்ணில் கேள்வியுடன் தாரிணியிடம்.

"சரி என் கிட்ட ஜக்கி யோட ஒரு புக் இருக்கு, அத படிக்கிரீங்களா?", என்றாள்.

"அது என்ன ஆன்மீக புக்கா?", வினவினேன்.

"தெரியல, மனசு கஷ்டமா இருந்தா அத படிச்சா தெளிவாய்டுவேன்", என்றாள் வாய் முழுதும் வரிசைப் பல் தெரிய அவளுக்கே உரிய புன்னகையுடன்.

"அப்டினா குடுங்க, படிக்கறேன்", என்றேன் ஆர்வமாய்.

"நீங்க பொன்னியின் செல்வன் படிச்சு இருகீங்களா?" என்றாள் கண்ணில் ஆர்வமுடன். இது இரண்டாவது முறையாக என்னிடம் கேட்கிறாள் என்று நினைக்கிறேன்.

"இல்ல, அது நல்லா இருக்குமா?", என்றேன் சற்றும் ஆர்வமில்லாதவனாய்.

"இன்னமும் பொன்னியின் செல்வன் படிக்காம இருகிங்களே", என்றாள் ஏளனமாக, பின்னர் தொடர்ந்த்தாள்.

"எனக்கு தமிழ் புக்ஸ் மேல ஆர்வம் வர்ரதுக்கு பொன்னியின் செல்வன் தான் காரணம்", என்றாள் பெருமிதமாக.

அப்படிப்பட்ட புத்தகத்தை படித்தே தீரவேண்டும் என்று மனதிற்குள் தீர்மானித்தேன். பின்னர் அவள் தான் என் தங்கையாக மாறப் போகிறாள் என்றும், அவளிடமே பிறந்தநாள் பரிசாக அப்புத்தகத்தைப் பெறுவேனென்றும், பொன்னியின் செல்வனைத் தந்த கல்கியின் சமுத்திரம் போலிருந்த வாசகர்களில் நானும் ஒருவனாவேனென்றும் கனவிலும் நினைக்கவில்லை.

மாலை ஜக்கியின் புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தேன். வெகு நாளாக என் மனதில் இருந்த கேள்விகளுக்கான விடையாக இருந்தது அந்தப் புத்தகம். முக்கியமாக மது அருந்துவதைப் பற்றி அவர் கூறிய விளக்கம் என் மனதில் இருந்த கேள்விக்கு ஒரு நிரந்தரமான, பிசகில்லாத பதிலைத் தந்தது. பலவித மனப்போரட்டதிற்கு அது விடையாக இருந்தது. அம்மகானை என் ஆத்ம குருவாகவும் ஏற்கத் தீர்மானித்தேன். அவரைப் பற்றி கூறிக்கொண்டே போகலாம் ஆனால் ஃபின்லாந்து பயணம் தொடரவேண்டாமா?

அன்னையிடமிருந்து சேதி..

மறுநாள் நான் சற்றும் எதிர் பாரமல் ஒரு கெட்ட செய்தி எனக்கு எட்டியது என் அம்மாவிடமிருந்து.

"வாழ்வில் நாம் இன்பம் என்று நினைப்பது உண்மையில் இன்பமன்று, துன்பம் என்று நினைப்பது உண்மையில் துன்பமன்று"

என்று கல்கியின் வரிகளில் மூழ்கியிருந்த அர்த்தத்தை உணர்ந்திருந்தாலும், மனம் அதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தது. அலுவலகத்தில் வேலையின் மீது ஒருமுகப் படுத்தியதால் அங்கு பிரச்சனை ஏற்படவில்லை. மாலையில் பேருந்திலிருந்து விடுதிக்கு வரும்போது அந்த எண்ணம் வந்துக் கொண்டேயிருந்தது. என் முகம் வாடியிருந்ததை தாரிணி கண்டுகொண்டாள். என் அருகில் நடந்து வந்து,

"என்ன ஆச்சு? ஃபேஸ் ரொம்ப டல்லா இருக்கு?", என்றாள் சிறிது புருவ நெறிப்புடன் அவளின் வழக்கமான அதட்டல் தோனியில்.

