Sunday, December 27, 2009

எனது பின்லாந்து செலவு - தொடர்ச்சி

சுயோமென்லின்னா (Suomenlinna)

ஃபின்லாந்து நாடு வேனிற் காலத்தில் பச்சைப் பசேலென்றிருக்கும் ஒரு நாடு. இங்கு சுற்றிப் பார்க்க வேண்டுமென்றால் இயற்கையை ரசிக்கக் கூடியவராய் இருக்க வேண்டும். செயற்கையாய்ப் பார்த்துப் பழகிப் போன நம்மவர்களுக்கு இது கொஞ்சம் கூடப் பிடிக்காது. வெறும் காலில் கடற்கரை மணலில் நடந்து செல்லும் போது மணல் காலின் உட்குழிகளை தொட்டுச் சென்று கடற்கரைக் காற்று மேனியில் பட்டு ஏற்படும் சில்லிடும் உணர்வு, காலைப் பனித்துளிகள் இன்னமும் மீதமிருக்கும் புல்வெளிதனில் நடந்து கடக்கும் ஒரு ஆனந்தக் களிப்பு, இருமருங்கிலும் சில்லென்ற காற்றுடன் வயல்வெளி இருக்க இடையே இருக்கும் வரப்பில் நடந்து செல்லும் போது திடீரென்று குறுக்கிடும் தவளையினால் ஏற்படும் உற்சாகம், இதையெல்லாம் ரசிக்கத் தெரிந்தவர்களுக்கு ஃபின்லாந்து நாட்டின் வேனிற் பருவத்தை வரவேற்கும் ஆர்வம் இருப்பதில் தவறேதும் இல்லை. ஆண்டின் பெரும் பகுதி பனியால் சூழப் பட்ட ஒரு நாட்டில் வேனிற் காலம் தலைகீழாக பசுமையாக மாறுவது ஒரு வியப்புதான். ஆனால் இது மேலை நாட்டிற்கே உரிய காலநிலையாதலால் இது ஃபின்லாந்துக்கு மட்டுமே பொருந்தும் என்று கூறிவிட முடியாது. இங்குள்ள சுயொமென்லின்னா இயற்கையும் செயற்கையும் கலந்த பூங்காத்தீவு என்றே சொல்லலாம். Suomenlinna வை Suomen + Linna என்று பிரித்துப் படிக்கலாம். Suomen என்றால் ஃபின்னிஷ் என்று பொருள். Linna என்றால் கோட்டை என்று பொருள். அப்படியே மொழி பெயர்த்தால் ஃபின்னிஷ் கோட்டை என்று கூறலாம். பரபரப்பான ஹெல்சின்கியிலிருந்து 20 நிமிட படகுப் பயணம் செய்தால் இந்த அமைதியான தீவை அடைந்து விடலாம். ஹெல்சின்கியின் மார்கெட் ஸ்கொயரிலிருந்து 10 நிமிடத்திற்கு ஒரு படகு சுயோமென்லின்னா சென்று திரும்பும். இதில் பயணிப்பதற்கு முன்னர் இந்த தீவின் வரலாற்றைப் பார்க்கலாம்.

சுயோமென்லின்னா வரலாறு

ஃபின்லாந்து ஸ்வீடன் வசம் இருந்த போது அப்போதைய மன்னர் ஃபிரடெரிக் I, கி.பி. 1748 ல் இந்தக் கோட்டையைக் கட்ட அனுமதி அளித்தார். முதலில் இது ஸ்வாபோர்க் என்று ஸ்வீடிஷ் மொழியில் அழைக்கப்பட்டது. 18ம் நூற்றாண்டில் ருஷ்யாவிற்கும், ஸ்வீடனுக்கும் உள்ள எல்லை 100 கிலோமீட்டர் தூரத்திற்கு சுருங்கியபோது, இங்கே ஒரு கோட்டை இருப்பது அவசியமாகக் கருதப்பட்டதால் இங்கு கோட்டை கட்டும் பணி தொடங்கியது. ஹெல்சின்கியின் கடல் வழியை பாதுகாக்கவும், ஸ்வீடனிலிருந்து வரும் துருப்புகளுக்கு ஒரு ஒதுங்கும் இடமாகவும் சுயோமென்லின்னா இருந்தது. இந்தக் கோட்டையைக் கட்டும் ஃபின்னிஷ் ஆசாமிகளுக்கு ஸ்வாபோர்க் என்ற ஸ்வீடிஷ் வார்தை கடினமாக இருந்தபடியால் இதை அவர்கள் வையபோரி (Viapori) என்று அழைத்தனர். கி.பி. 1750ல் வையபோரி ஸ்வீடனின் மிகப் பெரிய கட்டுமான வேலைகளில் ஒன்றாக இருந்தது. கட்டுமான வேலைகள் தூரிதமாக நடந்தது. பின்னர் இது துர்க்கு விற்கு அடுத்து ஃபின்லாந்தின் இரண்டாவது பெரிய நகரமாக மாறியது. ஸ்வீடன் மற்றும் ருஷ்ய ஆளுகையில் இங்கு வசித்த அதிகாரிகள் இதமான சூழலில் பரபரப்பான சமூக வாழ்கையை அனுபவித்தனர். வையப்போரி ருஷ்யாவின் அச்சுறுத்துதலுக்கே கட்டப் பட்டது என்றாலும், இது இரண்டே ராணுவ நடவடிகைகளை கண்டது. கி.பி. 1808 ம் ஆண்டு வையப்போரி ருஷ்யாவிடம் சரணாகதி அடைந்த போது ஒரு முறையும், கி.பி. 1853 ம் ஆண்டு க்ரைமீன் போர் (Crimean War) நடந்த போது ஃபிரெஞ்ச் மற்றும் பிரிட்டீஷ் படைகள் இங்கு 46 மணி நேரம் குண்டு மழை பொழிந்த போது இன்னொரு முறையும் ராணுவ நடவடிக்கைகளை சந்தித்தது. ஸ்வாபோர்க் (ஸ்வீடிஷ் கோட்டை) சுயோமென்லின்னா (ஃபின்னிஷ் கோட்டை) வாக 1917ல் ஃபின்லாந்து முழு சுதந்திரம் அடைந்தபோது பெயர் மாற்றம் பெற்றது. அதன் பிறகு 1948 வரையில் இது ஒரு ராணுவத்தளமாகவே இருந்தது.

சரி வரலாறு பார்தாயிற்று, இனி பயணிப்போம்.

சுயோமென்லின்னா பயணம்

மே 10, 2009 சுயோமென்லின்னா செல்ல நான், பாரதி, ரோஹன், மைதிலி மற்றும் தாரிணி திட்டமிட்டு சென்றோம். வழக்கம் போல மார்கெட் ஸ்கொயரிலிருந்து ஃபெர்ரி யில் ஏறி சுயோமென்லின்னா சென்றடைந்தோம். இங்கும் ரோஹன் கமாண்டோ வாக இருந்தார். அவர் எங்கு செல்கிறாரோ அங்கே நாங்கள் சென்றோம். தீவில் நுழைந்தவுடன் ஒரு நுழைவாயில் போன்ற ஒரு இடத்தைக் கடந்து சென்றோம். கடந்த முறை கருப்பு வெள்ளையாகக் காட்சியளித்த வீடுகள், புல்வெளிகள், சாலை அனைத்தும் இப்போது புதுப் பொலிவுடன் பல வண்ணங்களாய் காட்சி அளித்தன. கையில் உள்ள கேமிராவில் சரமாரியாகப் புகைப்படம் எடுக்க ஆரம்பித்தோம். முதலில் தென்பட்டது ஒரு சர்ச். அதைக் கடந்து சென்றதும் சுற்றுலா வழிகாட்டி மையம் இருந்தது. அங்கே சுயோமென்லின்னா வரைபடத்தை ரோஹன் எடுத்துக் கொண்டார். பாரதியும், ரோஹனும் எப்படிச் செல்லலாம் என்று விவாதித்து பின்னர் ஒரு முடிவுக்கு வந்தனர். ஓரளவிற்கு கூட்டம் இருந்தது. வெளியில் வந்தவுடன் ஒரு ஓடை போன்று ஒரு நீர் நிலையக் கடக்க பாலத்தில் சென்றோம். அந்த நீரோடை தான் சுயோமென்லின்னாவை இரண்டாகப் பிரித்தது. ஆனால் அந்த ஓடைக்கு அப்பால் தான் கோட்டையே இருந்தது. ஓடைக்கு இப்புறம் குடியிருப்புகளும் அலுவலகங்களும் இருந்தன.

அங்கிருந்து கோட்டை நுழைவு வாயில் போன்ற ஒரு குகையின் வழியாக உள்ளே சென்றோம். உள்ளே சென்றதும் ஒரு சிலை வரவேற்றது. அது ஒரு வீரனின் தலைக் கவசமும், உடைவாளும் தான். அதைப் பற்றி ஆராய மனம் செல்லவில்லை. அங்கே சில புகைப் படங்கள் எடுத்துக் கொண்டோம். அதைக் கடந்த்து சென்றால் சில பழைய பீரங்கிகளைப் பார்க்க முடிந்தது. நாங்கள் சென்றிருந்த பருவம் இளவேனிற் பருவம். எனவே பனி முற்றிலுமாக மறைந்து, புல் படர ஆரம்பித்து இருந்தது. மரங்கள் இன்னமும் துளிர் விட்டுக் கொண்டிருந்தன. நாம் பூங்காவைப் பார்த்திருக்கிறோம். அதில் செயற்கைப் புல்வெளிகளும் மரங்களும், அமர வசதியாக சில கல் இருக்கைகளும் வைத்திருப்பார்கள். இங்கு ஒரு பூங்காவே கோட்டைக்குள்ளே இருப்பதை நினைத்தால் இன்னமும் மனது அந்தக் காட்சியை கண்டு லயித்துக் கொண்டிருக்கிறது. அதுவும் பாறைகள் நிறைந்த அலைகளற்ற ஒரு கடற்கரையும் பூங்காவைச் சுற்றி இருந்தால் சொல்லவா வேண்டும்.

