Tuesday, March 15, 2011

சில கேள்விகள் - 3

சில கேள்விகள் - 3


முந்தைய பதிவுகளுக்கு இங்கே சொடுக்கவும்

சில கேள்விகள்
சில கேள்விகள் - 2

சோதிடம், ஆரூடம், சாதகம், பொருத்தம், ராசிபலன், சகுனம், வாஸ்த்து, கைரேகை பலன். மேற்கூறிய அனைத்து வார்த்தைகளையும் (இன்னும் சிலவற்றை நான் விட்டிருக்காலாம்) தினமும் கேட்காமல் இருக்க முடியாது. சோதிடத்தை நம்பலாமா? வேண்டாமா? என்று என்னுள் எழுந்த கேள்விகளையும் சிந்தனைகளையும் (குழப்பங்கள்) இப்பதிவில் கொணர முயற்ச்சித்துள்ளேன்.

இவற்றிற்கெல்லாம் மூல காரணமாக இருப்பது Astronomy என்று சொல்லப்படும் விண்வெளி ஆரய்ச்சி. விண்வெளி ஆராய்ச்சி வளர்ந்து வந்த அதே நேரத்தில் Astrology என்று சொல்லப்படும் வான சாஸ்த்திரமும் வளர்ந்து வந்தது. இவை இரண்டும் ஒரே நேரத்தில் சுமார் 5000 வருடங்களுக்கு முன் உருவாகியிருக்க வேண்டும் என்று Google ஆண்டவரின் மூலமாக தெரிந்துகொண்டேன்.

விண்வெளிக்கும் தனிமனிதனுக்கும் ஒரு தொடர்பை ஏற்படுத்தியிருப்பது வான சாஸ்திரத் துறை. இது எப்படி சாத்தியமாகும்? இன்னொரு கேள்வியும் எழலாம், அது எப்படி பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கப்பாலிருக்கும் ஒரு கிரகம் பூமியிலிருக்கும் ஒரு மனிதனின் செயல்களைக் கட்டுப்படுத்துகிறது? அதற்கான வான சாஸ்த்திரம் கூறும் சாத்தியக்கூறுகளை இங்கே குறிப்பிடுகிறேன்.

ஒவ்வொரு மனிதனின் மனநிலையும் ஒவ்வொரு நாளும் வேறு வேறாக இருக்கிறது. புறக்காரணிகளைத் தவிர்த்துவிட்டு பார்க்கும் போது, இன்னும் வேறு ஏதோ சில காரணிகள் மனிதனின் செயல்களில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. அப்படிப்பட்ட காரணிகளை ஆரயும்போது முக்கியமாக கிடைப்பது கதிர்வீச்சு. கதிர்வீச்சுக்கள் மனித மூளையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும் வினையூக்கிகளாக (catalyst) செயல்படுகின்றன. அவை முறையே புறஊதாக் கதிர்கள், காஸ்மிக் கதிர்கள், மின்காந்தக் கதிர்கள், மைக்ரோ வேவ்ஸ், இன்னும் சில. இத்தகைய கதிர்வீச்சுக்கள் இப்புவியிலிருந்து மட்டுமல்லாமல் வேறு கிரகங்கள், நட்சத்திரங்களிலிருந்தும் வந்திருக்கலாம். விண்வெளி ஆரய்ச்சியின் இத்தகைய கண்டுபிடிப்புகளை வான சாஸ்த்திரம் உபயோகப் படுத்திக் கொண்டு, இத்தகைய கதிர்வீச்சுக்களால் ஏற்படும் மாற்றங்களை நெடுநாட்களாக ஆரய்ந்து (continuous observation), இதை பதிவு செய்தனர். உதாரணமாக, வியாழன் கிரகத்திலிருந்து வரும் சில கதிர்வீச்சுகளால் ஒரு குறிப்பிட்ட தினத்தில் பிறந்தவருக்கு ஏற்பட்ட மாற்றங்களை பன்னெடுங்காலமாக ஆராய்ந்து பதிவு செய்தனர். இந்தப் பதிவுகள், பின்னாளில் அதே தினத்தில் பிறந்தவருக்கு கூறப்பட்டது.

சூரியக் கதிர்வீச்சினால் பாதிப்புக்குள்ளாகும் போது, பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கப்பால் இருக்கும் கிரங்களிலிருந்து வரும் கதிர்வீச்சு பூமியிலிருக்கும் மனிதனை பாதிக்கும் என்ற நம்பகத்தன்மையை ஏற்படுத்துகிறது.

எனவே வான சாஸ்திரம் அல்லது சோதிடம் கூறும் செய்திகள் ஒருவித கணிப்பு என்பது தெளிவாகிறது.