"ஒன்னுமில்லைங்க", என்றேன் விஷயதை பிறர் அறியக்கூடாது என்ற நோக்குடன்.

"ஏதாச்சும் ப்ராப்ளமா இந்தியால? அம்மா ஏதாச்சும் சொன்னாங்களா?", என்றவள் தொடர்ந்தாள்

"இத பாருங்க, நீங்க அங்க இருந்தா அது சால்வ் ஆகியிருக்குமா?", என்று கேட்டாள் மேலும் விஷயம் என்ன என்று கிளராமல்.

"இருக்கலாம்", என்றேன் கலக்கமாய்.

இருந்தாலும் அவளின் வார்த்தைகள் ஆறுதலாய் இருந்தது. மனதை வேறொரு திசைக்குத் திருப்ப முயன்றேன். வேறென்ன, கவிதை எழுதுவதுதான். அதுதான் இப்பொழுது மிகச்சுலபமாக செய்யக் கூடியதாயிற்றே அனேகருக்கு, என்னையும் சேர்த்து. பின்வருமாறு எழுதி முடித்தேன்.

அபலைப் பெண்டிரின்
மனதைக் கெடுக்கும்
கேடுகெட்டவனே ! உன்னை
நடுவீதியில் நிறுத்திக்
கூறுபோட எத்தனித்தேன்
கழுகுகளுக்கு இரை போட


இதை நாட்குறிப்பேட்டில் எழுதியதும், சில வரிகள் நனைந்தன என் கண்ணீர்த்துளிகளால். என் ஆத்திரம் அடங்கியது, சாந்தம் குடி கொண்டது அன்றய நடுநிசியில்.


கோபமும் கொந்தளிப்பும்

வெள்ளிக் கிழமை இரவு உணவு இந்தியன் உணவகத்தில்(ஹோட்டல் கரி லீவ்ஸ் ல்) சாப்பிட தீர்மானித்தோம். நான், சுப்பு, ஸ்ரீனிவாஸ் ராவ், மைதிலி, தாரிணி மற்றும் அன்னா ஆகியோர் சென்றோம். பாலாவிற்கு வேலை இருந்ததாலும், கிருஷ்ணா தனக்கு விருப்பமில்லையென்றும் கூறினார்கள். அங்கு கல கலவென்று சாப்பிட முடியாமல் போனதிற்கு பின்வரும் சுவாரஸ்யமான சம்பவமே காரணம். வேண்டிய உணவுவகைகளை கொண்டுவர எங்களின் கட்டளைக்காக ஒரு பெண்மணி வந்திருந்தாள். அவள் பார்ப்பதற்கு ஃபின்னிஷ் பெண்மணி போன்று தோன்றவில்லை. நாங்கள் வரிசையாக எங்களின் விருப்பமான உணவுகளைக் கோரினோம். பின்னர் மைதிலியை அனுகினாள். மைதிலிக்கும் அந்த பெண்மணிக்கும் நடந்த ஆங்கில உரையாடலைத் தமிழில்,

"எனக்கு பாதி உணவு மட்டும் போதும், நான் இவர்களுடன் பகிர்ந்து உண்கிறேன்", என்றாள் மைதிலி.

"இல்லை, எங்கள் உணவு விடுதியின் கட்டளைப்படி, வந்திருக்கும் ஒவ்வொறுவரும் உணவு கோர வேண்டும்", என்றாள் அப்பெண்மணி உரத்தகுரலில்.

"இல்லை அம்மா, என்னால் அவ்வளவு சாப்பிட முடியாது, பின்னர் அத்தனையும் வீணாய்ப்போகும்", என்று மன்றாடினாள்.