கடற்கரைக்கு அருகே ஒரு உயரமான இடத்தில் நடந்து கொண்டிருக்கும்போது சில்லென்று வீசும் குளிர் காற்று முகத்தை உறைய வைக்கிறது. கடற்கரைக்கு அருகில் பாறைகளின் மீது அமர்ந்து சிறிது நேரம் கடலையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். இப்படி நடந்து செல்லும் பாதை எங்கும் ஒரு பீரங்கி நின்று மிரட்டும். கடற்கரைப் பாறையிலிருந்து மீண்டும் அந்த உயரமான இடத்திற்கு சென்று சுற்றிலும் ஒரு பார்வை விட்டால் ஆங்காங்கே மக்கள் சென்ற வழித்தடங்களும், சில குன்றுகள் போன்ற அறைகளும் இருக்கும். ஒரு ஆர்வமிகுதியால் உள்ளே என்ன இருக்கும் என்று சென்று பார்த்தால் வெறுமையாக இருக்கும்.

“இந்த ரூம் மாதிரி இருக்கே இது என்னங்க?”, என்றாள் மைதிலி பாரதியைப் பார்த்து.

“இது என்னமோ வெப்பன்ஸ் வைப்பாங்களே அது மாதிரி இருக்கு, அது பேரு கூட...”, என்று இழுத்தார் பாரதி.

“ஆயுதக்கிடங்கு” , என்றேன் புன்னகைத்தவாறே.

“யெஸ், கணேசன் சொல்றது தான் அது”, என்றார் பாரதி.

நீலக் கடலும், பசும் புல்வெளியும், நடு நடுவே வெளிர் பழுப்பு நிற பாதைகளும் செயற்கையாக போடப் பட்டிருந்த பாதைகளும் காண்பதற்கு இனிய காட்சிகள். அதற்குள் எங்களுக்கு பசிக்க ஆரம்பித்தது. இந்த தீவில் என்ன இருக்கப் போகிறது என்று எண்ணி இருந்தேன். நல்லவேளையாக அங்கே ஒரு பிஸ்ஸா உணவகம் இருந்தது. அங்கு எங்களது வழக்கமான அரட்டைகளுடன் மதிய உணவு முடிந்தது. அங்கிருந்து தீவின் இன்னொரு பக்கத்தை அடைந்தோம், அதாவது தீவை வலம் வந்து கொண்டிருந்தோம். அதன் பிறகு வழி நெடுக உள்ள பூங்காவை ரசித்துக் கொண்டும் புகைப் படங்கள் எடுத்துக் கொண்டும் தீவின் இன்னொரு பகுதியை அடைந்தோம். அவ்வளவு தான் தீவை சுற்றி வந்தாயிற்று.

இந்தப் பயணத்தின் போது நான் அவ்வளவாக உரையாடலில் இறங்கவில்லை. ஒவ்வொரு காட்சியையும் பார்த்து ஏதேதோ நினைவுவலைகள் தோன்றி மனம் அங்கே நின்று விடுகிறது. கூட்டமாக இருந்தும் தனிமையை உணர்ந்தேன். அவ்வப்போது என்னை அழைக்கும் போது மட்டும் சுய நினைவிற்கு வருவேன். பிறகு தீவைச் சுற்ற்க் கொண்டு வந்த வழியே திரும்பினோம். மறுபடி படகில் ஏறும்போது நினைத்துக் கொண்டேன் மீண்டும் இந்த இடத்திற்கு வரவேண்டும் என்று. அதற்கான வாய்ப்பும் கிட்டியது.

ஸ்டேயட்டிலிருந்து ஓட்டம்

ஸ்டேயட்டின் கொள்ளை அடிக்கும் செய்கையால் மற்றவர்கள் ஸ்டேயட்டிலிருந்து கிளம்பி வெளியே செல்ல திட்டமிருந்தனர். அவர்களில் மைதிலி, தாரிணி மற்றும் அன்னா தான் முந்திக்கொண்டவர்கள். செல்லோவிற்கு அருகில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்தனர். பாரதியின் உதவியுடன் அவர்கள் புதிய வீட்டைப் பிடித்தனர். அதைப் போல ஸ்ரீனிவாஸ், சுப்பு வும் வேறொரு வீட்டைப் பார்த்துக் கிளம்பினர். நான் கிருஷ்ணாவிடம் கேட்டபோது,

“எனக்கு இன்னும் டூ வீக்ஸ் தான் இருக்குப்பா அப்ரம் இந்தியாக்கு போய்டுவேன், சோ என்னால வரமுடியாது, நீ வேனும்னா புது வீடு பாத்துக்கோ. பட் இங்க இருக்கர்து தான் சேஃப்டி”, என்றார்.

எனக்கு அவரை அம்போ என்று விட்டு விட்டு போக விருப்பமில்லாததால் புது வீடு தேடும் எண்ணத்தைக் கைவிட்டேன். நடப்பது நடக்கட்டும் என்று இருந்துவிட்டேன். கடைசியில் நான் தான் அம்போ என்று ஆக்கப்பட்டேன். அது வேறு விஷயம். எனக்கு தனியாக இருந்து பழக்கமில்லை. கிருஷ்ணா சென்ற பிறகு, இது தான் தருணம் என்று எண்ணி ஸ்டேயட்டிலேயே மீதமிருந்த நாளையும் கழித்தேன்.
எனவே நான் தனிமைப் படுத்தப்பட்டதில் எனக்கு சிறிதும் வருத்தமில்லை. தனிமை எனக்கு மிகவும் பிடித்தும் இருந்தது.

ஏறக்குறைய எல்லாரும் ஸ்டேயட்டிலிருந்து ஓட்டம் பிடித்தார்கள் என்றே சொல்லலாம். அது சரி, ஏதாவது துரத்தினால் தானே ஓட்டம் பிடிக்கமுடியும்!

சைக்கிள் உலா

ஃபின்லாந்து நாட்டில் முது வேனிற் காலத்தில் சாலைகளின் இருமருங்கிலும் மக்கள் சைக்கிளை ஓட்டிக் கொண்டிருப்பார்கள். அதற்கென்றே ”பைக் பாத்” (Bike Path) என்று சைக்கிளில் செல்வதற்கென்றே அமைத்திருப்பார்கள். இது எல்லா ஐரோப்பிய அமெரிக்க நாடுகளிலும் இருக்கும். இங்கும் விதி விலக்கல்ல. சிலர் அலுவலகத்திற்கும் சைக்கிளிலேயே வந்தார்கள். அங்கு உள்ள மக்கள் உடல் நலத்திற்கு மிகவும் சிரத்தை எடுத்துக் கொள்வார்கள் என்பதற்கு இதுவே ஒரு சான்று. அதைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கும் சைக்கிள் ஓட்டவேண்டும் என்ற ஆவல் மிகும். சில நேரங்களில் வாய் விட்டு மற்றவர்களிடம் கேட்டும் இருக்கிறேன். என்னுடைய ஆவல் நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ பூர்தியானது மே 16, 2009 அன்று. சைக்கிள் ஓட்டலாம் என்று பாரதியும், ரோஹனும் முந்தைய நாள் திட்டமிருந்தனர். ஆனால் எனக்கு அன்று சற்றே உடல் நிலை சரியில்லை. எனவே இந்தப் பயணத்தைத் தவிர்க்கலாமா என்று யோசித்துக்கொண்டிருந்தேன். அன்று காலை கிருஷ்ணாவிடம் நடந்த உரையாடல்,

“கிருஷ்ணா, லாஸ்ட் வீக் ஆபீஸ்ல வொர்க் டைட் ஷெட்யூலா இருக்கு, சோ இன்னிகு ஃபுல்லா ரெஸ்ட் டே, இந்த சனிக் கிழமையாவது வீட்ல இருக்கேன்” என்று சிரித்தேன்.

“நல்லதுங்க, ரெஸ்ட் எடுத்துக்கோங்க, முடிஞ்சா சவுனா எடுத்துக்கோங்க, நல்லா தூக்கம் வரும்”, என்றார்.

அப்போது செல்போன் சினுங்கியது.

“கணேஷ், இன்னிக்கு சைக்ளிங் போகலாம்னு ப்ளான். சோ நீங்களும் வந்துருங்க, நைன் ஒ க்ளாக் செல்லோ வந்துருங்க”, என்றாள் மைதிலி.

”...”

“ஹலோ என்ன?”, என்றாள் மைதிலி.

“என்ன சைக்ளிங்கா? யார் யார் வராங்க?”, என்றேன்.

“பாலா வரலயாம், அன்னா, தாரிணி, பாரதி, ரோஹன் வராங்க”, என்றாள்.

“சரி போலாம்”, என்றேன்.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த கிருஷ்ணா (டேய் இப்பதானடா ரெஸ்ட் எடுக்கனும்னு சொன்ன என்ற தொனியில்) என்னைப் பார்த்து, ”சரி சரி போயிட்டு வாங்க, என்ஜாய் பண்ணுங்க”, என்றார் புன்னகையுடனே.

அப்பொழுது தான் எழுந்திருந்த நான், கிளம்ப ஆயத்தமானேன். அதற்குள் இரண்டு அழைப்புகள் என்னைத் தேடி, நான் இன்னும் கிளம்பவில்லையே என்று கடிந்து கூறுவது போல் இருந்தது. எனக்கோ மற்றவர்கள் எனக்காகக் காத்திருக்கிறார்களே என்ற குற்ற உணர்வு. இரண்டாவதாக வந்த அழைப்பில் தாரிணி அவளின் அதட்டல் தொனியில் (அது தான் அவளது இயல்பு என்று அதன் பின்னர் தான் தெரிந்து கொண்டேன்),

“ஹலொ என்ன? எப்போ வர்ரீங்க? உங்களுக்காக எல்லாரும் வெய்ட் பண்றாங்க”, என்றாள்.