தினபலன், வாரபலன், ராசிபலன் மற்றும் ஆண்டுப்பலன் கூறாத பத்ரிக்கைகளோ, தொலைக்காட்சியோ இல்லை என்றே கூறலாம். எனக்கு இதெல்லாம் என்னவென்றே தெரியாத நாட்களும் இருந்தன. என் ராசி என்னவென்றே தெரியாமல் இருந்தேன்.

“அம்மா, என் ராசி என்னம்மா?”, ஒருநாள் தினசரியைக் கையில் விரித்தபடி.

“டேய் உன்னோடது மகர ராசினு அப்பா சொன்னார்”, அடுக்களையில் வேலை செய்தபடி.

அன்றிலிருந்து வெகுநாட்களாக மகர ராசிக்கு என்னமோ அதையே படித்தும், கேட்டுக்கொண்டிருந்தும் இருந்தேன். பெரும்பாலான நாட்கள், அந்த தினசரியில் போடப்பட்டிருப்பது சரியாகவே இருக்கும். அப்பொழுது மாணவனாக இருந்தபடியால், மாணவர்களுக்கு என்ற வார்தையை நன்றாகத் தேடி, என்ன எழுதியிருக்கிறார்கள் என்று படிக்கும் ஒரு தனி ஆவல் இருந்தது. ராசியான நிறம், ராசியான நாள் என்றெல்லாம் அதில் குறிப்பிட்டுள்ளதைபோன்று செயல்படுவேன்.

ஒரு நாள் ராசிபலன், நட்சத்திரப் பலன் என்றானது. அதில் நட்சத்திரம் முக்கியமாகக் குறிப்பிட்டிருந்தது. உடனே அம்மாவிடம்,

“என் நட்சத்திரம் என்ன?” என்று கேட்டேன்.

“அதான் அன்னிக்கே சொன்னேனே டா, மகரம்னு”, என்றாள் அம்மா.

“மகரம்கிரது ராசி மா”, என்றேன்.

“உங்க அப்பா உன்னோட ஜாதகம் வச்சிருகாரு, அவரு வந்ததும் கேளு”, என்றாள்.

வேலை முடித்து வந்த அவரிடம், “என் நட்சத்திரம் என்னபா? இந்த வார ராசிபலன்ல என்ன போட்டிருக்குனு பாக்கனும்”, என்று கேட்டேன்.

“திருவாதிரையோ, திருவோணமோ? இரு பாத்து சொல்றேன்” என்றார்.

உடனே அந்த தினசரியில், திருவோண நட்சத்திரத்தைப் பார்க்கும் போது, ”அன்பான மகர ராசி நேயர்களே” என்றிருந்தது. சிறிது நேரம் கழித்து

“உன்னோடது திருவாதிரைனு போட்டிருக்கு டா” என்றார்.

அந்த நட்சத்திரத்திற்கு, மிதுன ராசி என்றிருந்தது. எனக்கு தூக்கிவாரிப் போட்டது. மிதுன ராசிக்காரனான நான் இவ்வளவு தினம் மகர ராசி பலனைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அன்றிலிருந்து குழம்பிப் போய் மகர, மிதுன ராசி பலன்களைப் படிக்க ஆரம்பித்தேன். சில நாள் கழித்து எல்லா பலன்களையும் படிக்க ஆரம்பித்தேன். இப்பொழுது முழுதும் குழம்பிப் போய் ராசி பலன் பார்ப்பதையே விட்டுவிட்டேன்.

ஒருவரின் பிறந்த நேரத்தை வைத்து இவர் இன்ன நட்சத்திரத்தில் இன்ன லக்கினத்தில் இந்த ராசியில் பிறந்தார் என்று கணிக்கிறார்கள். அறுவை சிகிச்சை மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு பிறக்கும் நேரத்தை மருத்துவர்கள் நிர்ணயிக்கிறார்கள். அப்போது, பிறக்கும் குழந்தைகளுக்கு கணிக்கப் படும் ஜாதகம் சரியாக இருக்குமா? ஒரு சிலரைக் கேள்விப்பட்டிருக்கிறேன். நல்ல நேரத்தில் குழந்தை பிறக்க வேண்டும் என்று, குறிப்பிட்ட நாளுக்கு முன்னதாகவே அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை வெளியே எடுத்து விடுகின்றனர். இது எத்தகைய முட்டாள்தனம்?

இப்படியிருக்க அந்த குழந்தை உருவான நாளைத்தானே நாம் கணிக்க வேண்டும். அது எந்த விதத்தில் சாத்தியம்?

கேள்விகள் தொடரும் . . .