"இல்லை எங்கள் விடுதியின் கட்டளை அப்படி", என்றாள் ஏளனமாக.

"அப்படியென்றால், உணவு வீணானால் சரியா?", என்றாள் கோபத்துடன். அப்படி மைதிலியை நான் பர்த்ததே இல்லை.

"அதைப் பற்றி எனக்கென்ன கவலை", என்றாள் அப்பெண்மணி அசட்டையாகயும் ஏளனத்துடனும்.

இத்தகைய அசட்டையான பேச்சினால் மைதிலி கோபத்தின் உச்சியில் நின்றாள். தான் வேளியேறுவதாகக் கூறினாள். நாங்கள் அனைவரும் அவளை ஒருவழியாகச் சமாளித்தோம்.

"இதுதான் கடைசி தடவை, இனிமே இந்த எடத்துக்கு வரவே மாட்டேன்", என்றாள் மைதிலி ஆத்திரத்துடன்.

"ஆமாம் நானும் வரப்போவதில்லை", என்ற நானும் அவளுடன் சேர்ந்துக்கொண்டேன்.

"அவங்க செய்த செய்கைக்கு நீங்க ஏன் கோபப் படனும், அவங்க கூலா தான் இருக்காங்க, பாரு", என்றாள் தாரிணி.

"டேய், நீ ஏண்டா உணர்ச்சிவசப் படற", என்றார் சுப்பு.

அச்சமயத்தில் மைதிலியின் கோபம் எனக்கு வினையூக்கியாக(ஆங்கிலத்தில் கேட்டலிஸ்ட்) இருந்தது. பார்டி, ட்ரீட், கெட்டுகெதர் என்ற பெயரில் பல நாளக என் மனதில் புழுங்கியிருந்த உணவை வீணாக்கும் செய்கை எனக்குள்ளிருந்து வந்ததே அதற்கு காரணம். இதற்கும் பதிலேதும் கூறாமல், மிக அமைதியாக சாப்பிட்டுக் கொண்டிருந்தார் ஸ்ரீனிவாஸ் ராவ். அன்னா வும் எதுவும் கூறவில்லை. இந்த நிகழ்ச்சியினால் மைதிலியின் மீது ஒரு மரியாதை தோன்றியது. மறுநாள் ஹெல்சின்கி சுற்றிப் பார்க்கலாமென்று நாங்கள் தீர்மானித்தோம்.

பயண ஆயத்தம்

ஏப்ரல் 4, எஸ்பூவில் இப்பொழுது பனிமழையின் சுவடே இல்லாமல், நம்மூர் போல் மழை பெய்துகொண்டிருந்தது. ஸ்டேயட்டில் குடை வாங்கிக்கொண்டு புறப்பட்டோம். இன்று சுப்புவும் மற்ற மூன்று பெண்கள் மட்டுமெ வர ஒப்புக்கொண்டார்கள். புறப்படுவதற்கு முன்னால் அனைவரையும் ஒருங்கினைக்க நான் செய்தவைகள் இங்கே.

"சுப்பு, ஸ்ரீனி ஹெல்சின்கி போவோம் வாங்க, என்ன பன்னபோறீங்க?", என்றேன் அவர்களின் அறையில் நுழைந்தவுடன்.

"நான் வரேன் டா. ஸ்ரீனி கிட்ட கேட்டுக்க", என்று சொல்லிகொண்டே, எனக்கு ஒரு காபி போட்டுக் கொடுத்தார்.

"இல்லை நான் வரவில்லை, எங்கள் குடும்பதினருடன் நான் நிறைய பேசவேண்டும்", என்று கூறினார்.

"சரி பாலா என்ன சொல்றார்", என்றேன் காபியை உறிஞ்சியபடியே சுப்புவிடம்.