அவ்வளவுதான் எனக்குள்ளிருந்த குற்ற உணர்வு கோபமாக மாறியது. இந்த கோபத்திற்கு முந்தைய நாள் என் நண்பன் என்னைப் புரிந்து கொள்ளாமல் செய்த ஒரு தவறும் காரணம். இதெல்லாம் அசுவாசமாக, கோபத்திற்கான காரணங்களை ஆரய்ந்தபோது வந்த காரணங்கள். ஆனால் கோபம் மட்டும் ஒரு நொடியின் கூறுகளில் வந்துவிடுகிறது. ஹெல்சின்கி வரையில் அடக்கி வைத்திருந்த கோபம் மறுபடியும் தாரிணியிடம் பேசும் போது வெளிப்பட்டது.

“ஆமா, என்ன நினைச்சுகிட்டு இருகிங்க எல்லாரும்? கிளம்பி வரத்துக்குள்ள என்ன அவசரம். ஷூ போடறதுக்குள்ள ரெண்டு போன் கால்.”, என்றேன் சற்றே கடுகடுத்த முகத்துடன் தாரிணியைப் பார்த்து.

“எல்லாரும் வெயிட் பண்றாங்கன்னு போன் பண்ணினேன். உங்க கிட்ட சொல்லி எவ்ளோ நேரம் ஆச்சு. நான் என்ன பண்ணேன். நீங்க ஏன் என் மேல் கோப படரீங்க”, என்றாள் அவளும் கோபத்துடன்.

”எனக்கு ஒன்னும் கோபம்லாம் இல்லை”, என்றேன்.

“சரிங்க, இன்னிக்கு என் கூட பேசாதீங்க, எதுவா இருந்தாலும் நாளைக்கு பேசுங்க”, என்றாள் அதே கோபம் குறையாத குரலில்.

அதைக் கேட்டதும் சாந்தமானேன். நான் ஏன் கோபப் பட்டேன் என்று என்னையே கடிந்துகொண்டேன். எனக்கு அவர்களுடன் செல்லவே விருப்பமில்லாமல் போனது. திரும்பி ஸ்டேயட் போய் விடலாம் என்று எண்ணினேன். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மைதிலி, என்னையும் தாரிணியையும் சமாதானம் செய்ய முயன்றாள். முயற்சியில் வெற்றியும் கண்டாள். பின்னர் தாரிணியே என்னிடம் வந்து,

”நீங்க அப்டி சொன்னதுல, என்னமோ நான் தான் தப்பு பண்ணிட்டேன்னு கோபம் வந்துருச்சு”, என்றாள் சாந்தமாக.

”யார் மேலயோ இருந்த கோபத்தை உன் கிட்ட காட்டிட்டேன்”, தங்கையிடம் மறைமுகமாக மன்னிப்பும் கேட்டுக்கொண்டேன்.

“சரி இந்த பேச்ச இப்டியே நிறுத்திக்குவோம். இனி இத பத்தி பேச வேணாம்”, என்றாள். எனக்கும் சரி என்று பட்டது.

அதன் பிறகு அது மாதிரி ஒரு சம்பவம் நிகழ்ந்ததற்கான அறிகுறியே இல்லாமல் இருவரும் மறந்தே போனோம்.

வாடகைக்கு சைக்கிள் விடும் கடைக்குச் சென்றோம். சைக்கிள் ஒன்றிற்கு 15 யூரோ என்று அந்த கடை முதலாளி கூறினார். ஒவ்வொறுவருக்கும் ஒரு சைக்கிள் கொடுத்தார். கையில் ஹெல்சின்கியின் ”பைக் பாத்” கான ஒரு வரைபடத்தைக் கொடுத்தார். ரோஹன் ஆர்வமுடன் அதை வாங்கிக் கொண்டார். இந்த பயணத்திற்கும் ரோஹனே கமேண்டோவாக தலைமை வகித்தார். அவர் முன் செல்ல அவர் பின் நாங்கள் சென்றோம்.

ஹெல்சின்கியில் சிறிது நேரம் பயணம். பின்னர் நகருக்கு வெளியே சென்றது அந்த ”பைக் பாத்”. மேட்டுப் பாங்கான அந்த இடத்தில் சைக்கிளை ஓட்டுவதே கடும் சிரமமாக இருந்தது. சில இடங்களில் சைக்கிளை நகர்த்தியே போக வேண்டிய நிர்பந்தம். ஏதாவது ஒரு ஏரியைப் பார்த்தால் அங்கு சிறிது இளைப்பாறிவிட்டு மீண்டும் தொடர்ந்தது எங்கள் பயணம். மதிய உணவிற்கான நேரத்தில் ரோஹனே சென்று அனைவருக்கும் உணவு வாங்கிக் கொண்டு வந்தார். அனைவரும் களைப்பாக இருந்த நேரத்தில் யார் போய் உணவு வாங்குவது என்ற சமயத்தில் திடகாத்திரமான ரோஹன் மட்டும் சற்றும் களைப்புறாமல் தான் மட்டும் தனியே சென்று உணவு வாங்கிவந்தது எனக்குப் பிடித்திருந்தது. Good Boy ரோஹன்.

அங்கே ஒரு அழகான் ஏரி இருந்தது. ஏரியில் அவ்வப்போது படகுகள் வந்தவண்ணமும் சென்ற வண்ணமும் இருந்தன. பார்ப்பதற்கே ரம்யமாக இருந்தது. அதற்கருகே ஒரு மரத்தால் ஆன படகுத்துறை போன்று ஒரு இடம் இருந்தது. அது ஏரியில் மிதந்துகொண்டே இருந்தது. சங்கிலியால் கரையில் பிணைத்து வைக்கப் பட்டிருந்ததால் ஏரியில் அலை ஓட்டத்தில் அது நகராமல் இருந்தது. அதில் இருக்கைகள் இருந்தது. எங்களுக்கு இளைப்பாற இதை தவிற ஒரு அழகான இடம் கிடைக்குமோ? ரோஹன் வரும் வரையில் அங்கு அரட்டை அடித்துக் கொண்டு இருந்தோம். ரோஹன் வந்ததும் களைகட்டியது. மதிய உணவிற்குப் பின் எங்கள் பயணம் தொடர்ந்தது. அந்த ஏரியின் அக்கரையில் உள்ள ஒரு பசுமையான இடத்திற்கு ஒரு குறுகிய பாலம் வழியாக கடந்து சென்றோம். என்ன ஒரு அருமையான இடம். உலகில் இதுபோல் இடமெல்லாம் இருக்குமா என்று வியக்கும் வண்ணம் இருந்தன அங்கிருந்த பசுமையான சூழல். அங்கிருந்து பூங்கா, தேநீர் கடை என்று எங்கள் இளைப்பாறும் இடம் நீண்டு கொண்டே போனது. கடைசியாக ஹெல்சின்கி ரயில் நிலையம் வழியே வந்து நாங்கள் திரும்பி அந்த சைக்கிள் கடைக்கே சென்றோம். இதுவும் என் வாழ் நாளில் மறக்க முடியாத பயணம் என்றே கூறலாம்.

செல்லோவில் திரைப்படம்

செல்லோவில் ஒரு நாள் நாங்கள் அனைவரும் ”ஏஞ்சல்ஸ் அண்ட் டெமன்ஸ்” படம் பார்த்தோம். முக்கிய அம்சம் என்னவென்றால் அந்தப் படம் முழுதும் ரோமில் படமாக்கப் பட்டது. நாங்கள் எங்கெங்கு ரோமில் நடந்தே சென்றோமோ அங்கெல்லாம் அந்த திரைப்படத்தின் கதாநயகன் காரில் சென்று சுற்றிக் காட்டினான். அப்பொழுதுதான் ரோஹன் எங்களை எந்த அளவிற்கு நடக்க விட்டிருக்கிறார் என்று தெரிந்தது.

கடைசி சுற்றுலா

ஜூன் 6, 2009 மறுபடியும் சுயோமென்லின்னா பயணம். இதற்குள் அன்னா அவளுடைய அம்மா, சகோதரியைப் பார்க்க அமெரிக்காவிலுள்ள விஸ்கான்சின் சென்று விட்டாள். தன் நீண்ட விடுமுறைக்குப் பின்னர் இந்தியாவில் பார்ப்போம் என்று விடைபெற்றுக்கொண்டாள். ரோஹன், பாரதி, கிருஷ்ணா மற்றும் சித்தார்த் விசா காலக்கெடு முடிந்தபடியால் அவர்கள் இந்தியா சென்றனர். மீதமிருந்தது நான், சுப்பு, ஸ்ரீனிவாஸ், பாலா, மைதிலி மற்றும் தாரிணி. அடுத்த குழு ஃபின்லாந்துக்கு அடுத்த வாரம் வருவதாக பேச்சு அடிபட்டது.

கடைசி சுற்றுலா இந்த சுயோமென்லின்னா பயணம். இதில் நான், பாலா, மைதிலி, தாரிணியுடன் லஷ்மியும் (நினைவிருக்கிறதா? மைதிலி சகோதரியின் தோழி) சேர்ந்துகொண்டாள். ஹெல்சின்கி ஏதோ விழாக் கோலம் பூண்டிருந்தது. போகிறவர் வருகிறவர்களுக்கெல்லாம் பலூன் கொடுத்துக் கொண்டிருந்தனர். அங்கிருந்து ஃபெர்ரியில் பயணம் செய்து சுயோமென்லின்னாவை அடைந்தோம். இந்த முறை சற்று மழை பெய்திருந்ததால் இன்னமும் அதன் அழகு கூடியிருந்தது. நுழைவு வாயிலின் வழியே செல்வதற்கு முன்னரே புகைப்படம் எடுக்க ஆரம்பித்து விட்டோம். எங்களை கவனித்துக் கொண்டிருந்த ஒரு ஃபின்னிஷ் பெண்மணி, ஒரு இந்தியப் பெயரை எழுதித் தருமாறு வேண்டிக்கொண்டார். மைதிலி தன் பெயரை எழுதித் தந்தாள். ஒரு குழுப் புகைப்படத்தை அந்த ஃபின்னிஷ் பெண்மணியுடன் எடுத்துக் கொண்டோம். அங்கிருந்து கிளம்பிச் சென்று சுற்றுலா மையத்தை அடைந்தோம். நீர்மூழ்கிக் கப்பல் பற்றிய விவரத்தைக் கேட்டறிந்தோம். ஆனால் அது நீர்மூழ்கிக் கப்பலின் ஒரு மாதிரியே என்று பார்த்து அறிந்ததும், சப்பென்று போய்விட்டது.