"கால் பன்னி பாரு, இரு நானே பன்ரேன்", என்றவர் எண்ணைத் தட்ட, மறுமுனையில் ஃபோனை எடுத்தவர்,

"சாரிங்க எனக்கு ஆஃபீஸ் ல கொஞ்சம் வேலை இருக்கு, நீங்க போய்ட்டு வாங்க, என்ஜாய் பன்னுங்க", என்ற அவருடைய குரல் மிகச் சத்தமாக அறையின் ஸ்பீக்கர் ஃபோனில் ஒலித்தது. அபொழுதெல்லாம் பாலா ஆஃபீஸே கதி என்றிருப்பார்.

"கிருஷ்ணா வரலயா?", என்று கேட்டார் சுப்பு.

"அவர் கிட்ட தான் முதல்ல கேட்டேன், வரலனு சொல்லிட்டார்", என்றேன்.

"இரு நான் கால் பன்றேன்", என்றவர், எங்களுடைய அறைக்கு ஸ்பீக்கர் ஃபோனில் அழைத்தார்.

"என்ன சுப்பு சொல்லுங்க", என்றார் கிருஷ்ணா குரலில் புன்னகையுடன்.

"ஹெல்சின்கி கூப்டா வரலனு சொன்னிங்களாமே", என்றான் கிண்டலாய்.

"இல்லைங்க, வீட்ல பேசனும்", என்று இழுத்தார்.

"என்ன டெய்லி அட்டண்டன்ஸ் குடுக்கனுமா வீட்ல? இன்னிக்கு லீவ் விடக் கூடாதா?", என்றார் கேலிச் சிரிப்புடன்.

"ஹலோ, கல்யாணம் பன்னிப் பாருங்க தெரியும், ஒ.கே ங்க நீங்க என்ஜாய் பன்னிட்டு வாங்க, பை", என்றார் மழுப்பலாக.

"சரி மூனு பொணுங்களும் ரெடியாகிட்டாங்களா?", என்றார் சுப்பு என்னைப் பார்த்து.

"தெரில, அதையும் கால் பன்னி கேட்ரலாம்", என்று அவர்களின் அறையை அழைத்தேன். மறுமுனையில் அன்னா

"ஹாய் கணேசன், மைதிலி ஸ் ஸ்டில் கெட்டிங் ரெடி, வி வில் பி ரெடி இன் 5 மினிட்ஸ்", என்றாள் அவளின் நுனி நாக்கு ஆங்கிலத்தில், என் குரலைக் கேட்டவுடன் எனக்கு காத்திராதவளாய்.

"சரிங்க நாம வெளில இருகர சோஃபா ல உட்கார்ந்து வெய்ட் பண்ணலாம்", என்றேன்.

"சரி டா போகலாம்", என்றார்.

முருகைய்யனும் வரவில்லை என்று ஏற்கனவே கூறியிருந்ததால் அவரைத் தொல்லை செய்யவில்லை.

மேற்கூறிய உரையாடல் தான் ஒவ்வொறு வாரயிறுதியிலும் சனிக்கிழமை காலை நடக்கும். எப்பொழுதும் யாரும் வரமாட்டார்கள். இன்று சுப்பு மட்டுமே வந்தார், மறு வாரங்களில் அவரும் இது மாதிரி ஒரு சாக்கு போக்கு சொல்லி வர மறுத்துவிடுவார். எனக்கு சலித்து விட்டது. அந்த மூன்று பெண்களும், பாரதி, ரோஹன் மற்றும் பாலா இவர்களுடனே ஃபின்லாந்தைப் பார்ப்பது வழக்கமாகிவிட்டது. சித்தார்த்தும் ஏதாவது சாக்கு போக்கு சொல்லி அவரும் எங்களுடன் வர மறுத்துவிடுவார். இப்புதிய நண்பர்களுடன் செல்வதே ஒரு வித குதூகலமாக இருக்கும். அதனால் தான் என் ஃபின்லாந்து பயணம் நான் நினைத்ததைவிட அருமையாக இருந்தது என்பதை நான் முன்னரே குறிப்பிட்டேன்.

"அந்த ஹார்ட்வேர் பசங்கள கூப்டீங்களா?", என்றாள் மைதிலி.

பாரதி, சித்தார்த் தான் அந்த ஹார்ட்வேர் பசங்க.

"அவங்க வேற யார் கூடவோ போரதா சொன்னாங்க", என்றேன்.

அனைவரையும் ஒருங்கிணைத்து ஹெல்சின்கி சென்றடைய மதியம் ஆகிவிட்டிருந்தது. ஹெல்சின்கி ரயில் நிலையதில் இறங்கியவுடன் சிறிது நடந்ததும் என் பக்கத்தில் நடந்துவந்து கொண்டிருந்த மைதிலியும், அன்னவும் "அம்ப்ரெள்ளா" என்று ஒரே குரலில் இரு குரலாகக் கத்தியவுடன் ஏதோ என்று சிறிது நடுங்கிப் போனேன். ஸ்டேயட் குடையை ரயிலில் மறந்து விட்டிருந்தது இருவருக்கும் ஒரே சமயத்தில் ஞாபகம் வந்திருக்கவேண்டும். அதனால் என்னை பீதியடையச் செய்தனர் என்று பின்னர் புரிந்தது. நல்லவேளையாக ரயில் கடைசியில் நிற்கும் இடமாததால் உடனே சென்று குடையை எடுத்தார்கள்.

கேத்தீட்ரல் சர்ச்

ஹெல்சின்கியை முதல் வாரம் கருப்பு வெள்ளையாகப் பனி மூடிப் பார்த்திருந்த நானும் மைதிலியும் மழையில் நனைந்திருந்த அழகில் பல வண்ணங்களில் பார்த்தவுடன் பூரிப்படைந்தோம். ஃபோட்டோப் பிரியர்களான நானும், மைதிலியும் கிளிக் செய்தவண்ணம் இருந்தோம். கண்டிப்பாக நாங்கள் முன்னலும் பின்னர் ஹெல்சின்கியும் வருமாரு பிடித்துக்கொண்ட்டோம். பின்னர் என்ன செய்வதென்று தீர்மானிக்கலானோம். மதிய வேளையாததால், முதலில் சாப்பாடு, பின்னர் சுற்றுவது என்று தீர்மானித்து அருகில் இருந்த நமாஸ்கார் என்ற இந்திய உணவகத்தில் தஞ்சம் புகுந்தோம். அங்கே நிறைய ஃபின்னிஷ் ஆசாமிகளைப் பார்த்ததும் ஆச்சர்யம் எனக்குள். இங்கேயும் நேற்று மாதிரி ஆகிவிடுமோ என்று பயந்தேன். ஆனால் இங்கு அது மாதிரி எதுவும் நேரவில்லை. ரசித்து, ருசித்து சாப்பிட்டோம். இடையிடையே புகைப்படங்கள் வேறு. இன்று மைதிலி மிகப் பொறுமையாகச் சாப்பிட்டு எங்களின் பொறுமையை சோதித்துக் கொண்டிருந்தாள். உணவை வீணாக்கக் கூடாது என்ற வண்ணம் அவள் கோரியிருந்த எல்லவற்றையும் சாப்பிட்ட பின்னரே நாங்கள் வெளியேறினோம். அவள் பேச்சைக் குறைத்திருந்தாலே இன்னும் சீக்கிரமாக சாப்பிட்டிருக்காலாமோ என்று அவளை எல்லரும் கேலி, கிண்டல் செய்து ஒருவழியாக அங்கிருந்து கிளம்பி கேத்தீட்ரல் எனப்படும் மிகப் பெரிய சர்ச் ஐ சென்றடைந்தோம்.