இம்முறை மரங்களில் அடர்த்தியாக இலைகள் வளர்ந்திருந்தது. காலநிலை சற்றே மேக மூட்டத்துடன் மங்கலான வெளிச்சம் பரவியிருந்ததால் பார்ப்பதற்கு ரம்யமாக இருந்தது. சென்ற முறை வந்திருந்தபோது சென்ற திசைக்கு எதிர்புறமாக சென்றோம். தாரிணி என்னிடம் வந்து கையை நீட்டினாள். அவள் தனக்கு என்னுடைய ஐ-பாட் (iPod) வேண்டும் என்று கேட்கிறாளாம். இது போல் ஏற்கனவே நடந்திருந்ததால், அவள் கையை நீட்டியவுடன் எடுத்துக் கொடுத்தேன். அதைக் காதில் மாட்டியவள் தான். கடைசிவரை வீடு திரும்பும் வரையில் பாட்டு கேட்டுக்கொண்டே இருந்தாள். மற்றவர்கள் அனைவரும் புகைப்படம் எடுப்பதிலும், அதற்கு போஸ் குடுப்பதிலும் மும்முரமாக இருந்தார்கள். அதே பிஸ்ஸா உணவகத்தில் மதிய உணவு சாப்பிட்டோம்.

அதன் பின்னர் கடற்கரையின் உயரமான இடத்தில் நடந்து சென்று கொண்டிருந்தோம். அங்கிருந்து கீழிறங்கி கடற்கரையின் அருகே கற்பாறைகள் இருக்குமிடம் வந்து குழுமினோம். அங்கு காற்று அதிகம் இல்லாமல் குளிர் குறைவாக இருந்தது. இந்த இடத்திற்கு தனியாக வந்து அழகை ரசிக்கலாம். தனிமை விரும்பிகளுக்கும், இயற்கை ரசிகர்களுக்கும் இது மிகப் பொருத்தமான இடம். வெகு நேரம் இங்கேயே செலவிட்டோம். அங்கிருந்து வெளியே செல்லத் தீர்மானித்தோம். அங்கே ஒரு ராணுவப் படையினர் ஏதோ ஒரு பயிற்சி செய்து முடித்துவிட்டு திரும்பி வந்திருந்ததாகத் தெரிந்தது. அதன் ஒரு மூலையில் ஒரு நவீன பீரங்கி வாகனம் இருந்தது. இத்தீவு இன்னமும் ராணுவத்தளமாக இருப்பதற்கு இது ஒன்றே சான்று.

இந்தியா வருகை

எங்களின் கடைசி சுற்றுலாவிற்கு பிறகு இந்தியா செல்லும் மனநிலை வந்துவிட்டது. கடைசி வாரம் முழுதும் ஒரு விதமான உணர்வு ஆட்கொண்டது. அதாவது இந்தியா செல்லப் போகிறோம் என்ற குதூகலம் ஒரு பக்கம். ஆனால் இவ்வளவு மகிழ்ச்சியாக இருந்த ஃபின்லாந்தை விட்டுப் போகிறோம் என்ற எண்ணம் மறுபக்கம். இதற்குள் அடுத்த குழு வந்து விட்டிருந்தனர். ஜூன் 12, 2009 ஃபின்லாந்தில் செல்லோ வில் எங்கள் குழு குழுமியிருந்தது. கடைசியாக அங்கிருந்து கிளம்புகையில் மனதில் ஒரு வெறுமை பற்றிக்கொண்டது. அங்கிருந்து இந்தியன் உணவகத்தில் சாப்பிட்டுக் கிளம்பினோம். மறுநாள் ஜூன் 13, 2009 காலை பெரிய வண்டியில் அனைவரும் புறப்பட்டுச் செல்ல முடிவு செய்தோம். இரவு வெகு நேரம் பாலா அறையில் நானும் பாலாவும் பேசிக் கொண்டிருந்தோம். பின்னர் என்னுடைய அறைக்கு வந்து எல்லாவற்றையும் மூட்டை கட்டினேன். அன்றிரவு தூங்கவே இல்லை. ஸ்டேயட்டில் இருந்து விடை பெரும் நேரம் வந்தது. வாந்தா விமான நிலையம் வந்து சேர்ந்து அங்கிருந்து ஃபிராங்க்ஃபர்ட் வழியாக சென்னை வந்து சேர்ந்தோம். நாங்கள் வாங்கியிருந்த வரியில்லாப் பொருட்களுக்கு(Tax Free Shopping) ஃபிராங்க்ஃபர்ட் விமான நிலையத்தில் வரிப் பணம் திரும்பப் பெற்றுக் கொண்டோம். நான் வாங்கிய பொருளுக்கு மட்டும் கிட்டத்தட்ட 20 யூரோ கிடைத்தது. சென்னை விமான நிலையத்தில் பெற்றோரைப் பார்த்ததும் உண்டான மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. எல்லாம் மறந்து போயின.

விடைபெறுகிறேன்

எனது இந்த “எனது ஃபின்லாந்து செலவு” பயணக் கட்டுரையைத் தவறாமல் படித்து எனக்கு ஊக்கம் கொடுத்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். எல்லா விஷயதையும் இங்கே என்னால் கூற இயலவில்லை. எனக்குத் தெரிந்து எல்லா மறைக்கக் கூடாத விஷயங்களை இங்கே கூறியிருக்கிறேன். ஆரம்பத்தில் இது என் சுயநலத்திற்காக மட்டுமே எழுதினேன். சிறிது கால இடைவெளிக்குப் பிறகு இக் கட்டுரையை நானே படிக்க உட்கார்ந்தால், படித்து முடித்தவுடன் முகத்தில் புன்னகையுடன் எழுந்திருக்காலாம் என்ற ஒரு எண்ணத்தில் தான் இதை எழுத ஆரம்பித்தேன். என்னைப் போலவே இக்கட்டுரையில் உள்ள அனைவருக்கும் அதே உணர்வு இருக்கும் என்றே நம்புகிறேன். இப்பயணத்தில் இல்லாதவருக்கும் நான் எழுதுவது புரிந்து அவர்களையும் என்னுடன் பயணம் செய்விக்க முயற்சி செய்துள்ளேன். இதை எழுத ஆரம்பித்ததிலிருந்து வரும் விமர்சனத்திலிருந்தே அதை நான் தெரிந்து கொண்டேன். நான் மறைத்து எழுதினேனே தவிர எழுதியதை உள்ளது உள்ளபடியே எழுதியுள்ளேன். திரித்து எழுதவில்லை. இதனால் சிலருக்கு மனம் புண் பட்டிருக்கலாம். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் இதை ஒரு பயணப் பதிவாக எடுத்துக் கொள்ளலாம்.

இத்துடன் விடைபெறுகிறேன். அடுத்து ஒரு புதிய இடுகையில் சந்திப்போம்.

Saturday, December 19, 2009

தேடிச் சோறுநிதந் தின்று ...

எனக்குப் பிடித்த பாரதியின் வரிகள்
என் வலைப்பூவையும் அலங்கரிக்கட்டுமே ....

தேடிச் சோறுநிதந் தின்று
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பலசெயல்கள் செய்து
நரை கூடிக் கிழப்பருவ மெய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத் தாயோ?
நின்னைச் சில வரங்கள் கேட்பேன்
அவைநேரே இன்றெனக்குத் தருவாய்
என்றன் முன்னைத் தீயவினைப் பயன்கள்
இன்னும்மூளாதழிந்திடுதல் வேண்டும்
இனி என்னைப் புதிய உயிராக்கி
எனக்கேதுங் கவலையறச் செய்து
மதிதன்னை மிகத் தெளிவு செய்து
என்றும்சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்!

அன்பு சுழற்சி

தாய்ப்பாலின் ஊடே
விதையாய் விழுந்து,

சகோதர பாசப்பொழிவினால்
செடியாக முளைத்து,

உற்ற தோழமையின்
வேலியினால் பாதுகாப்பாய்
வளர்ந்து,

பருவமதில் பூத்துக்குலுங்கிடுமே
காதலெனும் பெயரினிலே ! அது

திருமண மோகனத்தில்
காய்த்துப் பின்

பிள்ளையினிடத்தில் பழமாக
படைக்குந் தன்னில்,

அடுத்த சுழற்சிக்கு
வித்தாக மாறுமே

அன்பெனும் மரமே !!!

எனது பின்லாந்து செலவு - தொடர்ச்சி

ரோம் நடைப் பயணம்

என் வாழ்வின் முக்கிய நிகழ்வுகளுக்கு நேரம் ஒதுக்கவேண்டியிருந்ததால் சென்ற வாரம் இடுகை எழுதமுடியவில்லை. எதிர்பார்ப்புகளுக்கு நன்றி.

மே 1, 2009 நாங்கள் ரோமில் நடைப் பயணம் செய்ய ஆரம்பித்தோம். காலையில் பிரிஸில்லா உணவகத்தில் உணவருந்திவிட்டுத் தொடங்கிய எங்கள் பயணம் மறுநாள் இரவு வரைத் தொடர்ந்து கொண்டே இருந்தது. கால்கள் வலித்தாலும் கண்களுக்கு வலிக்காததால் கால் வலி அவ்வளவாகத் தெரியவில்லை. இந்தப் பயணத்திற்கு தலைமை தாங்கி எங்களை வழி நடத்தியவர் ரோஹன். கையில் ரோமின் வரைபடத்தை வைத்துக் கொண்டு (அந்த வரைபடம் இன்னமும் என்னிடம் இருக்கிறது) எங்கெங்கு செல்லலாம் என்று எங்களுக்குச் சொல்லி அதன்படியே அனைவரும் அவரின் பின்னால் சென்றோம். அவருடன் உதவி செய்ய அவ்வப்போது நான் அவருக்கு துணையாகச் செல்வேன். மற்றவர்கள் அனைவரும் ரோஹன் எங்கு செல்வாரோ அங்கே செல்வதெனத் தீர்மானித்திருந்ததாகத் தெரிந்தது. ரோமைப் பற்றி அவ்வளவாகத் தகவல் சேகரிக்காததால் சிறிய அறிமுகத்துடன் ரோமில் பயணத்தைத் தொடர்வோம்.

ரோம், பழமை வாய்ந்த, கட்டிடக் கலையில் தேர்ச்சி பெற்றிருந்த பொறியாளர்களால் நேர்த்தியாகக் கட்டப்பட்டிருந்த கட்டிடங்கள் நிறைந்த, கண்களுக்கு அடங்காத காட்சிகளை உள்ளடக்கிய அழகிய நகரம். நாங்கள் சென்றிருந்த காலம் வேனிற்காலத் தொடக்கமாதலால், காலநிலை அதிகக் குளிர் இல்லாமல் இருந்தது. அங்கு போக்குவரத்து விதிகளை மக்கள் மீறுவதைப் பார்க்கும்போது சென்னை நினைவிற்கு வந்தது. ஏனெனில் ஃபின்லாந்தில் இது மாதிரி போக்குவரத்து விதிகளை மக்கள் மீறுவதே இல்லை. மேலும் அது ஒரு நீண்ட வாரயிறுதியாதலால் ரோமில் மக்கள் கூட்டம் அலை மோதியது. அவ்வளவு மக்களை நான் கடைசியாகச் சென்னையில் பார்த்ததாக நினைவு. எங்கு சென்றாலும் கூட்டம்.

பிரிஸில்லா விடுதியிலிருந்து கால் நடைப் பயணமாக ரோஹனைப் பின் தொடர ஆரம்பித்தோம். தாரிணி எங்களுடன் வரவில்லை. அவள் தன் தோழியுடன் வெனிஸ் நகரத்திற்கு சென்றுவிட்டாள். முதலில் நாங்கள் செல்ல நினைத்தது ”ஸ்பேனிஷ் ஸ்டெப்ஸ்”. அங்கு கவரும் அம்சம் எதுவும் எனக்குத் தெரிந்து இல்லை. சில படிகள், பூஞ்செடிகள் மற்றும் சில செயற்கை நீர் ஊற்றுகளைத் தவிர எதையும் என்னைக் கவரவில்லை. ஆனால் அங்கு குழுமியிருந்த மக்கள் கூட்டமோ அங்கு ஏதோ இருக்கும் என்று பீடிகையை உருவாக்கியிருந்தது. ஒரே ஒரு கவரக்கூடிய விஷயம், ஆட்களை எதிரே அமரவைத்து, அரை மணி நேரத்தில் பென்சிலால் படம் வரைந்து கொடுப்பது. எனக்கு ஆசையாக இருந்தது அது போல் என்னை படம் வரைந்துகொள்ள. அது மறுநாளே நிறைவேறிவிட்டது. பின்னர் அருகில் இருந்த ஒரு சர்ச் க்கு சென்றோம். அதில் அழகாக ஓவியங்கள் தீட்டப் பட்டிருந்தன. அங்கிருந்து கிளம்பி நாங்கள் செல்லவிருந்த இடம் ”ட்ரிவியா ஃபவுண்டெயின்”. எனக்கு பெயர் அவ்வளவாக ஞாபகம் இல்லை. அதனால் தவறிழைத்தால் மன்னிக்கவும். ரோஹனின் உதவியுடன் அவ்விடத்தை நோக்கிப் பயணம் செய்தோம்.

ஃபோட்டோ எடுப்பதில் பிரியரான பாலா, ஏதாவது காட்சியைப் பார்த்தால் அதை பல கோணங்களில் க்ளிக் செய்ய அங்கேயே நின்று விடுவார். அவ்வப்போது அன்னா தான், எல்லாரையும் கணக்கெடுத்துக் கொண்டே ”பாலா மிஸ்ஸிங்” என்று அவரை எங்களுடன் சேர்த்து வைப்பாள். இது நடக்கவில்லையென்றால், நாங்கள் ரோமைச் சுற்றுவதை விட்டு ஆட்களைத் தேடுவதிலேயே நேரத்தைச் செலவிட்டிருப்போம். பெரும்பாண்மையான நேரங்களில் நாங்கள் குழுவாக இருப்போம். ஆனால் ரோஹன் மட்டும் தனியே ஏதாவது சந்து பொந்தில் போய் அவரைத் தேடும்படி விட்டு விடுவார்.

நான் எதிர்பார்த்தபடியே அங்கு மக்கள் கூட்டம் இருந்தது. ட்ரிவியா ஃபவுண்ட்யினை நிறைய திரைப் படங்களில் பார்த்திருக்கலாம். எனக்கு மிகவும் பிடித்த இடம் இது என்றே சொல்லலாம். இதுவும் செயற்கை நீரூற்று தான். ஆனால் அங்கிருந்த சிலைகளும், சிலையினூடே வந்த தண்ணீரும் பார்க்கப் பரவசமாக இருந்தது. ஆனால் எல்லா சிலைகளுக்கும் மஞ்சள் நிறத்தில் வண்ணம் பூசியிருந்தது ஏனோ புரியவில்லை. சிலைகள் மட்டுமல்ல, அங்கிருந்த பெரும்பாலான கட்டிடங்களுக்கும் அதே நிறத்தில் தான் வண்ணம் பூசியிருந்தார்கள். அங்கிருந்த ஒரு சிலையில் ஒரு மன்னன் இருப்பது போலவும், அவரது ஏவலர்கள் அருகில் இருப்பது போலவும் இருந்தது. குதிரைகள் பூட்டப் பட்ட ரதம் போல் இன்னொரு சிலையும் இருந்தது. அச்சிலைகளைப் பார்க்கும்போது ஏதேதோ கற்பனைகள் இறக்கை கட்டிக் கொண்டு பறக்கும். இது தான் சிலை சொல்லும் கதைகளோ என்று எண்ணத் தோன்றுகிறது.

அதன் பிறகு எங்களுக்குப் பசிக்கத் தொடங்கியது. மெக் டொனால்ட்ஸ் என்னும் உலகப் புகழ் பெற்ற உணவகத்தைத் தேட ஆரம்பித்தோம். அதில் தான் எங்களுக்குப் பழக்கப்பட்ட உணவு கிடைக்கும் என்று நினைத்ததால் அப்படித் தேடினோம். அது கண்களுக்கு அகப்படாமல் போனது, ஆனால் ஒரு பிரம்மாண்டமான கட்டிடம் எங்கள் கண்களுக்குத் தெரிந்தது. அது என்ன என்று எனக்குத் தெரியவில்லை. அது அரண்மணையாகத் தான் இருக்க வேண்டும் என்று ஊகித்தேன். வெகு தொலைவிலிருந்தே அது இரு கண்களுக்கும் அடங்காமல் மிகப் பிரமாண்டமாகக் காட்சி அளித்தது. அருகே நெருங்க நெருங்க நாங்கள் சிறு புள்ளிகளாக மாறிப்போனொம். ரோமில் எந்தக் கட்டிடத்தைப் பார்த்தாலும் பிரமிப்படைந்து போய்விடுவேன். அதன் வரலாறு என்ன, அதன் தோற்றம் எப்படிப் பட்டது என்பது போன்ற எனது வழக்கமான கேள்விகளைப் பற்றி நினைக்கவே தோன்றவில்லை.

அந்தக் கட்டிடத்தை ஒரு பெரும் மக்கள் கூட்டம் ஆக்ரமித்திருந்தது. அதனுள் செல்வதற்கே ஒரு பெரிய வரிசையில் காத்திருக்க வேண்டியிருந்தது. அந்தப் பெருங் கூட்டத்தில் எங்கள் சிறு குழுவும் சிதறிப் பின்னர் சேர்ந்துகொள்வோம். அந்த அரண்மனைக்குள்ளே ஒரு பெரிய அருங்காட்சியகம் அமைத்திருந்தார்கள். அதனுள் வைக்கப்பட்டிருந்த ஒரு பெரிய உடை வாள் என் கவனத்தைக் கவர்ந்தது. ஒரு சிறிய பீரங்கியும் இருந்தது. அந்த அருங்காட்சியகதினுள் நாங்கள் நுழைந்தவுடன் அன்னா வைக் காணவில்லை. அந்த அரண்மனையின் மேல் மாடியில் நாங்கள் சுற்றிப் பார்த்தும் கிடைக்கவில்லை. பின்னர் திடீரென்று அவள் என் கண்ணில் பட்டாள்.

“பாரதி, அதோ கீழ கைல ஒரு கோக் பாட்டில் வச்சிக்கிட்டு நின்னுகிட்டு இருக்கா பாருங்க”, என்றேன்.

உடனே மைதிலி அவளை கூப்பிட்டுப் பார்த்தாள். அவள் காதில் விழவேயில்லை. உடனே பாரதி,

“ஹே, அவ டிஃப்ரண்ட்டா இருக்கா பாருங்க, எதுக்கும் பயப்படாம, தொலைஞ்சி போய்டுவோம்னு கூட நினைக்காம ஒரு ஜாலியான வாக், குட்”, என்றார்.