அங்கு ஒரு திருமணம் நடைபெற்றுக்கொண்டிருந்ததால் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. ஆனால் உள்ளே சென்றுகொண்டிருந்த அந்த புதுமணத் தம்பதிகளை அவர்களின் திருமண உடையில் இருக்கும்போது க்ளிக்கினோம். வெளியிலிருந்த மிகப் பெரிய முற்றத்தில் குறுக்கும் மறுக்குமாகச் சென்று சில க்ளிக்கினோம். அந்த முற்றதின் நடுவே ஒரு பெரிய சிலை இருந்தது. அது ஒரு வீரனின் சிலை என்றே தோன்றியது. அதை சரியாகக் கவனிக்கவில்லை. அந்த சர்ச் பார்க்க மிகப் பிரம்மாண்டமாக இருந்தது. ஹெல்சின்கி என்று கூறும் போதெல்லம் இதையே காண்பிப்பார்கள். மிக நேர்த்தியாக வெளிர் பச்சை நிறம் பூசப்பட்டிருந்தது. அதன் விமானம் கரும்பச்சை வண்ணதிலும், அதன் மேலுள்ள சிலுவை தங்க நிறத்தில் தகதகத்தது. ஹெல்சின்கி ரயில் நிலையத்திலிருந்து நடந்தே சென்றதாக நினைவு. அப்பொழுது மைதிலியின் ஷூ லேஸ் அவிழ்ந்து விட்டிருந்ததைக் கூட கவனியாமல் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தவளைக் கவனித்த ஒரு ஃபின்னிஷ் இளைஞன், அவளிடம்

"மேடம் யுவர் லேஸ்", என்றான்.

"தேன்க்யூ", என்று வழக்கமான புன்னகையை உதிர்த்து, பின்பு குனிந்து அதைச் சரி செய்துகொண்டிருந்தாள்.

உடனே அவனுடைய நண்பன் இன்னொருவன் முதலாமவனிடம், "தட்ஸ் நாட் லேஸ், தட்ஸ் லோஸ்" என்றான்.

இன்னொருவனோ "தட்ஸ் நாட் லோஸ் தட் லேஸ் இஸ் லூஸ்" என்று சொல்லி அவர்களுக்குள்ளே சிரித்து மகிழ்ந்து எங்களைப் பார்த்து புன்னகைத்தார்கள். அவர்களின் ஆங்கிலதை அவர்களுக்குள்ளே பரீட்சித்துக் கொண்டனர். எனக்கு தாங்கமுடியாத சிரிப்பு வந்தது. மைதிலி இதையெல்லம் கவனித்தாளா என்று தெரியவில்லை.

ஹெல்சின்கி நகர்வலம்

நேரம் ஆகிக் கொண்டேயிருந்ததால், அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தோம். அடுத்த வாரம் ஈஸ்தோனியா போகலாமென்று ஏற்கனவே தீர்மானித்திருந்தோம். எனவே துறைமுகத்திற்கு சென்று அதற்கான பயணச்சீட்டு வாங்க போகலாமென்று தீர்மானித்தோம். ஒரு ட்ராமில் ஏறினோம். சென்ற வாரம் அந்த துறைமுகத்திற்கு நாங்கள் வந்திருந்தபடியால் எளிதாக அதைக் கண்டுகொள்ளலாம் என்று தீர்மானித்தோம். ஆனால் ட்ராம் ஹெல்சின்கி முழுதும் சுற்றிக் காட்டிய பின்பும், கடற்கரை வந்தபாடில்லை. ஊரைத்தாண்டி எங்கெங்கோ சென்று பின்னர் கடைசியாக ஹெல்சின்கி ரயில் நிலையத்தை அடைந்தது.

"டேய், உன்ன நம்பினா அவ்ளோதாண்டா", என்றார் சுப்பு கேலியாக.

"போனவாரம் இதே ட்ராம்ல தாங்க போனோம், பீச் வந்துச்சு", என்றேன்.