அதன் பின்னர் அவளைக் கீழே கண்ட பின்னர் அவள் கூறியது,

”Hey, I saw you guys were going inside that Museum. I thought of having some roam around here in downstairs"

எல்லாருக்கும் சற்றே கோபமாக இருந்தது அவள் அப்படிச் செய்தது. பின்னர் பசி எங்களை வாட்டியது. உடனே மறுபடியும் ஏதாவது ஸேண்ட்விச் கிடைக்குமா என்று தேடிக் கொண்டே சென்றோம். வழியில் ஸேண்ட்விச் கடை ஒன்று இருந்தது. அந்த கடைக்காரர் பார்ப்பதற்கு இந்தியன் போலவே இருந்தார். ஆர்வம் மிகுதியால் ”நீங்கள் இந்தியரா” என்றேன். ”நான் பங்ளாதேஷி” என்றார். அங்கே உட்கார இடம் கிடைத்ததால் அனைவரும் ஸேண்ட்விச் சாப்பிட்டு விட்டு அருகே இருந்த ஒரு சர்ச் க்கு சென்றோம். அங்கேயும் ஏகக் கூட்டம். அந்த சர்ச் ஒரு உருளையைப் போல் இருந்தது. அதன் மேல் பாகம் திறந்து இருந்தது. அதன் வழியாக சூரிய வெளிச்சம் வந்து ஆலயத்தினுள் பரவிக் கிடந்தது. பெருங்கூட்டத்தினால், உள்ளே அந்த ஆலயத்தைச் சுற்றி வருவதற்கே பெரும் பாடு ஆகிவிட்டது. ஆங்காங்கே ஒரு குழு குழுமி, அந்த குழுவிற்கு ஒரு ஆள் ஏதோ உரைத்துக் கொண்டிருப்பதைக் கண்டேன்.

கொலோஸியம்

அங்கிருந்து எங்கள் நடைப் பயணம், ரோமப் பேரரசின் வீர விளையாட்டுத் தளமான கொலோஸியம் நோக்கி இருந்தது. செல்லும் வழியில் மறுபடியும் அந்த அரண்மனையைத் தாண்டிச் சென்றோம். தூரத்திலிருந்தே கொலோஸியத்தின் அழகு நம்மைக் கவர்ந்தது. நெருங்க நெருங்க அதன் பிரம்மாண்டம் தெரிய ஆரம்பித்தது. அது கேமிராவினுள் அடங்கும் தூரத்தில் நாங்கள் அதை பேக்ரவுண்டாக வைத்து எங்களின் புகைப்படங்களை எடுத்துத் தள்ளினோம். அங்கேயும் எதிர்பார்தபடியே ஒரு பெருங் கூட்டம் எங்களை வரவேற்றது. உள்ளே செல்வதற்கென ஒரு நீண்ட வரிசை இருந்தது. உள்ளே சென்றதும் கூட்டம் அவ்வளவாகத் தெரியவில்லை. கொலோஸியத்தின் பிரமாண்டத்திற்கு அருகே அந்தக் கூட்டம் என்ன செய்யும். கொலோஸியத்தினுள்ளே சிதிலமடைந்த படிக்கட்டுகளும், அதன் நடுவே சிதிலமடைந்த சுவர்களும் இருந்தன. வெளியே இருந்து காணும் அழகு உள்ளே இல்லை. அங்கேயே எங்களின் மாலைப் பொழுது கழிந்தது.

பிரிஸில்லா நோக்கிப் பயணம்

அங்கிருந்து நாங்கள் விடுதியை நோக்கிப் பயணம் செய்ய ஆயத்தமானோம். அருகே ஒரு பூங்கா இருந்தது. அங்கேயும் கூட்டம். அதன் வழியே நடந்து சென்று பின்னர் இரவு உணவை எங்காவது வழியில் சாப்பிட்டு விடுதியை நோக்கிச் செல்வோம் என்று தீர்மானித்தோம். நாள் முழுதும் நடந்து கொண்டிருந்ததால், கால்கள் வலிக்கவே செய்தன. அதை நான் பெரிதாகக் காட்டிக் கொள்ளவில்லை. ஆனால் பாரதி,

“அய்யோ, யாரச்சும் என்னை உருட்டி விடுங்க, என்னால நடக்க முடியல”, என்றார்.

இது தான் சமயம் என்று மைதிலி பாரதியை விடைக்க (கிண்டல் என்ற வார்தைக்கு மைதிலியின் அகராதிச் சொல்) ஆரம்பித்தாள்.

“கணேஷ், ரோம் ட்ரிப் கிளம்புரப்போ, ஒரே கண்டிஷன் போட்டாங்க, நாங்க பசங்க எவ்ளோ தூரம்னாலும் நடப்போம். அப்ரம் கை வலிக்குது, கால் வலிக்குதுனு லாம் சொல்லக் கூடாதுனு என்னவா பில்டப் பண்ணினாங்க தெரியுமா?, இப்ப என்னடானா உருட்டி விட சொல்றார்”, என்று கலகல வென சிரித்துக் கொண்டே சொன்னாள்.

பாரதி வழக்கமான புன்னகையுடன் வந்தார்.

எந்த உணவகத்தில் சாப்பிடுவது என்று பெரிய கேள்வியாய் எழுந்தது. பிஸ்ஸா சாப்பிடுவதா, ஏதாவது இந்தியன் உணவத்தைத் தேடுவதா என்று வழி நெடுக பேசிக்கொண்டே வந்தோம். கடைசியாக ஒரு உணவகத்தை அடைந்தோம். அது இந்தியன் உணவகம் மாதிரியும் தெரியவில்லை, ஐரோப்பிய உணவகமாகவும் தெரியவில்லை. அன்னா மட்டும் தனியே வேக வேகமாக நடந்து சென்று கொண்டிருந்ததால் அவளைக் கூப்பிட்டு நிறுத்த இரண்டு பேர் செல்ல வேண்டி இருந்தது. சாப்பிட்டுக் கிளம்பும் போது இருட்டி இருந்தது. ரோம் இரவில் அழகாய் இருந்தது. அந்த அழகை ரசித்துக் கொண்டே ஒரு செயற்கை நீரூற்று இருக்குமிடம் அடைந்தோம். அங்கே இளைபாறினோம். அங்கேயும் நானும் மைதிலியும் சும்மா இல்லாமல் புகைப் படங்களை எடுத்துக் கொண்டிருந்தோம். பின்னர் ரோஹனின் பின்னாலேயே அனைவரும் சென்றோம். பிரிஸில்லா விடுதி கண்ணுக்குத் தெரிந்தது.

நாங்கள் பிரிஸில்லாவில் இரண்டு நாட்களுக்கு முன்பதிவு செய்திருந்தோம். ஆனால் தாரிணி, மைதிலி மற்றும் அன்னா தங்கியிருந்த அறை ஒரு நாள் மட்டுமே முன்பதிவு செய்ய முடிந்ததால், அருகே இன்னொரு விடுதியில் இரண்டாம் நாள் தங்க முன்பதிவு செய்திருந்தார்கள். மைதிலியும், அன்னாவும் இரவு நேரத்தில் அந்த விடுதியை தேடுவது கடினம் என்று எண்ணி ரோஹனும் பாரதியும் அவர்களுடன் துணைக்குச் சென்று வந்தனர். நாள் முழுதும் நடந்த களைப்பினால் நானும் பாலாவும் நன்றாக குறட்டை விட்டுத் தூங்கினோம் பிரிஸில்லாவில்.

வாடிகன் நகரம்

மே 2, 2009 எங்களின் ரோம் பயணம் தொடர்ந்தது. முதல் நாளில் விட்டுப்போன இடத்தையெல்லாம் அன்று காண முடிவு செய்தோம். முக்கியமாக வாடிகன் நகரம். பிரிஸில்லாவில் அனைவரும் ஒருங்கிணைந்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றோம். மறுபடியும் அதே ஸ்பேனிஷ் ஸ்டெப்ஸ் க்கு வந்து சேர்ந்தோம். முந்தைய நாள் என்னை கவர்ந்திழுத்த அதே பென்சில் ஓவியக் கலைஞர்களிடம் இன்று என்னை வரைய ஒப்புக்கொண்டேன். என்னைப் போலவே பாரதியும். ஆனால் வரைய அவர்கள் கேட்ட தொகை சற்றே அதிகம். அரை மணி நேரம் என்று சொல்லி பின்னர் ஒரு மணி நேரம் ஆகிவிட்டது. வரையும் போது ரோஹனின் கிண்டல் புன்னகைக்க வைத்தது. என்னுடைய முகம் ஓரளவிற்கு நன்றாயிருந்தது. பாரதியின் முகம் சற்றே திரிந்து இருந்தது.

“ஹேய், இது யார்து?”, என்றார் பாரதி அவருடைய ஓவியத்தைப் பார்த்து.

“இருக்கர்து தானே வரும்”, என்றனர் மற்றவர்கள். ரோஹனின் கிண்டல் உச்சமாய் இருந்தது. கடைசியில் அந்த ஓவியத்தை நாங்கள் திரும்பி வரும் விமானத்தில் தவற விட்டோம் என்பது வேறு விஷயம்.

அங்கிருந்து எங்கள் பயணம் வாடிகன் நகரத்தை நோக்கி இருந்தது. வழியில் ஒரு பெரிய முற்றம் போன்ற ஒரு இடத்திற்கு அருகே ரோஹனைத் தவற விட்டோம். எங்கள் கமேண்டோ படைத் தலைவனைக் காணவில்லையென்றால் எங்களின் நிலைமையை யோசித்துப் பாருங்கள். அருகே இருந்த ஒரு உயரமான இடத்திற்குச் சென்று அங்கிருந்து ரோஹன் கீழே உலாவுவதைப் பார்த்தோம். ரோஹனைப் பார்த்த மகிழ்ச்சியில் உடனே ஒருங்கிணைந்தோம். அங்கிருந்து வாடிகன் நகரம் அடைவதற்குள் மதிய வேளை நெருங்கியது. வாடிகன் நகர கோட்டை மதில் சுவரின் அருகே இருக்கும் ஒரு திறந்தவெளி உணவகத்தில் உலகப் புகழ் பெற்ற இத்தாலி பிஸ்ஸா சாப்பிட்டோம். ஏன் அது அவ்வளவு பிரபலம் என்று அதை சாப்பிட்டவுடன் தெரிந்துகொண்டேன்.