"ட்ராம் ரூட் மாத்தியிருந்த்தாங்கன்னா என்ன பன்னுவ?", என்றார் சுப்பு கேள்வியுடன்.

விழித்தேன். உடனே நானும், மைதிலியும் முதல் வாரம் சென்ற இடம் ஞாபகம் வந்தது. அங்கு சென்ற ட்ராம் எண்ணும் ஞாபகத்தில் வர, அதற்கருகில் கடற்கரையைப் பார்த்ததாக ஞாபகமும் வந்தது. உடனே, நான்,

"ஆப்போஸிட் சைட் ல ஏறியிருக்கனும்", என்று நகைத்தேன்.

அதற்குள் மைதிலி அங்கு போக விசாரிப்பதற்காக ஒரு ஆளிடம் கேட்டுக் கொண்டிருந்தாள். அவன் நன்கு குடித்து ஏதோ உளரிக்கொண்டிருந்தான். உடனே நானும் சுப்புவும் சுதாரித்து அவனிடமிருது மீட்டு வந்தோம் (சூப்பர் சுப்பு). இதே போல் இன்னொருதடவை சுப்பு மைதிலியைக் காப்பாற்றியுள்ளார். அதைப் பின்னர் பார்ப்போம். எதிர்புறம் உள்ள ட்ராமில் ஏறி இந்தியன் எம்பஸியைக் கடந்து இறங்கினோம். அங்கிருந்து விசாரித்துச் சென்று துறைமுகம் சென்றடைந்தோம். அடுத்தவாரம், ஈஸ்தோனியாவின் தலைநகரம் டாலின் சென்றடைய ஃபெர்ரி என்னும் குறுங்கப்பலில் செல்லப் பயணச் சீட்டு வாங்கினோம். ஸ்ரீனிவாஸ் ராவும் எங்களுடன் வர சம்மதித்தார். மற்றவர்கள் ஸ்வீடன் தலைநகரான ஸ்டாக்ஹோம் செல்ல ஏற்கனவே தீர்மானித்திருந்தனர். அங்கிருந்து ஹெல்சின்கி ரயில் நிலையத்திற்கு வந்து அருகிலுருந்த ஃபோரம் என்னும் வணிகவளாகத்தில் நுழைந்தோம். சுற்றி சுற்றி வந்தேனே தவிர எதுவும் வாங்கவில்லை.

கோபால் வந்தார்

மறுநாள் மதியம் கோபால் வந்தார். அவர் முருகைய்யனைப் போல் ஒரு மேனேஜர். அவர் வந்ததும் சிறிது கல கல வென்றிருந்தது. அவரவர் தத்தமது அறைகளுக்குச் சென்ற பின்னர் மறுபடியும் எனக்கு போரடிக்க ஆரம்பித்து விட்டது. இன்றும் மழை பெய்து கொண்டும், தூறிக் கொண்டும் இருந்தது. யாரும் வெளியில் எங்கும் செல்லவில்லை. என் அறையில் கிருஷ்ணா, அறையில் உள்ள மட்டும், அவருடைய லேப்டாப்பில் ஏதாவது செய்து கொண்டும், மனைவியிடம் மின்னரட்டையிலும் பொழுதைக் கழிப்பார். எங்களுக்குள் உரையாடல் எப்பொழுதாவது தொலைக்காட்சி பார்க்கும் போதும், சமையல் செய்யும் போதும் நடக்கும். இருவர் அறையிலிருந்தும் தனிமையாக இருப்பதை உணர்ந்தேன். அப்போதெல்லாம் மற்றவரின் அறைகளுக்கு செல்வதும், புத்தகங்களே துணை என்றும் இருப்பேன். என்னிடம் லேப்டாப் இல்லாதது பெருங்குறையாக உணர்ந்தேன்.

முதல் மூன்று வாரங்கள் முடிந்தது.

மலரும் மனம் தொடரும்...