பின்னர் வாடிகன் நகரத்திற்கு உள்ளே செல்ல ஒரு பெரும் கூட்டம் இருந்தது. இது முந்தய நாள் பார்ததைவிட இரு மடங்கு கூட்டம். அங்கே வரிசையில் காத்துக்கொண்டிருந்தோம். திடீரென்று வானம் இருட்டத் தொடங்கியது. சிறிது நேரத்திற்கெல்லாம் பெரும் மழை பெய்தது. வரிசையில் நின்றிருந்தவர்கள் எல்லாரும் தொப்பையாக நனைய வேண்டியதாயிற்று. சிறிது நேரம் கழித்து சட்டென மழை நின்றது. வானம் வெளுத்தும் விட்டது. ஏதோ அசரீரி போல மழை வந்ததும் தெரியவில்லை போனதும் தெரியவில்லை. மழை பெய்ததற்கான அடையாளமும் தெரியவில்லை. அங்கிருந்த மனிதர்கள் மட்டும் சொட்ட சொட்ட நனைந்திருந்தனர். மழை வந்ததும் அனைவரும் என்ன செய்வதென்றே தெரியாமல் இருந்தனர். அதை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட அங்கிருந்த வியாபாரிகள் குடை வியாபாரம் செய்தனர். அப்படி வாங்கியவர்களில் பாரதியும் ஒருவர். குடை வாங்கி ஒரு நிமிடத்தில் மழை நின்றதும்,

“சே, காசு குடுத்து குடை வாங்கினதுக்கு இனொரு மணி நேரம் மழை பெய்ஞ்சிருக்கலாம்”, என்று புலம்பினார் பாரதி.

வாடிகன் நகரதினுள் செல்ல சில பாதுகாப்பு சோதனைகள் செய்யப்பட்டன. உள்ளே பல வகையான அருங்காட்சியகங்கள் இருந்தன. முதலில் பார்த்தது ஓவிய அருங்காட்சியகம். எவ்வளவோ ஓவியங்கள் இருந்தாலும், ஆதாம் ஏவாள் வைத்து காட்டில் மிருக்களுடன் இருந்த ஒரு ஓவியம் என்னை மிகவும் ஈர்த்தது. ஒவ்வொரு ஓவியத்தையும் பார்த்துக்கொண்டே இருக்கலாம். எல்லாம் ஏசு கிரிஸ்து பற்றியும் அவரது போதனைகள் கூறுவது போலவும் இருந்தன. அங்கிருந்து ஒரு சிலை அருங்காட்சியகத்திற்கு சென்றோம். எல்லாவற்றையும் சுற்றிப் பார்ப்பதற்குள் நேரம் ஆகி விட்டிருந்தது. அவசர அவசரமாக சில அருங்காட்சியகங்களையும் பார்த்தும் வந்தோம். மைதிலி மட்டும் இன்னும் சிலவற்றைப் பார்த்து விட்டு வருவதாகக் கூறினாள். பின்னர் வெளியே ஒரு புல்வெளி இருக்கும் இடத்திற்கு மற்றவர்கள் வந்து சேர்ந்தோம். அதற்குள் அருங்காட்சியகம் மூடும் நேரம் வந்துவிட்டதாகக் அங்கிருந்த காவலாளர்கள் கூறினர். உடனே நாங்கள் மைதிலியை அழைக்க உள்ளே செல்ல முயன்றோம். அனுமதிக்கவில்லை. அருங்காட்சியகத்தின் இன்னொரு வாயிலின் வழியாக உங்கள் நண்பரைக் காணலாம் என்று கூறினர். மைதிலியைக் காணவில்லை என்று அனைவரும் பரபரப்பானோம். அரை மணி நேரம் கழித்து மைதிலியைப் பார்த்ததும் எல்லார் முகத்திலும் மகிழ்ச்சி.

அங்கிருந்து செயிண்ட் பீட்டர்ஸ் தேவாலயத்திற்கு சென்றோம். அந்த தேவாலயத்தின் முற்றத்தைத் தொலைக்காட்சிகளில் போப் முன்னிலையில் மக்கள் கூட்டம் முழுதும் நிரம்பப் பார்த்திருக்கிறேன். அதை நான் நேரில் காண்கிறேன் என்று மனதில் ஒரு பூரிப்பு ஏற்பட்டது. அங்கும் ஏகக் கூட்டம். எல்லாவற்றையும் சுற்றிப் பார்த்துப் பின்னர் அங்கிருந்து ஒரு அரண்மனைக்குச் சென்றோம். ஆனால் நாங்கள் சென்றடைவதற்குள் அதை மூடிவிட்டனர். அதைப் பார்க்காமல் போகிறோமே என்று எல்லாருக்கும் ஒரு ஏமாற்றம் மனதில் இருந்திருக்கும். அதன் பின்னர் அந்த அரணமனைக்கு வெளியே நாங்கள் அமர்ந்து அரட்டை அடிக்கத் தொடங்கினோம். இருட்டத் தொடங்கியவுடன் எங்கள் நடைப் பயணத்தைத் தொடர்ந்தோம். எங்கள் பைகளை பிரிஸில்லாவில் வைத்திருந்ததாலும் அங்கிருந்து விமானநிலையம் செல்ல வண்டியை முன்பதிவு செய்திருந்ததாலும் பிரிஸில்லாவை நோக்கி நடக்கத் தொடங்கினோம். இம்முறை மெக்டொனால்ட்ஸ் உணவகத்தைக் கண்டுபிடித்துவிட்டோம். ஆனால் அசைவ உணவே அங்கு இருக்குமாதலால் மைதிலியும் ரோஹனும் அருகில் இருந்த ஒரு சைவ உணவகத்திற்குச் சென்று சாப்பிட்டு வந்தனர்.

ஃபின்லாந்துக்கு திரும்புதல்

பிரிஸில்லாவிலிருந்து பிரியாவிடை பெற்றுக் கொண்டு சியாம்பினோ விமான நிலையம் அடைந்தோம். அப்போது தாரிணி வெனிஸ் நகரத்தைச் சுற்றிவிட்டு அதே நேரத்தில் வந்தடைந்தாள். நாங்கள் திரும்பி வரும்போது ஹெல்சின்கிக்கு நேரடியாக விமானம் பதிவு செய்யவில்லை. ஃபின்லாந்தில் தேம்ப்பரே என்னும் இன்னொரு விமான நிலையத்திற்கு பயணச் சீட்டு பதிவு செய்திருந்தோம். தேம்ப்பரே செல்லும் விமானம் மறுநாள் காலை 6 மணிக்கு தான். எனவே ரோமில் விமான நிலையத்தின் வரவேற்கும் பகுதியில் இரவு முழுவதும் காத்திருந்தோம். சிறிது நேர அரட்டைக்குப் பின்னர் தோழிகள் தூங்க ஆரம்பித்தனர். அரட்டை ஆரம்பிக்கும் முன்னரே ரோஹனும், சிறிது அரட்டைக்குப் பின்னர் பாரதியும் தூங்க ஆரம்பித்திருந்தனர். பாலா காவலாளி போல் இரவு முழுதும் தூங்கவே இல்லை. நான் கோழித் தூக்கம் தூங்கிக் கொண்டு, அவ்வப்போது விழித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். காலை விமானத்தில் ஏறியதும் எனக்கு நிம்மதி ஏற்பட்டது. எங்கள் ரோம் பயணம் வெற்றிகரமாக எவ்வித இடர்களும் இல்லாமல் நடந்தேறியது.

தேம்பரே விமான நிலையத்தில் ஒரு அமெரிக்கப் போர் விமானம் இருந்ததை நான் கவனித்தேன். அங்கே ஒரு ஃபின்னிஷ் ராணுவ அதிகாரி நின்று கொண்டு எங்களை வழிமறித்தார். அவர் பார்ப்பதற்கு இளமையாகவும் உயரமாகவும் கம்பீரமாகவும் இருந்தார். கனிவாக எங்களை அணுகி எங்களை விசாரித்தார். மைதிலி இதற்குள் புதிய பாஸ்போர்ட் பெற்றிருந்தாள். அதனால் அவள் இரண்டு பாஸ்போர்ட்களைக் காண்பித்தாள். ரோஹன் ஏதோ உளர ஆரம்பித்தான். பாலா உடனே செம்மையாகப் பேசி முடித்தார். அங்கிருந்து ஒரு பேருந்து தேம்ப்பரே ரயில் நிலையத்திற்கு செல்லத் தயாராக இருந்தது. தேம்பரேவிலிருந்து ஹெல்சின்கி வரை பயணச்சீட்டு வாங்கி ரயிலில் பயணம் செய்ய ஆரம்பித்தோம். அது சாதாரணக் கட்டண வசதியுள்ள பெட்டி. அதுவே பார்ப்பதற்கு ஆடம்பரமாக இருந்தது. அதிலே ஒரு உணவகமும் இருந்தது. மதிய உணவை அங்கே சாப்பிட்டோம். ரயில் போகும் அசைவே தெரியாமல் இருந்தது. இரண்டு மணி நேரப் பயணத்திற்குப் பின்னர் ஹெல்சின்கியை வந்தடைந்தோம்.

தங்கை பிறந்தாள்

ரோம் பயணக் கூத்து சொல்வதில் எனக்கு தங்கை பிறந்ததைக் கூற மறந்தே போனேன். மறுபிறப்பு என்றே கூறலாம். ரோம் பயணம் செய்வதற்கு ஒரு வாரத்திற்கு முன்னால் ஒரு நாளில் மைதிலியையும் தாரிணியையும் ஸ்டேயட்டில் அவர்களின் அறையில் சந்திக்க நேர்ந்தது. சில விஷயங்களை நாம் நம் உள் மனதில் பதித்திருப்போம். அதை சம்பந்தப்பட்டவர்களே கேள்விகளாய், முறையீடாய்க் கேட்கும் போது அப்படியே நம் மனது பதில் பேச்சு கேளாமல் ஏற்றுக்கொள்கிறது. அப்படி என் மனதில் புதைந்திருந்த உறவு முறை பற்றி தாரிணி கேள்வியாய், முறையீடாய் கேட்டபோது கேள்வி ஏதும் கேட்காமல் ஏற்றுக்கொண்டேன் தங்கையாய். சிறிது வருத்தப்பட்டேன். இதை ஏன் அவள் இவ்வளவு தாமதமாகக் கேட்டாள் என்பதே. பிறகு என்னை நானே கடிந்து கொண்டேன். எனக்கு எங்கே போனது புத்தி என்று. அவள் பின்வருமாறு கூறினாள்,

“கணேசன், உங்களை அண்ணானு நான் கூப்டா, நீங்க தப்பா நினச்சிக்க மாட்டீங்களே”, என்றாள் சிறு குழந்தையைப் போல.

“ஸ்வேதா கிட்ட வேனா கேட்டு பாருங்க, உங்கள இந்தியால முதல்ல பாக்கரச்ச அண்ணானு கூப்பிடனும்னு தோனுச்சுனு அவகிட்ட சொல்லி இருந்தேன். ஆனா நீங்க தப்பா நினைச்சிருவீங்களோனு நினைச்சேன்”, என்றாள் உணர்ச்சி வசப்பட்டவளாய்.

“எனக்கு அண்ணாவே இல்ல தெரியுமா?”, என்று கெஞ்சலாய் பேசி உதடு பிதுக்கியதும் என் தங்கையினை அப்படியே முகபாவத்தில் கொண்டு வந்தவளை இவள் தான் என் தங்கை என்று முடிவு கட்டிவிட்டேன்.

அண்ணா என்று காது முழுக்கக் கேட்டுக் கொண்டிருந்தவனுக்கு திடீரென்று அப்படி கேட்பது நின்று போனதால், இப்போது மறுபிறவியாய் அவதரித்திருக்கும் தங்கையின் மூலமாக அதைக் கேட்க ஆசையும் திருப்தியும் உண்டாகிறது.

சரி செண்டிமெண்ட்லாம் போதும். உங்களை இது கூறி இனிமேலும் பொறுமையிழக்கச்செய்ய விரும்பவில்லை.

சுயொமென்லின்னா

சுயொமென்லின்னாவைப் பற்றி அடுத்த இடுகையில்...

தொடரும்...

Sunday, December 6, 2009

எனது பின்லாந்து செலவு - தொடர்ச்சி

ரோம் பயணம்

ரோம் பயணம், என் வாழ்நாளில் மறக்க முடியாத, காண்பதற்கினிய காட்சிகளையும், சொல்லொனாத பூரிப்பையும், நண்பர்களின் நையாண்டித்தனமும் கொண்ட இனிய பயணமாக அமைந்தது. கண்ணுக்கினிய காட்சிகளையும், இது போன்ற நண்பர்களையும் பெற்றால் மனது பூரிப்படைந்து, எவ்வளவு சோகம் நிறைந்திருந்தாலும் மனது புரட்டிப் போடப்படும் என்பது நிதர்சனமான உண்மை என்றே சொல்லலாம். ரோம் பயணத்திற்கு முன்னர் சோக கீதங்களையே மனது பாடிக் கொண்டிருந்தது. இப்பயணம் தான் என்னை, “பாம்பே, மெட்ராஸ், டெல்லி, இது தான் தலைப்புச் செய்தி”(ரட்சகன் பாடல்) என்று உற்சாக கீதம் பாட வைத்தது. இதையே பாடிக் கொண்டிருந்ததால் என் மீது சிறிது கடுப்பாகியிருந்தனர் கூட வந்திருந்த நண்பர்கள். அது வேறு விஷயம்.

ரோம் பயணம் செய்ய வெகு நாளைக்கு முன்னரே நாங்கள் தீர்மானித்து, அதற்கான பயண ஆயத்தங்களை மேற்கொண்டோம். இப்பயணத்திற்கு முதலில் வரமறுத்த என்னை பிறகு இணங்க வைத்த தாரிணிக்கும், மைதிலிக்கும் இக்கட்டுரை வாயிலாக நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.

ஏப்ரல் 30, 2009 எங்கள் அலுவலகதிலிருந்து ஒரு குழு ரோம் நோக்கி பயணம் செய்தது. அதில் நான், அன்னா ஜார்ஜ், ரோஹன், பாரதி, தாரிணி, பாலா மற்றும் மைதிலி இருந்தனர். மே 1 விடுமுறையாதலாலும், அதன் பிறகு சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமையாதலாலும் நாங்கள் முன்னரே திட்டமிட்டு ரோம் மற்றும் வாடிகன் நகரைச் சுற்றிப் பார்க்க பயணப்பட்டோம். ஆனால் தாரிணி மட்டும் அவளின் கல்லூரித் தோழி ஒருத்தி (பெயர் ஆர்த்தி என்று நினைவிருக்கிறது) ஃபிரான்சு நாட்டில் உள்ளதாகவும், அவளுடன் ரோம், வாடிகன் நகரம் மற்றும் வெனிஸ் போகவும் திட்டமிட்டிருந்தாள். ஆனாலும் தாரிணி எங்களுடன் அதே விமானத்தில் தான் பயணம் செய்தாள். அவளின் திட்டமிடல் சரியாக இருந்ததால் எங்களுடன் ரோம் விமான நிலையம் வரையில் வந்து சேர்ந்து, பின்னர் அவள் பிரிந்து சென்று அவளுடைய தோழியுடன் ரோம், வெனிஸ் பார்த்துவிட்டுப் பின்னர் நாங்கள் ரோமிலிருந்து திரும்பி ஃபின்லாந்துக்கு வரும்போது அவளும் எங்களுடன் வந்து சேர்ந்தாள். எங்களுக்கு வெனிஸ் நகரம் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லை போலும்.

அலுவலகத்திலிருந்து புறப்படும்போது எல்லாரும் ஆயத்தமாக கிளம்பிக்கொண்டிருக்கையில் பாலா எங்களுடன் வருவாரோ மாட்டாரோ என்றே நினைத்தோம். கடைசியில் அவர் எங்களுடன் வந்ததே எங்களுக்கு பெரிதாக மகிழ்ச்சி உண்டானது. அங்கிருந்து அவசரவசரமாக கிளம்பி விமான நிலையம் அடைந்தோம். ஹெல்சின்கி விமான நிலையத்தில் ரோம் செல்வதற்கான விமானத்திற்காக காத்திருக்கும்போது, ரோஹனின் இயல்பான நையாண்டித்தனத்தினால் கலகலப்பாக இருந்தது. அவ்வப்போது பாரதியின் துணுக்குகளும், சம்பந்தமே இல்லாத விஷயத்தை நாங்கள் பேசும் விஷயத்தில் சம்பந்தப் படுத்தி பேசும் அவரது இயல்பான தொனியினால் அவ்விடமே ஒரு பெருங்கூத்தாக இருந்தது. அங்கிருந்த ஃபின்னிஷ் மற்றும் மற்ற நாட்டு மக்கள் எங்களது அட்டகாசத்தினால் கவரப்பட்டார்கள் என்றே சொல்லலாம். மலையாளியான அன்னாவிற்கு இந்த தமிழ் பேசும் நண்பர்களுடன் வந்து தான் தனிமைப் படுத்தப்பட்டுவிட்டுவிடுவோமோ என்று ஒரு சிறிய மனக்குறையாக இருந்திருக்கும் என்பது என் ஊகம். மராத்தியரான ரோஹனுக்கு அதைப் பற்றிய கவலையே இல்லை என்பேன். விமானத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக அமர்ந்தோம். பழமையான இத்தாலியின் புகழ் மிக்க ரோமின் ”சியம்பினோ” என்ற விமான நிலையத்தை அடைந்தோம். இந்த விமான நிலையத்தில் ஃபிரான்ஸிலிருந்து ஏற்கனவே வந்திருந்த தாரிணியின் தோழியைத் தேட ஆரம்பித்தோம். மைதிலி தேடிக்கொண்டே விமான நிலையத்திற்கு வெளியே வந்து விட்டாள். அப்போது உள்ளே மறுபடியும் எங்களை ஆவலுடன் பார்த்து ஓடி வந்து கொண்டிருந்தவளை ஒரு போலீஸ் அதிகாரி அவளை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. அவளை அவளின் பின்னால் மாட்டிக்கொண்டிருந்த பெரிய பையைப் பிடித்து அப்படியே அலேக்காக தூக்கி வெளியே தள்ள எத்தனித்தார். இதையெல்லாம் நாங்கள் தூரத்தில் பார்த்துக் கொண்டிருந்தோம். இதைப் பார்த்தவுடன் பாரதி,

“அய்யோ, மைதிலி ஏதோ அந்த போலீஸ் கிட்ட மாட்டிக்கிட்டா, ஏதோ பிரச்சனை போல”, என்றார் பரபரப்பாக.

“அய்யோ, அப்டியா?”, என்றாள் தாரிணி பயத்துடன்.

நானும் கலவரமடைந்தேன். அருகே சென்ற பிறகுதான் அவளை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை என்ற விவரம் அறிந்தோம்.

“பாரதி, ஒரு நிமிஷம் பயமுறுத்திட்டீங்க, போங்க”, என்றாள் தாரிணி பயம் கலைந்த கோபத்தில்.

புன்னகையை பதிலாய் அளித்தார் பாரதி.

அதுவும் தாரிணியின் தோழியைப் பார்த்துவிட்ட சந்தோஷத்தில் திரும்பி ஓடி வந்தவளை அந்தப் போலீஸ் அவளின் பையைப் பிடித்துத் தூக்கியவிதத்தை இப்போது நினைத்தாலும் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

அங்கிருந்து ரோமிற்கு அருகில், நாங்கள் பதிவு செய்திருந்த ஹோட்டலுக்குப் போக ஒரு பெரிய காரை வாடகைக்கு எடுக்க முடிவு செய்து, அதில் அங்கிருந்து ஹோட்டல் ப்ரிசில்லா வை அடைந்தோம். ஹோட்டலை அடையும்போது மணி இரவு 12. அகோரப் பசி எங்களுக்கு. அந்த நள்ளிரவில் ஒரு உணவகத்தில் ஏதோ மாவினால் செய்து சுருட்டிக் கொடுத்த ஒரு உணவை(?) வேண்டா வெருப்பாக (எனக்கு மட்டுமே பிடிக்கவில்லை போலும் ) சாப்பிட்டு ஹோட்டலுக்குச் சென்றோம்.

கூத்து தொடரும்...